முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

நா முத்துநிலவன்


அன்பான திண்ணை ஆசிரியர் மற்றும் வாசகர்களுக்கு, வணக்கம்.

நமது தமிழில், உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதிவந்த முற்போக்கு எழுத்தாளர் கவிஞர்

கந்தர்வன்(59) அவர்கள் சென்னை கெளரிவாக்கத்தில் உள்ள அவரது மூத்த மகள் வீட்டில் கடந்த

22.04.2004 வியாழன் அன்று இரவு 9.30மணிக்குக் காலமானார் என்பதைத் தெரிவிக்க வருந்துகிறேன்.

ஜி.நாகலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட கந்தர்வன், தமிழ் நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில்

மாவட்டத் துணைக் கருவூல அலுவலராக (A.T.O.) பணியாற்றியவர். அந்த சங்கத்தின்

மாநிலத்தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவராகவும், மாநில அளவில்

போராட்டக்காலங்களில் வீரம் மிகுந்த தளபதியாகவும் அறியப்பட்டவர். அதனாலேயே 19 மாதகாலப்

பணியிடை நீக்கம், 6 ஆண்டு ஊதிய உயர்வு ரத்து, ஓயாத பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு

பழிவாங்குதல்களுக்கும் ஆளாகி, ஓய்வு பெறுவதற்கு முன்பு கூட 3 ஆண்டுகளில் 4 மாவட்ட மாறுதல்களுக்கு ஆளானவர்.

போராட்டங்களில் அவரது கவிதைகள் நெருப்பாகப் பற்றும், அவரது பேச்சு புயலாக வீசும். இவரது

திட்டமிட்ட செயல்பாடுகளும் வழிகாட்டுதல்களும் போராட்டப் பிரளயத்தைக் கிளறிவிடும்.

1981 முதல்-

கிழிசல்கள்,

மீசைகள்,

சிறைகள் எனும் மூன்று தனித்தனிக் கவிதைத்தொகுப்புகள் வந்தன.(இவை மூன்றும் சிவகங்கை கவிஞர்

மீராவின் அன்னம் வெளியீடுகள்).பின்னர் இவற்றைத் தொகுத்து ‘கந்தர்வன் கவிதைகள் ‘ எனும்

பெரும்தொகுப்பும் கடந்த ஆண்டு வந்தது.(இது மட்டும் சென்னை சந்தியா பதிப்பகம்)

பூவுக்குக் கீழே,

ஒவ்வொரு கல்லாய்,

சாசனம்,

கொம்பன்,

அம்மாவும் அப்பாவும் எனும் 5 சிறுகதைத் தொகுப்புகள் அன்னம் வெளியீடுகளாக வந்துள்ளன.

ஓய்வு பெற்ற பிறகும் சிறுகதைகளை எழுதிக்கொண்டேயிருந்தார்.

செம்மலர், தாமரை போலும் இடைஇதழ்களில் மட்டுமன்றி, விகடன் போலும் வெகு ஜன இதழ்களிலும், இடது

சாரி இலக்கியச் சிற்றிதழ்களிலும் எழுதிக்கொண்டேயிருந்தார்.

தீக்கதிரின் வண்ணக்கதிர் இலக்கியப்பகுதியிலும், ‘புதிய புத்தகம் பேசுது ‘ இதழிலும் இலக்கிய நூல்களைப்

பற்றிய அறிமுகம்/விமர்சனம் எழுதினார்.

கடந்த 10 நாளைக்கு முன்பு கூட தீக்கதிர் நாளிதழில் ‘இந்தியா ஒளிர்கிறது ‘ பற்றி ஒரு கிண்டல்

கவிதையை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாத கலைமகள், மற்றும் விகடன் இதழ்களுக்கு அடுத்த படியாக, மிக அண்மையில் வெளிவந்த சென்னை

த.மு.எ.ச.வின் ‘கூட்டாஞ்சோறு ‘ இதழில் எழுதியிருந்த சிறுகதைதான் அவர் இறுதியாக எழுதிய கதை.

கடந்த மாதம் மதுரையில் சாகித்ய அகாதெமி நடத்திய சிறுகதை பற்றிய கருத்தரங்கில்

கலந்துகொண்டதுதான் அவர் இறுதியாகக் கலந்துகொண்ட பெரிய இலக்கிய நிகழ்ச்சி.

ஆரிய பட்டா

வானத்தைக் கிழித்தது,

அணுகுண்டு சோதனை

பூமியைக் கிழித்தது,

அரைக்கைச் சட்டை

கிழிந்தது மட்டுமே

நெஞ்சில் நிற்கிறது.

பிள்ளை வேண்டாமென்று

கருப்பையைக் கிழித்தார்கள்,

இனி, உணவும் எதற்கென்று

இரைப்பையைக் கிழிப்பார்கள்.

எல்லாம் கிழிந்த

எங்கள் தேசத்தில்

வாய் கிழிவதுமட்டும்

வகை வகையாயிருக்கும்.

(கிழிசல்கள்)

பொதுக்கிளாசில் டா கேட்க,

தனிக்கிளாசில் டா கொடுக்க,

ஒரு டாயின் விலை

ஒன்பது உயிர்கள் என்று

விலைவாசி உயர்ந்துகிடக்கிறது.

(மீசைகள்)

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை,

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை.

போன்றன அவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒரு சில.

கவிதைகளை விடவும் அவரது இலக்கியச்சாதனை சிறுகதைகளிலேயே நிகழ்ந்தது என்பது எனது கருத்து.

அவரது ‘துண்டு ‘, ‘கொம்பன் ‘, ‘அதிசயம் ‘, ‘பூவுக்குக் கீழே ‘ போன்ற சில கதைகள், தமிழ்ச்சிறுகதை

வரலாற்றில் புதுமைப் பித்தன் வரிசையில் தாராளமாக அவரை என்றென்றும் பேச வைக்கும் என்பதில் எந்தச்

சந்தேகமும் இல்லை.

ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகவும், இந்தக் கோடை விடுமுறையில் மனைவி மற்றும் பேத்தியுடன்

புதுக்கோட்டைக்கு வரும்போது அதை நிறைவு செய்ய எண்ணியிருப்பதாகவும் கடந்த 10 நாளைக்கு முன்

தொலைபேசியில் பேசிய என்னிடம் அவர் தெரிவித்திருந்ததும், அது நடவாமலே அவர் நம்மைவிட்டுப்

பிரிந்து சென்றதும் பெரிய சோகம்.

இரண்டு மகள்களையும் திருமணம் செய்துகொடுத்து நிறைவான வாழ்வாகவே அவர் வாழ்ந்திருந்தாலும், எங்கோ

இராமநாத புரத்துச் சிக்கல் ஊரில் பிறந்து, பணி நிமித்தமாகப் பல ஊர்களும் சுற்றி, அப்படி 1981இல்

புதுக்கோட்டை வந்த அவரை கடைசிவரை புதுக்கோட்டைக் காரராகவே வைத்திருந்த எங்கள் இலக்கியச்சுற்றம்

ஒரு பெரும் ஆலமரத்தை இழந்த சோகத்தில் இருக்கிறது.

அதிலும் அவரது ஒரே மகனை, நான் பணியாற்றும் முன்மாதிரி மேல் நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பில்

வேண்டிக் கேட்டு நானே கொண்டுபோய்ச்சேர்த்து… சேர்ந்த ஒரே வாரத்தில் மதிய நேரத்தில் அருகில்

இருந்த குளத்தில் இறங்கி அகால மரணம் அடைந்த நிகழ்ச்சி என் நெஞ்சில் என்றும் குத்திக்கொண்டே

யிருக்கும் முள்ளாக நிலைத்துவிட்ட பெரும் சோகத்தை யாரிடம் போய்ப் பகிர்ந்து கொள்வதென்றே

தெரியவில்லை.

இப்போதும் நான்தான் அவரது ஒரே மகனை ‘அநியாயமாக ‘ கொண்டுபோய் சாவின் வாயில்

கொடுத்துவிட்டதாக எங்கள் ஊரில் சிலர் நினைப்பதைப் போல, நானும் நினைத்துக் கூனிக் குறுகிப்

போகிறேன். ஆனால் அந்தப் பெரிய உள்ளம் மட்டும் தனது பெரும் இழப்பை மறைத்துக்கொண்டு, எனக்கு ஆறுதல்

சொன்னதை என் வாழ்நாள் உள்ளளவும் மறக்கமுடியாது. இதனால், அவரது மூத்த மருமகனே அவருக்குக் கொள்ளி

வைத்தார் என்பது என் நெஞ்சில் பற்றிய நெருப்பாகவே எரிகிறது.

23.04.2004 அன்று மாலை புதுக்கோட்டை எண்30, பிரகதாம்பாள் நகர்- கோவில்பட்டி-திருக்கோகர்ணம்

புதுக்கோட்டை 622 003 இல் இருந்து தொடங்கிய அவரது இறுதி ஊர்வலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்

கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் தே. இலட்சுமணன், செம்மலர் சிரியர் எஸ்.ஏ.பெருமாள்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேரா.கதிரேசன், திண்டுக்கல்

எம்.எல்.ஏவும் கவிஞருமான பாலபாரதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர்

சா.தோ.அந்தோணிசாமி, திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணக்குமார், சாகித்ய அகாதெமி

உறுப்பினர் பவா செல்லத்துரை, ‘சீவலப்பேரி பாண்டி ‘ செளபா, எழுத்தாளர் தவன் தீட்சண்யா, மற்றும்

அவர் பணியாற்றிய அரசு ஊழியர் சங்கம் / எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளுடன்

ஏராளமான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மாநிலமுழுவதும் இருந்து வந்திருந்த கலை இலக்கியவாதிகளும்

கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியறிந்து மாநிலமுழுவதும் இருந்து விவரம் கேட்டு, வந்துகொண்டேயிருந்த இரங்கல் செய்திகள் ஏராளம்.

சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலா, பிரபல இலக்கிய

விமர்சகர் தி.க.சி., சென்னை டாக்டர் மங்கை-அரசு, திண்டுக்கல் ஐ.லியோனி, முதலானவர்கள் இரங்கல்

செய்தி அனுப்பிக்கொண்டேயிருந்தார்கள். என்னிடம் தொலைபேசி வழியே கேட்ட விவரங்களை வைத்தே

அடுத்த நாள் (24.04.2004) தினமணியிலும், ஹிந்துவிலும் செய்தி போட்டிருந்தார்கள். இந்த வாரம்

ஆனந்த விகடனிலும் இரங்கல் செய்திவந்திருப்பதை நண்பர்கள் பார்த்திருக்கக் கூடும்.

’60வயதை நெருங்கிய போதும், வயதை மீறி, நீட் ‘டாக பேண்ட்டுக்குள் சட்டையை ‘இன் ‘செய்து,

முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு, ‘டை ‘அடித்து, அழகான தோற்றத்துடனேயே எப்போதும் காணப்படும் கந்தர்வன்

நான் உள்பட பற்பல எழுத்தாளர்களை எப்போதும் உற்சாகப்படுத்திய மாபெரும் உற்சாகி! அவரது உருவமும்,

உள்ளடக்கமும் என்றும் நம்முள் நின்று செயல்படத்தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. –

muthunilavan@yahoo.com

====

Nandri,vaNakkam.

Naa.Muthu Nilavan,

Pudukkottai-Tamil Naadu.

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்