மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

புதியமாதவி



சென்ற வாரம் பெரியவர் வரதராசமுதலியார் குறித்து சில செய்திகளைப் பதிவு செய்திருந்தேன். இவ்வளவு செய்திகள் இருக்கிறதா என்று பலரின் மடல்கள். நான் அவர் பற்றி அறிந்ததில் சொல்லக்கூடிய சில செய்திகளை மட்டுமே சொல்லியிருந்தேன். சிலவற்றை நான் சொல்லவும் விரும்பவில்லை. பல்கலை கழகத்திலிருந்து சீவிவிடப்பட்ட கொம்புகளுடன் நான் திரிந்தக்காலம் அது.
ஒரு தாதாவைப் பற்றி தெரிந்து கொள்வதும் பேசுவதும் என் தகுதிக்கு குறைவான செயலாக நினைத்த பக்குவப்படாத வயது.


கலகக்குரல்

யார் இந்த தாதாக்களின் ஆட்களாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டார்கள்? ஏன்? அதன் விளைவுகள் என்ன? என்பதெல்லாம் சமூகத்தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கேள்விகள்.

முக்கித்தக்கி படிப்பில் கரையேறி
பணியைச் சுமந்து
நெடுநாள் கழித்து ஊரில் வந்து
இறங்குகிறேன் வெள்ளையும் சொள்ளையுமாய்
சலிப்புக் கட்டி எதிர்வந்த
கிழப்பண்ணையின் குரல்
சிறுபிள்ளைத்தனமாய்
மவுசப்பாரேன்
பறப்பயலுக்கு என்பதாய்
(கவிஞர் அபிமானி .)

கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. பெயர் பெற்ற தலித் எழுத்தாளர் ஒருவரின் சொந்த ஊரில் இன்றும் இரட்டைக்குவளை முறை இருப்பதாகச் சொல்கிறார்கள். வடு நாவலில் பட்டணத்தில் ‘டாக்டர்’ என்றழைப்பவர் கிராமத்திற்கு வரும்போது பெயர்ச்சொல்லி அழைப்பதாக எழுத்தாளர் குணசேகரன் பதிவு செய்துள்ளார். இந்த யதார்த்தங்களின் பின்னணியில் தான் அன்று இந்த தாதாக்களின் கோஷ்டிகளில் சேர்ந்து தங்கள் வாழ்வைத் தொலைத்த தமிழர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.

இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்களுக்கு மும்பை மண்ணில் எப்பொதும் சைக்கிள் செயின். வெட்டரிவாள் சகிதம் நான்கைந்து பேர் புடை சூழ மது போதையில் திரியும் வாழ்க்கை. ‘நான் தாதாவாக்கும்.. வெட்டிப்புடுவேன் வெட்டி” என்று அதிகாரம் தொனிக்கும் குரலில் அலைந்த புதிய வாழ்க்கை.

இந்த அதிகாரமும், அதிகாரக்குரலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த சொந்த மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்தது. படிப்பு, பதவி எதுவும் இந்த அதிகாரத்தை அவர்களுடைய கிராமத்தில் அவர்களுக்கு எப்போதும் தரப்போவதில்லை என்ற நிஜம். அதைவிட கிராமத்தில் ஆதிக்கச்சாதிகளாக இருப்பவர்கள் மும்பையில் அந்தக்காலத்தில்
இவர்கள் முன்னால் அடக்கி வாசித்தார்கள். இதுதான் அவர்களை இந்த புதிய அவதாரத்தை விட்டு வெளியில் வரமுடியாமல்
ஆக்கிய வலுவானக் காரணங்கள். ‘பையன் கிட்டேயிருந்து கடிதாசி வந்தே வருஷக்கணக்காகது அய்யா”

“திருந்திடுவான்னு கல்யாணம் செய்து வச்சோம். இப்போ இரண்டு பிள்ளைகள் வேற. பாம்பேக்கு போனவன் எங்கே இருக்கானே தெரியலை அண்ணாச்சி”

இப்படியாக ஊருக்கு வரும்போதெல்லாம் (திருநெல்வேலி) என் தந்தையிடம் வந்து முறையிட்ட பலரை நானறிவேன்.
டிக்கெட் வாங்கிக்கொடுத்து திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீண்டும் மும்பைக்கு ஓடி வந்து தாதாக்களாகவே வலம் வந்தார்கள். தங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொலைத்து கடைசிக் காலத்தில் கவனிக்க ஆளின்றி வியாதிப்பட்டு அனாதைப் பிணமாக
முடிந்து போனவர்கள் பலர். மும்பையில் மட்டுமல்ல, ஹூப்ளி, சத்தாரா, சேலம் என்று பல இடங்களில் இவர்களுக்கு மரியாதை இருந்தது. குறிப்பாக வரதராசமுதலியாரின் ஆட்கள் என்றால் இந்த இடங்களில் எல்லாம் தனிக்கவனிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டது. தங்களுக்கு எவராலும் கொடுக்க முடியாத ஓர் அதிகாரத்தை, அடையாளத்தைக் கொடுத்த மும்பை தாதாக்களுக்காக எதுவும் செய்ய துணிந்தவர்கள் இவர்கள் தான்.

குட்டி தாதாக்கள்

பேரரசு, சிற்றரசு ரேஞ்சில் தான் கடத்தலில் ஈடுபட்ட தாதாக்களின் நெட்வொர்க் இருந்தது. ஒவ்வொரு பெரிசுக்கும் கீழ் குட்டி தாதாக்கள் ஏரியா வாரியாக இருந்து “தொழிலை” கவனித்துக் கொண்டார்கள். குட்டி தாதாக்கள் அவரவர் திறமைக்கு ஏற்ப சில சுயதொழில்களை ஆரம்பித்து வருமானத்தைப் பெருக்கிக்கொண்டார்கள். மும்பையில் காகிதம் பொறுக்கி விற்கும் தொழில்
இம்மாதிரி ஆரம்பிக்கப்பட்ட உபதொழில்தான். ப்ளாஸ்டிக், காகிதங்களை சாலையோரத்திலிருந்தும் நகராட்சியின் குப்பைத் தொட்டிகளிலிருந்தும் தங்கள் கோணிகளில் சேகரித்து விற்றுப்பிழைக்கும் பெண்கள் கூட்டம். அவர்களிடம் மொத்தமாக இதை வாங்கி விற்கும் தொழிலில் இன்றும் கூட ஒரு நாளைக்கு குறைந்தது ரூபாய் 10,000 முதல் ரூபாய் 50,000 வரை வருமானம் பார்க்க முடிகிறது.
இந்த தாதாக்களின் கோஷ்டிகளில் இருப்பவர்களின் தேவைகளை நிறைவு செய்ய ஆரம்பத்தில் சாராயம் காய்ச்சுதல், விபச்சாரம்
இரண்டும் பெருகியது. பின்னர் இதுவே வருமானத்திற்கான தொழிலாக மாற்றம் பெற்றது. இன்றும் டோம்பிவிலி, கல்யாண் டிரெயினில் பயணம் செய்பவர்கள் சாராயத்தைக் கடத்தும் தொழிலைச் செய்யும் பெண்களைக் காணலாம்.

இன்றைய நிலை

இன்று தாதாக்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழக்கூடும். இருக்கிறார்கள். ஆனால் தமிழ்த்தாதாக்கள் இல்லை. மஸ்தான், வரதராசமுதலியார் இவர்கள் நிழலில் வளர்ந்த குட்டித்தாதாக்கள் என்று வந்து கொண்டிருந்த தமிழ்த் தாதாக்கள்
இன்றில்லை. இவர்களின் எச்சங்களாக சிலர் இருந்தாலும் இன்றைய சமூகச்சூழல் இவர்களுக்குச் சாதகமானதாக இல்லை.
தாராவி, மாதுங்கா, செம்பூர், மகிம், மலாட், வடலா, கிங்சர்க்கிள், கோலிவாடா என்று ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மட்டுமே
அன்றைய தமிழர்களின் குடியிருப்புகள் இருந்த நிலைமை இப்போதில்லை. தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்விடங்கள் இன்றில்லை. ஆனால் சாதிச்சங்கங்கள் இன்று பெருகி இருக்கின்றன. அந்தந்த சாதித்தலைவர்கள்
கிட்டத்தட்ட தாதாக்களின் தோரணையில் வரம்புக்குட்பட்ட அதிகாரத்துடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை