முடிவின் துவக்கம்…..

This entry is part [part not set] of 17 in the series 20010629_Issue

சேவியர்




இனிய காதலனே….
ஒரே ஒரு முறை பேசவேண்டும் எனக்கு…
உனக்கும் எனக்கும்
மாங்கல்ய முடிச்சு விழுவதற்கு முன்பே
நம் மனசுகள் இரண்டும் முடிச்சிட்டு விட்டன.

காதலிக்கும் போதெல்லாம்
எதுவுமில்லாமலேயே
வாய்வலிக்க மணிக்கணக்காய்
மணக்க மணக்கப் பேசுவாய்.
இப்போது ஏராளம் இருந்தும் ஊமையாகிறாய்.

மண்டபத்தின் எல்லா மூலையிலும் வாழ்த்துக்கள் விழ
கட்டப்பட்டவற்றை
வெறும் வெள்ளைக் காகிதங்களின்
வலது மூலையில் கையொப்பமிட்டுக்
கலைத்துவிடப்பார்க்கிறாய்.
அடையாளங்கள் தான் வாழ்க்கை என்கிறாயா ?

சந்தேகங்களின் முனை கொண்டு
என்னை நீ கிழித்த போதெல்லாம்
நம் காதலில் மாமிச வாசனை அடித்தது,
என் நம்பிக்கைகளின் நகங்கள் அழுகிவிழுந்தன..
ஏன்
எனக்கு நீ எழுதிய கவிதைகள் கூட கவிழ்ந்தழுதன.
அலங்காரங்கள் தான் அவசியங்கள் என்கிறாயா ?

சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம்
சிலுவையில் என்னை அறைந்தாய்…

உலகுக்கும் எனக்கும் ஒற்றைமதில் கொண்டு
இரட்டை கிரகம் படைத்தாய்…

ஆனாலும் என்னிடமிருப்பவை எல்லாம்
நீ கொடுத்த பூக்கள் மட்டும் தான்.,
முட்களின் முனைஒடித்து புதைத்து விடுவதே
என் வழக்கம்.

இன்னொருமுறை காதலிக்கவேண்டும் போலிருக்கிறது
உன்னை.

முதல் முதலில் என் விரல் தீண்டிய உன்
காதலின் முதல் அத்யாயத்தை
மீண்டும் மீண்டும்
முதலிலிருந்தே படிக்க வேண்டும் போலிருக்கிறது.

நீதி மன்றத்தில் உனக்கும் எனக்கும்
உறவு தொலைத்து உத்தரவிடலாம்…
அதற்கு முன்
ஒரே ஒரு முறை உன்னிடம் பேசவேண்டும் போலிருக்கிறது.

முதன் முதலில் என்னை நீ முத்தமிட்ட.,
நம் சுவாசம் உப்புச்சுவையோடு உலாவிக்கொண்டிருக்கும்
அந்த நீளக்கடலின் ஈரக் கரையோரம்
உன் குற்றப்பத்திரிகைகளோடு வா…

நம் பழைய காதலை புதுப்பிக்க முடிந்தால்
என் கரம் கோர்த்துக் கொள்.,
இல்லையேல் என்னை கையொப்பமிடச் சொல்.




Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்