முக்கால் வயது முழுநிலவு

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

ஜடாயு


விளங்காப் புதிர்கள் விளங்கி விடும்
விடைகள் உடனே கிடைத்து விடும்
களங்கமிலா உன் முகம் கண்டால்
கவலைகளெல்லாம் பறந்து விடும்
சின்னக் கைகள் நீ அசைத்தால்
சிறகடித்தென் மனம் பறக்கிறது
கன்னம் குழிய நீ சிரித்தால்
கண்ணன் திருமுகம் தெரிகிறது
அழகி உன் சிறு புன்னகைக்கு
ஆயிரம் கோடிகள் இணையில்லை
மழலைக் குரலின் மாயம் போல்
மயக்கும் இசையும் இங்கில்லை

பிஞ்சுப் பாதம் தீண்டுகையில்
பிறவிப் பயனை எய்திவிட்டேன்
கொஞ்சி எடுத்து அணைக்கையிலே
கோடி சுகங்கள் பெற்றுவிட்டேன்

தத்தித் தவழ்ந்து நடந்து வரும்
தங்கத் தாமரைப் பூவோ நீ ?
எத்தனை எண்ணிப் பார்த்தாலும்
எழுத்தில் அடங்காக் கவிதை நீ

முன்பல் இரண்டுடன் முறுவலிக்கும்
முக்கால் வயது முழுநிலவே
இன்பக் கதைகள் உன்னைப்போல்
எவரால் சொல்ல முடியுமடி ?

jattaayu@hotmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு