எம் எஸ் கல்யாணசுந்தரம்
‘மூர்த்தி! வேண்டாம்; வேண்டாம்! அலைகள் தம் இஷ்டப்படியே புரண்டு கொண்டிருக்கட்டும்! ‘ என்று கண்டிப்பது போன்ற குரலில் நான் எச்சரிக்கை செய்ததும் நாராயணமூர்த்தி திடுக்கிட்டுத் திரும்பி ‘ஊம் . . . ? என்ன ? ‘ என்று வினவினான்.
‘இல்லை, நானும் ஐந்து நிமிஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீ ஏகாக்கிர சித்தனாய் அன்பும் அனுதாபமும் நிறைந்த கண்களுடன் சமுத்திரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே! ஒருவேளை யோக சக்தியால் கடலின் சலனத்தைக் கட்டுப்படுத்தி அதை அமைதியான நித்திரையில் அமர்த்தப் பார்க்கிறாயோ என்று நினைத்தேன், ‘ என்றேன் நான்.
என் நண்பன் நான் சிறிதும் எதிர்பாராத மனக்கசப்புடன் பெருமூச்செறிந்து ‘யோக சக்தியாம்! அலைகளை அலையாமல் நிறுத்துவதாம்! முதலில் என் மனமாகிய குரங்கைச் சிறிதளவேனும் கட்டுப்படுத்த முடிந்தாலல்வா பிறருக்கு உபதேசம் செய்யலாம்! ஆனால், அசைவு என்பது முற்றிலும் ஒழிந்து பூர்ண அமைதி ஏற்படுவது சாத்தியமான காரியமா ? ‘ என்று கேட்டான்.
‘விரும்பத்தக் நிலையா – என்னும் கேள்வியையும் சேர்த்துக் கொள். எனக்குத் தெரிந்தவரை அசைவுதான் இயற்கையின் குணம். நக்ஷத்திர மண்டலங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, கண்ணுக்குப் புலப்படாத, கற்பனைக்கும் அடங்காத, பரம அணுக்களைக் கணித முறைகளால் சோதித்தாலும் சரி, சலனம் – பரபரப்பு – துடிதுடிப்பு – அமைதியின்மைதான் சிருஷ்டியின் முதல் கொள்கை என்று தெரிகிறது. ‘
‘ஆனால் சாதாரண பூஜ்யத்திற்குக் கீழ் பரம பூஜ்யம் என்கிறார்களே அந்த டிக்ரி வரை குளிர வைத்துவிட்டாலோ ? எல்லாம் கல்லாய் உறைந்து, சப்த நாடியும் அடங்கி, ஜடப் பொருளாய் அமர்ந்துவிடும் என்று விஞ்ஞானம் கூறுகிறதே! ‘
‘அது வெறும் ஏட்டுப் பரிசீலனை. ஆதர்சநிலை, அனுபவத்திற்கு எட்டாதது மூர்த்தி. அது ஒரு புறம் இருக்க நம் மனத்தைக் கட்டுப்படுத்த அந்த வழி எப்படி உதவும் ? ‘
‘ஏன் உதாவது ? என்னை அந்த எல்லைவரை குளிர வைத்துவிட்டால் மனம் தானாகவே அமைதியடைந்து விடுமே! ‘ என்று சொல்லி மூர்த்தி பக்கென்று சிரித்தான்.
‘ஆம், சமாதியடைந்துவிடலாம் ‘ என்றேன் நான்.
இவ்வாறு பேசிக்கொண்டே நாங்கள் ‘மீன் சாமியார் ‘ உட்கார்ந்திருந்த இடத்தை நெருங்கினோம். ‘இவனை உனக்குத் தெரியுமா ? வெறும் வேஷக்காரன்! அறிவில்லாத, மூட நம்பிக்கை கொண்ட செம்படவர்களை ஏமாற்றித் திரியும் போலி சந்நியாசி! ‘ என்றான் மூர்த்தி சற்று தாழ்த்திய குரலில்.
ஓரளவு தியானத்தில் ஈடுப்பட்டிருந்த அந்த சந்நியாசியின் கவனத்தை அவ்வார்த்தைகள் கவர்ந்தன. ‘ஆம் தம்பி. நானும் இந்தச் செம்படவர்களிடம் இதையேதான் கிளிக்குச் சொல்லுவது போல் படித்துப்படித்துப் பலமுறை சொல்லுகிறேன்; ஆனால் அவர்கள் காதில் வாங்கிக் கொண்டால் தானே! நீயாவது சிரமம் எடுத்துக்கொண்டு இந்த அப்பாவிகளின் பிரமையைப் போக்கினால் இந்தப் பொய் வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும் ‘ என்று அவர் கெஞ்சும் குரலில் கூறினார்.
மூர்த்தி அசடுதட்டும் முகத்துடன் ‘ஏதோ பேச்சுவாக்கில் சொன்னேன். பொறுப்பற்ற பிதற்றல். மன்னிக்க வேண்டும் ‘ என்று வேண்டினான். மூர்த்தி தன் பிசகை ஒப்புக்கொண்டது என் அனுபவத்தில் அதுவே முதல் முறை.
‘இல்லை அப்பா; நீ மனம் விட்டுச் சொன்னது தான் உண்மை – அதாவது நான் சம்பந்தபட்டவரையில். ஆனால் செம்படவர்களோ தங்களுடைய அபார பக்தியால் என்மேல் ஒரு சக்தியையே ஏற்றி விட்டார்கள். வெறும் இரும்பு ஊசியில் காந்த சக்தியை ஏற்றுவது போல். கப்பலில் திசைகாட்டியாகப் பணியாற்றும் காந்த ஊசி ‘என்னை விட்டு விடுங்கள்; முன்போல் கிழிந்த ஆடைகளைத் தைப்பதே எனக்குப் பிரியம் ‘ என்றால் மாலுமிகள் அதைப் போக விடுவார்களா ? ‘ என்றார் சந்நியாசி பரிதபிக்கும் குரலில்.
மூர்த்தி அவரிடம் ஏதோ மரியாதை வார்த்தைகள் கூறிவிட்டு எழுந்தான். நானும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன். சிறிது தூரம் வரை இருவரும் மெளனமாகச் சென்றாம். பிறகு, ‘அவரை உனக்குத் தெரியுமா ? ‘நீலு ‘ என்று தோழமையுடன் அழைத்தாரே ‘ என்று மூர்த்தி கேட்டான்.
‘தெரியும்; ஆனால் அவருடைய இப்போதைய நிலைமை நல்லதா கெட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் இதற்குக் காரணம் நான்தான். நினைத்தால் மனம் பதறுகிறது! ‘ என்றேன் நான்.
‘இதென்னப்பா, பழங்காலக் கதைகளில் வருமே அதுபோல் பீடிகை ரகசிய மயமாயிருக்கிறதே! என்ன சமாசாரம் சொல் ‘ என்றான் மூர்த்தி.
நான் பேச்சை மாற்ற முயன்றேன். ஆனால் மூர்த்தியை ஏமாற்றித் தப்புவதா! நான் சொன்னதாவது:
மூர்த்தி, உண்மையிலேயே இது ஒரு எதிர்பாராத சம்பவம். இவரும் நானும் சிறுவயதில் சேர்ந்து படித்தவர்கள். பி. ஏ. தேறிய பிறகு நான் இந்த ஊரிலேயே பள்ளிக்கூட உபாத்தியாயரானேன்; அவர் ரெவென்யூ இலாகாவில் சேர்ந்து ஊர் ஊராகச் சுற்றி வந்தார். இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு நாள் அவர் மூன்று மாத ரஜாவில் பட்டணத்திற்கு வந்திருந்தார். வெகுநாளைக்குப் பிறகு சந்தித்ததில் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம். அநேகமாய் நாள் தவறாமல் இந்த இடத்திற்கு உலாவ வருவோம். சம்பாஷணையும் நாம் பேசிக்கொள்ளும் மோஸ்தரில்தான் இருக்கும். ஒருநாள் பலவிதமான பண்டாரங்களையும் சந்நியாசிகளையும் பற்றி பேச்சு கிளம்பிற்று.
‘காலம் மாறிவிட்டது, சாம்பசிவம். படித்தவர் படிக்காதவர் அனைவருக்கமே சந்நியாசிகளிடம் நம்பிக்கை குறைந்துவிட்டது ‘ என்று நான் சொன்னேன்.
‘மனித சுபாவம் – முக்கியமாகப் பாமர மக்களின் சுபாவம் – இன்னும் அடியோடு மாறிவிடவில்லை. மரத்தைக் கொடி நடுவதைப்போல், கிழவன் கோலைத் தேடுவது போல் ஜனங்கள் பிறருடைய அனுபவத்தின் உதவியை நாடுகிறார்கள். பொறுப்பைக் கழிக்கவும் தங்கள் சிரமத்தைக் குறைத்துக் கொள்ளவும் அவர்கள் வழி தேடுகிறார்கள். பரோபகாரி போலப் பாசாங்கு செய்து, வேஷமும் நடிப்பும் சரியாக இருந்தால், அநேகமாய் யாரையும் ஏமாற்றலாம். செய்து காட்டுகிறேன், பார்க்கிறயா ? பாக்கி விடுமுறை நாட்களுக்குத்தான் வேலை வேண்டுமே! ‘ என்றார் சாம்பசிவம்.
‘சரி, சரி; ஏதாவது விபரீதமாகச் செய்து வைக்காதே! எதை ஆரம்பித்தாலும் அரைகுறையாகச் செய்யும் வழக்கந்தான் உன்னிடம் கிடையாதே ‘ என்று நான் பயத்துடன் தடுத்தேன்.
‘அப்படி என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது ?, சொல், டெலிபோனும் மோட்டார்காரும் வைத்துக்கொண்டு லக்ஷாதிபதிகளை ஆட்டி வைக்கவா – அல்லது ஏழை வேஷம் போட்டு எளியவர்களின் மனத்தைக் கவரவா – இல்லை, மந்திரவாதி வேஷம் போட்டு சாதாரண கிருகஸ்தர்களை அடிமைப்படுத்துவதா ? சொல் ‘ என்று அவர் வீரியம் பேசினார்.
‘வேண்டாம் சாம்பசிவம். விளையாட்டாக ஆரம்பித்த பேச்சை வினையாகக்கொண்டு முடிக்காதே, சர்க்கார் உத்தியோகஸ்தனுக்கு இந்த வம்பெல்லாம் ஏன் ? ‘ என்று மனக் கலக்கத்துடன் நான் முட்டுக்கட்டை போட்டேன்.
கடைசியில் நான் பயந்தபடியே ஆகிவிட்டது. ஒருநாள் காலை கடலோரத்தில் ஒரு பண்டாரம் உட்கார்ந்திருந்தார். காஷாயம், விபூதி, ருத்திராக்ஷம் எல்லாம் அவருக்கு மிகவும் பொருந்தியிருந்தன. சில நாட்கள்வரை ஒருவரும் அவரை விசேஷமாகக் கவனிக்கவில்லை. அதன்பிறகு ஒருவர் இருவராக ஆரம்பித்தது. சிறு பக்தகோஷ்டி ஒன்று அமைந்துவிட்டது; செம்படவர்கள் கட்டுமரத்தில் ஏறுவதற்கு முன் இவரைக் கும்பிடத் தொடங்கினார்கள். இவர் ஒவ்வொருவனையும் கூர்ந்து நோக்கி, ஒருவன் நோக்கி, ஒருவன் கையில் கொஞ்சம் உப்பு, இன்னொருவன் கையில் ஒரு சிறு கல் அல்லது கிளிஞ்சல், மற்றொருவன் கையில் சில எழுத்துக்கள் தாங்கிய ஒரு காகிதத்துண்டு – இவ்வாறாகக் கொடுத்து வலை வீசுவதற்குமுன் கடலில் குறிப்பிட்ட திக்கில் எறியும்படி ஜாடை காட்டுவார், அல்லது கடலில் நேர்கீழே போட்டு விட்டு வலை வீசாமல் கரை திரும்பச் சொல்வார். ‘ஏன் சுவாமி ? ‘ என்று யாரேனும் கேட்டால், மேலுங்கீழும் மெல்லத் தலையை அசைத்து, சிநேக பாவத்துடன் முகம் மலர்வார், சிலரை, சரியாய் நடுப்பகலில் – உச்சி நேரத்தில் – கரை திரும்பி விடும்படி எச்சரிக்கை செய்வார்.
இதன் காரணமாகச் செம்படவர்களுக்கு ஏற்பட்ட லாபநஷ்டமென்ன, அவர்களுடைய அனுபவமென்ன என்று என்னால் விசாரித்து ஆராய்ந்து அறிய முடியவில்லை. ஆனால் அவர்கள் நடந்து கொண்ட மாதிரியில் இவருடைய ஆசீர்வாதமும் எச்சரிக்கையும் பயனளித்தாக அவர்கள் நம்பினார்கள் என்று எண்ணமட்டும் இடமிருந்தது. அதற்கு அவர்களுடைய பக்தியும் நம்பிக்கையுந்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். என் நண்பருடைய அபிப்ராயமும் அதுவே.
ஒருநாள் நான் அவருடைய இருப்பிடத்துக்குச் சென்று ‘இதெனன அநியாயம், சாம்பசிவம்! இந்த வேஷம் இன்னும் எத்தனை நாளைக்கு ? ‘ என்று கேட்டேன்.
‘லீவ் முடியும் வரை. ஆராய்ச்சியை மேலும் தொடர வேண்டிய அவசியமிருந்தால் அரைச் சம்பளத்தில் இன்னும் ஒன்றிரண்டு மாதம் லீவ் வாங்கிக்கொள்ள உத்தேசம்! ‘ என்று பதிலளித்து விட்டு அவர் குறும்புடன் சிரித்தார்.
‘கஷ்டந்தான்! உங்கள் ஊருக்குக் கடிதம் எழுதிப் போட்டு விடலாமா என்றுகூட எனக்குத் தோன்றுகிறது ‘ என்றேன் நான் வேதனையுடன்.
‘ஆம், நல்ல யோசனை. தந்தியே அடித்துவிட்டால் ? சீக்கிரம் போய்ச் சேருவதோடு அதிகக் குழப்பமும் உண்டாக்கும். பணம் கொடுக்கட்டுமா ? விலாசம் தெரியுமல்லவா ? ‘ என்று அவர் தன் காரியத்தில் தலையிட வேண்டாம் என்ற அர்த்தத்தில் கூறினார்.
‘அது கிடக்கட்டும்; அவர்களுக்கு அளிக்கும் உப்பு கிளிஞ்சல் முதலிய வஸ்துக்கள் பற்றி உன் கருத்தென்ன ? ‘ என்று கேட்டேன்.
‘மண்ணாங்கட்டி! ‘ என்று விடையளித்தார்.
‘அப்படியானால் அவர்களுடைய நீடித்த திருப்திக்குக் காரணம் ? ‘ என்று நான் வினவ, ‘இது சரியான கேள்வி. எக்காரணத்தாலோ அவர்கள் என்பால் கொண்ட நல்லெண்ணமே அதற்குக் காரணம். மனப்பொருத்தம் ஏற்பட்டு விட்டதால், அனுகூலமான நிகழ்ச்சிகளை என் ஆசீர்வாதத்தின் பலன் என்றும், பிரதிகூலமானதை மாற்ற முடியாத தங்கள் தலைவிதி என்றும் அவர்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல் தீர்மானித்து விடுகிறார்கள். எளிய மக்களின் நம்பிக்கை. அதை நினைத்தால் ஒரு சமயம் பரிதாபமாக இருக்கிறது. ஒரு சமயம் மனம் பரவசமடைகிறது, ‘ என்று அவர் விளக்கினார்.
‘அப்படியானால் ரசமான இந்த ஆராய்ச்சியை வெற்றியுடன் இதோடு நிறுத்திக் கொள்ளலாமே! ‘ என்று நான் ஆவலுடன் கூறினேன்.
‘இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் ‘ என்று அவர் திடமாகச் சொல்லிவிட்டார். மேலே பேசுவது வீண் என்று நான் அத்துடன் திரும்பி விட்டேன்.
நாட்கள் செல்லச் செல்ல, செம்படவர்கள் தங்கள் வழக்குளை மீன் சாமியாரிடம் கூறத் தொடங்கினார்கள். அவரும் சமயோசிதப்படி ஒன்றிரண்டு வார்த்தைகளில் தீர்ப்புக் கூறினார். ரெவென்யூ இன்ஸ்பெக்டருக்கு உலக அனுபவம் பெற வாய்ப்பு உண்டல்லவா. கசப்பான தீர்ப்பையும் அவர்கள் மறுவார்த்தையில்லாமல் ஏற்றுக்கொண்டார்கள்.
இதற்கு மத்தியில் பலவித காணிக்கைகள் வந்து குவிய ஆரம்பித்து விட்டன. என்ன செய்வது என்று தெரியாமல் அவர் முதலில் திகைத்தார். கடைசியாக, யோக்கியதையுள்ள மூன்று செம்படவர்களை அவர் நிர்வாகிகளாக நியமித்து, வசூலாகும் பொருள்களை குப்பத்தின் பொது நன்மைக்காக உபயோகிக்கும் படி கட்டளையிட்டார். தானும் அடிக்கடி குப்பத்திற்குச் சென்று சுத்தமாக வாழும்படி உபதேசம் செய்தார். சில வாரங்களுக்குள் குப்பத்தின் தோற்றமே மாறிவிட்டது. நாளடைவில் அங்கு ஒரு சிறு பள்ளிக்கூடமும் வைத்தியசாலையும் பஜனைமடமும் தோன்றின. கள்குடி, சண்டை சச்சரவு முதலியன குறைந்து வந்தன.
இதற்குள் சாம்பசிவத்தின் லீவ் நாட்கள் தீர்ந்து விட்டன. அரைச் சம்பள ரஜாவும் பறந்து போயிற்று. ஆகவே அவர் தன் பக்தர்களைத் திரட்டி ஸத் உபதேசம் செய்ய வெளியூர் செல்லவேண்டியிருப்பதாகத் தெரிவித்தார். அப்பொழுது பார்க்க வேண்டுமே குப்பத்தின் கரை காணாத துக்கத்தை! ஆண் பெண், பெரியோர் சிறியோர் அனைவரும் கதறி அழுது, ‘சுவாமிகள் இங்கேயே இருக்க வேண்டும் . . . சுவாமிகள் வெளியேறினால் சொற்ப காலத்தில் பழைய பிசாசுகளெல்லாம் மறுபடி வந்து எங்களைப் பிடித்துக் கொண்டு விழும் . . . சுவாமிகள் எங்களைக் கைவிடவே கூடாது ‘ என்று மனப்பூர்வமாகக் கெஞ்சினார்கள்.
சாம்பசிவத்தின் மனம் அப்பொதிருந்த நிலைமையில் அதிகம் வற்புறுத்த வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. உத்தியோகத்தை ராஜிநாமா செய்தார்; தம் குடும்பத்திற்குச் சுமாராக நல்ல ஏற்பாடு செய்தார்; கடலோரத்தில் சாசுவதமாக அமர்ந்துவிட்டார்.
இவ்வாறு கதையை முடித்துவிட்டு நான் மூர்த்தியின் முகத்தைப் பார்த்தேன். அவன் கண்கள் கலங்கியிருந்தன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன மூர்த்தி, கண் கலக்கமேன் ? தாசில்தார், டிப்டி கலெக்டர் என உயர வேண்டியவன் குட்டிச்சுவர் ஆகிவிட்டான் என்றா ? சுகமாய் வாழ்ந்து முன்னுக்கு வரவேண்டிய அவனுடைய குழந்தைகளுக்காகவா ? ‘ என்று நான் கேட்டேன்.
அவன் நீண்ட பெருமூச்செறிந்து, ‘அது ஒரு பக்கம். ஆனால் இந்த க்ஷணம் முக்கிய இடம் பெற்றிருப்பது வேறு விஷயம். நீலு! சாவு, நஷ்டம், துயரம் இவற்றைக் கண்டு- இயற்கையின் விதி என்று சொல்லி – நான் மனம் கலங்காமல் இருப்பதுண்டு. ஆனால் ஹிருதரபூர்வமான பக்தி, சிரத்தை, விசுவாசம் முதலிய எளிய உண்மையான உணர்ச்சிகள் என் மனத்தை உருக்கி விடுகின்றன. ஆயிரம் கானல்களைக் கண்டு ஏமாற்றமடைந்த வழிப்போக்கன் உண்மையான ஜலஓடையைப் பார்த்து ‘இதுவும் கானல் நீர்தான் ‘ என்று முடிவுகட்டி வேறுவழி நடந்து தாகத்தால் தவிப்பதுபோல் தவிக்காமல் பொய்யை மெய்யாக மாற்றிய செம்படவர்களின் சக்தியை என்னவென்று பாராட்டுவது! ஆச்சரியம். மீன்சாமியார் தன்னை ‘வேஷக்காரன் ‘ என்றும் ‘காந்தம் ஏற்றப்பட்ட ஊசி ‘ என்றும் பழித்துக்கொண்டதெல்லாம் இப்பொழுதுதான் அர்த்தமாகிறது – சஞ்சலம் நிறைந்த அலையோரத்தில் சஞ்சலமற்ற ஒரு ஆத்மா! கரை காணாத கடலோரத்தில் கரை கண்ட ஒரு முனிவர்! ‘ என்று கூறியவாறு சிந்தனையிலாழ்ந்தான்.
[ பொன்மணல் : எம் எஸ் கல்யாணசுந்தரம் கதைகள் . தமிழினி வெளியீடு .342 டிடிகெ சாலை ராயப்பேட்டை சென்னை 14. ]
–
தட்டச்சு – ஜெயமோகன்
jeyamohanb@rediffmail.com
- அனுபவக் குறிப்புகளும் ஆனந்தமும்(சிகரங்கள் – வளவ.துரையனுடைய கட்டுரைத்தொகுதி நுால் அறிமுகம்)
- மலராகி மருந்தாகி….
- பிள்ளை-யார் ?
- காதல் கழுமரம்.
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:6 சாண எரி வாயு தொழில்நுட்பத்துக்கான சந்தையை உருவாக்குதல்
- அறிவியல் துளிகள்-23
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 1 ஆல்பர்ட் ஐன்ஸ்டானும் நெய்ல்ஸ் போரும்
- மு.வ. ஒரு படைப்பாளியா ?
- ‘ ‘ நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் ! ‘ ‘
- நான் யார்……
- அன்பாலான உலகம் (து.ராமமூர்த்தியின் ‘அஞ்ஞானம் ‘ ) எனக்குப்பிடித்த கதைகள் – 58
- பாரதி இலக்கிய சங்கம் – சொல் புதிது மீதான விமரிசனம் பற்றிய தொகுப்பு
- தினகப்ஸா – அராஜக சிறப்பிதழ்
- சிலந்தி
- யார் இந்த பாரதிதாசன் ?
- வண்ணம்
- தமிழா கேள்…… தமிழவேள்!
- தாவரக்காதல்
- மீன் சாமியார்
- மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம்
- இயலாமை..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் மூன்று
- கடிதங்கள்
- குதிங்கால் வலியும், அது குணமான விதமும்
- தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது ?
- தீர்வை நோக்கி விரையும் காவிரிப் பிரச்சனை
- ஊழ்
- சுயசவுக்கடிக் கழைக் கூத்தாடிகள் : நம் தலித்-திராவிட-இடதுசாரி அறிவுஜீவிகள்
- உலகின் மிகப் பெரிய எதிரி யார்!
- இன்னும் தொலையாத இன்னல்
- வாழப் பழகிய சந்தன மரம்
- வாக்குமுலம்
- ‘பாரதி பாடாத பாட்டு ‘
- எது வரை…….. ?