மீன்பாடும் தேன்நாடு

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்



வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு
மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு
பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு
ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க
மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு.
எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க
சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது.

காலமெல்லாம் இங்கே
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை.
திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே
கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும்.

காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில்
வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும்.
வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும்
இளவட்டக்கண்கள்
தென்றல் வந்து மச்சியின் தாவணியை இழுப்பதிலே
தடுமாறும் கால்கள் தாளம் பிசகாது.

குதிரையிலேதாவி கொதிப்போடு இளவரசன்
போருக்குப் போவான்
கொடும்பகையில் வென்றிடுவான்.

எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்த் தலைநிமிர்ந்து
செட்டாகப்பாடிச் செழிப்பார்கள் போர்வீரர்
அண்ணாவிதட்டும் மத்தளத்தின்
தாளத்தின் சொற்படிக்கு
எல்லாமே வட்டக் களரியிலே மட்டும்தான்,
படிக்கட்டில்
பொல்லாவறுமை பசியோடு இவனுடைய
கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கும் வேதனைகள்.

போடியாரின் மாளிகையில் போரடித்த நெல்குவித்து
நாடோடிப் பாடல் மகிழ்ந்து பசிமறக்கும்.
ஊரின்புறத்தே ஒருநாள் நடக்கின்றேன்,

எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்
செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள
பொட்டல்வெளியில்
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!

1982.

1980பதுகளில் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் தந்த துயருடன் எழுதியது. தமிழ் நாட்டுக்குத் தெருக்கூத்துப்போல ஈழத்துக்கு கிழக்குமாகாணத்தின் கொடையான வடமோடிக்கூத்து கலை முகமாகும். வடமோடிக் கூத்து வசந்த காலம்தோறும் வட்ட அரங்கில் ஆடப் படுகிறது.


visjayapalan@gmail.com

Series Navigation