மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

பிறைநதிபுரத்தான்


‘உங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும்- சம அந்தஸ்துள்ள இந்துக்களாக நீங்கள் மதிக்கப்படுவீர்கள்’ என்று அடல் பிஹாரி வாஜ்பாய் – மக்வானா- சுப்பிரமனிய சுவாமி – போன்ற இந்து தேசிய தலைவர்கள் தேவ (சமஸ்கிருத & ஹிந்தி) பாஷைகளில் சொன்னதையெல்லாம் – தமிழக பாஷையில் மொழி பெயர்த்து தலித்களுக்கு கூறினர். ஆர்.எஸ்.எஸ் தடாலடியாக, உயர் சாதி இந்துக்களுக்குரிய ‘பூநூலை’ – தலித்களுக்கு அணிவித்து அவர்களை முழு அந்தஸ்துள்ள இந்துவாக சான்றிதழ் கொடுப்பதாகவும் ஆசைக்காட்டியது.

அப்போதைய மத்திய அரசு விசாரனை கமிசன் அனுப்பி மறைமுகமாக மிரட்டியது; தமிழக அரசின் மந்திரிசபையே (எம்.ஜி.ஆரை தவிர) வருகை புரிந்து தனக்கேயுரிய பாணியில் தலித்களை கெஞ்சியும் – கொஞ்சியும் பார்த்தது. ஆனால் இவை எதற்கும் ‘மசிந்து’ மனம் மாறாமல் – இராகு காலம் – எம கண்டம் பார்க்காமல், 1981ல் மதம் மாறி ‘அகண்டபாரதம்’ காண எண்ணியவர்களின் வயிற்றில் புளியை கரைத்தவர்கள்தான் மீனாட்சி புரத்தை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்கள்.

இந்து மதத்தை விட்டு போவதால் ‘சமூக அந்தஸ்த்து’ உயரப்போவதில்லை’ ‘சமூகம் விடுதலை பெற மதமாற்றம் சரியான மார்க்கமல்ல’ என்று ‘பூச்சாண்டியும்’ ‘அறிவுரையும்’ வழங்கினர் ‘சனாதான’ சமூக ஆர்வலர்களும் – தலைவர்களும்.

‘சமூக அந்தஸ்து’ மட்டும் கோரியா தலித்கள் மதம் மாறினர்? இல்லை. தலித் குடியிருப்பில் இல்லாத அடிப்படை தேவைகளான குடிநீர்- மின்சாரம்- சாலை வசதிகளையும் கேட்டுத்தான் மதம் மாறினர். இஸ்லாமியர்களாக மாறிய தலித்களுக்கு சமூக அந்தஸ்த்து கிடைப்பதற்கு சிறிது காலம் பிடித்தது என்னவோ உண்மைதான் ஆனால் உயர் சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்த பஸ் வசதி – மின்சாரம் – சிமென்ட் சாலை – தண்ணீர் தொட்டி போன்றவைகள் மீனாட்சிபுர மதமாற்றத்திற்கு பிறகு அக்கம்பக்கத்து தலித் கிராமங்களுக்கும் கேட்காமலே கிடைத்தது.

“ஹிந்து மதத்தில் அவர்களுக்கு தரப்படாத சமூக நீதி, இழைக்கப்பட்ட தீண்டாமை இவற்றிலிருந்து இஸ்லாம் விடுதலை அளிக்கும். இங்கு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்லி மதம் மாற்றப்பட்ட நிகழ்வு” (வெ.சா) என்று மீனாட்சிபுர தலித்களின் மதமாற்ற முடிவை கொச்சை படுத்தியும் – ஆசைக்காட்டி அவர்களை ‘மதம் மாற்றியதாக’ சம்பந்தமில்லாமல் இஸ்லாமியர்களையும் சாடுகிறார்.

இஸ்லாமிய மதத்தை தெர்ந்தெடுப்பதற்கு முன்பாக மற்ற மதங்களை பற்றியும் ஆய்வு செய்ததாகவும் – புத்த மதம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லையென்றும் – இந்து மதம் போலவே கிறித்துவ மதத்தில் ‘சாதீயம்’ புரையோடியிருக்கிறதாகவும் – அதனால்தான் இஸ்லாமிய மதத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர் மதம் மாறிய தலித்கள்.

தலித்கள் மதம் மாறுவதை ‘இந்துத்வ’ சக்திகள் எதிர்த்தது போலவே சில இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் எதிர்த்தனர்- சாதிப்பெயரை சொல்லியழைப்பதிலும் – இரட்டை குவளைகளை பயன்படுத்துவதிலும் – ஆதிக்க சாதியினரை பின்பற்றினர். நாலனாவுக்கும் – எட்டனாவுக்கும் ‘புளுக்க’ வேலை செய்பவனெல்லாம் தொப்பி போட்டு ‘துளுக்கனாக’ ஆகிவிட்டால் – என்ன செய்வதென்ற சுய நலத்தோடும்- உயர்சாதியினரின் கோபத்திற்காளகி விடுவோமென்ற பய உணர்வோடும் தலித்களை மத மாற்றம் செய்ய மறுத்தனர்.

மதம் மாற நிணைத்த தலித்கள் பாளையங்கோட்டையிலுள்ள தென் இந்திய இஷா-அத்துல் சபையை அனுகிய போது நூற்றுக்கணக்கான கேள்விகளை எதிர்கொண்டனராம், இந்து மதத்தை துறக்க காரணங்கள் என்னவென்று உலமாக்களால் வினவப்பட்டனராம் – ஆரிய சமாஜம் போல ‘ இந்துவாக மாறனுமா வாங்கோ – ஐந்தாயிரம் ரூபாய் தாங்கோ’ ன்னு நடைபாதை கடைகாரன் போல கூவிக்கூவி அழைக்கவில்லையாம்.

ஆதிக்க சக்திகளின் ஒடுக்குதல்களிலிருந்து விடுதலை பெற – எதிர்கொள்ள மீனாட்சிபுர தலித்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டவுடனே அக்கம்பக்கத்திலுள்ள சில கிராமங்களில் சாதீய உறவுகளில் தடாலடி மாற்றம் ஏற்பட்டது – வர்னாசிரம சிந்தனை ஆட்டம்கண்டது. டீக்கடைகளில் உள்ள இரட்டை குவளைகளில் ஒன்று மாயமாய் மறைந்தது – ஏளனமாக சாதிப்பெயரை சொல்லி அழைப்பது குறைய ஆரம்பித்தது. ‘பள்ளப்பயலே’ என்றழைத்தவர்கலெல்லாம் ‘பாய்’ என்றழைக்க ஆரம்பித்தனர். தெருக்களில் நுழைய தடை விதித்தவர்கலெல்லாம் – வீடுகளுக்குள் அழைத்து விருந்து கொடுத்தனர். அது மட்டுமல்ல, மதம் மாறிய தலித்களால் – மதம் மாறாதா கீழ்சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் அளவிற்கு சாதீயகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு – ‘சமூக அந்தஸ்த்து’ தரப்பட்டது. (இது சமூக அந்தஸ்தா (!) என்று வெ.சா போன்றவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)

மதம் மாறிய தலித்களை ‘தீட்டு கழிக்காமல்’ ‘பரிகாரம் செய்யாமல்’ அரவணைத்துக்கொண்ட சுற்றுவட்டார முஸ்லிம்கள் (தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், அச்சன்புதூர், வடகரை) பாரபட்சம் காட்டாமல் திருமண உறவுகள் வைத்துக்கொண்டனர். கோயிலுக்குள் நுழையவும் – தங்களுக்காக தனிக்கோயில் கட்டிக்கொள்ளவும் – சேரி வீதிகளில் ‘சாமி’ வலம் வரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாமல் சட்டைப்போடுவதற்கு கூட போராடியவர்கள் – மதம் மாறியதும் ‘தொப்பி போட்டுக்கொண்டு’ ஜமாத் தலைவராக – பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினராக உலா வர முடிந்தது. வேதங்களை கேட்கக்கூட அருகதையற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டவர்கள், ஒலி பெருக்கி மூலம் ஐவேளையும் தொழுகை அழைப்பு (பாங்கு) விடும் அதிசயம் நடந்தது. (இவைகள் மதம் மாறிய தலித்களை இஸ்லாமியர்கள் சமமாக நடத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களாக கருத தகுதியானவைகளா என்பதை வெ.சா போன்றவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்).

முஸ்லிம்களாக மதம்மாறினால் – இருக்கின்ற இட ஒதுக்கீட்டு சலுகைகள் எல்லாம் பறிபோய்விடுமென்று தெரிந்தும் – மதமாறிய மீனாட்சிபுர தலித்களை, வளைகுடாவிலிருந்து வந்த ரூ 500- நோட்டுக்காகவும் – இஸ்லாமியர்கள் போட்ட ‘பிரியானி’ பொட்டலங்களுக்காகவும்தான் மதம் மாறினார்கள் என்று இந்துத்துவவாதிகள் வழக்கம்போல கொச்சைப்படுத்தினர். மதமாற்றம் பற்றி ஆய்வு செய்த ஆறுமுகம் கமிட்டி அறிக்கையில் – மதமாற்றத்திற்கு வளைகுடா பணமோ அல்லது ‘பிரியாணி’ பொட்டலங்களோ காரணமல்ல என்று அறிக்கை சமர்ப்பித்து வரலாற்று திரிபர்களின் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மதம்மாறிய தலித்கள் அரபு ஷேக் குகளைப்போல் – ‘ஷோக்காக’ வாழ்கிறார்கள் என்ற ஆர்ய சமாஜத்தினரின் கூப்பாடு ‘கோயாபல்ஸ்’ வகையை சார்ந்தது என்ற ஹிந்து நாளேடு ‘மதம்மாறிய பின் தலித்களின் சமூக அந்தஸ்து உயர்ந்திருப்பது உண்மை – பொருளதார அந்தஸ்து உயரவில்லை’ என்ற உண்மையை போட்டு உடைத்தது…

மீனாட்சிபுர மதமாற்றத்திலிருந்து தமிழக தலித் கிராமங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன தெரியுமா? எப்பொதெல்லாம் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லையோ- அவர்களின் வசிப்பிடத்திற்கு தேவையான அடிபடை வசதிகள் மறுக்கப்படுகிறதோ – அவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறதோ – அப்பொழுதெல்லாம் அவர்கள் எடுக்கும் ஆயுதமாக மாறியது ‘இஸ்லாமியர்களாக மாறப் போகிறோம்” என்ற முழக்கம். முழக்கமிட்ட அடுத்த கனமே அரசு அதிகரிகளும் – IAS அதிகாரிகளும் விரைந்து வந்து வேண்டியதை செய்து கொடுத்தனர். இந்த ஆயுதத்தை கையிலெடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த வடநாதம்பட்டி தலித்களும் – காஞ்சி மாவட்டத்தை சார்ந்த கூத்திரம்பாக்கம் தலித்களும் வென்றெடுத்த உரிமைகள் பல.

pirainathipurathaan@yahoo.com

http://specials.rediff.com/news/2006/sep/27sld2.htm
http://www.hinduonline.com/hindu/today/13/13310611.htm
http://www.geocities.com/indianfascism/fascism/cast_not_cash.htm
http://www.hinduonnet.com/2002/10/13/stories/2002101302190500.htm

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்