பாவண்ணன்
கன்னத்தில் “கா ரூவா” அளவுக்கு இருக்கும் தழும்பு தொழுநோயின் அடையாளம் என்று உறுதிப்பட்டதால் உருவான மனப்புண் ஒருபுறமாகவும் மலைப்பக்கமாக மாடுமேய்க்கப் போனபோது குத்திவிட்ட கருவமுள்ளால் காலில் உருவான ஆறாத புண் மறுபுறமாகவும் குத்திக்கிழிக்க வதைபட்ட சிறுமியொருத்தி தன் மனவலிமையால் சிறுகச்சிறுக எல்லா வேதனைகளிலிருந்தும் மீண்டெழுந்த வாழ்க்கையின் சித்திரத்தை முத்துமீனாளின் சுயசரிதை வழங்குகிறது. நாற்பத்திமூன்று பகுதிகளில் காணப்படும் இத்தகு சிறுசிறு நிகழ்ச்சிகள் மனத்தில் ஆழமாகப் பதியும்வண்ணம் எழுதப்பட்டுள்ளன. முதல் நூல் என்கிற அடையாளமே தெரியாதபடி முத்துமீனாளின் மொழி படைப்பூக்கம் மிகுந்ததாகவும் செறிவானதாகவும் உள்ளது. நெஞ்சின் ஆழத்தில் புதையுண்டுபோன உணர்வுகளை வாசகர்களுடன் ஆத்மார்த்தமாக பகிர்ந்துகொள்வதில் நம்பகத்தன்மை மிகுந்த இந்த மொழிக்கு மாபெரும் பங்குண்டு.
தொழுநோயின் அடையாளம் உறுதி செய்யப்பட்டபிறகு குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி, மருத்துவத்துக்காகவும் கல்விக்காகவும் வெவ்வேறு விடுதிகளில் தங்கத் தொடங்கிய சிறுமி, வளர்ந்து பெரியவளாகி , படித்து வேலைக்குச் சென்றபிறகு தனக்கென ஒரு குடும்பத்தைத் தேடி உருவாக்கிக்கொள்வதுவரையிலான அனுபவங்களின் தொகுப்பு இச்சிறுநூல். தொழுநோய்க்கான மருத்துவத்துக்காக கிறித்துவ விடுதியொன்றில் தங்கியருக்கிறாள் சிறுமி. கிறித்துவர்களால் நடத்தப்படும் விடுதியென்றாலும் கிறித்துவத்துக்கு மாறும்படி தூண்டாத தொண்டுமனம் அங்கிருப்பவர்களுக்கு இருக்கிறது. அங்கே நல்ல ஆசிரியைகளும் உண்டு. மதிப்பெண்கள் குறைந்தால் அடி கொடுக்கிற ஆசிரியைகளும் உண்டு. விடுதி மாணவியின் முன்னேற்றத்தைக் கண்டு பாராட்டவும் வாழ்த்தவும் மதர்களும் சிஸ்டர்களும் இருக்கிறார்கள். நடத்தைக் குறைவைக் கண்டிக்கவும் வெளiயேற்றவும் தயங்காத மதர்களும் சிஸ்டர்களும் இருக்கிறார்கள். சான்றிதழுக்காக தேடியலைகிற இடத்தில் யாரென்றே முகம்தெரியாத நிலையில் தேவைப்பட்ட எல்லா உதவிகளையும் செய்கிற இளைஞனும் இந்த மண்ணில் இருக்கிறான். தன் மகளுடன் சேர்ந்து படிக்கிற மாணவியெனத் தெரிந்தும் திருட்டுத்தனமாக பாலுறவுக்காக அருகில் நெருங்கிவரும் தந்தையும் இந்த மண்ணில்தான் இருக்கிறான். முறைப்பெண்ணாக இருந்தாலும் தன் உயர்ந்த படிப்புக்கும் பதவிக்கும் தகுந்தபடி பணமும் நகையும் வேண்டுமென பேராசைப்படும் இளைஞனையும் இந்த இயற்கைதான் படைத்திருக்கிறது. எதுவுமே வேண்டாம் என்று திருமணத்துக்கு உடன்படுவதாக மகிழ்ச்சியுடன் கண்கலங்கிச் சொல்லும் இளைஞனையும் இந்த இயற்கைதான் ஆளாக்கிவைத்திருக்கிறது. மேன்மையும் சிறுமையும் எங்கெங்கும் நிறைந்துள்ளன. அது மனம் சார்ந்த குணம். இடம் சார்ந்த குணமல்ல. சிறுவயதிலேயே இதைப் பகுத்துணரும் வாய்ப்பு முத்துமீனாளுக்கு வாய்த்திருக்கிறது. ஒரு சமூகத்தில் பொதுவான ஒன்றாக ஒரு குணத்தை மேலோட்டமாக யார்மீதும் சுமத்தி அடையாளப்படுத்திவிட முடியாது என்கிற பார்வையையொட்டி, நாம் மேலும்மேலும் சிந்திக்க இந்த நிகழ்ச்சிகள் துணையாக இருக்கின்றன.
அன்புள்ளங்களின் ஆதரவு மிகுந்த விடுதியில் நடந்ததாக எழுதப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ஒரு சமயத்தில் தத்தெடுத்துக்கொள்ள முன்வந்த வெளிநாட்டுத் தம்பதியின் விருப்பத்தை சிறுமியிடம் எடுத்துரைக்கிறார் சிஸ்டர். போக மறுத்து அழுததும் “சரி, பரவாயில்ல. வேண்டாம்ன்னா கட்டாயப்படுத்தி அனுப்பமாட்டோம்” என்று ஆறுதல் அளிக்கிறார். இன்னொரு தருணத்தில் பூப்படைந்த செய்தியை ஆயா வழியாகத் தெரிந்துகொண்டு நெருங்கி வரும் சிஸ்டர் சந்தோஷத்துடன் கன்னத்தைத் தட்டிக்கொடுக்கிறார். பத்து நாளுக்கு பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று சொல்லி விடுதிக்குள்ளேயே தங்கவைத்து கவனித்துக்கொள்கிறார். தோட்டத்தில் உள்ள மல்லிகை, கனகாம்பரம் பூக்களைப் பறித்து கட்டிவைக்கும்படி கனிவுடன் சொல்கிறார். சிடுசிடுப்பும் மற்றவர் சந்தோஷத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எரிச்சலும் கொண்டவர்கள் சிஸ்டர்களாக வேலை பார்க்கும் கன்னியாஸ்திரிகள் என்னும் பொதுச்சித்திரத்துக்கு மாறாக முத்துமீனாள் சுட்டிக்காட்டும் கனிவும் தாயுள்ளமும் கொண்ட சிஸ்டர்களின் சித்திரங்கள் அமைந்துள்ளதன. பரிவும் பாசமும் கொண்டவர்களiன் நெருக்கத்தை எல்லாக் கட்டங்களிலும் வாழ்க்கை முத்துமீனாளுக்கு வழங்கியிருக்கிறது.
இச்சுயசரிதையில் முக்கியப் பங்கு வகிப்பவையாக முத்துமீனாளின் நினைவுப்பகுதிகளில் உயிரோட்டத்துடன் உலவும் பிற மனிதர்களின் சித்திரங்களைச் சொல்லவேண்டும். படுக்கையறையில் கொழுந்தனோடு படுத்திருந்ததைப் பார்த்துவிட்ட மகளiன் தலையில் சுடச்சுட மீன்குழம்பை ஊற்றிக் கொல்ல நினைக்க விரும்பும் தாய், காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட ஐம்பது ரூபாயில் தனக்கு உரிய பதினோரு ரூபாயைமட்டும் எடுத்துக்கொண்டு மந்தரித்துவிட்டுப் போகும் சென்னாரம்பட்டி பாய், தாயின் கொடுமை தாளாமல் செத்துப்போகும் மல்லிகா, தாயை அச்சுறுத்துவதாக எண்ணிக்கொண்டு எலிமருந்தைக் குடித்துவிட்டு உண்மையிலேயே உயிரைப் பறிகொடுக்கும் செல்வி, ஆசிரியைப்பயிற்சிப் படிப்புவரை படிக்கவைத்து நல்ல எதிர்காலத்துக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்த நிறுவனத்திலிருந்து வெளியேறிச் சென்று ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒருவரோடு வாழச் சென்று வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மீண்டும் கருணைக்காக காத்து நிற்கும் மல்லிகா. சினிமா பார்க்க ஆசைகாட்டி சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துச் சென்றவளை நடுவழியில் கீழே தள்ளி அரிவாளால் வெட்டியும் குத்தியும் சீரழிக்கிற ஆண், காதலி எரிந்துபோன சுடுகாட்டுச் சாம்பலை திருநீறாகப் பூசிக்கொண்டு “நீ செத்த முப்பதாம் நாள் உன்னோட நானும் வந்துருவேன். நான் செத்தபிறகு உன்னோட சேர்றத யாரும் தடுக்கமுடியாது. இது உன்மேல சத்தியம்” என்று சொல்லிவிட்டு ஒரு நோட்டுப்புத்தகம் முழுக்க காதலியின் பெயரையே எழுதிஎழுதி நிரப்பிவிட்டு உயிர்துறக்கிற பழனி, அளவுக்கதிகமான பணத்துக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு அறிமுகமில்லாதவளைத் திருமணம் செய்துகொண்டு, சொந்த வாழ்வில் நிம்மதியை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு தவிக்கும் பொறியியல் பட்டதாரி இளைஞன், தன் வார்த்தையை மகன் மதிக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் மனமொடிந்து யாருமில்லாத சமயத்தில் வீட்டுக்குள் தூக்குபோட்டுத் தொங்கி உயிரைவிடுகிற தாய் என இளமை முதல் எதிர்கொண்ட பலரை சிற்சில வாக்கியங்களாலும் ஓரிரு பக்கக் குறிப்புகளாலும் அவர்களுக்குரிய வண்ணங்களோடு தீட்டிக் காட்டுகிறார். வாழ்க்கை எப்போதும் ஒரே திசையில் ஓடக்கூடிய நதியின் போக்காக இல்லை. வெவ்வேறு கிளைகளiலிருந்தும் வெவ்வேறு மூலைகளiலிருந்தும் வந்து சேர்ந்து உறவாடிவிட்டு விலகியோடுகிற கால்வாய்களின் இணைப்பாக உள்ளது. மாறுபட்ட பார்வைகள், வேறுபட்ட எண்ணங்கள், ஒவ்வாத உணர்வுகள், காரணமில்லாத வெறுப்புகள் என எந்தத் தர்க்கத்துக்குள்ளும் அடங்காத இணைப்புகளோடுதான் இந்த வாழ்க்கையை வாழவேண்டி இருக்கிறது.
தன்னிரக்கத்தைத் தூண்டக்கூடிய வரிகளை எழுதும் தருணங்களை உறுதியுடன் தாண்டிவிடும் பக்குவமும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பிறரைப்பற்றிய மிகைப்படிமத்தை உருவாக்கிவிடக்கூடிய தருணங்களை கச்சிதமாகச் சுருக்கித் தவிர்த்துவிடும் பக்குவமும் எழுத்தாக்கத்தில் முத்துமீனாளுக்கு கூடிவந்திருக்கும் தேர்ச்சியையும் கவனத்தையும் அடையாளப்படுத்துகின்றன.
( முள்: சுயசரிதை. முத்துமீனாள். ஆழி வெளியீடு. 12, முதல் பிரதான சாலை. யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-24. விலை. ரூ50)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4
- தந்தை- மகள் – தமிழ் உறவு
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.
- எழுத்து எழுதுகிறது
- அந்த கொடிய பகலின் வேதனை
- பூனைகள்…
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )
- அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..
- குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது
- தமிழ் மீடியாவும் கூப்பாடும்
- தமிழ் ஸ்டுடியோ.காம்
- காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு
- ஏ ஜே நூல் வெளியீடு
- இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…
- கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 16
- கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி
- விட்டு விடுதலையாகி….
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>
- தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !
- தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்
- மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2
- ‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது
- நான் நிழலானால்
- கிறிஸ்துமஸ் பரிசு
- காலிமண்டபமும், கடவுள்களும்…..
- ஞயம் பட உரை