கே.ஆர்.ஐயங்கார்
தொலைபேசி பிண்ணனிப் பாடகி ஹரிணியின் குரலில் கொஞ்சிக் கொஞ்சிக் கூப்பிட்டது.
ராமபத்ரன் தூக்கக் கலக்கத்துடன் போனை எடுத்தார்
‘ஹலாவ்வ்வ் ‘
‘ஹலோ நான் சுபத்ரா பேசறேன் ‘ மறுமுனையில் அவர் மனைவி
‘என்னடி நல்ல கனவில் என்னை எழுப்பிட்ட ‘ என்றார் ராமபத்ரன்
‘என்ன கனவு, உங்கம்மா வாழையிலை போட்டு புளிக்காய்ச்சல், அக்கார வடிசல் பருப்பு உசிலி, கத்தரிக்கா பொடிக்கறிமீதுன்னு போட்டுண்டு இருந்தாளாக்கும் ‘
‘அதெப்படிடா உனக்குத் தெரிஞ்சுது ‘
‘ஆமா.அம்பது வயாசாச்சு. உடம்பு முழுக்க சுகர், ப்ள்ட் ப்ரஷர். உப்பு,புளி, காரம் இதப் பத்தில்லாம் – கனவுல கூட நீங்க நினைக்கக் கூடாது சொல்லிட்டேன் ‘
‘இதைச் சொல்லவா போன் பண்ணினே ‘
‘இல்லை. அர்ச்சனாக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு ‘
‘வாவ் குட் நியூஸ். குழந்தை எப்படி இருக்கு, முடி நிறைய இருக்கா ‘
‘குழந்தை நன்னா இருக்கு. ஏழு பவுண்ட். அர்ச்சனா(சுபத்ராவின் ஒன்றுவிட்ட தங்கை) உங்க கிட்டத்தான் பேர் கேட்கணும்னு சொல்லியிருக்கா. அ வில் ஆரம்பிக்கிற நல்ல பேராச் சொல்லுங்கோ. இப்ப அவசரமில்லை. சாயந்தரம் இங்க- மியாமிக்கு வருவேளோல்லியோ அப்ப சொல்லுங்கோ. உங்களுக்கு சமஸ்கிருதம் நல்லாத் தெரியும்னு சொல்லியிருக்கேன். இங்க வந்து கெக்கேபிக்கேன்னு உளறி வைக்காதேள் ‘
‘சரிம்மா ‘ என்றவண்ணம் போனை வைத்தார் ராமபத்ரன்.
அ வில் என்ன பெயர் வைக்கலாம். அனிதா, அமிர்தா, அனுஷா அர்ச்சனா – இது அவ பேராச்சே. அஞ்சலி என பல பெயர்கள் ஓடின. பேசாம ‘அம்மா ‘ன்னே வச்சுடலாமா. அதுலயும் ஒரு ப்ராப்ளம். நாளப் பின்ன குழந்தை பெரியவளாகி மெட்ராஸில் நடன அரங்கேற்றம்னு போறச்சே இன்விடேஷன் ல எப்படிப் போடுவார்கள் ‘திருவளர்செல்வி குமாரி அம்மா ‘ வின் நடன அரங்கேற்றம்னா. பத்திரிகைகள் என்ன எழுதும். ஏற்கெனவே ஒரு அம்மாவால் தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது… எல்லோருக்கும் உணவு கிடைக்கிறது…இப்போது நடனக் கலைக்காக இந்த அம்மா… என்றா..
அந்த எண்ணத்தை ரப்பர் போட்டு அழித்தார் ராமபத்ரன். படுக்கையில் இருந்து எழுந்து குளிக்கும் போதும் அ ஞாபகமாகவே இருந்தது. வலைக்குள் நுழைந்து பெயர்களையாவது தேடலாம் என இண்டர்னெட்டுக்குக்
கனெக்ஷன் கொடுத்தார். அது கழுத்துத் திருகிய கோழி மாதிரி கத்திவிட்டு கனெக்ஷன் தந்தது.
சரி முதலில் தமிழ் ரேடியோ கேட்கலாம் என நினைத்து ரேடியோ போட்டார். ஏழு எட்டு வயது சிறுவனின் குரல் ‘முதல்ல நாங்கள்லாம் குச்சியை அடுக்கி அந்த சதுர தட்டுக்கள்ள வச்சுக் கொடுப்போம், பிறகு அந்தத் தட்டுக்களை எல்லாம் சூப்பர்வைசர் அண்ணன் எடுத்து அடுப்புப் பக்கம் உள்ள இடத்தில் சொருகிவிடுவார் கீழே இருக்கும் தட்டுக்களில் மருந்து இருக்கும். கொஞ்சம் ஆன் பண்ணவுடனே, குச்சிகள்ளாம் மருந்துல்ல கொஞ்சம் முங்கும். அதுக்கப்புறம் குச்சில்லாம் காஞ்சவுடனே அதை எடுத்து தீப்பெட்டில்ல போட்டு பாக் பண்ணுவோம் ‘ இதுவரை ‘மேட்ச் ஃபிக்ஸிங் ‘ பற்றி சிவகாசியைச் சேர்ந்த துரைப்பாண்டி கூறக் கேட்டார்கள்….
அட சட் அணைத்து விட்டு வலைப்பக்கம் போகலாமென நினைத்து நேரம் பார்த்தார். மைகாட் நேரமாகிவிட்டதே.
வலைவிட்டு வந்து டிரஸ்பண்ணிக்கொண்டு வேகமாய் ஆபீஸ் கிளம்பினார். சமர்த்தாய் நின்று கொண்டிருந்த 1985 மாஸ்டாவைத் தட்டிக் கொடுத்து எழுப்பினார். வேகங்கூட்டி செல்கையில் மறுபடியும் அ வந்து நினைவில் அமர்ந்து கொண்டது.
தன் பையன் பேருக்குக் கஷ்டப் பட்டது ஞாபகம் வந்தது. அவர் பையன் பிறந்தவுடனே அவர் நினைத்த பெயர் ராஜேஷ். சுபா ஆசைப்பட்டது நிகில்.அவர் அம்மா கண்டிப்பாய்ச் சொல்லி விட்டாள் ஒழுங்கா அப்பா பேர் ரங்கசாமின்னே வை. இல்லைன்னா தாத்தா பேர் தங்கம்னு வை. அதான் நம்ம குடும்ப வழக்கம் ‘
சுபா கண்ணைக் கசக்க, அம்மா ‘ம் எம்பேச்சை யார் கேக்கறா இந்த வீட்டில ‘என அங்கலாய்க்க கடைசியில் ரங்க சாமி தான் ஒர்க் அவுட் ஆனது.
‘சும்மாச் சும்மா என் கூட வர்றச்சே தான் ஃப்ளாஷ் பேக் நினைச்சுக்கணுமா… ‘ எனக் கேட்டது கார்..
‘பின்ன…பாட்டுக் கேக்கணுங்கறியா.. ‘
‘ராமு..சொல்றதக் கேள். எனக்கும் வயசாச்சு, உனக்கும் வயசாச்சு. உன்னை நீ இளமையா மாத்திக்க முடியாது. பேசாம என்னையாவது மாத்திக்கயேன். ஏன் என்னை வெச்சுண்டு லோல் படறே ‘ லொக் லொக்கென்று இருமியவண்ணம் சொன்னது கார்.
‘ச்..ச்.. இப்படி எல்லாம் அச்சானியமா பேசாதே. உன் திறமை உனக்குத் தெரியாது…நீ தான் எனக்கு ஆகிவந்த வண்டி ‘
‘ம்.. என்ன ஆகிவந்தேனோ… சரி உன்னோட ஃப்ளாஷ் பேக் தான் எனக்குத் தெரியுமே.. நான் சொல்லட்டா.. ‘
‘சரி சொல்லேன் ‘
‘வயிறு பசிப்பது போலத் தோன்ற ராமபத்ரன் அந்த ரப்பர் ஷிட்டில் கையைக் காலை உதைத்துக் கொண்டு வீல் என அழ ஆரம்பித்தான்.. ‘
‘மட மாஸ்டா… அவ்வளவு முன்னால் போக வேண்டாம். ஒரு வருஷத்துக்கு முன்னாடி போ ‘
‘சரி கதை சொல்ற மாதிரி சொல்றேன் சரியா..தன்னிலை,முன்னிலை படர்க்கைன்னுல்லாம் சொல்லச் சொல்லாதே. எனக்குத் தமிழ் அவ்வளவா வராது.. ‘
‘சரி.சொல்லேன் ‘
‘போன வருடம் சென்னை சென்ற போது அவரது ஒரே அருமந்தப் புத்திரன் ரங்கசாமி படிக்கும் தனியார் பொறியியற்கல்லூரிக்குச் ( ஊரைச் சொன்னாலும் காலேஜ் பேரைச் சொல்லக் கூடாது) சென்றிருந்தார் ராமபத்ரன்.
அவன் ரூம் எது என எதிர்ப்பட்ட மாணவனை விசாரித்தால் ‘யார் ரங்க சாமியா யூமீன் ஆர்.ஆர். சாமி. நேர போங்க ரூம் நம்பர் 72 ‘
அவர் போவதற்குள் ரங்கசாமியே எதிர்ப்பட்டான். ‘ டாடி, எப்படி இருக்கீங்க. அமெரிக்கா எப்படி இருக்கு ? அம்மா எப்படி இருக்கா ?. நானே சனிக்கிழமை மாமா வீட்டுக்கு உங்களைப் பார்க்க வரலாம்னு இருந்தேன் எக்ஸாம்ஸா வரமுடியலை ‘ என சரமாரியாகக் கேட்டவனை நிறுத்தி உற்றுப் பார்த்தார். ஜீன்ஸ், டிஷர்ட் காதில் வளையம் என்று எதுவும் இல்லாமல் சாதாரணமான பேண்ட் ஷர்ட்டில் இருந்தான் அவன்.
‘என்னடா காலேஜ் பையனா லட்சணமா ஸ்டைலா இருப்பேன்னு பார்த்தாக்க இப்படி இருக்கே. அது என்ன
பேரை ஆர்.ஆர்.சாமின்னு மாத்திண்டிட்டயாம். ‘
‘ஆமாம்ப்பா. கொஞ்சம் மாடர்னா இருக்கலாம்னு தான். ‘ சிரித்தான். அதற்குள் அவன்அறை வந்துவிட
உள்ளே நுழைந்தனர். அறை சுத்தமாக இருக்க, ஒரு பெரிய வெங்கடாஜலபதிக் காலண்டர் மட்டும் தொங்கிக் கொண்டு இருந்தது. ஊது பத்தி மணம் கமழ்ந்தது. ‘டேய் நான் வருவேன்னு இப்படி மாத்திண்டிட்டியா ‘
‘இல்ல டாடி ‘
‘பின்ன நம்பவே முடியலையே. ஸ்டூடண்ட்ஸோட ரூம்னா குறைந்த பட்சம் ஒரு ஐஸ்வர்யா ராய் படமாவது
இருக்கவேண்டாமோ. ‘
‘டாடி எந்தக் காலத்தில இருக்கீங்க. இப்போ ப்ரியங்கா சோப்ரா வந்தாச்சு ‘
‘ஏன் காயத்ரி ரகுராம் இல்லையா. ஏண்டா இப்படிக் கெட்டுப் போயிட்டாங்க. ‘
‘டாடி அதெல்லாம் உங்க காலமா இருக்கலாம். நாங்கள்லாம் இப்போ படிப்பு ஒன்று தான். அப்பப்ப ஜொள்ளு விடுவோம் இல்லைங்கல ‘
‘ஏண்டா சிகரட் கூடவா கிடையாது ‘
‘அதெல்லாம் முன்னாலயே முடிச்சாச்சு. ‘ எனச் சிரித்தான்.
‘சரி ஒழுங்காப் படிக்கறயோன்னோ.. அவனவன் அமெரிக்காவில டிகிரி வாங்கணும்னு ஆசைப்படுவான். நீ என்னடான்னா அங்கே வளர்ந்துட்டு, இங்கே இந்தியால படிக்கணும்னு ஆசைப் படறே ‘
‘டாடி, நான் ஒரு இந்தியன் தானே.. பிறப்பால்.. ‘
‘இப்போ யு.எஸ் சிட்டிசன் டா நீ… சரி. பி.எஸ் முடிச்சுட்டு அங்க வா.. மாஸ்டர்ஸ் பண்ணிக்கலாம்.. ‘
‘நோ..டாடி..நான் அங்கெல்லாம் வர்றதா இல்லை.. எல்லாம் இங்கேயே தான்.. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்… ‘
‘அடப்பாவி.. உன்னை வெச்சு என்னல்லாம் கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்.. டாலர் டாலரா வரதட்சணை வாங்கலாம்னு… ‘
‘வரதட்சணை லாம் வாங்கக் கூடாதுப்பா.. ‘
‘அது இங்கே.. அங்கே வாங்கலாம்.. வாங்கின பணத்துக்கு டாக்ஸ் கட்டிடுவேன்.. ‘
‘போங்க டாடி.. ‘
‘ஏன் தான் என் பெயரைக் கெடுக்கறியோ தெரியலை ‘
‘இல்லையே.. என் பேரைத்தானே சுருக்கிண்டேன்.. ‘
‘ஃப்ளாஷ்பேக் இது போதுமா, இன்னும் வேணுமா.. ‘ கார் கேட்டது.
பத்ரகாளி ராணிசந்திரா போல மூச்சு வாங்க ‘போதுண்டா செல்லம்.. உன்னைப் போல ஃப்ளாஷ் பேக் சொல்ற காரு கிடைச்சா.. ‘
‘ரொம்ப ஸ்லோவாப் போவயாக்கும்…ஆமா என்ன திடார்னு..பையன் ஞாபகம் வந்துடுத்தா ‘
‘இல்லைப்பா.. என்னோட ஒண்ணு விட்ட மச்சினிக்கு.. ‘
‘சரி தெரியும்.. அதுக்காக பேரும் யோசிச்சுண்டு இருக்க..அதுவும் தெரியும்.. ஏன் இப்போ பையன் ஞாபகம் னு கேட்டேன் ‘
‘பையனுக்குப் பேர் வச்சது ஞாபகத்துக்கு வந்தது..நீயே சொல்லு.. பெயர்ங்கறது என்ன… ‘
‘பெயர் என்பது ஒரு அடையாளத்திற்காக.. வேறு படுத்திக் கொள்வதற்காக வைக்கப் படுவது. என்னைப் போன்ற கார்களுக்கெல்லாம் மாடல்,வருடம்,கம்பெனி பெயர் என்றாகி யாரிடம் இருக்கிறோமோ அவரது பெயர் எங்கள் முன்னால் வந்து விடும்.. சர் நேம் போல. இது இன்னாரின் கார் என்பார்கள்.
மனிதர்களைப் பொறுத்தவரை பெயர் என்பது அடையாளம் மட்டுமல்ல.. கூடவே ஜாதியும் சேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனும் முதலில் பெற்றோரால் பெயர் பெற்றது பற்றாது என படிப்பு,வேலை என உழைத்துப் பெயர் பெறுகிறான். இதில் ஒரு பாடல் வேறு என் நினைவுக்கு வருகிறது.. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே..
ஆக மனிதன் நல்ல பெயர் பெறுவதும் கெட்ட பெயர் பெறுவதும் பின்னால்.. அவன் அன்னை வளர்க்கும் விதம் ஒருபுறம் பின்னர் அவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தும் அமைகிறது..
நீ என்னடாவென்றால் ஒரு பச்சைக் குழந்தைக்குப் பெயர் வைக்க மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறாய் ‘ என்று சொல்லி இருமியது கார்.
ஸ்டியரிங்கை விட்டுவிட்டுக் கை தட்டினார் ராமபத்ரன்.. ‘வர வர நீளமாகப் பேசி சில நவீன இலக்கியவாதிகள் போல ஆகி விட்டாய் ‘
‘என்ன சொன்னாய் ராமு ? ‘ கார் உணர்ச்சிவசப் பட்டது. ‘என்னை இத்தனை வருடம் வைத்திருக்கிறாய்.. நான் ஒரு நாளாவது உன்னைக் கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறேனா ?.. அங்கங்கே உன்னால் ரியர் எண்டில் அடிவாங்கினாலும் வலியை எல்லாம் தாங்கிக் கொண்டு மெலிதான டெண்ட் தான் தந்திருக்கிறேன்…நான் உனக்கு ஏதாவது துரோகம் செய்து விட்டேனா என்ன. ?. எப்படி இந்த வார்த்தை சொல்லலாம். ?.. ‘
சற்றே மூச்சு விட்டு மறுபடியும் புலம்பியது. ‘நான் என்ன நாவல் ஏதாவது எழுதியிருக்கிறேனா..போலந்தைச் சேர்ந்த புருடாவ்ஸ்கி, ரஷ்யாவைச் சேர்ந்த ஏதோ காரசேவ், பக்கோடா மற்றும் எனது நாவல்கள் தான் உலகத்திலேயே சிறந்தவை, மற்றதெல்லாம் குப்பை எனப் பேசிக் கொண்டிருக்கிறேனா. ? …தமிழ் தெரிந்த அனைவரும் முட்டாள்கள் – என் நாவல்களை, நான் நடத்தும் சிற்றிதழ்களைப் படிப்பவர்களைத் தவிர – என்று சொல்லியிருக்கிறேனா ? ஆசையும்,மதிப்பும் கொண்டு தனது புத்தகம் பற்றிப் பேச அழைப்பவர்களைக் கண்டபடி திட்டிப் பேசி மனம் நோக வைத்து விட்டு அது தான் எனது காரெக்டர் எனப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேனா ?..அல்லது நான் பேசியது எதுவும் உனக்குப் புரியவில்லையா ? ‘
‘செல்லம்..கோபிச்சுக்காதடா.. நீ – பெயரைப் பற்றிச் சொன்ன வாசகங்கள் மாய வெளியில் பிரபஞ்சத்தை நோக்கிச் சென்று விட்டு எனது மனதின் கசட்டு அழுக்குகளைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் இடப்பட்ட சோப்புக்கட்டி போலக் குளிர்வித்து, இப்படி அழகாய் நீ யோசிக்கிறாய் என்ற ஆச்சர்யமும் மன வானிலே சுற்றிச் சுழன்றாடித் துள்ளித் துள்ளி விளையாடினாலும் கூட… ‘
‘ஹேய் ராமு.. நிறுத்து.. நீ தான் இப்போது சில நவீன இலக்கியவாதிகள் போலப் பேசுகிறாய்…ஆனாலும் – என்னை நீ முட்டாள், உதவாக்கரை என்றெல்லாம் திட்டியிருக்கலாம்… இப்படி என்னைப் பற்றிச் சொல்லிவிட்டாயே.. நான் இனிமேல் உன்னுடன் பேச மாட்டேன் போ ‘ கார் பொருமிப் பேச்சை நிறுத்தியது..
‘செல்லம்.. ஸாரிடா.இனிமேல் விளையாட்டுக்குக் கூட உன்னை அப்படிச் சொல்ல மாட்டேன் சரியா.. ‘
முன்னால் சென்ற லெக்ஸஸ் சற்று நிற்க ராமபத்ரனும் காரை நிறுத்தினார்.
சிக்னல் மாறியதும் வேகங்கூட்டி யமாட்டோ ரோடில் நுழைந்து இரு மைல்கள் சென்ற பிறகு தான் கார் பேச ஆரம்பித்தது..
‘சரி போனாப் போறது போ. என்னோட முதலாளியா ஆயிட்டே.. ஆமா..என்ன ஆபீஸிக்கு லேட்டாப் போறதா உத்தேசமா ? ‘ எனக் கேட்க ராமபத்ரன் நேரம் பார்த்தார். ஆபீஸ் துவங்க பத்து நிமிடம் தான் இருந்தது. உடன் டென்ஷனாகி மறுபடியும் வேகங்கூட்டிச் செல்ல.. மார்பில் சுருக்கென வலியெடுக்க.. ‘அப்போதே சொன்னேன்ல.. உனக்கு வயசாய்டுத்துன்னு.. சரி சரி ப்ரேக்கை மிதி..என்னை ஓரங்கட்டு ‘ என்றது கார்.
ஓரங்கட்டி நிறுத்த, மயக்கமாக வந்த பொழுதில் விய்ங்க் வீய்ங்க் என்று சத்தமிட்டு ஒரு போலீஸ் வண்டி மாஸ்டாவின் பின்னால் நிற்க அதிலிருந்து ஒரு அழகிய பேரிளம் பெண் -பெண் காப்..யூனிபாரத்துடன் இவரை நோக்கி அருகில் வர – தனது பர்ஸை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு ராமபத்ரன் நினைவிழந்தார்..
**********************
சுபத்ரா சொல்கிறாள்.. ‘ அர்ச்சனா யாரு.. என்னோட ஒண்ணு விட்ட தங்கை. இங்க மியாமிக்கு வருவான்னு நான் நினைச்சேனா.. நாம இருக்கறது டெல்ரே பீச்.. ஒன்னரை மணி நேரம் தான் டிரைவ். போய் பாத்துட்டு வர்றேனே.. இந்த சமயத்தில நாம் ஹெல்ப் பண்ணலைன்னா வேற யார் பண்ணுவா.. ‘
ராமு சொல்கிறார் ‘நீ பாட்டுக்குப் போறேங்கற.. நான் டெய்லி வந்து உன்னையும் அவளையும் பாக்கணுமாக்கும்..என்னை யார் பாத்துக்குவா.. ‘
சுபத்ரா, ‘ஆமா.. பெரிய சின்னக் குழந்தை பாழாப் போறது. ஓட்ஸ் போட்டுக்கத் தெரியாதா உங்களுக்கு. போன் பண்ணா பிட்சா கொண்டு வர்றான். தோசை மாவு செஞ்சு வச்சுருக்கேன். வார்த்துக்கோங்களேன்.. ‘
ராமு, ‘ இப்படியெல்லாம் சொல்லிக்கோ.. ம்ம்.. இங்க வந்து பதினஞ்சு வருஷமாச்சு.. நீயும் ஒவ்வொரு ரிலேட்டிவ்னு சொல்லிக்க்கிட்டு ஹெல்ப் அது இதுன்னு சுத்திக்கிட்டு இருக்கே… நீ இல்லாத சமயத்துல எனக்கு ஏதாவது ஆச்சுன்னா… ‘
சே..அப்படி எல்லாம் சொல்லியிருக்கக் கூடாதோ..அதனால் தான் காரோட்டும் போது ஹார்ட் அட்டாக்கா..சுபா.. உன்னை விட்டுட்டுப் போகப் போறேனா… எனக் குழப்பமாக வசனங்கள் பிம்பங்கள் தோன்ற மலங்க மலங்கக் கண்ணை மெல்ல விழித்தார் ராமபத்ரன்..
பக்கத்தில் சுபா.
‘கரெக்டா அந்த ஆபீஸர் (பெண் போலீஸ்) போன் செய்து என்னை ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லி விட்டாள். அவள் தான் இந்த ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறாள்.. ஒண்ணும் இல்லை. கொஞ்சம் b.p ஜாஸ்தியாகி இருக்கிறது.. அவ்வளவு தானாம்.. ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடுமாம்… ‘
‘எங்கே அந்த ஆபீஸர். அவள் பெயர் என்ன ‘
‘அமெண்டாவோ என்னவோ..என்ன பண்ணப் போறேள்.. ‘
‘நாளப் பின்ன போய் அவளுக்கு தாங்க்ஸ் சொல்ல ப் போறேன்.. ‘
‘மண்ணாங்கட்டி.. ஒண்ணும் வேண்டாம்..உங்களுக்கு டிக்கட் போட்டுட்டுத் தான் போயிருக்கா..ஓவர் ஸ்பீட்ன்னு..! ‘
‘சுபா .. ஒண்ணு பண்ணலாமா.. அர்ச்சனா குழந்தைக்கு அமெண்டான்னே வெச்சுடலாமா.. ‘
‘உங்களுக்கு ஏதோ ஆச்சுன்னவுடனே – அர்ச்சனா சொல்லிட்டா அவ குழந்தைக்கு உங்க பேர் தான் வெக்கப் போறாளாம்.. ‘
‘அடிப்பாவி முடிவே பண்ணிட்டாங்களா.. ‘ ‘
‘சீ..இல்லைன்னா.. ஒரு நன்றிக்காக… ‘
‘ராமான்னா ஆம்பளைப் பெயரோன்னோ ? ‘
‘ரமா ன்னு தான் வெக்கப் போறா.. ‘
‘பேசாம ரமா அமெண்டா ன்னு வெக்கச் சொல்லு ‘ என்றார் ராம பத்ரன்
***
- நான் கணினி வாங்கிய கதை
- பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிங்களக் கவிதைகள்
- வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)
- சிங்கள அச்சரு (சிங்கள காய்கறி ஊறுகாய்)
- கோவா முறை பன்றிக்கறி விண்டலூ
- மாட்டுக்கறி பிரியாணி
- சுழற்சியில் பிரபஞ்சம் ( ‘cyclic ‘ Universe) – கேள்வி பதில்கள்
- பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில்
- விஞ்ஞானியைப் போல் சிந்திப்பாயாக
- முதல் விலங்கியல் அறிவியலாளர் அரிஸ்டாட்டில் (Aristotle)
- விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன்
- கவிதையைத் தேடுகிறேன்
- நகர் வெண்பா – இன்னும் நான்கு
- ‘ஆபிாிக்க அமொிக்கக் கனேடியக் குடிவரவாளன் ‘
- பூக்கள் பேசுவதில்லையா ?
- அந்த நாட்கள்
- நீர் நினைவுகள்
- ஓடிவா! ஓடிவா! தேவன்மடி!
- மெளனமாய் நான்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி – 3 (அத்தியாயம் 3 : இந்துத்துவத்தின் பரிணாமம் – ஒரு வரலாற்றுக் குறிப்பு)
- கத்தோலிக்கப் பாதிரியார்கள் : அமெரிக்கா-ஐரோப்பாவில் உருவாகி இருக்கும் பெரும் பிரசினையும் இந்திய பத்திரிகை உலகமும்
- ஹைதராபாத்தில் பார்க்க வேண்டிய இடம்.
- அடையாளம் காண்கிற தற்காப்பு
- மிஸ். ரமா அமெண்டா
- தவசிகள்
- நாடியை நாடி……