மாற்று வழி

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

குரல்செல்வன்



குசீன் சப்ஸ் கடையில் ஒரு சாண்டவிச் வாங்கினால் அதே போல இன்னொன்று இனாம் என்கிற கூபானுக்கு அந்த ஞாயிறுதான் கடைசி நாள். அதனால் சாமியும், சரவணப்ரியாவும் மாவட்ட உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு மணி உழைத்து விட்டு வேர்வையற்ற உடைக்கு மாற்றிக் கொண்டு கிளம்பினார்கள். ஏப்ரல் மூன்றாம் வாரத்திற்குக் கொஞ்சம் குளிராகத்தான் இருந்தது. நெடுஞ்சாலையில் வடக்கே செல்லும் பாதையில் சாமி காரைத் திருப்பினான்.
“ஏன் எதிர்ப் பக்கமாப் போறே?”
“வழக்கமா போற கூல்ஸ்ப்ரிங் கடைக்குப் போகப் போறதில்லை. ப்ரென்ட்வுட்டிலேயே புதுசா ஒரு குசீன் சப்ஸ் திறந்திருக்கு. எப்படி இருக்குன்னு பாப்பமே.”
“எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கப் போவுது.”
கடையை அடைந்த போது ஆறரை மணி. ஏழு மணிக்குத்தானே மூடுவார்கள், அதற்குள் சாப்பிட்டு விடலாம். கதவைத் திறந்து இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
ஆர்டர் செய்யும் வரிசையில் ஏற்கனவே இரண்டு பேர்.
“நான் ரெஸ்ட் ரூம் போகணும். நீ ஆர்டர் செஞ்சா நான் வந்து எடுத்து வைக்கிறேன்” என்றான் சாமி.
“என்னிடம் நாலு டாலர்தானே இருக்கு. ஐந்து சில்லரை ஆகும்.”
சாமி அவன் பர்ஸைப் பிரித்துப் பார்த்தான். நான்கு இருபது டாலர் நோட்டுகள் மட்டுமே கண்ணில் பட்டன. ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
ஓய்வு அறையின் கதவு சாத்தி இருந்தது. சுவர் பக்கத்தில் சாய்ந்து நின்று காத்திருக்கும் நேரத்தில் கடையின் பக்கம் பார்வையைத் திருப்பினான். சரவணப்ரியா இன்னும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. வேலை செய்யும் இடத்தில் இரண்டு பெண்கள். நீள வாக்கில் வெட்டிய ப்ரெட்டில் சீஸில் தொடங்கி பல பொருட்களை அடுக்கி அதை அடுப்பில் சுட்டுத் தருவதற்கு ஒரு கறுப்புப் பெண். பெரிய உருவத்திற்கு மேல் கோபுரம் போன்ற கூந்தல் முடிப்பு. பணம் வாங்கும் இடத்தில் இருந்தவளை அவனுக்குத் தெரியும். நேரடியான பழக்கம் இல்லை, அதனால் அவளுக்கு அவனைத் தெரிந்திராவிட்டால் வியப்பதற்கில்லை. சூரன் பள்ளியில் படித்த போது அவனை விட மூன்று வகுப்புகளுக்குக் கீழே சந்திரா ஏப்ரஹாம் படித்தாள். ஆண்டு இறுதியில் படிப்பில் சாதனை புரிந்தவர்களுக்குப் பரிசுகள் தரும் விழாவில் அவளையும் பார்த்திருக்கிறான். அவளுடைய தாய் மேரி ஏப்ரஹாமின் கடிதங்கள் நாஷ்வில்லின் செய்திப் பத்திரிகையில் அடிக்கடி வருவதுண்டு. இப்போது சந்திரா சீனியராக இருக்க வேண்டும். எப்போது என்று நினைவில்லை, ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன் ஒரு மாலை உடற்பயிற்சிக் கூடத்தில் சாமி நகராத சைக்கிளை ஓட்டும் போது, எதிரில் சந்திராவும் இன்னொரு பெண்ணும் பேசிக் கொண்டே நடை எந்திரத்தில் காலடி வைத்தார்கள்.
“சான்ட்ரா! இப்போது எங்கே வேலை செய்கிறாய்?”
“குசீன் சப்ஸ்.”
“எந்தக் கடை?”
“புதிதாகத் திறந்திருக்கிறதே நம் பள்ளிக்குப் பக்கத்தில், அது.”
“வேலை கடினமாக இருக்கிறதா?”
“இல்லை, நான் சாண்ட்விச் செய்வதில்லை. பணத்தை வாங்கி வைக்க வேண்டும். ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் அட்டைதான் கொடுப்பார்கள். சில்லறை தர வேண்டி வேலை கூட கிடையாது.”
“எந்த நாட்களில் போகிறாய்?”
“சனிக் கிழமை பத்திலிருந்து நான்கு. வெள்ளி ஞாயிறு மூன்றிலிருந்து ஏழு மணி வரை. புதுக் கடை என்பதால் கும்பல் இன்னும் சேரவில்லை.”
“காரை எடுத்துப் போகிறாயா?”
“ஞாயிறு மட்டும். அன்று கடை மூடிய பிறகும் கணக்கு பார்த்து பணத்தை எண்ணி வைக்க வேண்டும். அதற்கு அரை மணியும் ஆகலாம், முக்கால் மணியும் ஆகலாம். மற்ற நாட்களில் என் அம்மா காரில் பிரயாணம்.”
உடற்பயிற்சி செய்யும் போது அவர்களால் எப்படி மூச்சு வாங்காமல் பேச முடிகிறது என்று சாமிக்கு ஒரே ஆச்சரியம்.
“எவ்வளவு சம்பளம்?”
“மணிக்கு எட்டு டாலர்,”
“பரவாயில்லையே. க்ரோகரில் எனக்கு ஆறுதான். டிப்ஸ்?”
“அதில் எனக்குப் பங்கு கிடையாது. சாண்ட்விச் செய்கிறவர்களுக்குத்தான்.”
“சம்பளத்தை என்ன செய்கிறாய்?”
“என் அம்மா அதை அப்படியே கல்லூரிச் செலவுக்கு என் பாங்க் கணக்கில் சேர்த்து விடுகிறாள். எனக்கு என்ன செலவு இருக்கிறது? எது வேண்டுமானாலும் அவளுடைய கடன் அட்டையைப் பயன் படுத்துவேன்.”
“நீதான் கொலம்பியா போவதாக இருக்கிறயே, அங்கே நிறைய செலவாகும்.”
எதிரில் தலைக்கு மேல் இருந்த தொலைக்காட்சிகளில் செய்திகளை ஓர வஞ்சனையோடு அலசினார்கள், கூட்டல் கழித்தல் கணக்குத் தெரியாதவர்கள் ஆயிரக் கணக்கான டாலர்களுக்குப் போட்டியிட்டார்கள், தொந்தி போட்ட ஆணும் கட்டான பெண்ணும் சிரிக்க வைத்தார்கள். சாமிக்கு அவற்றை எல்லாம் விட அந்தப் பெண்களின் உரையாடல் மிக சுவாரசியமாக இருந்தது. கேட்டுக் கொண்டே மிக வேகமாகப் பெடல் செய்தான்.
“அந்தக் கடையில் ஒரே ஒரு சங்கடம்” என்றாள் சந்திரா.
“சொல்லாதே!” என்றாள் இன்னொருத்தி கொஞ்சம் பொறாமையாக.
“வேலை செய்யும் நாட்களில் ஒரு முழு நீள சாண்ட்விச் செய்து எடுத்துக் கொள்ளலாம்.”
“அதுவே எட்டு டாலர் இருக்குமே.”
“வாரத்தில் மூன்று நாள் அதைச் சாப்பிட்டு ஒரு சுற்று பருத்துவிட்டேன்” என்று கையை இடுப்பில் உரசினாள். “என்னுடைய ப்ராம் ஆடைக்குள் எப்படி புகுந்து கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை.” வருத்தமான அவள்; வார்த்தைகளைச் சாமி சந்தேகிக்கவில்லை. சற்று குண்டாகத்தான் இருந்தாள், ஆனால் அழகில் ஆண்டவன் எந்தக் குறையும் வைக்கவில்லை.
“அதற்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்லையே. சப் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்!”
“அப்படித்தான் செய்ய வேண்டும்.”
“யாருடன் போகிறாய்?”
“ஜான் ஓகில்வி!”
“அவனா?” என்று சந்திரா பக்கம் திரும்பிய மற்றவளின் கண்கள் விரிந்தன, வாயிலிருந்து மூச்சுக் காற்று வெளிவந்தது.
“அவனும் நானும் மூன்று மாதங்களாக…” சடக். ஓய்வு அறையின் கதவு திறந்து ஒரு சிறுவன் வெளியே வர சாமி உள்ளே புகுந்தான். அவன் வெளியே வந்த போது சரவணப்ரியா பணம் கொடுக்கும் இடத்தில் இருந்தாள். அவள் முன் இரண்டு வட்டத் தட்டுக்களில் சப் சாண்ட்விச்சுகள், தண்ணீருக்கான குவளைகள். அவளிடமிருந்த கூபானை வாங்கிப் பார்த்து இயந்திரத்தில் சந்திரா பொத்தான்களை அடித்த போது ஐந்து எழுபத்தொன்று காட்டியது.
சரவணப்ரியா இருபது டாலர் நோட்டைக் கொடுத்துவிட்டு, “சில்லறை நான் தருகிறேன்” என்று கைப்பையைத் திறந்தாள்.
அவளிடமிருந்து சரியான சில்லறையை எண்ணி வாங்கிக் கொண்டு இரண்டு பச்சை நோட்டுகளை மேஜை மேல் சந்திரா வைக்கிறாள். பத்தும் ஐந்துமாக இருக்கும். இரண்டு தட்டுக்களையும் கீழே விழாமல் இரண்டு கைகளில் தாங்கியபடி சரவணப்ரியா திரும்பும் போது அவள் கவனம் பணத்தில் இருப்பதாக சாமிக்குப் படவில்லை. அடுத்த ஆள் நகர்வதற்குள் அதைத் தான் போய் எடுத்துக் கொள்ளலாம் என்று அவன் விரைகிறான். அருகில் சென்றவுடன் சரவணப்ரியாவிடமிருந்து அவன் பார்வை கௌண்டரின் மேல் திரும்புகிறது. நோட்டுகள் இப்போது இல்லை. எதிர்பாராத இந்த நிகழ்வினால் சாமிக்கு என்ன செய்வது என்று உடனே தோன்றவில்லை. பின்னால் வந்த அந்நியனைக் கேட்க முடியாது, அவன் ஒரு தட்டு தட்டினால் எழுந்திருக்க ஒரு வாரம் ஆகலாம். சந்திராவைக் கேட்டால் குற்றம் சாட்டுவது போலாகும். கீழே விழுந்திருக்குமோ என்று தரையில் நோட்டம் விட்டான். புதிய பளபளப்பான தரையில் ஒரு துண்டுக் காகிதம் கூட இல்லை. ஒரு வேளை தட்டுக்களை எடுக்கும் போது சரவணப்ரியாவே நோட்டுக்களையும் எடுத்திருப்பாளோ? பதினைந்து டாலர் தானே, அப்புறம் அவளைக் கேட்டால் போகிறது. சாமிக்கு வேர்த்தது. மேலே போட்டிருந்த ஜாக்கெட்டை எடுத்து அதை நாற்காலியின் முதுகுக்குச் சார்த்தினான். குவளைகளை எடுத்துக் கொண்டு போய் அவற்றில் நீரை நிரப்பி மேஜையின் மேல் வைத்தான். குழப்பத்துடன் மனைவியின் எதிரில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான். மனம் அதில் ஈடு படவில்லை. ஓரக்கண்ணால் சந்திராவைக் கவனித்தான். அவள் வாடிக்கைக்காரர்கள் வாங்கிய உணவுக்கான கணக்கில் கவனத்தைப் பதித்திருந்தாள்.
“என்ன தட்டைப் பாக்காம வேற எங்கியோ பாத்திட்டிருக்கே?”
“கௌண்டர்ல இருக்கிற பெண் ஞாபகம் இருக்கா? சந்திரா ஏப்ரஹாம்.”
“சந்திராவா? முன்னமே பாத்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.”
“அவளைப் பாத்தா அழற மாதிரி இருக்கு.”
சரவணப்ரியா சாமர்த்தியமாகக் கடை முழுவதும் பார்வையை ஓடவிட்டு அவளையும் கவனித்தாள். “முதலாளி கோச்சிட்டாரோ என்னவோ. சின்ன பொண்ணுதானே!”
சாப்பிட்டு முடியும் வரை பேச்சில்லை. காகிதக் குப்பைகளைப் பொறுக்கித் தொட்டியில் போட்டு விட்டு, வட்டத் தட்டுகளைத் தொட்டியின் மேல் வைத்து விட்டு அவர்கள் வெளியே செல்லவும் குசீன் சப்ஸின் அடையாள விளக்கை அணைக்கவும் சரியாக இருந்தது.
காருக்குள் வந்தது உட்கார்ந்த பிறகுதான் சாமி கவனித்தான். “நான் ஜாக்கெட்டை மறந்துட்டேன். போய் எடுத்துண்டு வரேன்.” எழுந்து செல்வதற்கு முன் அவனுக்கு ஒரு சந்தேகம். “ப்ரியா! மீதி பதினைஞ்சு டாலரை நீ எடுத்தியா?”
“இருபது டாலர் நீதானே குடுத்தே, அதனால எனக்குப் பின்னாடியே வந்த நீ அதை எடுத்து வைச்சுப்பேன்னு நினைச்சேன். மறந்துட்டியா?” சாமி பதில் சொல்லாமல் காரிலிருந்து இறங்கிக் கடையின் முன் சென்றான். கதவை இன்னும் பூட்டவில்லை. ஆனால் அது திறக்கும் போது அடிக்கும் மணி நிறுத்தப் பட்டிருந்தது. கடையில் உணவு தயாரிக்கும் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் விளக்குகள் எரியவில்லை. அவன் ஜாக்கெட் அவன் உட்கார்ந்த நாற்காலியில் இருந்தது. அதை நோக்கி அவன் செல்லும் போது சந்திரா டிப்ஸ் என்று போட்ட குவளையிலிருந்த பணத்தைக் கணக்கிட்டு மற்றவள் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்
“தாங்க்யூ, சாண்ட்ரா!”
“என் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பெண்ணுக்குப் பதினாறு வயதுதான் ஆகிறது. அவளுக்கு வால்க்ரீன்ஸில் ஒன்று வாங்க வேண்டும். எனக்கு மே ஆரம்பத்தில்தான் பதினெட்டு வயதாகும். நீ வாங்கித் தருகிறாயா? பணம் கொடுக்கிறேன்.”
சாமி கோட்டை நாற்காலியின் முதுகிலிருந்து எடுப்பதிலும், அதன் மேல் இருந்த தூசியை இலேசாகத் தட்டுவதிலும், இரண்டு கைகளை அதில் நுழைப்பதிலும் எந்த அவசரமும் காட்டவில்லை. ஸிப்பின் ஒவ்வொர பல்லாகச் சத்தம் எழாமல் இழுத்து மூடினான்.
“எனக்கும் இன்னும் பதினெட்டு ஆகவில்லை.” தோற்றத்திலிருந்து அவள் வயதைச் சந்திரா மிகைப் படுத்தியதை அவள் அவமதிப்பாக எடுத்துக் கொள்ளாமல் அதற்கான காரணத்தைச் சொன்னாள். “எனக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை. அதனால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு முழு நேர வேலை செய்கிறேன்.”
“வேறு யாரையாவது நான் கேட்கிறேன்.”
“என்னை அழைத்துப் போக என் பாய்ஃப்ரெண்ட் இப்போது வருவான். வேண்டுமானால் அவன் வாங்கித் தருவான்.”
இன்னொரு ஆளையும் இந்த பிரச்சனையில் கலக்க அவள் விரும்பவில்லை போலிருக்கிறது. “பரவாயில்லை. அவனை எதற்குத் தொந்தரவு செய்ய வேண்டும்?”
“சிகரெட் வேண்டுமென்றால் தாம்சன் லேன் கடைக்குப் போகச் சொல். அங்கே டிரைவர்ஸ் லைசன்ஸைக் காட்டாமல் வாங்கலாம்.”
“தாங்க்ஸ். அதை அவளிடம் சொல்கிறேன்.”
தேவையான விவரம் கிடைத்து விட்டது என்று சாமி, “என் ஜாக்கெட்டை மறந்துவிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே பதிலுக்குக் காத்திராமல் கடைக்கு வெளியே வந்தான். பகல் வெளிச்சம் பாக்கி இல்லாமல் இருட்டிவிட்டது. கார் நிறுத்துமிடத்தில் இரண்டு விளக்குகள் முழு ஒளியை உமிழ்ந்தன. காருக்குள் சென்று அமர்ந்த சாமி அதன் சாவியை நுழைக்க முயற்சிக்கவில்லை.
“கோட் எடுத்து வர இத்தனை நேரமா?”
“சந்திரா ஏன் வருத்தமா இருக்கான்னு யோசிச்சுப் பாத்தேன்” என்று ஆரம்பித்து அவள் பதினைந்து டாலரை எடுத்திருக்கலாம் என்கிற சந்தேகம், சக ஊழியப் பெண்ணிடம் உதவி கேட்டது எல்லாம் சொன்னான்.
“நேத்து ப்ரென்ட்வுட்லே ப்ராம் இரவு, அதை மறந்துட்டியே.”
“அப்ப நீயும் அவளுக்கு ப்ளான் பி தேவைப் படலாம்னு நினைக்கிறியா?”
“சந்திராவையே கேட்டுப் பாப்போம். நாம நினைக்கிறது தப்பா இருந்தா ‘மன்னிச்சுடு பெண்ணே’ன்னு பின் வாங்கிடுவோம்.”
என்ன செய்யலாம் என்று இருவரும் தனித்தனியாக யோசித்தார்கள். “சந்திராவுக்கு ஏதாவது செய்யலாம்னா அவள் அம்மாவை நினைச்சா பயமா இருக்கு” என்றான் சாமி. மேரி ஏப்ரஹாம் ஆண்டவனுக்கு அருகில் ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்ந்து கொண்டு கருச்சிதைவு செய்கிறவர்கள், செய்ய உதவுபவர்கள், அதற்கு ஆதரவு தருகிறவர்கள், அந்த சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்யாத அரசியல்வாதிகள் அனைவரையும் கொலைகாரர்களாகச் சித்தரித்துக் கடிதம் எழுதுவது தொழில். ஊராட்சியிலிருந்து ஜனாதிபதி தேர்தல் வரை, பெண்கள் எப்போது பிள்ளை பெறலாம் என்று அவர்களே தேர்ந்தெடுப்பதைத் தடை செய்யச் சட்டம் இயற்றத் துடிக்கும் எல்லா வேட்பாளர்களுக்கும் அவளுடைய தொண்டு கிடைக்கும். “அபார்ஷனை எதிர்க்கிற ஒரே காரணத்தால, கணக்கு வழக்கில்லாத அப்பாவி ஈராக் மக்;களைக் கொலை பண்ணின புஷ் அவளுக்குப் புண்ணியவான்” என்று சரவணப்ரியா சொல்லி இருக்கிறாள்.
குடும்பக் கட்டுப்பாடு சம்பத்தப் பட்ட நிகழ்ச்சி உலகத்தில் எங்கேயாவது நடந்தால், அவள் கட்சிக்கு ஏற்ற மாதிரி அந்த செய்தியை வளைத்து எழுதிய கடிதத்தை அவளிடமிருந்து எதிர் பார்க்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பதினைந்து வயதான பெண், அவள் தோழியின் தந்தை தவறாக நடந்து கொண்டதால், கருவுற்றாள். அதைக் கலைக்க, அந்த நாட்டில் அது முடியாததால், அவள் இங்கிலாந்து செல்ல வேண்டும். அதை ஐரிஷ் அரசாங்கம் தடுக்க முயற்சித்தது. அது சரியா என்ற விவாதத்தில் மேரி அரசாங்க ஆணையை ஆதரித்துக் கடிதம் எழுதிவிட்டாள். ‘ஒரு தவறை இன்னொரு பாவத்தால் மாற்ற முடியாது. அந்த இளம் பெண் குழந்தையைப் பெற்று, அதன் மேல் பாசம் வைக்கப் பிடிக்காவிட்டால் யாருக்காவது கொடுக்க வேண்டும். என் பெண்ணுக்கு அந்த நிலைமை வந்தால் நான் அப்படித்தான் செய்வேன்.’
“நாம சந்திராவுக்கு எதாவது செஞ்சா அது ஒரு வேளை மேரிக்கு உதவி செய்யற மாதிரி முடியலாம். பப்ளிக்கா சொன்னாலும் தனக்குன்னு வரும் போது மேரி மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம திண்டாடலாம். அவளுக்கு அந்த தர்ம சங்கடம் இல்லாம பண்ணிடுவோம்” என்றான் சாமி.
“அதை விட ஒரு பெரிய இக்கட்டிலே மாட்டிண்டு என்ன செய்யறது, யாரு கிட்ட நிலைமையைச் சொல்றதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு பெண்ணுக்கு உதவி செய்யறதுதான் முக்கியம்.”
அந்த வரிசையிலேயே ஒரு வால்க்ரீன்ஸ் இருந்தது. “அங்கே போய் ப்ளான் பி வாங்கி வா! நான் போனா, இந்த கிழவிக்கு இதெல்லாம் எதுக்குன்னு நினைச்சிப்பான்.”
“நான் போனா என்ன சொல்லப் போறேன் தெரியுமா? அரசியல் வாதிகளைப் போல முப்பது வயசிலே எனக்கு ஒரு மிஸ்ட்ரெஸ் இருக்கா. நேத்து ராத்ரி அவசரத்திலே..”
அவன் கன்னத்தில் ஒரு பலமற்ற அறை விழுந்தது. “ஆசையைப் பார்! நீ திரும்பி வர்ரதுக்குள்ள அவ கடைக்கு வெளிலே வந்தா நான் பக்குவமா பேசுவேன், அதுக்குத்தான்.”
இரண்டு கடைகளைத் தள்ளி வால்க்ரீன்ஸ_க்குள் நுழைந்தான். கடையின் முழு நீளத்தைக் கடந்து பின்னால் சென்றான். ஆலோசனை ஜன்னலுக்கு முன் உட்கார்ந்தான். வேறு யாரும் இல்லை. சில நிமிடங்களில் ஒரு வயதான ஃபார்மசிஸ்ட் முழுவதும் நரைத்த தலையைக் காட்டினார்.
“என்ன வேண்டும்?” கொஞ்சம் மிரட்டலாகக் கேள்வி வந்தது.
“ப்ளான் பி.” தொடர்ந்து, “என் பெண்ணுக்கு” என்றான் சாமி.
“எவ்வளவு வயது?”
“ஐம்பத்தி..”
“உன் வயதைக் கேட்கவில்லை, அவளுக்கு?”
“பத்தொன்பது. எக்ஸ்டசி மூலமாக நடந்த ‘டேட் ரேப்’. வெளியே சொல்ல வெட்கப் படுகிறாள்.”
“எதிர் பார்த்ததுதான்” என்று குரலில் பரிவு காட்டினார். “எப்போது நடந்தது?”
“வெள்ளி இரவு.”
“நல்ல வேளை. எழுபத்தி இரண்டு மணிக்குள் எடுத்துக் கொண்டால்தான் இந்த மாத்திரைகளுக்குப் பலன் கிடைக்கும். நேற்றே வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.”
“உங்களின் புரிதலுக்கு நன்றி.”
“நாற்பத்தைந்து டாலர் தொண்ணூறு சென்ட்” என்று வியாபாரக் குரலுக்கு மாற்றிக் கொண்டார்.
சாமி மூன்று இருபது டாலர்களை நீட்டினான்,
மருந்துக் கடையிலிருந்து சாமி திரும்பி நடந்தான். ஒரு சிறிய ட்ரக் வழியை மறித்து உறுமிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வந்த இரைச்சலில் சுற்றி இருந்த சுவர்கள் அதிர்ந்தன. சாலை ஓரத்தில் காத்திருந்த இருவரில் புகைத்துக் கொண்டிருந்த கறுப்புப் பெண் அந்த வண்டியை நோக்கி வந்தாள். “சான்ட்ரா! சிகரெட் வேண்டுமென்றால் தாம்சன் லேன் கடைக்கப் போ!” என்று போகிற போக்கில் நினைவூட்டினாள். அவள் ஏறியவுடன் அது கிளம்பியது. அது அகன்றதும் பேரமைதி. சாமி தன் காரில் ஏறி முன்னால் அமர்ந்தான். பையிலிருந்து மருந்து பொட்டலத்தை எடுத்து மனைவியிடம் தந்தான். அவள் பையில் செருகிக் கொண்டாள்.
சந்திரா தொலைச் சாவியை இயக்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு வலது பக்கத்தில் அடுத்திருந்த காரின் விளக்குகள் ஒரு நொடி எரிந்துவிட்டு அணைந்தன. அவள் அதன் இடது பக்கம் வரும் போது சரவணப்ரியா வேகமாக இறங்கி அவள் முன் சென்றாள். திடுக்கிட்ட சந்திரா, “ஹாய்!” என்றாள்.
“பயப்படாதே! நான் சூரனின் அம்மா, நினைவிருக்கிறதா?”
“பார்த்திருக்கிறேன். சூரனின் அம்மா என்று தெரியாது. அவன் இப்போது எப்படி இருக்;கிறான்?”
“எம்ஐடியில் மூன்றாம் ஆண்டு முடியப் போகிறது.”
“உங்கள் கார் கிளம்பவில்லையா?”
அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் சரவணப்ரியா குரலில் சிறிது கடுமையைச் சேர்த்து, “என் பதினைந்து டாலரை நீ கொடுக்கத் தவறிவிட்டாய். அதைக் கேட்கத்தான் வந்தேன்” என்றாள்.
“நான் கொடுத்தேனே” என்று மென்று விழுங்கினாள் சந்திரா. மனமறியப் பொய் சொல்லிப் பழக்கம் இல்லாததால் அந்த வார்த்தைகளில் கனம் இல்லை என்று அவளுக்கு உடனே தெரிந்திருக்க வேண்டும். “ஐயாம் சாரி!” என்று கைப்பையைத் திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். “ப்ளீஸ்! தெரியாமல் தவறு செய்து விட்டேன். இது மாதிரி நான் செய்ததே இல்லை. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், யாரிடமும் சொல்லாதீர்கள்! மிசஸ் நாதன்!”
“சாரா என்றால் போதும்.”
சந்திராவின் செல் பேசி கொலம்பியா பல்கலைக் கழகத்தின் பாடலைப் பாடியது. பையிலிருந்து எடுத்து அதைப் பிரித்தாள். “ஹாய் மாம்! வேலை முடிய நேரமாகிவிட்டது.” “நேர அட்டையில் மறக்காமல் போடுவேன்.” “இன்னும் பத்து நிமிடங்களில் கிளம்பி விடுவேன்.” “பை!” சந்திரா செல் பேசியை மூடிப் பையில் வைத்தாள். அவள் தன்னிலை அடைந்த போது சரவணப்ரியா அன்புடன், “சந்திரா! நீ வாங்க நினைத்த மருந்துக்கு இந்தப் பணம் போதாது” என்றாள்.
சந்திராவின் முகத்தில் பல வித உணர்ச்சிகள். ஆனால் அவள் மறுத்து எதுவும் சொல்லவில்லை. குனிந்து கொண்டாள். நான்கு மணிக்கு மேல் நின்று வேலை செய்த களைப்பாக இருக்கலாம், காரில் சாய்ந்து கொண்டாள்.
சரவணப்ரியாவுக்கு அவர்கள் சந்தேகித்தது சரி என்று தோன்றியது. “நீ அவனுடன் இன்று பேசினாயா?”
சந்திரா அழ ஆரம்பித்தாள். அழுகைக்கு நடுவில் “அவன் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் பேசினான். நான்தான் முடிவு செய்ய வேண்டுமாம்” என்கிற விவரம் தெரிய வந்தது. அவன் தான் கட்டவிழ்த்த மொட்டுக்களின் எண்ணிக்கையில் நேற்று இரவு ஒன்று கூடியது என்று கணக்கப் போட்டிருப்பான்.
“ப்ராமின் போது காண்டோம் தருவார்களே, உபயோகிக்கவில்லையா?”
சந்திராவின் அழுகை அதிகமாயிற்று. என்ன, ‘முதல் முறை அவசியமில்லை, பாதியிலேயே நிறுத்தி விடலாம்’ என்று அவன் எதாவது சொல்லி இருப்பான். சந்திராவின் புத்தியில் சில நிமிடங்களின் மயக்கம்.
அழுகையின் தீவிரம் குறையும் வரை சரவணப்ரியா காத்திருந்தாள். “சந்திரா! கவனமாகக் கேள்! நான் சொல்லப் போவதில் உனக்கு ஏற்கனவே தெரியாதது எதுவும் இருக்காது. நீ கர்ப்பம் தரித்திருக்கிறாயா இல்லையா என்று தெரிய சில வாரங்கள் ஆகலாம். தெரிந்த பிறகு நீ எதுவும் செய்ய முடியாது. அந்த நிலைமை வரும் வரை நீ காத்திருக்கக் கூடாது. இப்போதே முடிவு செய்ய வேண்டும். உன் முழு வாழ்க்கையும் அந்த முடிவைப் பொறுத்திருக்கிறது.”
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் “காரில் தண்ணீர் இருக்கிறதா?” என்று சரவணப்ரியா கேட்டாள். சந்திரா கதவைத் திறந்து ஒரு தண்ணீர் சீசாவை எடுக்கும் சமயத்தில் அவள் ப்ளான் பி பொட்டலத்தைப் பிரித்தாள்.
“இந்த முதல் மாத்திரையை விழுங்கு.”
சந்திரா ஒரு கணம் தயங்கினாள்.
“இது கரு உருவாவதைப் பல வழிகளில்; தடுக்கும். ஆனால் அதை அழிக்காது” என்று சரவணப்ரியா உறுதி அளித்தாள். பிறகு இயந்திர கதியில் அவள் சொன்னது போல் சந்திரா இயங்கினாள்.
“அடுத்ததை இந்த உறையில் சுற்றி இருக்கிறேன். உன் பையில் மறைத்து வைத்துக் கொள்! நாளை காலை எழுந்தவுடன் அதையும் சாப்பிட்டு விடு. போன தடவை பீரியட்ஸ் எப்போது வந்தது?”
“இரண்டு வாரங்களுக்கு முன்.”
“இன்னும் பத்து நாளில் அடுத்தது வந்து விடும், கவலைப் படாதே!”
“தாங்க்ஸ் சாரா!”
“யாரிடமும் நான் சொல்லமாட்டேன். ஒரு வேளை சூரனும் நீயும் சந்தித்து அது திருமணத்தில் முடிந்தால் அப்போது அவனுக்குக் கூட இது தெரியத் தேவையில்லை. இரண்டாவது மாத்திரையை விழுங்கியவுடன் நீயும் இதை மறந்து விட வேண்டும். உன்னுடைய எதிர் காலம் மட்டுமில்லை. என் கௌரவமும் இதில் அடங்கி இருக்கிறது. உன் அம்மாவுக்குத் தெரிந்தால் என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பாள்.”
“நான் சொல்ல மாட்டேன். நல்ல வேளை! என்னுடன் வேலை செய்யும் பெண் நான் சிகரெட் வாங்க விரும்புவதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.”
“முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டு கிளம்பு! வீட்டிற்குச் சென்றவுடன் குளித்தால் நல்லது. உன் அம்மாவுக்குச் சந்தேகம் எழக் கூடாது. இனி பொறுப்பாக நடந்து கொள்!”
“உன் உதவியை மறக்க மாட்டேன், சாரா! பை!”
“குட் நைட், சந்திரா!”
அவள் காரில் ஏறி அது நகரும் வரை காத்திருந்து, சரவணப்ரியா சாமிக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். “அக்னிப் பிரவேசம் ஜெயகாந்தனின் கதாநாயகிக்கு மட்டும் இல்லை.”


(Venkataraman.amarnath@vanderbilt.edu)

Series Navigation

குரல்செல்வன்

குரல்செல்வன்