மாத்தா ஹரி அத்தியாயம் -38

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



ஹரிணிக்கு நினைவு தெரிந்து நவம்பர் மாதத்தில் இப்படியொரு கால நிலையைக் கண்டதில்லை. திடீரென்று குளிர் கூடுவதும், அடுத்தநாள் குறைவதுமாக இருக்கிறது. அரவிந்தனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு மாறாக பாரீஸ¤க்கு அவளால் ஞாயிற்றுகிழமை காலையில்தான் புறப்படமுடிந்தது. பயணச் சீட்டை இணையதளத்தில் எடுத்திருந்தாள். இரயில் நிலையம் அவள் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து அதிகத் தொலைவிலில்லை, ஆறுமணிக்கெல்லாம் இரயில்வே நிலையத்திற்கு நடந்தே வந்தாயிற்று. மின் விளக்குகள் ஒத்துழைப்பில்லாமல் இயங்குவதற்கு வக்கற்ற அதிகாலை. இரவென்ற பியூபாவுக்குள் இன்னமும் இயங்கும் உலகம். விடிந்தால் பகலுக்குள் தன்னை முடக்கிக்கொண்டுவிடும். மனிதர்கள், வாகனங்கள், கட்டிடங்கள், நிற்கும் மரங்களென எங்கும் பிசுபிசுப்பும் மினுமினுப்புமாக இருள் படிந்திருக்கிறது, காலெடுத்து வைக்கும் தோறும், அவை மிதிபடுவதும், மெல்லிய இழைகளாய் நெஞ்சில் இறங்கும் முனகல்களில் அவற்றின் வேதனைகள் ஊடுபாவாக உணரப்படுவதும் அவளுள் நடக்கிறது. இரயில் நிலைய முன் வெளியில் நகரசபையினால் பாரமாரிக்கப்படும் மரங்கள், இலைகளை உதிர்த்துவிட்டு கிளைகளும் கொம்புகளுமாய் நிற்கின்றனன், காலத்தோடு ஒட்டி ஒழுகத் தெரிந்தவை. அவற்றின் இழப்பிற்கு ஈடுகட்டும் வரமாக நட்சத்திர சரங்களென கிரிஸ்மஸ் விழாக்காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யபட்ட அலங்கார மின்விளக்குகளில் சோர்வு. அவற்றிர்க்கும் பிற மின்விளக்குகளைப் போலவே இருளையும், பனி மூட்டத்தையும் சேர்ந்தார்போல விரட்டமுயன்ற அலுப்புகளிருக்கலாம். விடியும் உன்னதமின்றி வானம் கறுத்துக் கிடக்கிறது. இரயில் நிலையத்தின் வாயிலை ஒட்டிய சாலையில் டாக்ஸிகளும், சொந்த வாகனங்களும் வந்து நிற்பதும், பயணிகள் தங்கள் பொதிகளுடன் இறங்கிச் சரிவினில் இறங்கும் நீர்போல நிலையத்தின் வாயிலில் நுழைந்து மறைவதும் நடக்கிறது. எதிர்ப்பட்ட இரண்டு மூதாட்டிகளுக்கு வழிவிட்டொதுங்கி பிராதான கூடத்திற்கு ஹரிணி வந்திருந்தாள். கொத்து கொத்தாய் மனிதர்கள். சிணுங்கி எளிமையான நாதத் துணையுடன், தாளப்பின்னங்களை லாவகமாக அமைத்து வாசித்து, சன்னமான மோகராக்களுடன் நீளக் கோர்வையில் ஒலிக்கும் தொடருந்து சேவை நிறுவனத்திற்கே உரிய குரல் சட்டென்று எழுந்து அடங்கிய பின்னரும் வெகுநேரம் காதில் ரீங்காரமிடுகிறது..

அறிவிப்புப் பலகையில் கவனத்தைச் செலுத்தினாள். இவளுடைய தொடருந்து நான்காவது பிளாட்பாரத்தில் புறப்படவிருந்தது. பதிவுச் சீட்டை எந்திரத்தில் கொடுத்து, தனது பயணத்தை உறுதிபடுத்திக்கொண்டாள். எஸ்க்கலேட்டர் பிடித்து மேலே வந்தாள். பெட்டி எண்ணைத் தேடிபிடித்து தனது பெயர் பதிவுசெய்யப்பட்டிருந்த இருக்கையைத் தேடி அமர்ந்த சிறிது நேரத்தில் இரயில் மெல்ல ஊர்ந்து புறப்பட்டது. பையிலிருந்து பிஸ்கெட் பாக்கெட்டொன்றை கையிலெடுத்துக்கொண்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு வாசிக்கத்தொடங்கிய நாவலை எடுத்தவள், விட்ட இடத்திலிருந்து வாசிக்கத் தொடங்கினாள். கவனம் வாசிப்பில் செல்லவில்லை. பிறபயணிகளைப் பார்த்தாள். ஒருவன் மடிகணினியைத் திறந்துவைத்தபடி எதையோ தேடிக்கொண்டிருக்கிறான், பக்கத்திலிருந்த பெண், அவ்வபோது அவனுக்கு முத்தமிட்டு சீண்டிக்கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு முன்பிருந்த இருக்கையில் ஒரு சிறுவனின் கவனம் ப்ளேஸ்டேஷனில் இருக்கிறது. இவளைப்பார்த்து புன்னகைத்துவிட்டு, செய்தித்தாளில் கவனம் செலுத்தும் முதியவர்..

ஹரிணியின் இரண்டாவது வாழ்க்கை இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வருமென்று நினைக்க இல்லை. நோனா அவதாரத்திற்கு ஆயுட்காலம் சொற்பம் போல. முதல் நாள் இரவு இரண்டாவது வாழ்க்கை வலைதளத்திற்கு சென்றிருந்தாள். மாத்தா ஹரி விசுவாசிகள் குழுமத்தில் கட்டண உறுப்பினராக ஆவதென்று தீர்மானித்து அதற்கான கட்டணத்தையும் கடன் அட்டை மூலம் செலுத்தினாள். முதன்முறைச் சென்றபோது ஏற்பட்ட சங்கடங்கள் இம்முறை இல்லை. இப்போது ஓரளவிற்கு நடமுறை செயல்பாடுகள் அவளுக்குப் பிடிபட்டிருந்தன. வறவேற்க தேவவிரதன் வராதது ஏமாற்றமாக இருந்தது. நுழைவாயிலில் இருந்த அலுவலகத்திற்குச் சென்று கதவைத் தட்டினாள். பெண்ணொருத்தி எட்டிப்பார்த்து கைகுலுக்கினாள். ஹரிணி அவளிடம் நோனா என்ற தனது அவதாரப்பெயருடன் அறிமுகப்படுத்திக்கொண்டாள், தேவவிரதனைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னாள்

– மாத்தா ஹரி விசுவாசிகள் சங்கக் காரியதரிசி நான், உங்களுக்கு ஏதாவது உதவிகள் வேண்டுமா?, பெண் அவதாரம் இவளைக் கேட்டது.

– தேவவிரதன் வந்திருந்தால் அவரைச் சந்திக்க வேண்டும்.’, – ஹரிணி

– ‘இன்றைய தினம் சங்கத்திற்கு அவர் வந்திருப்பதைக்குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. வேறு யாரையவது சந்திக்க வேண்டுமா?

– இன்றைக்கு யார் யாரெல்லாம் தீவில் இருக்கிறார்களென்று தெரியவேண்டும். அது தெரிந்தால் நான் யாரைச் சந்திக்கலாம் என முடிவெடுப்பேன்.

– க்ளூனே வந்திருக்கிறார். மாஸ்லோ·ப் என்ற புதிய அங்கத்தினர் சேர்ந்திருக்கிறார், பிரியோலே, பிராம்மணா இவர்களெல்லாங்கூட இருக்கிறார்கள். நீங்கள் யாரைச் சந்திக்க வேண்டுமென்று சொல்லுங்கள் அவர்கள் எங்கிருக்கிறார்களென்பதைத் தெரிவிக்கிறேன்.

– க்ளூனே, மாஸ்லோ·ப் இருவரும் மாத்தா ஹரியின் அன்பினைப்பெற்றவர்கள், அவளுடைய காதலர்கள் என்றும் சொல்லக்கேள்வி, ஒருவர் வழக்கறிஞர், மற்றவர் ரஷ்ய ராணுவத்தின் இளம் அதிகாரி என்றும் தெரியும். ஆனால் பிரியோலே.. ஆ ஞாபகம் வருகிறது மாத்தா ஹரியை கைதுசெய்த போலீஸ் அதிகாரி..அப்படித்தானே?

– ஆமாம் பின்னர் அவரும் மாத்தா ஹரியின் விசுவாசியாக மாறினவர்.

– பிராம்மணா என்பது யார்?

– கேள்விப்பட்டதில்லையா? மாத்தா ஹரியின் கணவன் ருடோல்போடு தொடர்புவைத்திருந்த இந்தோனேசியப்பெண் தஸ்ரிமாவின் கணவன், அவன் ருடோல்பிற்கு எதிரியே தவிர மாத்தாஹரி பேரில் அவனுக்கு அனுதாபமுண்டு

– அப்படியா? இன்றைக்கு முதலில் க்ளூனேவை சந்திக்க வேண்டும், முடியுமா?

கணிப்பொறியைத் தட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

– .அவர் கடற்கரையில் ஓய்வாகத்தான் படுத்திருக்கிறார். நீங்கள் சந்திக்கலாமென்றுதான் நினைக்கிறேன். அவரிடமிருந்து பிரத்தியேக உத்தரவுகள் என்று ஒன்றும் இன்றைக்கில்லை.

நோனா என்ற ஹரிணி கடற்கரையை ஓரிரு நிமிடங்களில் அடைந்திருந்தாள். சாரலில் நனைந்தபடி ஒற்றை ஆளாக பயமின்றி சாய்வு நாற்காலியில் கடலையொட்டி படுத்திருக்கும் ஆசாமி க்ளூனேவாக இருக்கவேண்டும், நரைத்த தலையில் கருப்பு கண்ணாடி வான் நோக்கி உயர்த்தபட்டுக் கிடந்தது. பெரிய வயிறு, முகத்திலிருந்து தனியாகப் பிரிந்திருப்பதுபோல மூக்கு,வெயிலில் சிவந்து பழுத்திருந்தது. அசைவின்றி கிடந்தார்.

– மிஸியே க்ளூனே!

ஆசாமியிடமிருந்து பதிலில்லை. கண்ணயர்ந்திருப்பாரோ என்று நினைத்தாள். தூக்கத்தைக் கலைப்பதை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்றும் யோசித்தாள். வேறு வழியில்லை நடப்பது நடக்கட்டெமென்று தீர்மானித்தவள்போல மீண்டும், – மிஸியே க்ளூனே! என்று அழைத்தாள். மனிதர் அசைந்து கொடுப்பதாக இல்லை. அருகில் போய்ப் பார்த்தாள், நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்திருந்தது. சற்றுமுன்புதான் அது நடந்திருக்கவேண்டும். இரத்தம் வெளுர் சிவப்பில் கசிய ஆரம்பித்திருந்தது. ஓரிரு துளிகள் மூக்குவரை இறங்கி, சொட்டுவதற்கு காத்திருக்கின்றன. கண்ணிமைகளில் இரண்டொரு ஈக்கள், அட்டையொன்று எச்சிலிட்டபடி வயிற்றினைக் கடித்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள், ஒருவருமில்லை. தூரத்தில் இரைச்சிலிட்டுக்கொண்டிருந்த கடற்காகங்கள், தங்கள் ஆரவாரத்தை நிறுத்திக் கொண்டு இவளைப் பார்க்கின்றன. திமிங்கலமொன்று நின்று மூச்சு வாங்குகிறது, நீர் ஊற்றுபோல பீறிட்டு மேலே வருகிறது. அதன் பெரிய கண்களில் அச்சம். ஹரிணிக்கு வயிற்றைப் புரட்டியது. தொடைகளிரண்டும் பிரிக்க இயலாமல் ஒட்டிக்கொண்டதைப்போல உணர்ந்தாள், திரும்பி நடக்க எத்தனித்தாள். கால்கள் மணலில் புதைந்து விடுபடமாட்டேன்கின்றன, கைகள் கனத்திருந்தன பறக்கவும் இயலவில்லை. அப்போதுதான் கவனித்தாள். எந்திரப்படகொன்று வேகமாக துறைபிடித்து நிற்கிறது. அதிலிருந்து நாற்பது வயது மதிக்கத் தக்க நபர் நீரில் இறங்கி தபதபவென ஓடிவருகிறார்.

– மத்மஸல் ஹரிணி

– உனக்கு.. மன்னிக்கணும் உங்களுக்கெப்படி எனது உண்மையான பெயர் தெரியும்., எனது அவதாரத்தின் பெயர் நோனா அல்லவா? – ஹரிணி

– இரண்டாவது வாழ்க்கையிலே நோனா என்று நீ பெயர் சூட்டிக்கொண்டாலும் உண்மையில் அப் பெயரில் ஒளிந்துகொண்டிருப்பது யாரென்று தெரியும். நோனா என்ற பெயரில் மட்டுமல்ல மற்ற பெயர்களிளுங்கூட யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற ரகசியமும் எங்களுக்குத் தெரியும். உண்மையில் சைபர் கிரைம் பிரிவில் ஒரு போலீஸ் அதிகாரி நான், இரண்டாவது வாழ்க்கையில் எனக்குப் பெயர் பிரியோலே அதாவது நீ நம்புகின்ற எனது அவதாரத்தின் பெயர்.

– நீங்கள் சொல்வதெதுவும் இரண்டாவது வாழ்க்கைக்கான வாசனங்களில்லையே.

– இல்லை என்னை நம்பு, நான் இதற்கு மேல் இங்கே பேச எதுவுமில்லை. பேசவும் முடியாது. நீ கிளம்பு, இரண்டொரு நாட்களில் உனக்கு எல்லாம் தெரியவரும். அனேகமாக நானே உன்னைத் தொடர்புகொள்வேன்.

– பேன்ழூர், வோத்ர் பிய்யே சில் வூ ப்ளே

எதிரே, டிக்கெட் பரிசோதகர் நின்று கொண்டிருந்தார். ஹரிணி தன்னுடைய டிக்கெட்டை எடுத்து அவரிடத்தில் நீட்டினாள். வாங்கி சரி பார்த்துவிட்டு அவளிடத்தில் நீட்டினார்.

இரண்டாவது வாழ்க்கைத் தளத்தில் நடந்ததைப் பற்றியும் அரவிந்தனிடம் பேசவேண்டும். அதில் நடந்த சம்பவங்கள் உண்மையாக இருக்குமா? க்ளூனே ஏன் கொலை செய்யப்படவேண்டும். சைபர் கிரைம் பிரிவில் பணியிலிருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமான பிரியோலே உண்மையிலேயே போலீஸ் அதிகாரியா? அப்படியானால் அவனுக்கு அந்த அமைப்பினைப்பற்றி வேறு என்ன தகவல்கள் தெரியும். தேவவிரதன் யார்.. ஒருவேளை அவனைப்பற்றியும் அந்த அதிகாரிக்கும் தெரிந்திருக்குமோ? இந்த அமைப்பினருக்கும் பவானி அம்மா வாழ்க்கைக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? சொன்னதுபோல போலீஸ் அதிகாரி இவளைத் தொடர்புகொள்வானா? அரவிந்தனிடம் இதுபற்றிப் பேசினால் ஒருவேளை தெளிவு கிடைக்கலாம் என்றெண்ணியவளாக கையில் வைத்திருந்த நாவலை இரண்டாவது முறையாக வாசிக்கலாமென்று பிரித்தாள். ஹரிணியின் நினைவில் இம்முறை சிரில் சொன்ன சில செய்திகளை அலைமோதின. அவனுடைய சந்திப்பைத் தவிர்க்க நினைத்தபோதும், அலுவலகத்தில் மாத்தா ஹரியின் மண்டையோட்டைக் குறிப்பிட்டு அவன் கேட்டது இவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. அத்தகவலைப் பெறத் துடிக்கும் ஆசாமி யாராக இருக்குமென்று தெரிந்து கொள்வதில் இவளுக்கு ஆர்வம். மறுநாள்காலை தான் திட்டமிட்டபடி கொல்மார் போகவேண்டியிருக்கிறதென்பதால் அன்றிரவு அவனைச் சந்திக்கமுடியாதிருக்கிறது என்று கூறி சமாதானப்படுத்தினாள். பிறகு அவளது கேள்வி மாத்தா ஹரி மண்டையோட்டினைப் பற்றிய தகவலைப் பெறத் துடித்த இந்தியனைக் குறித்ததாக இருந்தது. சிரில் அந்த இந்தியன் பெயர் அருணாசலமென்றான், இரண்டொரு நாட்களில் அவனைச் சந்திக்க வாக்குக் கொடுத்திருப்பதாகவும் சொன்னான். அந்த ஆசாமியால் இந்தியக் கம்பெனியின் நட்பு கிடைக்குமானால், டிராக்குலா.கம் நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக அமையுமென்றான். தொடர்ந்து, சந்தோஷமான செய்தியொன்று இருக்கிறது, அதை இப்பொழுது தொலைபேசியில் சொல்லப்போவதில்லை, நண்பர்கள் முன்னால் அறிவிக்கப்போகிறேன். மதாம் க்ரோ கேட்டால் மிகவும் மகிழ்ச்சிகொள்வாள், என்றான். அவன் குறிப்பிடுகிற சந்தோஷச் செய்தி என்னவாக இருக்குமென்று மனம் ஊகித்தது, அதை எப்படி சாதுர்யமாக தவிர்ப்பதென்றும் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. ஆனால் அந்த அறிவிப்பினைக்கேட்டு மதாம் க்ரோ ஏன் சந்தோஷப்படவேண்டுமென்பதுதான் அவளுக்குப் புதிராக இருந்தது. அவனிடத்தில் தனது சந்தேகத்தைத் தெரிவித்தாள். இருக்காதா பின்னே உன்னுடைய நலனில் அவளுக்குள்ள அக்கறை எனக்குத்தானே தெரியும். இவளுக்கு ஆச்சரியம், சிரிலை எத்தனை நாளாக க்ரோவுக்குத் தெரியும். பவானி அம்மாமேல் மதாம் க்ரோவுக்குள்ள அன்பு தெரிந்ததுதான், ஆனால் அவள் மகளிடத்தில் காட்டும் பாசத்திற்கும் பரிவிற்கும் எது காரணம்? ஒருவேளை அவளுடைய அழுக்கான நினைப்பாக இருக்குமா? ஹரிணியில் உடல் வெடவெடத்தது. எப்படியாவது அவளிடமிருந்து விலகுவதற்கான வழிகளைப்பார்க்கவேண்டும்.

‘மெதாம் மெஸியே, ஒரு சில விநாடிகளில் நமது தொடருந்து பாரீஸ் நகரின் கிழக்குச் சந்திப்பை அடையவிருக்கிறது. உங்கள் உடமைகளை சரிபார்த்துகொள்ளுங்கள், பயணம் இனிமையாக இருந்திருக்குமென நம்புகிறோம், நன்றி” தொடருந்து நிறுவனத்தின் குரல் மணியோசையுடன் ஒலித்து அடங்கியது.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா