மாதவி ! ஜானகி ! மேனகி !

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மேடை நர்த்தகி மாதவி !
மினுக்கிடும்
வாடகை வர்த்தகி மாதவி !
பையில் பணம் ஊறினால்
மையல் கொள்வாள் !
கையில் காசு வற்றின்,
கானல்வரி பாடுவாள் வீணையில் !
ஆயிரம் கண் ணுடையாள்
மாதவிப் பெண் மயிலாள் !
ஒருவிழி நோக்கும் பாவலனை !
மறுவிழி தேடும் கோவலனை !
மைவிழியால் சுட்டு
மணிமேகலை ஈன்றவள்!

மேனகி மோகினி ஒருதலைக் காதலி !
விசுவா மித்திரரை மயக்கி
ஞானப் பழத்தின் எ·கு நெஞ்சை
கானல் நீராக்கிச்
சிசுவைப் பெற்று
விலக்கப் பட்டவள் !
ஒருதலைக் காதல்
இருதலை யாகினும்
இல்வாழ்வு விடுதலை ஆனது!
ஆயினும் மாதவி போன்று
வர்த்தகி இல்லை
நர்த்தகி மேனகா !

மானைப் பிடிக்கப் போய்
மனைவி பறிகொடுத்த இராமனின்
மானசீக மனைவி
ஜானகி தேவி ! ஈழத்தில்
மானம் காக்க
மனைவியை மீட்டு,
மானம் காத்திட மீண்டும்
கானகம் துரத்தினான் !
வில்லை முறித்து மணந்த
வில்லாதி வில்லனின்
வெகுமதிக் கன்னி
சீதா தேவி !
காதல் மனைவியா அவள் ?
கட்டாய ஒப்பந் தத்தில் இராமனை
ஒட்டிக் கொண்ட உத்தமி !

காதல் மனைவியா கண்ணகி ?
கட்டாய மனைவி !
சீதனமும், சிலம்பும் கொண்டு
செல்வத் திருமகனை
மாலை யிட்ட மங்கை !
மாதவி நெளிவுகள் மனைவிக் கில்லை !
உடல் குலுக்கும்
ஆடகி இல்லை கண்ணகி !
உள்ளம் கவரும்
பாடகி இல்லை கண்ணகி !
நாணப் பெண்,
வேலிக் குள்ளே பதியைத்
தாழிடத் தெரியாதவள் !

எந்தப் பெண்தான் வேண்டுவாள்
இல்லா தவனை ?
எந்தக் கன்னிதான் தீண்டுவாள்
கல்லா தவனை ?
எந்த ஆடவன் அதுபோல்
ஏற்றுக் கொள்வான் ஏதும்
இல்லா தவளை ?
உள்ளார் உலகில்
கட்டிக் கொள்ளும் கணவர்,
கல்லாத வளை !

அழகுக்கு வயதில்லை ! கரையில்லை !
ஆயுள் குறைந்தது !
அழகின் மினுக்கு தோலின் ஆழம்வரை !
மாதவி மான் வீதியில் நடந்தால்,
ஆதவனும் நோக்குவான் !
ஊர்வசியும் நோக்குவாள் !
ஆடவன் விழிதேடும் முக்கனிகள் !
காதலுக்கு மாதவி !
கட்டிலுக்கு மேனகி !
காத்திருக்கக் கண்ணகி !

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 30, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா