மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

கோமதி நடராஜன்.


உதகை மக்கள் சார்பில் எழுதுவது என்னவென்றால்,மலைகளின் அரசி ,வெண்பனியின் புகலிடம்,உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுாி ,என்றல்லாம் அழைக்கத் தகுந்த இந்த உதகமண்டலம்,இயற்கை அன்னை நமக்களித்த பாிசு,தென்னகத்துக்குத் திருப்பிவிடப் பட்டத் தென்றல்.தமிழருக்குக் கிட்டியத் தங்கம்.

பொக்கிஷமாகப் பாதுகாக்கப் படவேண்டிய இப்பொன்னுலகம்,பொறுப்பற்ற சிலரால் பொலிவிழந்து கொண்டிருக்கிறது.அன்னை பூமி, ஆசி கூறி நமக்களித்த இந்த அற்புத உலகம்,அறிவற்ற சிலரால் அழகை இழந்து கொண்டிருக்கிறது.இப்பனி உலகைப் பத்திரமாகப் பாதுகாக்கத் தவறினோமானால்,ஆசியுடன் நீலமலையை, நமக்களித்த அன்னையை நன்றியுடன் வாழ்த்தத் தவறிய பழிக்கு ஆளாக மாட்டோமா ?

ஒரு காலத்தில், பகலவன் கூடவரத் தயங்கும் ,என்றிருந்த, ‘பனியின் ஆட்சி ‘என்று,கம்பீரமாக நிமிர்ந்து நின்றது நீலமலை.இன்றோ பனி கூட பார்த்துதான் பவனி வருகிறது,என்ற பாிதாபமாகப் பார்வையில் படுகிறது.

அடுக்கு மாடிக் கட்டிடங்கள் என்ன,அடுக்கு மொழி வசனங்களா ?அன்னைத் தமிழை அலங்காிப்பது போல் மலை அரசியைஅலங்காிக்க ? மலை அரசியின் மடியில், பதியும் செங்கல் ஒவ்வொன்றும்,அவள் பொலிவை அழிக்கும் விஷத் துளிகள் அல்லவா,இதை அனுமதித்தால் நம் மீது கொலைப் பழி விழும் அல்லவா ?

இந்த உதகை உருக் குலைகிறது என்ற உண்மை,நெல்லை வாசியான எனக்கே தொல்லை தருகிறது என்றால்,இந்தச் சீர்கேடு,ஊட்டியை உயிராய்க் கொண்ட மக்கள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் நெருக்காதோ ?

‘வனம் காப்போம் வளம் சேர்ப்போம் ‘ என்ற பொதுநலவாதிகளின்,வேண்டுகோள் ஒருபுறம், ‘வனம் அழிப்போம் பணம் அள்ளுவோம் ‘ என்ற சுயநலவாதிகளின் கோஷம் மறுபுறம்.சுயநலவாதிகளின் கோஷத்தில் பொதுநலவாதிகளின் வேண்டுகோள் சூறாவளியில் ஏற்றிய அகல் விளக்காய் அணைகிறது,ஊட்டியின் குளுமை குறைகிறது.

மரங்கள்,நாட்டின் வளம் பெருக இறைவன் தந்த கரங்கள்,கரங்கள் வெட்டுண்டால் மனிதன் காாியம் ஆற்ற இயலாதபோது,மரங்கள் இழந்த மண் மட்டும் பசுமை சேர்க்க இயலுமோ ?

குரல் வந்து பேசினால்,பன்னிராண்டுக்கு ஒருமுறை ஊட்டியில் விழிதிறக்கும் குறிஞ்சிமலர் கூடக் குமுறி அழுமே! ‘சென்றமுறை நான் மலர்ந்த போது,மனதை மயக்கிய ஊட்டி இதுவல்ல,எப்படியோ மாறிவிட்டது,எழிலெல்லாம் எங்கோ போய் விட்டது ‘,என்றெல்லாம் எடுத்துச் சொல்லி ஏங்காதோ ?இரக்கமுள்ள இறைவன் இதற்காகத்தான்,மலர்களையெல்லாம் மெளனமாக்கி விட்டாரோ ?

மரங்கள் மடிகின்றன,மாடி வீடுகள் குவிகின்றன.மரங்கள் தரும் வளத்தை இந்த மாடிவீடுகள் தருமா ?உதகையின் சீர்கேட்டைத் தடுக்கும் பணியினை உதகையின் மக்களும்,அரசாங்கமுமே சமமாகப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.மற்றவர்களெல்லாம் கை கட்டி நிற்கலாம் என்பதல்ல என் வாதம்.பார்க்கப் போனால் ,உல்லாசப் பயணமாக வந்து போகும் ஏனைய மக்களிடையே,ஆழமான பாதிப்பும் ஆக்கப்பூர்வமான சிந்தனையும் அத்தனை திடமாகவும் உறுதியாகவும் இருக்க வாய்ப்பில்லை.இயற்கையில் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர, இங்கு அன்றாட வாழ்வில், அரசாங்கம் தலையிட்டு ஆணைபல இட்டு ,சாி செய்ய வேண்டிய மற்ற குறைகளும், இங்கு குறையின்றிக் குவிந்து கிடக்கின்றன.

அமைச்சர்களும் மற்றப் பிரமுகர்களும் விழாக் காலங்களில் விஜயம் செய்தால்,அவர்கள் ஏறிய வாகனங்கள், செப்பனிடப்பட்ட சாலையில் மட்டுமே செல்லும் படி முடுக்கி விடப் படுகின்றன.எனவேதான் அமைச்சர்களுக்கு உதகையின் பாதையால் உபாதைக்கு உள்ளாகும் உதகை மக்களின் உள்ளக் குமுறல் தொிய வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.

அழகை ரசிக்க வரும் உல்லாசப் பயணிகளை,சாலையில் சேரும் கழிவுப் பொருட்கள் முகம் சுழிக்க வைக்கின்றன.அழகும் அவலட்சணமும் இணைந்திருக்கும் இந்நிலை மாறவேண்டும். அழகு மட்டுமே ஆட்சி செய்யும் அற்புதம் இங்கு அமைய வேண்டும்.வருங்க்கலச் சந்ததியருக்கு நாம் பத்திரமாகப் பாதுகாத்துத் தரவேண்டிய பொக்கிஷம் இந்த நீலமலை.

உதகையின் அழகு இறந்த கால இலக்கியமாகப் பாடப் புத்தகத்தில் இல்லாமல்,என்றென்றும் பார்வையில் படவேண்டும்,நீலமலை தமிழன்னையின் நெற்றித்திலகமாக ஜொலிக்கவேண்டும்.

உதகை மக்களின் எண்ண அலைகளை ,எழுத்தில் வடித்திருக்கிறேன்,உள்ளக் குமுறலுக்கு உருவம் கொடுத்திருக்கிறேன்.இக்கடிதம் மூலம் ,உதகையை எழில் தரும் திசை நோக்கித் திருப்பிவிடச் சட்டங்களும் திட்டங்களும் தீட்டப்பட்டு,செயலாக்கப்பட்டால்,உதகை பனி போல் என் உள்ளமும் குளிரும் என்று கூறி பணிவுடன் விடைபெறுகிறேன்.நன்றி வணக்கம்.

வனம் காப்போம் ,எழில் பார்ப்போம்.

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்