மா.சித்திவினாயகம்
முற்றுப் பெறாத வலி !!
.
*சாம்பிணக்காடு !!!
போடா….. போ….
மூத்திரச் சுவர்களின்
மூலையில் ஓடி….
முகஞ் சுழித்துக்
குப்புறப் படுத்துன்
உயிர் காத்துக் கொண்டாய்!
உண்மையில் அதிஸ்டம்!!
நாடியும் நாளமும்…..
ஊதிப்பருக்க
பிதுங்கும் விழியுடன்
பயந்து…பயந்து……
வேலைக்கிறங்கும்
தெருக்களில்
பார்த்து நட !!!
சந்தி முடக்கினில்…
சன நடமாட்டத்துள்…..
அந்திக் கருக்கலில்…..
அச்சத்தோடு
தலையைத் திருப்புமோர்
வேலி ஓணானாய்
வேவு பார்த்தோடு!!!
காலினில் நசியும்
“கரப்பான்” பூச்சியாய்
இன்றைய நாளில்
உந்தன் இருத்தல்!!!
ஜம்பதோ…நூறோ…
சில்லறை வீசிக்
கறுப்பு… வெள்ளை….
இனப் பிரிவின்றிக்
கலவி கொள்வதில்
மட்டுமே இன்றைய
உலகில் – உன்
நிறச் சுதந்திரம்!!!
இந்தியக் கூலி…..
காப்பிரி…..
நீக்ரோ….
பாக்கி…..
பயங்கரவாதி……
அகதி……
எந்தப் பெயரை -உந்தன்
முகத்தில் எழுதி ஒட்டிட???
ஒருவனோடு ஒருவன்
சரிநிகர் சமமாய்
உட்கார்ந்திருக்கவும்…..
உண்டு குடிக்கவும்…..
முடியா நாடு – உண்மையில்
வெறும் சாம்பிணக்காடு!!!!!
——————–
*கறுப்பின மக்களின் மாதமாகப்
பிரகடனப்படுத்தப் பட்டிருக்கும் மாசி மாதக் கவிதை.
கதைகளின் மாந்தர் !!!!!
பூவுலகெங்கணும்
புலம்பி அலைந்தபின்…..
இறுதியாய் – நான்
“ரொறன்ரோ” நகரப்
பெருந்தெரு ஒன்றில் !!!
சபினா….மொனிக்கா….
சல்வடோர்….சலமோன்…….
நெருக்கியடிக்கும்
இவர்களினுள்ளே
“அகதி ராஜனாய்”
என்னையும் பதிந்தேன்!!!
அகதிக் கடைக்குப்
புதிய புதிய கதைகளின் மூலம்……
நடைபாதை போடும்
வியாபாரிகளிடம்
சூத்திரம் பயின்றேன்!!!
சமையல் பாகக்
குறிப்புகள் போல…..
ஆக்கி வைக்கப்பட்ட
அகதிக்கான அங்கீகரிப்புப்
பயிற்சிகளுக்காய்……
சட்ட வல்லுனரினதும் – அவர்
எடுபிடிகளதும்
வாசலுக்கலைந்தேன்!!!
மனப்பாடம் பண்ணிக்
கணித பாடச் சூத்திரம்
சொல்லும் பரீட்சையைப் போல
மனித நேயமெனும் போர்வையில்
அகதிப் பரீட்சை!!!
அகதிக்கான சூத்திரக்கதையை
அப்படியே ஒப்பித்து
விசாரணையெனும்
விசமப் பரீட்சையில்….நான்
அகதியாய் தேர்ந்தேன்!!!
முடிசூடாத இளவரசர்கள் போலவும்……
முறுவல் பூத்த இளவரசிகள் போலவும்…..
பூரித்துப் போனதோர்
“அகதி அந்தஸ்த்து”
பிறகென்ன……..
என் வரண்ட நாவுக்குத் தண்ணீரும்……
காய்ந்த தலைக்கு வென்னீரும்……
வயிற்றுப் பசிக்குச் சோறிட்ட இடமெல்லாம்……
விழுந்து…விழுந்து…அடிமையாகினேன்!!!
மௌனம் திரையிட
மூச்சையடக்கி……
முடுக்கி விடப்பட்ட பம்பரமாகினேன்.
பேசுவதற்கான வார்த்தைகளோ…..
வாழ்வுச் சகடத்தின் அடுத்த நேர
உணர்வுகளோ….அல்லது அது குறித்த
விசும்பல்களோ கூட
என்னிடத்தில் இல்லை!!!
பூமிப் பரப்பில் – நான்
நகர்ந்த ஒவ்வொரு
அங்குலத்திலும்…..
ஆதாயமாகக் கற்றுக் கொண்டது
அடிமையாயிருப்பது எப்படி ?
என்பதைத்தான்………..
நிஜங்களை என்னால்
நிச்சயம் பண்ண முடியாதபடி
மனசாட்சியை மென்று
மௌனமாகிய – நான்
வெறும் கதைகளின் மனிதன்!!!
—————————
உண்மை… அது அல்ல….
நெற்றியில் கீறிய நீறும்…
நெஞ்சுக்குக் குறுக்கே போடும்
சிலுவைக் குறியும்…
நேரம் தவறாத பள்ளித்
தொழுகையும்…
உன்னை உண்மையின்
திசையில் திசை
திருப்பி விடும்
என்கிறாய் – நீ
உண்மை அது அல்ல !
“ஆண்டவன் சந்நிதியை
சந்தைக் கடையாக்காதீர்..”
என எருசலேம் ஆலயத்துள்
ஆவேசமாகச் சவுக்கடி கொடுத்த
இயேசுநாதரையே – இன்று
வியாபாரப் பொருளாக்கிவிட்டு
உண்மையைத் தேடுவதாய்ச்
சொல்கிறாய் – நீ
உனக்கும் வாழ்க்கைக்கும்
இடையே
நீதி என்ற பெயரில்
நிமிர்த்திக் கட்டிய
பாறாங்கற் சுவர்களை
உண்மை என்றோதுகின்றாய்!
குத்திப் பேசுவதிலும்…
குதர்க்கமாய்ப் பேசுவதிலும்-வல்ல
மனிதனில் மட்டுமே
உன் உண்மை இருக்கிறதென்கிறாய் – நீ
பேராசையை விட்டெறிந்துவிட்டு
போதிமரத்தடியில் அமர்ந்த
புத்த பிரான்களைவிட…
கண்ணுக்கு முன்னால் தங்கம்
எடுக்கும் பாபாக்கள்தான்
பகவான்கள் என்கிறாய் – நீ
மகான்களைவிடவும்
மந்திரங்களால்தான்
மாங்காய் விழுத்தலாம் என்கிறது -உன்
உண்மை பற்றிய தேடல் !!
ஆயிரம்..இலட்சம்..கோடி..
எண்ணும் ஆசையில்
ஆண்டவன் கோவிலில்
அர்ச்சனைத் தட்டேந்தும்
எம்மைவிட “ஏதேன்” தோட்டத்து
வெறும் அப்பிளுக்காய்
ஆசைப்பட்ட ஏவாளின் ஆசைதான்
கொடூரமான பேராசை என்று
கூட்டம் போட்டுப் பேசுகின்றாய் !!
கூட்டமான இடத்திலும்
கும்பலிலும் தேடி..
வேறொருவன் கையாலோ…
வாயாலோ… வந்து விழுவதுதான்
உண்மை என்கிறாய் – நீ
உண்மை.. அது அல்ல !!!
அஸ்தமனத்தை
அழகென்று அடம்பிடிப்பவனே !
உண்மையை நீயே…
உனக்காய்.. உன்னுள்..
தேடாமல்
ஊரெல்லாம் தேடி
எத்தனை காலம்
அலையப் போகிறாய் நீ.
——————
சுயம் இழக்கும் சூரியன்கள் !!!
அந்த நினைப்பையும் – அந்
நினைப்பின் உள் அர்த்தத்தையும்…
அப்படியே சொல்லி
வைக்க முடியவில்லை!
அருவருப்பின் மேல்
படுத்துறங்கியும்…
அசிங்கத்தின் மேல்
கால் பொருத்தியும்…
எதை எடுக்க – நான்
நெடுந்தூரம் நடந்தேன்?
தமிழன் என்றிருந்த
இன்பச் சுனையை
உலக வீதியெங்கணும்
உடைத்துச் சிதறி…
வெள்ளைப் பனியினுள்
வீசி எறிந்த
கொடிய பசாசு எது?
நீண்ட பளிங்கு
மண்டபங்களிடையே…
நீண்டு கனத்த
அங்கிகளோடு…..
புலம் பெயர் எலும்புகள்
பொறுக்கிச்…
சிதைமேல் எரியும்
மர்மம் தான் என்ன?
இன்னும்..இன்னும்..
அதிகமாய்ப் பேசவும்..
இன்னும்..இன்னும்..
அதிகமாய் எழுதவும்..
சொற்களும்..சொற்களிலான
மொழியின் தெளிவுமாய்…உன்
நம்பிக்கையான மொழியே
சிதைந்து போகிற நேரம்…
இப்போதெல்லாம் உன்
அதிஸ்டம் பற்றி
அன்னிய மொழிப்பலகையில்
வாசித்து மகிழ்கிறாய்…போ!
கைகளை உயர்த்தி
வெள்ளத்துள் அடங்கும்
கடைசி நிமிடமும்….
கொலண்ட் தமிழர்
ஜேர்மன் தமிழர்
இலண்டன் தமிழர்
பிரெஞ்சுத் தமிழர்
கனடியத் தமிழர்
அமெரிக்கத் தமிழர் என்று
குறி சுட்டலைந்து
நிறத்துணி சுற்றும்
பேதமை உணர்வை – நான்
நியாயப்படுத்தேன்!
இனி….
ஆசியக் கடைகளின்
மிளகாய்த்தூள் பைகளில்
நீண்டு பின் குறுகிய
புழுக்கொடியல் பொலித்தீன்
உறைகளில்…..
வற்றலாய்ப் போன
காய்கறிப் பொட்டலக்
கடதாசித் தாளில் – தமிழ்
நின்று நிலைத்து நீடு வாழலாம்.
இது தவிர – அந்த
நினைப்பையும் – அந்
நினைப்பின் உள் அர்த்தத்தையும்
அப்படியே – என்னால்
சொல்லி வைக்க முடியவில்லை!!!
elamraji@yahoo.ca
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’
- தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !
- கருணாகரன் கவிதைகள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்
- பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )
- பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )
- மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்
- சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )
- அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்
- திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை
- சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்
- குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்
- தாஜ்மகால்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6
- நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்
- கதை சொல்லும் வேளை … 1
- பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008
- அஜீவன் இணைய தளம்
- நேசகுமாரும்…. நல்லடியாரும்….
- இக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
- நல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை
- வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்
- முக அழகிரி – பன்ச் பர்த்டே
- விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்
- திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008
- கவிதை
- யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்
- மந்திரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! (Gravitational Waves)(கட்டுரை: 15)
- மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்
- அந்தரங்கம்
- சிங்கப்பூர் – ஜுரோங் தீவு
- பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்
- வலியும் புன்னகைக்கும்
- குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
- Last Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை ?/ சீமானின் உரை
- தத்துவத்தின் ஊசலாட்டம்
- தீராக் கடன்
- மாற்று வழி
- சாம்பல் செடி