மஹேஸ்வதா தேவி மற்றும் கோவிந்த் நிஹ்லானியின் நக்ஸலிசம் பற்றிய மீள்பார்வை :1084 ஆம் இலக்கத்தின் அன்னை

This entry is part [part not set] of 7 in the series 20000611_Issue


யமுனா ராஜேந்திரன்


I

1084ஆம் இலக்கமுள்ள பிணத்தின் அன்னை சுஐாதா. வங்காளத்தின் மேல்மத்தியதர வர்க்க்ததைச் சார்ந்த
ஸாட்டர்ஐி எனும் வியாபாரியின் மனைவி. அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள், இரண்டு ஆண்
பிள்ளைகள்.
ஆண்பிள்ளைகளில் பெரியவன், தந்தைவழி வியாபாரம் மேற்கொள்ளும் தனயன். பெண்கள்ில் மூத்தவள்,
ஆண்களைக்
கவர்வதே வாழ்வின் பாக்கியம் என நினைப்பவள். இளைய பெண் ஒரு குட்டிச் சாமியாரின் பக்தை.
திருமணக்கனவுகளில் நிரந்தரமாகத் திளைத்திருப்பவள். இளைய மகன் கல்லுாரி மாணவன். கதையின்
நாயகனும்
இவன்தான். இவன் தாயின் செல்ல மகன். பிரதி அவனது பெயர். அவனது நோக்கமும் நடவடிக்கைகளும்
அவனது
தாய்க்குப் பிடிபடுவதேயில்லை. அவனது தத்தவ விசாரங்களும் அவளுக்குப் புரிவதில்லை. அவனக்கு
தற்போது
இருபது வயது நடக்கிறது. சீக்கிரமே இருபத்தியோராவது பிறந்தநாள் வரப்போகிறது.

படம் தொடங்கும் போது 1949 ஆம் ஆண்டின் ஒரு நாளில் சுஐாதா தான் கருவுற்றிருப்பதை
உறுதிப்படுத்திக்
கொள்ள ஒரு கல்கத்தா குழந்தைப் பேறு மருத்துவமனைக்குள் நுழைகிறாள்.நேற்றுப் போல் இருக்கிறது
எல்லாமும்.
பிரதி நேற்றுத்தான் பிறந்தான் போல் தோன்றுகிறது. அடுத்த காட்சி 1970 ஆம் ஆணடுக்குள்
நுழைகிறது.
காலையில் தொலைபேசி மணிச்சத்தம். சுஐாதா எடுக்கிறாள். கல்கத்தா பொலிஸின்
பிணவறையொன்றில்
கிடக்கும் இளைஞனின் சடலம் ஒன்றை, அது அவள் இளையமகன் பிரதியின் சடலம் தானா என்று சுஐாதா
அடையாளம் காட்டவேண்டும். இருபது வயதுக் குழந்தை இறந்துவிட்டது. நேற்றுப் போல் இருக்கிறது
எல்லாமும்.
சுஐாதா பிணவறைக்குப் போகிறார். பிணத்தின் கால் கட்டைவிரலில் 1084 ஆம் இலக்கமிட்ட
அடையாள
அட்டை கட்டப்பட்டிருக்கிறது. முகம் மூடிய வெள்ளைத்துணி விலக்கி முகம் பார்க்கும் அன்னை மயங்கிச்
சரிகிறாள்.

புிணவறைக்கு தாயுடன் தந்தை போகவில்லை. பிரதியின் மூத்த சகோதரன் போகவில்லை. பிரதியின்
மூத்த
சகோதரி போகவில்லை. பிரதியை ஏன் கொன்றார்கள் ? எந்தக் குற்றத்திற்கான தண்டனையாகக்
சுட்டுக்கொன்றார்கள் ? தனது குழந்தையை நெருங்கிப் பார்க்கும் சுஐாதா தனக்குள் கேட்டுக் கொள்கிறாள்:
இவனை
நான் முழுக்கப் புரிந்த கொள்ளும் முன்பே போய்விட்டானே! இவனுக்குள் என்னவிதமான கற்பனைகள் ஆசைகள்
கனவுகள் இருந்தன ? சதா விடுதலை, சுதந்திரம், சமத்துவம், சிவப்புக் கனவு, சோசலிஸக்கனவு என்று
பேசிக்
கொண்டிருந்தானே, அதற்கெல்லாம் என்னதான் அர்த்தம் ?

பிரதியின் பெயர் பத்திரிக்கையில் பிரசுரமாகி தன் மேல்வர்க்க மரியாதை போய்விடாமல்
இருப்பதற்காக ஸட்டர்ஐி மிகுந்த சிரமம் எடுத்துக் கொள்கிறார். பிரதியின் மரணம் குறித்த
துக்கப்படுகிறவர்கள் அன்னையோடு தமது துயரத்தைப் பகிர்ந்த கொள்பவர்கள் என அந்த வீட்டில்
எவருமில்லை.
பிரதி அவ்வீட்டில் மறக்கப்பட்ட ஒரு பெயர். அவனது மரணம் மறக்கப்பட்ட ஒரு நிகழ்வு. ஏன் இப்படி ?

1970 ஆம் ஆண்டுகளில் கல்கத்தா நகரத்தை இளம் இரத்தம் கொண்ட ஒரு அரசியல் இயக்கம்
ஆட்டிப்படைத்துக்
கொண்டிருந்தது. இருபத்து நாலு பர்கானா பிரதேசங்களில் விவசாயிகளின் எழுச்சியாக நக்ஸல்பாரி
எழுச்சி
தோன்றியது. மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, அந்த அரசியல் இயக்கத்தின் அதிரலைகள் தமிழகத்திலும்
ஆந்திராவிலும் எழுந்தது. இதன் ஓசையை வசந்தத்தின் இடிமுழக்கம் என்றது சீன வானொலி. மாவோ
எமது
தலைவர் என்றனர் அந்த இயக்கம் சார்ந்த பரட்சியாளர்கள். வங்காளத்தில் சாரு மஐூம்தார், வினோத்
மிஸ்ரா, பீகாரில் நாகபூஷண் பட்நாயக், தமிழகத்தில் எல்.அப்பு, கோதண்டராமன் என அதனது
நாயகர்கள்
தோன்றினார்கள். கிராமங்கள் புரட்சியின் கொத்தளங்கள் ஆகின. வர்க்க எதிரிகளைக்
கொன்றொழிப்பது
( ‘அனிஹிலெஷன் ‘) அதனது அரசியல் தந்திரோபாயம் ஆகியது. நிலப்பிரபுக்கள்,
போலீஸ்காரர்கள்,
அரசு சார்பு ஊழியர்கள் இந்த இயக்கத்தின் துரோகிகள் ஆகினர்.

1968 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் வந்த நாட்களில் பாரிஸ் நகரத்தின் ஸோரபோன்
பல்கலைக்கழகம்
தொடங்கி லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் வரை செங்கொடிகள் எற்றப்பட்டன. விவசாயிகள்,
தொழிலாளர்கள், மாணவர்கள் ஒற்றுமை எனும் கோஷம்- உலகப் புரட்சி குறித்த உற்சாகம் கொப்பளித்த
மனோரதியமான நாட்கள் அந்த நாட்கள். அறிவுஐீவிகளும் மாணவர்களும் இந்த இயக்கங்களுக்குள் மிகப்
பெருமளவு ஆர்கஷிக்கப்பட்டார்கள். தமிழகத்தைச் சார்ந்த கோயமுத்துார் நகரிலுள்ள வெங்கிட்டாபுரம்
பொறியியல் கல்லுாரிவரை இதன் அதிரல்கள் இருந்தது. சேகுவேரா, மாவோ, ஹோசி மின்
போன்றோர்
இதனது ஆதர்ஷ புருஷர்களாகவும் கோட்பாட்டாளர்களாகவும் ஆகினர். கோன் பண்டிட், தாரிக் அலி
போன்றவர்கள் மாணவர்கள் தலைவர்கள் ஆகினர். பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் லுாயிமெல் தனது ”
மிலு இன்
மே ” எனும் அற்புதமான பிரெஞ்சுத் திரைப்படத்தில் 1968 மே எழுச்சி பிரெஞ்சு பூர்ஷு வாக்களிடம்
ஏற்பட்ட பீதியைச் சித்தரித்தார். புதிய சமூக இயக்கங்களான பெண்நிலைவாத இயக்கம், சூழலியல்
இயக்கம், தேசியம், சமப்பாலுறவு வேட்கை போன்றன இதிலிருந்தே வேர் கொண்டெழுந்தன. ஹெர்பர்ட்
மார்க்கியூஸ், ‘தொழிலாளிவர்க்கம் புரட்சிகரத் தன்மையை இழந்து விட்டது; இனி மாணவர்களும்
வேலையற்றவர்களும் உதிரிப்பாட்டாளிகளுமே புரட்சியின் முன்னணியினர் ‘ என்றார்.

கிராமங்களைக் கொண்டு நகரங்களைச் சுற்றிவளைப்பது எனும் விவசாயிகளை முன்னணிப் படையாகக்
கொண்ட
மாவோவின் அரசியல் தந்திரோபாயத்தை ஏற்றுக் கொண்ட நக்ஸல்பாரி இயக்கம் எதிரியை
அழிப்பதை
மட்டுமே இலட்சியமாகக் கொண்டு நின்றுவிட்ட ஒரு காலகட்டத்தில் அவ்வியக்கம் பிளவுண்டது.
இயக்கத்திற்குள்
உட்கொலைகளும் காட்டிக் கொடுப்புக்களும் அதனது அன்றாட நிகழ்வுகள் ஆகின. பின்னாட்களில் ஐாதியை
மையமாகக் கொண்ட அரசியல் இயக்கங்களில் முன்னாள் நக்ஸல்பாரிகள் இயங்கத் தொடங்கினர். ஆதிக்க
ஐாதிகளின் இயக்கங்களிலும் புட்டபர்த்தி சாயிபாபா சங்கத்திலும் இணைந்த கொண்டவர்களும் இவர்களில்
உண்டு. காலஞ்சென்ற நாகபூஷன் பட்நாயக் போன்ற புரட்சியாளர்கள் தமது கடைசி நாட்களில் ( 1999
ஆம்
ஆண்டு) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்த கொண்டு அனைத்துக்
கம்யூனிஸ்ட்
கட்சியினரும் ஒன்றபடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதும் வரலாறு.

1970 களில் நக்ஸல்பாரி இயக்கத்தின் செயல்பாட்டாளனாக ஆகிறான் பிரதி. அவனது நண்பர்களோடு
சேர்ந்து கல்கத்தா நகரத்தின் சுவர்களில் புரட்சிகர முழக்கங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டுகிறான்.
அழித்தொழிப்புக்களைத் திட்டமிடுகிறார்கள். நக்ஸல்பாரி புரட்சியாளர்கள் பிளவுண்ட இந்தியக்
கம்யூனிஸ்ட்
கட்சியிலிருந்து தோன்றிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எற்பட்ட சித்தாந்த மோதலால்
அதினின்றும்
வெளியேறியவர்கள். நக்ஸல்பாரி நடவடிக்கைகள் வேகம் பெற்றபோதும் அதற்குப் பின்னால் இன்றளவும்
மேற்கு
வங்கத்தை ஆண்டு கொண்டிருப்பவர்கள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான்.
நக்ஸல்பாரிகள்
உடனடியாக இக்கட்சியின் எதிரிகள் ஆயினர். நக்ஸல்பாரிகளின் நடவடிக்கைகள் இவர்களது ஆட்சிக்கு
மிகப்பெரும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவம் சித்தாந்த தளத்தில் மிகப்பெரும் சவாலாகவும்
எழுந்தது.
நக்ஸல்பாரிகளை இல்லாமல் ஆக்குவதும் அழித்தொழிப்பதுவும் இவர்களது அரசியல் இலக்குகளில் ஒன்றாக
ஆகியது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கல்கத்தா நகரத்தின் சமூகவிரோதிகளும் போலீசும்
கைகோர்த்துக் கொண்டு நக்ஸல்பாரி இளைஞர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினார்கள்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சமூக விரோதிகளும்
சேர்ந்து
பிரதியையும் அவனது மூன்று நண்பர்களையும் அடித்துப் போட்டுவிட்டு சுயநினைவற்ற நிலையில்
கிடக்கும்போது,
சுட்டுக் கொல்கிறார்கள். சுட்டுப் போட்டபின் அவ்விடத்திற்கு வரும் போலிஸ் பிணங்களைக் கைப்பற்றி
பொலிஸ் பிணக்கிடங்கிற் கொண்டுபோய்ப் போடுகிறார்கள். இங்கிருந்துதான் அன்னை சுஐாதாவுக்கு
பிணத்தை
அடையாளம் காட்டச்சொல்லிய தொலைபேசிச் செய்தி போகிறது…

II

1998 நவம்பரில் நடைபெற்ற லண்டன் சர்வதேசத் திரைப்படவிழாவில் இடம்பெற்ற படம் சம்பந்தமான
விவாதங்களில் கலந்த கொள்ள படத்தில் பிரதியின் காதலியாகவும் சக நக்ஸல்பாரி
நடவடிக்கையாளராகவும் நடித்த நந்திதா போஸ் வந்திருந்தார். நந்திதா இடதுசாரி இயக்கமொன்றின்
தெருநாடக இயக்கத்தில் தான் செயல்படுவதாகத் தெரிவித்தார். படத்தில் நடிக்கும் முன்பு தான்
நாவலாசிரியை மஹேஸ்வதா தேவியைச் சந்தித்துப் பேசியதையும் தனது பாத்திரம் வரலாற்று
ரீதியிலானது
என்றும் குறிப்பிட்டார். தனது மகனின் கொலைக்கான காரணங்களைத் தேடிச்செல்லும் பிரதியின் தாய்
நந்தினியைத் தேடிச் சென்று தொடரந்து பிரதியின் நண்பர்களின் தாய்மார்களை சகோதரிகளைச்
சந்திக்கிறார். இதிலிருந்து தனது மகனின் இலட்சியங்களையும் தொடர்ந்து செல்பவளாக தாய்
பரிமாணம்
பெறுவதுதான் கதை என்றார் நந்திதா போஸ்.

முதலாவதாக இப்படம் அன்னைக்கும் மகனுக்கும் இடையிலான ஜீவாதாரமான பாசத்தை உணர்ச்சிகரமாக
விவரித்துச்லெ¢கிறது. இரண்டாவதாக அந்த அன்னை தான் இந்தச் சமூகத்திலிருந்து எவ்வளவுதூரம்
அன்னியமாக
இருக்கிறோம் என உணரும் அரசியல்ரீதியிலான பயணமாகவும் இப்படம் இருக்கிறது. இப்படத்தைப்
பார்த்தபோது இரண்டு சிந்தனைகள் அடுத்தடுத்து எனக்குள் எழுந்தன. நிஹ்லானியின் அரசியல் வன்முறை
பற்றிய
படங்களில் இதுவும் ஒன்று. காணாமல் போவோர் என்கிற உலக அளவிலான பிரச்சினையை இந்திய
அரசியல்
சூழலில் வைத்த படம் இது. அதுமட்டுமல்ல கடந்த கால ரணங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தேடிப்பிடித்து
தண்டனை வழங்கப்படவேண்டும். எனும் தார்மீக ஆவேசத்தையும் முன்வைக்கும் படம் இது.

இலத்தீனமெரிக்கப்படங்களில் காணாமல் போவோர் குறித்த எதிர்ப்பு இயக்கங்களில் முன்னணியினராகச்
செயல்படுபவர்கள் அன்னையர்தான். ஆர்ஐன்டின பெண் இயக்குனரான மரியா பம்பர்க்கின் ”தி லைசென்ஸ் ஆப்

வால்,” (The Licence of The Wall) மற்றும் ெஐனின் மிராப் பெல் இயக்கிய ” வாட் ஹேப்பன்
டு
மை ஸன் ” (What Happened to My Son ?) போன்றன இத்தகைய படங்களாகும். மரியா
பம்பர்க்கின்
படம், காணாமல் போன கணவனைத் தேடும் மனைவியைக் குறித்தது. ெஐனினின் படம் காணாமல் போன
மகனைத்
தேduம் தாய் பற்றிய படம். அரசியல் இயக்குனர் கோஸ்டா காவ்ரஸின் ” மிஸ்ஸிங் ” (Missing)
திரைப்படம் சிலியில் பினோசே காலத்திற் காணாமல் போன தனது மகனைத் தேடிய தகப்பனைப்
பற்றிப்
பேசகிறது. மார்த்தா திராபாவின் நாவலான ‘அன்னையரும் நிழல்களும் ‘ ( தமிழ் மொழிபெயர்ப்பு :
அமரந்தா) சிலி நாட்டின் கவிஞரான ஆரியல் டோப்மேனின் ‘விடோஸ் ‘ நாவலும் நாடகமும் அதைத்
தொடர்ந்த தொகுதிக்கவிதைகளும் காணாமல் போனோரைத் தேடிய அன்னையரின் அனுபவங்களைத் தான்
பேசுகிறன. அன்னையர்க்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் இடையிலான ஜீவாதாரமான உறவின்வழி அரசியல்
பிரக்ஞை பெறுவதென்பது மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய் ‘ நாவல் முதல் நிஹ்லானியின் ‘1084 ஆம்
இலக்கத்தின் அன்னை ‘ படம் வரை தொடரும் படைப்பாக்க மரபாக இருக்கிறது.

III

பிரதியின் அன்னை தனது பயணத்தில் பல்வேறு உண்மைகளை எதிர்கொள்கிறாள். பிரதியின் நண்பனின்
சகோதரியர் திருமணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். கையறுநிலையில் இருக்கும் அவர்களது தாய்
அழுது
குமைகிறாள். உறவினர்கள் சுஐாதாவை வெறுப்போடு பார்க் கிறார்கள். பிரதியோடு சேர்ந்ததால்தான்
தன்
சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டான் என நினைக்கும் ஒரு பெண் சுஐாதா தொடர்ந்து தங்கள் வீடடுக்கு
வருவது
வேண்டாத பிரச்சினைகளை வளர்க்கும் என்று சுஐாதாவை இனி தங்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என்கிறாள்.
காட்டிக் கொடுப்பதும் கூட சிலருக்கு இலட்சியமாகத்தான் இருக்கிறது என்கிறாள் பிரதியின்
காதலியான
நந்தினி. புரட்சிகரக் கவிதைகளை பரஸ்பரம் வாசித்துக் கொண்டு வனங்களில் ஆற்றங்கரைகளில்
பிரதியும்
தானும் திரிந்ததை நந்தினி நினைவுகூர்கிறாள். தொடர்ந்த அதிவெளிச்ச மின்விளக்கின் முன்பாக
உட்காரவைத்து சித்திரவதை விசாரனை செய்ததால் தனது இடதுகண் தெரியாமல் போனதாகச் சொல்லும்
நந்தினி எதுவும் இன்னும் மாறிவிடவில்லை என்கிறாள். இப்போது இருக்கம் அமைதி மரணத்தின்
பின்னான
அழிவின் பின்னான அமைதி என்கிறாள். சுரண்டலும் கயமையும் அயோக்கியத்தனமும் அதிகாரமும்
வன்முறையும்
தொடர்ந்து நிலவுகிறது என்கிறாள். சக தோழன் ஒருவனால் தாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு
பிரதியும்
தோழர்களும் கொலைசெய்யப்பட்டதை நினைவு கூர்கிறாள் நந்தினி.

மிகுந்த தார்மீக ஆவேசத்துடன் அவள் சொல்கிறாள், ” எங்களை இங்கிருக்கும் சகலரும் இப்போது
கொலைகாரர்களாகப் பார்ககிறார்கள். நாங்கள் வரைமுறையற்று சகலரையும் வெறுத்தோம் என்று
நினைக்கிறார்கள். அது அப்படி இல்லை. எங்கள்ின் ஆழ்ந்த அன்புதான் எங்களின் கோபமாக இருந்தது.
மக்களின்
விடுதலை மீதான ஆழ்ந்த பற்றுதான் எதிரிகளின் மீதான வெறுப்பாக ஆகியது. நாங்கள் அதிகதூரம்
போய்விட்டோம் என்பது உண்மைதான். ஆனால், மக்கள் எங்களைப் புரிந்து கொள்ளும் நாள் வரும்.
நாங்களும்
கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுச் செயல்படவேண்டும்”.

மனித குலத்தின் மீது இவ்வளவு பெரிய அன்பும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது இத்தனை அன்பும் கொண்ட
மகனை
அவன் வாழ்ந்த போதே தான் விளங்கிக் கொள்ளவில்லையே என்கிறாள் சுஐாதா. அதற்கான தண்டனைதான்
போலும் இந்தப் பிரிவும் புத்திர சோகமும் என்கிறாள் சுஐாதா.

மகனின் கடந்த காலம் பற்றித் தேடிச்சென்று தெரிந்து கொண்ட சுஐாதா நந்தினியிடமிருந்தும்
பிரதியின்
நண்பனின் தாயிடமிருந்தும் விடைபெற்று வீடு வருகிறாள். சுஐாதாவின் மகளுக்கு வீட்டில்
நிச்சயதார்ததம்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்த நிச்சயதார்த்தக்காட்சிவரையிலும் சுஐாதாவுக்கு அடிவயிற்றில்
அடிக்கடி
வலியேற்படுகிறது. அனாவசியமாக வளர்ந்துவிட்ட குடல்வளரிக்காக ( ‘அபண்டிஸிசு ‘க்கான)
அறுவைசிகிச்சை
செய்யப்படவேண்டும். சுஐாதாதான் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறாள். வலி கூடிவிட்டது. வீட்டில்
நிறையக் கூட்டம். மேல்நாட்டு வங்காளிகளின் கூட்டம். புரட்சிக் கவிதையும் குடியும் கொண்ட
கவிஞர்களின்
வாய்ஐாலம் கூட்டத்தில் நிறைந்து வழிகிறது. அமெரிக்க குட்டிச் சாமியார்களின் தெய்வ பக்தைகளின்
அலங்கார வார்த்தைகள். சூடேறிய உடல்களின் உரசல் நாட்டியம். முத்தமிடும் சப்தங்கள்.
வலியுடனிருக்கும்
சுஐாதாவை அதட்டும் கணவனிடம் தான் நடுக்கூடத்துக்கு வரமுடியாது என தனது அறையைவிட்ட கணவனை
கோபத்துடன்
விரட்டுகிறாள் சுஐாதா.

தாய் க்குக் கடமைகள் இருக்கிறதே, என்ன செய்வது ? தனது, பெற்ற மகளை, வருங்கால மருமகனை
வாழ்த்துவதற்கு
கூடத்துக்குள் வருகிறாள் சுஐாதா. பிற்பாடு தனியே ஒதுங்கி நின்று கொள்கிறாள்.அங்கேயிருக்கும்
நிறையப்
பெண்கள், தமது சகோதரனை, மகனை, காதலனை, பொலீஸின் கொலைக்கரங்களுக்குள்
இழந்திருக்கிறார்கள்.
அப்படி சகோதரனை இழந்த பெண்ணொருத்தி சகோதரனின் நியாயங்களுக்காக பகிரங்கமாக கணவனோடு
சண்டையிடுகிறாள். பிரதியின் மரணத்தைக் கேலிசெய்து விமர்சிக்கிறார்கள் சில உறவினர்கள்.
சுஐாதாவுக்கு வயிற்றுவலி கூடிவிட்டது. மயக்கம் போட்டுவிடுகிறாள். இரத்தம் கசிகிறது. சுஐாதா
மருத்தவ
மனைக்கு எடுத்துக் கொண்டு போகப்படுகிறாள்.

1992 ஆம் ஆண்டு. இப்போது மனித உரிமை ஆவணக்காப்பகத்தில் பணிபுரிகிறாள் நந்தினி.
பிரதியோடு
செயல்பட்ட பல்வேறு நண்பர்கள் 1970 களில் அத்துமீறல் புரிந்தவர்களை வழக்குமன்றத்துக்கு இழுத்து வந்து
தண்டனை கோருகிறார்கள். ஐனநாயகரீதியான அரசியல் நிறுவனங்களைப் பாவித்து மனித உரிமை
நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மகன் இறந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. நந்தினி தொலைபேசி
மூலம்
சுஐாதாவை அழைக்கிறாள். சுஐாதாவுக்கு வயதாகிவிட்டது. அவளது கணவருக்கும் வயதாகிவிட்டது.
அந்திம
காலத்தில் மனைவியைத் தீவிரமாக நேசிக்கிறார் மனிதர். வயது மட்டுமே அவரை இத்தகைய
மனமாற்றத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. கணவனும் மனைவியும் மனித உரிமைச் செயலகத்தில்
நந்தினியைச்
சந்திக்கிறார்கள். நந்தினியைப் போகவேண்டிய இடத்துக்குக் காரில் கொண்டுபோய்விடுகிறார்கள்.
அந்நேரம்
அவர்களைக் கடந்த இரண்டு இளைஞர்கள் போகிறார்கள்.

அருகிலிருக்கும் ஒரு கட்டிட வாயிலில் பிரதியின் அந்நாள் நண்பரும் இந்நாள் மனித உரிமையாளரும்
நந்தினியின் தோழருமானவர் நிற்கிறார். போன இளைஞர்கள் அவரிடம் ஏதோ
கத்திப்பேசுகிறார்கள்.
சிறிது நேரத்தில் இருவரும் சரமாரியாக அவரது நெஞ்சைக்குறிவைத்துத் துப்பாக்கியால் சுட்டு அவரைச்
சாய்க்கிறார்கள். இரத்தம் சீறிப் பாய அவர் கீழே சாய்கிறார்.

தப்பித்து ஒடுகிற இருவரையம் சுஐாதா ஓடிச் சென்று தடுக்கிறார். ஓருவன் சுஐாதாவை கீழே
தள்ளிவிட்டு ஓடி
விடுகிறான். மற்றவனின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள் சுஐாதா. அந்த முதிய தாயை
தரையில் இழுத்தபடி போய்க் கொண்டிருக்கிறான் கொலைகாரன். அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள்
ஓடிவந்து
கொலைகாரனைப் பிடிக்கும் வரை சுஐாதா கொலைகாரனின் கால்களை விடுவதேயில்லை.

இரவின் தனிமை.வெடிக்கும் சப்தங்கள். அடிக்கடி ஐன்னலில் வந்த போகும் கூசும் வெளிச்சம். ஐன்னல்
சட்டங்கள்
சுவரில் பெரிதாகி நகர்ந்து மறைகிறன. சுஐாதா கடிதம் எழுதுகிறாள். பிரதி அம்மாவுக்கு அருகில்
வருகிறான். ‘மகனே உனது போராட்டங்களில் இப்போது நானும் என்னால் முடிந்த அளவிற்
பங்குபெறகிறேன் ‘
என்கிறாள் அன்னை. மகனும் தாயும் மட்டுமே உரையாடிக் கொணடேயிருக்கும் மனோமயமான உலகம். படம்
நிறைகிறது..

IV

கோவிந்த் நிஹ்லானிதான் இன்றைய சூழலில் இந்திய சினிமாவில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு
அரசியல் சினிமா இயக்குனர். அரசியல் வன்முறை குறித்துப் பொறுப்புடன் படமெடப்பவரும் அதிக
அளவில்
ஒப்பீடடளவில் மக்களைச் சென்றடைகிறவரும் இவர்தான். சந்தோஷ் சிவனின் ‘டெரரிஸ்ட் ‘
(Terrorist)
படத்தை ஒப்பிடுகிறபோது மிகுந்த பொறுப்புணர்வுடன் வரலாற்று ஆய்வுடன் சமூகப்பிரக்ஞையுடன்
அரசியற்புரிதலுடன் இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டம் பற்றி மிக முக்கியமானதோர்
அரசியல் இயக்கத்தின் எழுச்சி வீழ்ச்சி பற்றி படம் கொடுத்திருக்கிறார். நீதியை தமது
நலன்களுக்காக
அவமதித்தவர்களை மன்னித்துவிட அவரது படத்தின் கதாபாத்திரங்கள் தயாராயில்லை. சமூக அமைப்பு
மாறிவிட்டதென்றும் கற்பனையாக அவரது கதை மாந்தர்கள் நம்பவில்லை. அரசியல் அதிகாரம்
கொண்டோர்
சுரண்டலாளர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் அவர். நக்ஸல்பாரிகளை மக்கள் பரிந்து கொள்ள
வேண்டம்
என்று கோருகிற அதே வேளை அவர்களிடமும் அரசியல் மறுபரிசீலனையைக் கோருகிறது படம்..

இப்படத்தில் பிரதியும் அவனது அன்னையும் வீட்டு வேலைக்காரப் பெண்களும் தவிர அக்குடும்பம் சேர்ந்தவர்
ஆண்
பெண் அனைவரமே அதிகார நிறவனங்களில் பிரக்ஞையின்றி அகப்பட்டுச் சுழல்கிறார்கள். பிரதியின்
கொலைக்குக் காரணமானவனும் நந்தினியைச் சித்திரவதை செய்தவனுமான போலிீஸ் அதிகாரியோடு
பிரதியின் சகோதரியே மயக்கம் கொண்டிருக்கிறாள். அநேகமாக முழுச்சமூகமும் பிரக்ஞையின்றி
பிரதியின் கொலையில் பங்கேற்றிருக்கிறது. இப்படத்தில் சுஐாதாவின் கணவரின் மனமாற்றம்
உருவாகியதற்கான அழுத்தமான காரணமெதுவும் சித்தரிக்கப்படவில்லை என்பது உறுத்திக் கொண்டே
இருக்கிறது.
சுஐாதாவாக நடித்திருப்பவர் அமிதாப்பச்சனின் துணைவியாரான ெஐயா பச்சன். கணவராக வருபவர்
அனுபம்
கெர் . பிரதியின் நண்பனின் வாஞ்சைமிகும் தாயாக நடித்திருப்பவர் ‘பண்டிட்குயின் ‘ (Bandit
Queen)படத்தில் பூலான் தேவியாக நடித்த சீமா பிஸ்வாஸ். பிரதியாக நடிப்பவர் ஐாய்
ஸென்னாரோ.

படம் பிராமணக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கூடேதான் சொல்லப்படுகிறது. ஆனால்
மஹேஸ்வதா தேவியும் கோவிந்த நிஹ்லானியும் தமது பரந்துபட்ட உலகப்பார்வையின் மூலம் புரட்சிகர
நோக்கின் மூலம் பிராமணக்குடும்பத்தின் பார்வை எல்லைகளை உடைத்தெறிகிறார்கள். நாவலாசிரியர்
மஹேஸ்வதாதேவி இன்றளவும் பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர். ‘பதாதிக் ‘ என
நக்ஸலிஸம் பற்றிப் படமெடுத்தார் மிருணாள்ஸென். ரேயின் படங்கள் பலவற்றில் துணைப்பாத்திரங்களாக
நக்ஸல்பாரி இளைஞர்கள் வருகிறார்கள். ஆனால், நக்ஸல்பாரி இயக்கத்தின் அரசியலை மையமாகவைத்து
வெளிவந்த முழுநீளப்படமாக இருப்பது நிஹ்லானியின் இப்படம்தான். இப்படம் இதனது அழுத்தமான
சமகாலச்
செய்திக்காக முக்கியத்துவம் பெறும் படமாகிறது.

எதுவும் இன்னும் மாறிவிடவில்லை. கொலைகளுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். கடந்த கால
நக்ஸல்பாரி அரசியல் மறுபரிசீலனைக்குட்படவேண்டும். வெகுமக்கள் அரசியல் கட்டியெழுப்பப்படவேண்டும்.
மனித
உரிமைகள் குறித்த அக்கறை பரட்சியாளர்களுக்கும் உரியது. சமூகம் மாறியே ஆகவேண்டும். தொடர்ந்த
போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அந்த முக்கியமான செய்தி.  
 
  Thinnai 2000 June 11

திண்ணை

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்