ரொமேஷ் குணசேகர (ஸ்ரீ லங்கா) ஆங்கிலமூலத்தில் இருந்து தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
”மணல்பூமி இது, நமக்கு விளைச்சலுக்குத் தோதான இடம் இதுதான்!” தலையைத் தூக்கியபோது சூரியப் பிரகாசத்தில் கண் கூச கையால் கண்ணுக்கு மேல் மறைப்பு கொடுத்துக் கொண்டான். தனது நிலம் தாண்டி புதரைக் காட்டினான் அவன். ”அங்கல்லாம் பாத்திங்கன்னா தினசரி களையும் முள்ளும் எடுத்தே தாவு தீர்ந்து போகும்… ஆனா நம்ம இடம் அப்டியில்லை, இங்க எதுவும் விளையாது!”
”எதுவும் விளையலன்னா நமக்கும் லாயக் படாது, இல்லியா?”
”ம்ஹ§ம், அப்டி இல்ல விஷயம்!” அவன் புன்னகைத்தான். ”அதாவது நாமளா விளைய வைக்கிற வரை, எதுவும் தானா விளையாதுன்றேன்… ஒரு விஷயத்தைப் புழக்கத்துக்குக் கொண்டு வரணும்னா அந்த ஒரே விஷயத்தை மாத்திரம் நாம கவனிக்கிறா மாதிரி பாத்துக்கணும்…” ஆள் கணக்கில் சூரப்புலி. எண்களின் உபாசகன், கணிப்பும் திறமையான செயல்பாடும் முக்கியம் அவனுக்கு. ஒரு நவீன விவசாயி. பயிர் வளம் அறிந்தவன். இந்த வெண்மணல் திடல் தவிர, அவன் பூமியில் சீரான இடைவெளிவிட்டு ஒரே உயரமான தென்னை மரங்கள் நட்டிருந்தான். பக்கத்து ஆளின் நிலத்தைப் பார்த்தால், பிரயோசனமற்ற, வளர்ச்சி குன்றிய மெலிந்த மரங்கள். அடியிலேயே மண்டிக்கிடக்கும் உருப்படாத களைகள். பசுமை அப்பி என்ன விளையுது என்றே புரியாத குழப்படியாய் இருந்தது. ”கவனிச்சீங்களா, அந்த மக்களுக்கு தேவைக்கு அதிகத் தண்ணி கெடக்கு. நல்ல ஊத்து இருக்கறது நம்ம அதிர்ஷ்டந்தான்னு அவங்க நினைக்காங்க. ஆனா பாத்தீங்கன்னா நிலத்தில் தண்ணி எல்லா இடத்திலும் கெடக்கு, அதுனால என்ன… என்னெல்லாமோ அதுபாட்டுக்கு விளைஞ்சிட்டே இருக்கு. கடடுப்படுத்தேலாது. பாருங்க, நாம எதை விளைவிக்கிறோமோ அதை விளைவிக்கப் போராட வேண்டியதாப் போகுது. நீங்க நிலத்துக்கு என்ன செலவு பண்றீங்களோ, அதை திரும்ப எடுக்கணுமா வேணாமா? கணக்கு பாருங்க, செலவைக் கழி, அப்பறம் வரவைக் கூட்டு… எது வசதி, கழிக்கற கணக்கும் சேத்துப் பார்க்கறதா, வெறுங் கூட்டலா சொல்லுங்க…” வேலைக்காரன் தான்!
தற்போதைய திட்டத்தை விவரித்தான். ”சொட்டுநீர்ப் பாசனத்தில் இங்க நான் பப்பாளி போடப் போறேன்…” பக்கத்தில் தோண்டிப போட்டிருந்தது. ”இது என் நீர்த்தேக்கம், மழைத் தண்ணீரை இங்க சேத்து வைக்கிறேன். வீணாகாமல் அப்பிடியே கெடக்கும். ஒவ்வொரு பழ மரத்துக்கும் கணக்கு போட்டு எவ்வளவு வேணுமோ அவ்வளவு தண்ணீர மாத்திரம் பாய்ச்சிக்கலாம். விரையம் கிரையம் இல்லாமப் பாத்துக்கிட்டு அதிக பட்ச மகசூலை சாதிக்கலாம். தொட்டதெல்லாம் பொன்னாவணும்!” விரலை மடக்கித் தலையில் தட்டிக் கொண்டான். ”என்ன செய்யறோம்னு தெரிஞ்சி செஞ்சியானா, முடியாது என்கிற பேச்சே கிடையாது. பாலைவனமும் பூத்துக் குலுங்கும்!”
சொல்லியடிச்சான் கில்லி!. அவன் விளைவித்த பப்பாளிகள் தரமானவை. நல்ல ருசி. நல்ல பெருவெட்டு. அபரிமிதமான மகசூல். பல மைல் தூரத்து சம்சாரிகள் வந்து அவனது அநாயாசமான தோப்பைப் பார்த்து மூக்கில் விரலை வைத்தார்கள். இந்த மாதிரி ஒரு திட்டத்தை, இந்த மாதிரி ஒரு வெற்றியை அவர்கள் பார்த்ததே கிடையாது.
அடுத்த தடவை நான் அங்கே போயிருந்தபோது அந்த நீர்க் குட்டையைப் பார்த்தேன். குட்டி சமுத்திரம்! கொக்கும் நாரையும் கண்மூடி அப்படியே சொகுசு கொண்டாடி நின்றன. பழ மரங்கள் சிப்பாய்கள் போல. இவர்கள் சண்டை கிண்டை போட வேண்டாம். விசேஷ தினங்களில் லெஃப்ட் ரைட் போட்டு காலை ஒடுக்கி சல்யூட்! அத்தோடு வேலை ஓவர். சரியா பருவத்துக்கு அழகழகாய்க் காய்த்துக் குலுங்கின அவை. ”விளங்குதுங்களா, கூட்டல் கணக்கு! சரியான அளவு தண்ணி மாத்திரம் கூட்டிட்டே வரணும்… விஷயம் பழமாயிரும்!”
* * *
பிறகு, போன மாதம் அவனை கொழும்பில் சந்தித்தேன். ஆளே சுரத்தாய் இல்லை. ”என்னாச்சி இவனே?” என்று கேட்டேன். ”முகம் ஃபியூஸ் போனாப்ல இருக்கே…”
”எல்லாம் ஏறக்கட்ட வேண்டிதான்…”
”எதை பப்பாளியையா?”
சில்லு மூக்கைத் தேய்த்துக் கொண்டான். ”பப்பாளிப் பிரச்னை இல்லை, தண்ணிதான் பிரச்னை. எப்பவுமே பிரச்னை தண்ணிதான்…”
”ஆனால் அதுக்குதான் வீணாக்காதபடி கம்மாய் வெட்டிருந்தியே…”
”கம்மாய் அது வெறும் ‘சும்மா’ய். மழை? அதான் பிரச்னை. தேவை நேரத்துக்கு மழை… வரணுமே. வருதா அப்பிடி? இல்லையே. சரி வருது. போதும்னா அடங்குதா, கொட்டி முழக்கி பொங்கி வழிஞ்சிட்டுப் போயிருது… அந்தக் காலத்தில் மழைக்காலமானா மழை வரும், காலண்டர் கணிப்பு சரியா இருக்கும், மழை வரும் நேரத்தைக் கூடச் சொல்லிருவாங்க… இப்ப ஒரு விஷயமும் இன்னின்னது இப்டிப்டின்னு சொல்லுந் தரத்தில் இல்லை. யூகம் எல்லாம் செல்லுபடியாகல… ஒருநாள் பாசனத்துக்குத் திறந்து விட்டால், மறுநிமிஷமே மழை ஊத்தி முழக்கிருது. மதகு தாண்டித் தண்ணி போகுது. வயல் முழுக்க தண்ணி கட்டி நிக்குது. பழமெல்லாம் அழுகிருது. தண்ணியை சேத்து வைக்காமல் வயலுக்குப் பாய்ச்சினால் பிற்பாடு தண்ணிக்குப் பஞ்சமாப் போகுது. சரியா கணக்குப் போட்டுச் செய்ய வகையில்லை… இனி எதையும் எக்காலத்திலும் விளைவிக்க என்னாலாவாது.”
”எதையுமேவா?’
”யாரோ எங்கியோ ஆப்பு வெச்சிட்டான்… வெறும் நம்பிக்கையும் பிரார்த்தனையும் வெச்சிக்கிட்டு என்னால விவசாயம் செய்யேலாது!”
”அப்டின்னா…”
”கூட்டல் கணக்கு சரியா வர்றா மாதிரி, கழித்தல் பத்தியும் சரியா எடைபோடணும்ல. அப்பதான் விஷயம் கைப்பிடிக்குள்ள நிதானப்படும்.” என்னை நிமிர்ந்து பார்த்தான். ”வானத்தை சரியா கணிக்கத் தெரியணும்” என்றான். சொல்லிவிட்டு என்னையே வெறித்தான், என்னவோ அது என் வேலை போல!
மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாதப்போவ்!
* * *
(நன்றி – யுகமாயினி மாத இதழ் – டிசம்பர் 2009)
- பெயர் மறக்கடிக்கபட்ட பின்னிரவு
- அனுகூலம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1
- மணல் வீடு சிற்றிதழ் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழ்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`
- அன்புள்ள திண்ணை யர்க்கு
- சுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ கட்டுரைகள்.
- திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.
- மாறும் மனச்சித்திரங்கள்
- அணு ஆயுதப் போரில் நேரும் அகோர விளைவுகள்.(கட்டுரை: 1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 63
- கார்முகிலின் முற்றுகை
- பொங்குநுரை
- நீராலான உலகு
- ஞானோதயம்
- நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்
- மொட்டை மாடி இரவுகள்
- எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை
- (மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்
- இருளில்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- விலையேற்றம் கட்டுப்படுமா?
- நினைவுகளின் தடத்தில் – (40)
- முள்பாதை 9
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1
- வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)
- மழைப்பேறு
- புதுப் பெண்சாதி
- ஞானோதயம் (நிறைவு பகுதி)