மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

பாவண்ணன்


மலையாள இலக்கிய உலகத்தில் மாபெரும் படைப்பாளியாக கருதப்படுகிற வைக்கம் முகம்மது பஷீரின் தோற்றம் முதல் மறைவுவரைக்குமான வாழ்க்கை வரலாறு பத்தொன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காலம் முழுதும் கலை என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இருபதாவது பகுதியாக, என் மரணக்குறிப்பு என்கிற தலைப்பில் பஷீர் இறுதியாக எழுதிய கட்டுரைக்குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இதை எழுதியவர் இ.எம்.அஷ்ரப். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குறிஞ்சிவேலன்.

ஆறு பிள்ளைகள் பிறந்த ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்தவர் பஷீர். தந்தையார் பெயர் காயி அப்துல் ரகுமான். தாயார் பெயர் குஞ்ஞாச்சுமா. பஷீரின் தாய்தந்தையரைப்பற்றிய முக்கியமான குறிப்பொன்று நூலில் காணப்படுகிறது. இடைவிடாத மழையால் ஊருக்குள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பஷீரின் குடும்பம் வாழ்ந்துவந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் வருகிறது. திண்ணைவரை வந்துவந்து மோதும் தண்ணீர் அலைகள் ஒருமுறை ஒரு நஞ்சுமிகுந்த தேளை திண்ணையோரமாக ஒதுக்குகிறது. நச்சுத்தேள் என்பதால் உடனடியாக எல்லாரும் அதை அடித்துக்கொல்ல எழுந்திருக்கிறார்கள். பஷீரின் தந்தையார் அவர்களைத் தடுத்துநிறுத்துகிறார். கடும்மழையிலிருந்து தப்பி நம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்திருக்கிற தேளை நாம் கொல்வது பாவம் என்று மெதுவாகச் சொல்லி அவர்களைத் தடுத்துவிடுகிறார். சுதந்திரமாக விடப்பட்ட தேள் வீட்டுக்குள்ளேயே வளையவருகிறது. பஷீரின் தாயாரின் தோள்மீது விழுந்து அச்சுறுத்துகிறது. வீட்டாரின் முணுமுணுப்பைத் தாங்கமுடியாமல் அந்தத் தேளை ஒரு சிறிய சட்டிக்குள் வைத்து தண்ணீரில் மிதக்கவிடுகிறார். ஓடும் வெள்ளத்தில் எங்காவது கரையோரம் ஒதுங்கிப் பிழைத்துவிடும் என்பது அவர் எண்ணம். மாறாக, அந்த சட்டி மீண்டும் அந்த வீட்டோரமாகவே ஒதுங்கிவருகிறது. அந்த சட்டிக்குள் நீண்ட இலைத்துணுக்கொன்றையும் போட்டனுப்புகிறார் பஷீரின் தந்தையார். தண்ணீரின் ஓட்டத்தில் எங்காவது வேரடியில் அல்லது மரத்தடியில் சட்டி ஒதுங்கும்போது, தேள் இலைத்துணுக்கு வழியாக மேலேறி உயிர்பிழைத்துக்கொள்ளும் என்று சொல்கிறார். இந்த இரக்கமும் கனிவும் வாழ்வில் மிகமுக்கியமான குணங்கள். எளிமையையும் எளியோர்பால் அன்பும் கொண்ட பஷீருக்கு அவை தன் தந்தைவழியாகக் கிடைத்த கொடை என்று சொல்லலாம்.

பஷீர் எழுத்தாளரான சம்பவம் மிகவும் தற்செயலாது. இளம்பருவத்துக் காதலால் தந்தையாரிடம் வசைபட்டு, வீட்டைவிட்டுக் கிளம்பிய பஷீர் சுதந்திரப்போராட்டத்தில் முழுமனத்துடன் ஈடுபடத்தொடங்கினார். கோழிக்கோட்டில் நடைபெற்ற உப்புசத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறைசென்றார். சிறையில் நம்பியார் என்னும் காவலர் அவரைக் கடுமையாக உதைத்து வதைத்தார். அந்த நம்பியாரைக் கொல்லவேண்டும் என்கிற வேகம் அவர் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி கண்ணனூர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அந்த வேகம் இன்னும் பலமடங்கு கூடுதலானது. கொல்வதற்கான ஆயுதத்தோடு பணிபுரியும் இடத்திலிருந்து நம்பியார் வெளிப்படும் தருணத்துக்காக காத்திருந்தார். தற்செயலாக அங்கே வந்த காந்திவழித் தொண்டரான அச்சுதன் என்பவர் அவரிடம் பேசி விவரத்தைத் தெரிந்துகொண்டு மனத்தை மாற்றி ஊருக்கு அனுப்பிவைத்தார். ஊரிலும் அதிக நாட்கள் தங்க இயலாமல் மட்டாஞ்சேரிக்குச் சென்று தன் நண்பர் நடத்திய உஜ்ஜீவனம் என்னும் பத்திரிகையுடன் இணைந்து செய்திக்கட்டுரைகள் எழுதினார் பஷீர். அக்கட்டுரைகள் பயங்கரவாதத்தைத் தூண்டுபவை என்று காரணம் காட்டி அவரை கைது செய்ய காவலர்கள் தேடத் தொடங்கினார்கள். இதனால் பஷீர் தலைமறைவாகவேண்டி வந்தது. எர்ணாகுளத்திலிருந்து ரயிலேறி கண்ணனூர் சென்றார். பிறகு, கூர்க் வழியாக பெங்களூர் சென்றார். அதன்பிறகு ஒன்பதாண்டுகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலுமாக பயணம் செய்தார். நடந்தும் வாகனங்களிலும் பிச்சைக்காரர்களோடும் திரிந்தார். நாடோடிகளின் நண்பனாகவும சாமியார்களின் சீடனாகவும் உணவு விடுதிகளில் தொழிலாளியாகவும் அலுவலக குமாஸ்தாகவும் பணக்காரர்களின் விருந்தினராகவும் அலைந்துகொண்டே இருந்தார். குக்கிராமங்களும் பெருநகரங்களும் சிற்றருவிகளும் பெரும்நதிகளும் மலைகளும் விவசாய நிலங்களும் பாலைவனங்களும் என எல்லா இடங்களிலும் அலைந்தார். கப்பலில் ஸ்டோர் கீப்பராக வேலை கிடைத்ததால் பம்பாயிலிருந்து ஏடன்வழியாக செங்கடலில் ஜித்வரைக்கும் பயணம் செய்தார். பிறகு கராச்சி, கோவா, அஜ்மீர், காசி, ஜம்மு, காஷ்மீர் என எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தார். கைரேகை, மேஜிக், ஹிப்னாடிசம் என பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். கடைசியில் மனிதர்கள் எல்லா இடங்களிலும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என்று கண்டறிந்தார். மொழிக்கும் வேடத்துக்கும் மட்டுமே வேறுபாடு என்பதை அறிந்தார். இறுதியில் எர்ணாகுளம் வந்து சேர்ந்தார். அங்கே பத்மநாப பை என்பவரை ஆசிரியராகக் கொண்ட ஜெயகேசரி என்னும் பத்திரிகையில் வேலை கேட்டுச் சென்றார். வேலை இல்லையென்று சொன்ன பை கதை எதையாவது எழுதிக்கொண்டு வந்து தந்தால் பணம் கொடுப்பதாகச் சொன்னார். அதைக் கேட்டு சாலையோரக் குழாயில் தண்ணீர் அடித்துப் பிடிக்க வரும் எளிய பெண்ணொருத்தியைப்பற்றிய கதையொன்றை “என் தங்கம்” என்கிற தலைப்பில் எழுதிக்கொண்டுபோய் தந்தார் பஷீர். அதுவே பஷீர் எழுதிய முதல் சிறுகதை. தன்னை ஒரு எழுத்தாளனாக உணர்ந்த பிறகு, பஷீர் மற்ற எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது தற்செயலாக தீபம் என்கிற பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக குற்றம் சுமத்தப்பட்டு திருவிதாங்கூர் அரசால் மற்றொரு முறை அவர் சிறைவாசம் அனுபவிக்கநேர்ந்தது.

தன் பயணங்களிடையே பார்த்த மனிதர்களையே பெரும்பாலும் தன் கதைகளில் உலவவிட்டார் பஷீர். தந்தையின் கொடையாகப் பெற்ற கனவுநிறைந்த அவர் மனத்தை பயணஅனுபவங்கள் மேலும்மேலும் செம்மைப்படுத்தின. மலையாளத்தில் பெரிய பெயரும் பெருமையும் வாய்ந்த எழுத்தாளராக பஷீர் தன்னை நிறுவிக்கொண்டபிறகுதான் அவருடைய திருமணம் நடந்தது. அப்போது முன்வழுக்கையுடன் நடுவயதைக் கடந்த தோற்றம் வந்துவிட்டது. கோழிக்கோடு கேரள சாகித்திய அகாதெமியின் கலைவிழாவில் பங்கெடுத்துக்கொள்வதற்காக தற்செயலாகச் சென்ற பஷீர் நண்பர்களின் அன்புத்தொல்லையால் செறுவண்ணூரில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரான கோயக்குட்டி மாஸ்டரின் மகளுடைய படத்தைப் பார்த்து திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். தனக்கு வயதாகிவிட்டது என்பதையும் தன் தலை வழுக்கையாக இருப்பதையும் பெண்ணிடம் முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும் என்பது மட்டுமே அவர் விதித்த ஒரே நிபந்தனை. அதன்படியே விஷயம் பெண்வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட்டு பெண்ணின் சம்மதத்தோடு திருமணம் எளியமுறையில் நடைபெற்றது.

இளம்பருவத்துத் தோழி – நாவலின் கையெழுத்துப் பிரதியை பத்தாண்டுகளுக்கும் மேலாக தன்வசமே பஷீர் வைத்திருந்ததாக ஒரு குறிப்பு நூலில் உள்ளது. கிட்டத்தட்ட ஐந்நூறு பக்கங்களுக்கும் மேலாக எழுதிய நாவலை ஏழுமுறைக்கும் மேலாக அதைத் திருத்தித்திருத்தி எழுதி எழுபது பக்கங்களாகக் குறைத்தார் பஷீர். ஓர் எழுத்தாளர் என்கிற நிலையில் தன் பிரதிகளை சலிக்காமல் சரிப்படுத்துவில் ஆர்வம் செலுத்துகிற பஷீரை, இலக்கியத்துக்க வெளியேயான விவாதங்கள் எதுவும் பாதித்ததில்லை. அதனால்தான் , எந்தவொரு விபரீதமான சுற்றுச்சூழல் நிலைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ள அவரால் முடிந்தது எனலாம்.

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, பாத்துமாவுடைய ஆடு, மதிலுகள், சப்தங்கள், காதலனின் டைரி, அனர்க நிமிஷம், அம்மா, ஒரு மனிதன், நிலாவைப் பார்க்கும்போது, தடவுக்காரன் ஆகிய பல நாவல்களும் சிறுகதைகளும் உருவான பின்னணியைப்பற்றிய தகவல்கள் நூல்முழுதும் அங்கங்கே சுவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பஷீர் தன் படைப்புகளில் பயன்படுத்தக்கூடிய மலையாளமொழி பேச்சுமொழிக்கு அருகில் உள்ள ஒன்று. பேச்சின் லயத்தையும் சுழலையும் அப்படியே கொண்டுவரும் வலிமை அம்மொழிக்கு உண்டு. தோற்றத்துக்கு எளிமையாக இருந்தாலும் பஷீரை மொழிபெயர்ப்பது மிகப்பெரிய சவால் என்றும் குறிப்பிடப்படுகிறது.

வளரும் தலைமுறையினருக்காக தன் மொழியின் மிகச்சிறந்த ஆளுமையான பஷீரைப்பற்றிய முக்கியமான குறிப்புகளை முன்வைப்பதற்காக எழுதப்பட்ட வரலாற்றுக்கையேடு என்று இந்த நூலைச் சொல்லலாம். குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பால் தமிழ்வாசகர்களும் பஷீரைப்பற்றித் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அவ்வகையில் குறிஞ்சிவேலனுக்குத் தமிழ்வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

(வைக்கம் முகம்மது பஷீர்- காலம் முழுதும் கலை -மலையாளம்: இ.எம்.அஷ்ரப். தமிழில் குறிஞ்சிவேலன். வெளியீடு-கிழக்கு பதிப்பகம்33/15, இரண்டாவது தளம், எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. விலை.ரூ75)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்