ஜெயந்தி சங்கர்
க்வாலலம்பூர் நகர மையத்தை (Kaula Lumpur ஸிடி ஸெண்டர்) அடைய ‘எல் ஆர் டா ‘ அன்றழைக்கப்படும் விரைவுரயிலில் போகலாம். அங்கிருந்து நடக்கும் தூரத்தில் ‘பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் ‘ . கட்டடத்திற்கு வெளியில் ஒரு பூங்கா இருக்கிறது. அங்கு மெதுவோட்டத்தடம் (jogging track), ஒளியூட்டப்பட்ட ஒரு நீரூற்று, குளம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல் இருக்கின்றன. திங்கள் தவிர மற்றநாட்களில் காலை 8.30 மணியிலிருந்து இலவச நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்படுகின்றன. 1300 டிக்கெட்டுகள் வரை கொடுக்கிறார்கள். 41வது மாடிக்குமேலே போகப் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வான்பாலத்திலிருந்து பார்த்தால், பள்ளிவாசல்கள், உயர்ரக விடுதிகள் போன்றவற்றைக் காண முடியும். வான்பாலத்தில் ஒரே நேரத்தில் அதிகபேர் போகாதிருக்க நேரக்கட்டுப்பாடு இருக்கிறது. இருப்பினும், நன்றாகப் பார்த்து ரசிக்கும் நேரம் நிச்சயம் நமக்குக் கிடைத்தேவிடுகிறது.
க்வாலலம்பூரை தலைநகராகவும், கலாசாரத் தலைமையகமாகவும், வணிக மையமாகவும் உலகுக்கு அறிவிக்கும் ஓர் உயர்ந்த கட்டமைப்புடைய கட்டடத்தைத்தான் அர்ஜெண்டானக் கட்டடக்கலை வல்லுனர் செஸர் பெல்லியிடம் மலேசிய அரசாங்கமும் பெட்ரோநாஸ் நிறுவனமும் வேண்டினர். வல்லுனர் பணிபுரிவது ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கீழ். சிகாகோவின் ‘சியர்ஸ் டவரை ‘விட உயரமாக இருக்கவேண்டும் என்ற நோக்கங்கள் எதுவுமே யாருக்கும் அப்போது இருக்கவில்லை. ஆனால், திட்டமிட்டு வரைபடம் தயாரித்த செஸர் பெல்லியே எதிர்பாராத அளவில் கட்டுமானத்தில் தனித்துவத்தையும் ‘உலகின் ஆகஅதிக உயரமான ‘ கட்டடம் என்றபெருமையும் ‘பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் ‘ 1996 ஏப்ரல் 15 அன்றே பெற்றுவிட்டது.
இதன் வடிவமைப்பை திட்டமிட்டு வரைபடமாகக் கொடுக்க 1991 ஆம் ஆண்டு ஜூலையில் 8 கட்டுமான நிறுவனங்களிடம் கேட்கப்பட்டது. அது அனைத்துலக கட்டுமானவடிவமைப்புப் போட்டியாகவே உருவெடுத்தது. தனித்தவம் வாய்ந்த க்வாலலம்பூர் நகரின் வாயிலாக தோன்றக்கூடிய நவீன கலைநயத்தோடு கூடிய கட்டட அமைப்பையே எதிர்பார்த்தனர். மலேசியாவின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப் பிரதிபலிப்பதாகவும் வரும்காலத்தில் மலேசிய அடையாளத்தோடு க்வாலலம்பூரின் சின்னமாகவே திகழும் என்று செஸர் பெல்லி அப்போதே நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்.
இரண்டு கோபுரத்திற்கும் தனித்தனி கட்டுமான நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருகுழுக்களுக்குமே 300 மீட்டருக்குமேல் உயரக்கட்டடவேலையில் முன் அனுபவம் இல்லை. ஆரோக்கியமான போட்டியுடன் திறம்பட உழைத்திருக்கின்றனர். நினைத்த செலவில் குறித்த நேரத்தில் முடிக்கவேண்டிய சவால் இருந்தது. 37 மாதங்கள் ஆயிரக்கணக்கானோரின் கடுமையான உழைப்பில் நினைத்ததைவிடச் சீக்கிரமே கட்டுமானப்பணிகள் முடிந்திருக்கின்றன.
அஸ்திவாரத்திற்கு நிலத்தைத் தோண்டும் பணி 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதுவரையில் மலேசியாவில் பயன்படுத்தாத முறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. தோண்டுவதற்கு பைலிங்குடன் ராஃப்ட்டிங்க்கையும் இணைத்துச் செயல்பட்டனர். ஒவ்வொரு கோபுரத்தின் கீழும் 32,550 டன் எடையுள்ள கிரேட் 60 ஜல்லிக்கலவை (காங்கிரீட் ) இடப்பட்டுள்ளது. 60-115 மீட்டர் நீளங்களில் 104 பாரெட் பைல்களும் 4.5 மீட்டர் தடிமனுள்ள ராஃப்டும் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மாத இடைவெளியில் மார்ச் 1994 முதல் கோபுரத்திற்கும் அதனை அடுத்து இரண்டாவது கோபுரத்திற்கும் அஸ்திவாரப்பணிகள் தொடங்கியது. 300,000 மெட்ரிக் டன் எடையுள்ள கோபுரத்தைத் தாங்கும்படி 21 மீட்டர் ஆழமுள்ள அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. 75 அடி நீளமும் 75 அடி அகலமும் உள்ள அஸ்திவாரத் தூண்களும் உபயோகிக்கப் பட்டுள்ளன. அஸ்திவாரப்பணிக்கு மட்டுமே ஒருவருடம் எடுத்தது.
1998 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட 1,483 அடி உயரம் கொண்ட ‘பெட்ரோநாஸ் ‘ கோபுரங்களைக் கட்ட 36,910 டன் இரும்பு (ஸ்டால்) தேவைப்பட்டது. இது 3000 யானைகளைவிட அதிக எடை ! இந்த இரட்டைக்கோபுரத்தில் இருக்கும் 32,000 ஜன்னல்களை ஒருமுறை துடைத்துச் சுத்தம் செய்யவே ஒரு மாதமெடுக்கிறதாம். 1.6 பில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தப் உலகப்பிரசித்திபெற்ற இரட்டைக்கோபுரம் ‘எண்ட்ராப்மெண்ட் ‘ என்ற படத்தில் வந்திருக்கிறது. 14,000-22,000 சதுரஅடி ஆபீஸ் இடம் ஒவ்வொரு தளத்திலும் உள்ளது. இது கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலப்பரப்பில் அடங்கும் பரப்பளவு ஆகும்.
சாதாரணமாக 30 அல்லது 40 கிரேட் ஜல்லிக்கலவைதான் கட்டடங்களுக்கு உபயோகிக்கப்படும். ஆனால், மெலிந்த அதே சமயம் உயரமான உருவம் கொண்ட இக்கட்டடத்தைக் கட்ட பெரும்பாலும் உயருறுதிகொண்ட உயர் ரகமான 80 கிரேட் ஜல்லிக்கலவையை (காங்கிரீட் ) உபயோகித்துள்ளனர். முக்கிய ஜல்லிக்கலவைச் சுவரை எழுப்பியபிறகு 16 அடுக்குக் கம்பி மற்றும் பலகை (ஸ்லாபுகள்) அமைக்கப்பட்டு, பிறகு தரை மற்றும் மாடிப்படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.
கட்டடக்கலைக்கே ஓர் அதிசயமான இந்த இரட்டைக் கோபுரக்கட்டடங்கள், எட்டுமூலை கொண்ட நட்சத்திர அமைப்பைக் கொண்டுள்ளன. இரண்டு சதுரங்கள் ஒன்றன்மீது ஒன்று வைத்தால் வருமல்லவா அத்தகைய எட்டுமூலை நட்சத்திரம் ! இது இஸ்லாமிய கட்டமைப்பு வகையில் வருகிறது. நட்சத்திரவடிவம் கட்டடத்தின் உயரம் வரை தொடர்கிறது. இது பாரம்பரிய மலேசிய இஸ்லாமிய வடிவத்திலிருந்து எழுந்த யோசனை. உறுதியையும் நளினத்தையும் பிரதிபலிக்கும் வகையில், இஸ்லாமிய வாஸ்த்துமுறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரத்தின் ஒரு முனை கூர்மையாகவும், அடுத்தமுனை மழுங்கலகவும், அதற்கடுத்தமுனை மறுபடியும் கூர்மையாக என்று மாற்றிமாற்றியமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததுமே வண்ண அலங்கார விளக்குகளுடன் இந்த புதுவிதவடிவமும் கூடத்தின் தரை மற்றும் சுவர்களில் தெரியும்.
88 தளங்களையுடைய இந்த இரட்டைக்கோபுரம் 42வது தளத்தில் இடையில் ஒரு பாலத்தைக் கொண்டிருக்கிறது. இரட்டைத் தளங்களைக் கொண்ட இந்தப்பாலம் 192 அடி நீளம் கொண்டது. இது இரண்டு கட்டடங்களுக்கிடையே மக்களுக்குப் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. கட்டடங்களில் இருக்கும் இரண்டு வானம்பார்த்த மொட்டைமாடிகளை இணைக்கிறது. நகருக்குச் செல்லும் வாயிலைப்போன்ற தோற்றம் வேறு ! 493 பாகங்கள் கொண்ட இந்தப்பாலம் கொரியநாட்டில் சாம்சங்க் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. முழுவதும் பொருத்திச்சரிபார்த்து, பின்னர் மீண்டும் பாகங்கள் கழற்றப்பட்டு கப்பலில் க்வாலலம்பூருக்கு அனுப்பப்பட்டது.
தயாராகக் கட்டிமுடித்த நிலையில் இந்த வான்பாலம் கொரியநாட்டிலிருந்து 1995 மேமாதம் கட்டடத்தளத்தை அடைந்தது. அதே வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அதனை உயரத் தூக்கும் பணி தொடங்கியது. இத்தகைய பாலங்கள் பற்றிய ஐம்பதாண்டு ஆய்வறிக்கைகளில் காணப்படும் எடைதாங்கும் திறன், காற்று போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஒருவருடகாலம் அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் பலவிதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காகவே VSL ஹெவி லிஃப்டிங்க் என்னும் தேர்ந்த நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பாலத்தை 41வது மாடிக்குத்தூக்கிப் பொருத்தும் பணியையும் மேற்கொண்டது.
இரட்சத பாரந்தூக்கியின் (கிரேன்) உதவியால் மேலேதூக்கி உரிய இடத்திற்குக்கொண்டுபோனதும் கண்ட்ரோல் கம்பிவடத்தின் (கேபில் -cable) உதவியோடு 29 வது மாடியில் இருக்கும் பேரிங்குகளில் பொருத்தப்பட்டது. மூன்றுநாட்களில் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது. 41வது மாடியில் இருக்கும் 750 டன் எடைகொண்ட இந்தப் பாலத்தைத்தாங்குவதற்கு 29வது மாடிகளில் இரண்டு கால்கள் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலும் 42.6 மீட்டர் நீளமும் 60 டன் எடையும் கொண்டவை. இந்தக்கால்கள் தங்கள் இருமுனைகளிலும் பால்பேரிங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று நெருங்கியும் விலகியும் அசைந்துகொடுத்து எடையைத் தாங்குகிறது. வான்பாலத்திலிருந்து கீழேபார்ப்பது புத்தம்புது அனுபவம். அங்கிருந்து கட்டடத்தைப்பார்த்தால், அது வெள்ளிக் கோபுரமாய் மின்னுகிறது. புகைப்படப்பிரியர்கள் விதவிதமாகச்சுட்டுத் தள்ளலாம்.
73 வது தளம் வரை வடிவத்திலும் தளத்தின் தரத்திலும் மாற்றமே இல்லை. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுவரை கட்டுமானப்பணியில் பெரியசவால்கள் இருக்கவில்லை. அதன்பிறகுதான் அளவு குறைந்துகொண்டே வரும். நிழலுக்கென்று கட்டடத்தின் வெளிச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் நிழற்சட்டங்கள் (சன் ஷேட்கள்) வெள்ளிநாடா (ரிப்பன்) கட்டிய அழகான தோற்றத்தைக்கொடுக்கின்றன. 1994ல் தொடங்கிய பூச்சுப்பணிகளின் போதுதான் 83,500 சதுரமீட்டர் இரும்புத் (ஸ்டெயின்லெஸ் ஸ்டால்) தகடுகள் மற்றும் 55,000 சதுரமீட்டர் கண்ணாடிகள் பயன்படுத்தி செஸர் பெல்லியின் கற்பனையில் உதித்த ‘சூரிய ஒளியில் மின்னும் வைரமாக ‘க் கட்டடத்தை உருவாக்கியுள்ளனர்.
உச்சி கோபுரத்தைப்பொருத்தும் வேலையைத்தவிர மீதிவேலைகளெல்லாம் பிப்ரவரி 1996ல் முடிந்தது. அதன்பிறகு இரண்டு கட்டடங்களுக்கும் ஒருமாதத்தில் கோபுரமும் பொருத்தப்பட்டு, பூச்சுவேலை தொடங்கியது. 1996 ஜூனில் அது நிறைவுற்றது. எண்களிடப்பட்ட 24 பகுதிகள் இரட்சத பாரந்தூக்கியின்(கிரேன்) மூலம் ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டபிறகு வெவ்வேறு அளவிலான 14 வளையங்களை ஏற்றிக் கடைசியில் அலைவாங்கியையும் (ஆண்டெனா) ஏற்றிப் பொருத்தியுள்ளனர். உச்சிக்கோபுரம் செஸர் பெல்லியின் கற்பனையின் அடிப்பையில் மின்னும் வெள்ளி வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதன்மேல் விழும் ஒளி நேர்கோட்டில் பிரதிபலிக்கும். இது கட்டடங்களை இன்னும் அதிக உயரமாகக்காட்டுகிறது.
28 ஆகஸ்ட் 1999 அன்றுதான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் கோலாகலமான விழாவாக அது அமைந்தது. நாலுகால்ப் பாய்ச்சலில் இருந்த நாட்டின் பொருளியல் வளர்ச்சியையும், அடுத்த ஆயிரத்தில் நாடு சாதிக்கவிருக்கும் இலக்குகளையும் பிரதிபலிக்கும் படியிருந்தது இரட்டைக்கோபுரம். ஆயிரம் வெளிநாட்டு விருந்தினர்கள் கூடியிருந்தனர். பலநிலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் ஜலான் அம்பங்க் மற்றும் ஜலான் பி.ராம்லி ஆகிய சாலைகளில் திரண்டனர். மேலே அண்ணாந்து பார்த்ததில் வந்த கழுத்துவலியையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர். கோவில் கும்பாபிஷேகவிழாவைப்போலவே இங்கும் கோபுர வான்பாலத்தில்தானே முக்கியக் கோலாகலம். அங்குதான் லேசர் ஒளிக்கதிர்களால் ஆன அலங்காரங்கள் வேறு. பாலத்திலிருந்து பார்த்தால், க்வாலலம்பூரே கண்முன் விரிகிறது. சிறிய அளவில் தலைகள் மட்டுமே தெரிகின்றன. இரவிலோ மின்விளக்குகளின் சிதறல்களோடு நகரம் காணக் கண்கொள்ளாக்காட்சி ! 2001 செப்டம்பர் 11 வாக்கில் பாதுகாப்பிற்காகக் கொஞ்சகாலம் பொதுமக்களின் பார்வைக்கு மூடிவைக்கப்பட்டிருந்தது.
முன்னாள் பிரதமர் டத்தோசிரி டாக்டர். மஹாதிர் மொஹமத் கட்டடத்தைத் திறந்துவைத்தார். வேளாண்மையையும், டின் சுரங்கங்களையும், ரப்பர்தோட்டங்களையுமே நம்பியிருந்த நாடு கடந்துவந்தபாதையையும் அதன் பொதுவளர்ச்சியையும் தொழில்வளர்ச்சியையும் பிரதிபலிக்கும்வகையில் தேசியதினத்தன்று திறந்துவைத்தார். ‘A Vision Realized ‘ என்ற ஐந்து நிமிட ஒலிஒளிகளைக்காட்சி நாட்டின் பெருமைகளை நினைவூட்டியது. இருகரங்கள் கோர்த்ததுபோன்ற மின்விளக்காலான சிற்பம் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. முக்கிய மூன்று இனங்களான மலாய், சீன, இந்திய இனங்களைக் குறிக்கும்வகையில் மூன்று துடுப்புகள் போன்ற வடிவங்கள் அதிலுள்ளன. ஒரு மின்விளக்கை அதில் பொருத்தி கட்டடத்தைத் திறந்தார் பிரதமர். இராட்சதத் திரையில் பிரதமரின் கையொப்பம் மக்களுக்குக் காட்டப்பட்டது. விழாவிற்காகவே புகழ்பெற்ற மலாய் கவிஞர் ஏ. சமாட் சையத் எழுதிய கவிதை பெட்ரோநாஸ் ஊழியர் ஒருவரால் வாசிக்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகளின் ஆடல்பாடலுடன் விழா களைகட்டியது. தேசபக்திப் பாடல்களும் பாடப்பட்டன.
மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக நம்பப்படும் இந்த உலக அதிசயத்தின் உரிமையாளர் க்வாலலம்பூர் ஸிடி ஹோல்டிங்க்ஸ் செண்டிரியன் பெர்ஹாட் என்னும் நிறுவனம். இரட்டைக்கோபுரத்தின் பெரும்பகுதியை பெட்ரோநாஸ் என்னும் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவலகங்கள் நிறைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் மட்டுமே மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சில வர்த்தகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பிரபல மைக்ரோசஃப்ட் நிறுவனம் இரண்டாவது கட்டடத்தின் 30 வது மாடியில் இயங்குகிறது.
864 இருக்கைகளைக்கொண்ட பெரிய அரங்கம், அங்காடிக்கடைகள், பெட்ரோநாஸ் அறிவியல்கூடம், ஓவியக் காட்சிக்கூடம் போன்ற பல்வேறு இடங்களையும் கண்டுகளிக்கலாம். கட்டடம் கட்டப்பட்டுள்ள பரப்பளவு 341,760 சதுர அடிகள். ஆனால், உள்ளே 88 தளத்திலும் சேர்த்து மொத்தப்பரப்பளவு எட்டு மில்லியம் சதுர அடிகள். இந்தக்கட்டடத்தில் ஒரு பெட்ரோலியம் அருங்காட்சியகம், ஒரு பள்ளிவாசல், நூலகம், ஒரு இசைக் (சிம்ஃபனி) கூடம், 4500 கார்களை நிறுத்தக்கூடிய பாதாள வாகனநிறுத்துமிடம் ஆகியவையுமுண்டு. இங்கு இருக்கும் இசைக்கூடத்தில் ‘க்ளைஸ் பைப் ஆர்கன் ‘ என்னும் இசைக்கருவியிருக்கிறது. இது 4740 குழல்களையுடையது.
சிகாகோவின் ‘சியர்ஸ் டவரை ‘விட 33 அடிகள் உயரம் அதிகம் கொண்டிருக்கிறது இந்த இரட்டைக்கோபுரம். ஆனால், இதிலும் ஒரு சர்ச்சையுண்டு. 88 வது தளத்திற்குப்பிறகு உருண்டைவடிவ உச்சிகோபுரம் மற்றும் அலைவாங்கி (ஆண்டெனா) இருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டால்தான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் உலகின் மிக உயரமான கட்டடமாகும். ஆனால், உபயோகிக்கக்கூடிய தளரீதியில் பார்த்தால், அதற்கு அந்தப்பெருமை கிடைக்காது என்பதே இவர்கள் வாதம். சிகாகோவின் ‘சியர்ஸ் டவரின் ‘ உபயோகிக்கப்படும் தளம் பெட்ரோநாஸின் உபயோகிப்படும் தளத்தைவிட உயரம் அதிகம் என்கிறார்கள் இவர்கள். ஆனால், இதே சர்ச்சையாளர்கள் இந்த இரட்டைக்கோபுரத்தின் கட்டுமானம் மற்றும் அழகை மனந்திறந்து பாராட்டுகிறார்கள்.
குறைந்த இடத்தில் நிறைந்த சேவையாற்றும் நோக்கில் இந்தக் கட்டடத்திலிருக்கும் 76 மின்தூக்கிகளில் 58 இரட்டைத்தள மின்தூக்கிகள். ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு மின்தூக்கிப் பெட்டிகள் இருக்கும். ஒவ்வொன்றும் 26 ஆட்களை ஏற்றிச்செல்லும். கிட்டத்தட்ட 3.5 முதல் 7 வினாடிகளில் மேல்தளத்தையடையக் கூடியவை இந்த மின்தூக்கிகள்.
அழைபேசி (இண்டர்காம்), எச்சரிக்கை மணி கொண்ட பாதுகாப்புவலை(செக்யூரி அலார்ம்), மூடிய மின்சுற்று(க்ளோஸ் சர்க்யூட்) தொலைக்காட்சிவழிப் பாதுகாப்பு, நிழற்படங்களை அடையாளம் காணக்கூடிய சாதனங்கள் போன்றவற்றைக்கொண்ட குறும்பரப்பு வலையமைப்பு (LAN-local area network) எனப்படும் அதிநவீனப் பாதுகாப்பு வசதிகள் இரட்டைக்கோபுரத்தில் உண்டு. இது தவிர, குளிசாதன இயக்கக் கட்டுப்பாடு, ஒளிக்கட்டுப்பாடு, தீச்சம்பவங்கள் போன்றவற்றிலிருந்து மக்கள் தப்பிக்க உயிர்ப்பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவையும் சிறந்தமுறையில் செய்யப்பட்டுள்ளன. புகையைக் கட்டுப் படுத்தும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு தளம் தீயினால் பாதிக்கப்பட்டால், மற்ற தளங்களுக்குப் பரவிவிடாமல் தகுந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தி தீ பரவாது தடுக்கப்படும்.
ஏர்கண்டிஷனுக்கு மட்டும் 30,000 டன் குளிர்விக்கப்பட்ட நீர் உபயோகப்படுத்துகிறார்கள். நீர்மறுபயனீட்டுமுறை கையாளப்படுகிறது. இதற்கு இயற்கை எரிவாயுகொண்டு இயக்கும் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தளவாரியாக இந்த குளிர்சாதனத்தை இயக்குவதால், இயந்திரக் கோளாறுகளோ, மின்தடையோ ஏற்பட்டாலும் துல்லியமாகக்கண்டறிந்து சீர்செய்யவும் பழுதுபார்க்கவும் முடியும். மொத்தக் கட்டடமே பாதிப்படையும் சாத்தியத்தையும் தவிர்க்கமுடிகிறது. மின் இணைப்புகள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்றாற்போலவே வடிவமைத்திருக்கிறார்கள். ஒளிக்காட்சிக் கருத்தரங்கு(வீடியோ கான்ஃபரன்ஸிங்க்), தொலைபேசி, மின்மடல் போன்ற எல்லா வசதிகளும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத்தின் ஆகநவீனங்கள் எல்லாவற்றையும் இங்கு காண முடியும்.
விண்ணைத்தொட நினைக்கும் மனிதனின் ஆர்வம் உலகெங்கிலும் உள்ள உயரமானபல கட்டடங்களில் தெள்ளத்தெளிவாகத் புலப்படுகின்றது. வடிவமைக்கவும் திட்டமிடவுமே பெருமுயற்சியும் கற்பனைத்திறனும் தேவை. கட்டிமுடித்துக் கண்முன்னே நிறுத்துவது என்பது மிகமிகப்பெரிய சவால். இதுவரை மனிதன் சாதிக்காத சாதனையாகியிருக்கிறது மலேசியாவின் இரட்டைக்கோபுரமான ‘பெட்ரோநாஸ் ட்வின் டவர் ‘. கட்டட அமைப்பின் ஆகப்புதிய தொழில்நுட்பங்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த நவீன அதிசயம். மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் கட்டமைப்பாக அமைந்துள்ளது. உயரமான கட்டடங்களில் ஏறிப்பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு ஒருவேளை உயரத்தினால் பெரிய ‘அனுபவம் ‘ கிடைக்காது போகலாம். ஆனால், வெயிலிலோ, மின்விளக்கிலோ பனிக்கட்டியினால் செய்யப்பட்டதுபோன்று மின்னும் இரட்டைக்கோபுரங்கள் மனதைக்கொள்ளை கொள்ளத்தவறாது.
அதிவேகவிமானம் (ஜும்போ ஜெட்), நுண்சில்லு (மைக்ரோச்சிப்), செயற்கை இருதயம் என்று அறிவியலும் தொழில் நுட்பமும் ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் உலகில் கட்டட அமைப்பில் அற்புதம் நிகழ்த்துவது மிகப்பெரும் சவாலாக இருந்தது சமீபத்தில். அந்தச் சவாலை செஸர் பெல்லியின் ‘பெட்ரோநாஸ் இரட்டைக் கோபுரம் ‘ வென்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.
அமுதசுரபி- நவம்பர்-2004
Jayanthi(Sankari)
sankari01sg@yahoo.com
- பெண்கள் சந்திப்பு மலர் – 2004 -ஒரு பறவைப் பார்வை
- எம்.எஸ் – ஒரு வரலாற்றுப் பதிவு
- நபிகள் நாயகத்தின் வாழ்வு – அன்னை ஜைனப்பின் மணம் – இறுதி நபி : சில விளக்கங்கள்
- வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு
- ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?
- ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி
- இசை அரசி எம்.எஸ்.
- ச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை
- ஓவியப்பக்கம் ஒன்பது – ரொமேர் பியர்டன் – ஓவியமும் எழுச்சியும்
- தமிழின் மறுமலர்ச்சி – 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ‘ என்ற கட்டுரையிலிருந்து…பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
- எம் எஸ் :அஞ்சலி
- வாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்
- உயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்
- அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்
- மெய்மையின் மயக்கம்-30
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 14. வன்னிராசன் கதை
- விடுபட்டவைகள் -1
- ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்
- விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்
- கடிதம் டிசம்பர் 16,2004
- ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள்
- டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்
- நடேசனின் இரு நூல்களின் வெளியீடு
- கடிதம் 16,2004
- மாந்தரென்றால்….
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -50
- அக்கரையில் ஒரு கிராமம்
- பேயும் பேயோட்டியும் சேர்ந்த கூட்டணி
- ஒரு சிறுவனின் கனவு
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!
- இறைத்தூதர்
- என்ன சொல்ல…. ?
- பிரியாதே தோழி
- நாற்காலி
- பூமியின் கவிதை
- அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1
- குருஷேத்ரம்
- கீதாஞ்சலி (8) கானம் இசைக்கும் தருணம்-மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- பெரியபுராணம் – 22
- பேன்
- பரமேசுவரி
- தெரு நாய்
- மண்ணெண்ணெய்
- தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? இப்பேரணையைக் கண்ணீரால் கரைத்தோம்! கனிவு, கவனம், கண்காணிப்பு, கட்டுப்பாடுடன் பேரணைகள் கட்டப்பட வேண்டு
- சரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
- மலேசிய மகுடம்