ஜோதிர்லதா கிரிஜா
அத்தியாயம் – 17
பங்கஜத்தை அடையாளம் தெரிந்துகொண்டவளைப் போல் வள்ளியும் நடப்பதை நிறுத்திவிட்டு அவளை உற்றுப் பார்த்தாள்.
“என்னம்மா? தெரியல்லீங்களா? நான்தாம்மா, வள்ளி. சின்னக்கொளத்துல நீங்க இருந்தப்ப, உங்க வீட்டுல அரிசி புடைக்க வருமே, சின்னக்கண்ணு, அதோட தங்கச்சிம்மா நானு. நானும் அப்பப்ப அது கூட வேலைக்கு வாரதுண்டு.. .. இப்ப நெனப்பு வந்திரிச்சா?” என்றாள் வள்ளி, சிரித்தபடி.
“ஆஆங்! இப்ப நீ சொன்னப்பறம் ஞாபகம் வந்துடுத்து. அதான் எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு முழிச்சேன். உங்கக்கா சின்னக்கண்ணு எப்படி இருக்கா? சின்னக்கொளத்துலதான் இருக்காளா?”
“ஆமாங்கம்மா. அப்பப்ப வரும். நீங்க எங்கிட்டு இங்க வந்தீங்க?”
“இங்க தெரிஞ்சவாளாத்துல ஒரு கல்யாணம். அதுக்கு வேலை செய்யப் போயிண்டிருக்கேன்.”
சின்னக்குளத்தில் இருக்கும் தன் கணவனைப் பற்றியும் அவன் குடும்பத்தினரைப் பற்றியும் விசாரிக்கப் பங்கஜத்தின் மனம் துடித்தது. அந்த ஆவலை அவளால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.
“சின்னக்கண்ணு இன்னும் அந்த வீட்டில வேலை செய்யறாளா? தெரியுமா?”
“செய்யுதும்மா. முன்ன, அப்பப்ப போயிக்கிட்டிருந்தவ இப்பல்லாம் நெதமுமே போய் வர்றாளாம். அந்தப் புது மருமவ உங்கள மாதிரி வீட்டு வேலையெல்லாம் செய்யாதாம். அதனால சின்னக்கண்ணுவ மாசச் சம்பளத்துக்கே வேலைக்கு அமத்திட்டாங்க உங்க மாமியா வீட்டில. .. .. அப்புறம்.. .. நீங்க எப்பிடிம்மா இருக்கீங்க?”
“ஏதோ ஓடிண்டிருக்கு.. .. அது இருக்கட்டும், வேற ஏதாவது விசேஷம் உண்டா? நோக்குத் தெரியுமா, வள்ளி?”
“நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்குப் புரியுதும்மா. உங்க சக்களத்தியா வவுறு தொறக்கவே இல்லீங்களாம். நல்லவங்க வவுத்தெரிச்சலக் கொட்டிக்கிட்டா, அப்பிடித்தான் நடக்கும். உங்களுக்காச்சும் மூணு பொட்டப் பிள்ளைங்க பொறந்திச்சுங்க. அந்தம்மாவுக்கு ஒரு பூச்சி புளுக்கூட வரல்லேம்மா! வேணும் நல்லா அவங்களுக்கு!”
“அப்படி யெல்லாம் சொல்லாதே, வள்ளி. நான் போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ, இப்ப கெடந்து அனுபவிக்கிறேன். அதுக்கு மத்தவங்கள நாம எதுக்குக் குத்தம் சொல்லணும், வள்ளி?”
“போங்கம்மா! போன சென்மம் நமக்கு நெனப்பா இருக்குது? இப்படிச் சொல்லிச் சொல்லியே போட்டச்சிங்க தங்க தலையில தானே மண்ண அள்ளிப் போட்டுக்குதுங்க!”
“நோக்குப் புருஷன் இல்லேல்லே?”
“ஆமாங்கம்மா. செத்துட்டாரு. நல்லவரு. நல்லவங்கல்லாம் சின்ன வயசுல செத்துட்றாங்க!”
“கொழந்தைங்க உண்டா?”
“இருக்குதும்மா – ஒரே ஒரு பொண்ணு. இப்பதான் பெரிய பொண்ணாச்சு. அதைக் கட்டிக் குடுக்கிற வரையில எம் மடியில நெருப்புத்தான்!”
“ஒண்ணும் கவலைப்படாதே, வள்ளி. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.. .. அப்ப, நான் வரட்டுமா?”
“சரிம்மா. .. இந்த ஊர்லதான் வாசமா?”
“இல்லே, வள்ளி. நான் செங்கல்பாளையத்துல எங்க தோப்பனாரோட இருந்துண்டிருக்கேன். சரி, வறேன்.. ..”
பாகீரதியும் பங்கஜமும் நடக்கலானார்கள்.
“உங்க மாமியாராத்துல அவளோட தங்கை வேலை செஞ்சாளாக்கும்?”
“ஆமா, மாமி. “
“பாத்தியா, பங்கஜம்? நோக்கு வரிசையாப் பொண் கொழந்தைகளாவே பொறந்துண்டிருக்குன்னு உன்னைத் தள்ளி வெச்சான் உன் ஆம்படையான். இப்ப என்னாச்சு? ஒரு பொண் கொழந்தைக்குக் கூட வக்கில்லாம இப்ப நிக்கறான்! தெய்வம் நின்னு கேக்கும்டியம்மா, நின்னு கேக்கும்! பெரியவா சும்மாச் சொல்லல்லே.”
“போட்டும், மாமி. நம்ம வாயால நாம யாரையும் சபிக்க வேண்டாம். நான் அவாளை யெல்லாம் பத்தி நெனைக்கிறதையே விட்டுட்டேன். .. .. அப்புறம், மாமி! .. .. உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.”
“சொல்லு.”
“அந்தத் தங்கம்மா மாமியோட பிள்ளை நேத்து மறுபடியும் எங்காத்துக்கு வந்திருந்தார். எங்கப்பா கிட்ட பேசிண்டிருந்துட்டுப் போனார். அவாத்துக்கு சமையல் வேலைக்கு என்னைக் கூப்பிட்றார். பத்மநாபய்யராத்துக் கல்யாணம் முடிஞ்சதும் என்னை அனுப்பி வைக்கிறதா அப்பா அவர் கிட்ட சொல்லிட்டார்.”
பாகீரதி சட்டென்று திரும்பிப் பங்கஜத்தை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள்: “அன்னைக்கு அந்தப் பிள்ளையாண்டான் வந்திருந்தப்ப அந்தப் பேச்சு நடக்கல்லையா?”
“இல்லே, மாமி. நேத்து வந்தப்ப தான் சொன்னாராம். ஏம்மாமி? அந்தப் பிள்ளை வருஷத்துல அஞ்சாறு மாசம் மெட்றாஸ்லதான் இருப்பாராமே? அப்படியா?”
“ஆமா.”
“அப்பா ஒடனே சரின்னுட்டார். நான் தெனமும் இங்கேர்ந்து நடந்தெல்லாம் போயிண்டிருக்க வேண்டாமாம். அவாத்தோடவே இருந்துக்கலாம்னுட்டாராம். எங்கப்பா அடிக்கடி வந்து என்னைப் பாத்துட்டுப் போலாம்னிருக்காராம்.. ..நீங்க என்ன சொல்றேள், மாமி?”
பங்கஜம் தலையைத் திருப்பி இவ்வாறு கேட்டதுமே, பாகீரதி தன் பார்வையின் கூர்மையைக் குறைத்துக்கொண்டுவிட்டாள்.
“வயித்துப் பொழப்புன்னு ஒண்ணு இருக்கேடியம்மா! அங்கேயும் போய்க் கொஞ்ச நாள் இருந்து பாக்கறது. ஆனா, அந்தத் தங்கம்மா இருக்காளே, ரொம்பவே தொணப்பல்காரி. நச்சு நச்சுன்னு ஏதாவது வேலை வாங்கிண்டே இருப்பா. சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்!”
“அதுக்கென்ன மாமி பண்ண முடியும்? வயிறுன்னு ஒண்ணை வெச்சிருக்கானே பகவான்? பொறுத்துண்டு போகவேண்டீதுதான். இல்லியா?”
“ஆமாமா.”
.. .. .. வீட்டை யடைந்த வள்ளிக்கு ஒரு வியப்புக் காத்திருந்தது. சற்று நேரத்துக்கு முன்னால் அவள் யாரைப் பற்றிப் பங்கஜத்திடம் நினைவுபடுத்திப் பேசினாளோ அந்தச் சின்னக்கண்ணு அவளது குடிசை வாசலில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
“வா, வா, சின்னக்கண்ணு. இப்பதான் உன்னயப் பத்திப் பேசிக்கிட்டிருந்தேன். யாருகிட்டேன்னு உன்னால சொல்லவே முடியாது. பந்தயம் கட்டலாமா?” என்றபடி வள்ளி அவளை எதிர்கொண்டாள்.
“உம்மக பேபி உள்ளாறதான் இருக்கு. நான் தான் காத்துக்காக வாசல்ல குந்திக்கிட்டேன். அது சரி, யாருகிட்ட என்னயப் பத்திப் பேசினே?”
“சின்னக்கொளம் தாசரதி அய்யாவோட பொஞ்சாதி. தள்ளி வெச்சதுக்குப் பெறகு அது தன் அப்பாரு கூட செங்கல்பளையத்துல இருக்குதாம். எங்கேயோ வேலையாப் போயிக்கிட்டிருந்திச்சு. இங்க, வத்தலப்பாளையத்துலதான். அரை மணி கூட ஆகல்லே. அந்தச் சக்களத்திப் பொம்பளைக்கி ஒரு பொட்டப்புள்ள கூடப் பொறக்கல்லேன்னு சொன்னேன்.”
“ .. .. .. .. .. “
“என்னடி, என்னமோ யோசிக்கத் தொடங்கிட்டே? நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்குறேன்?”
“ஆங்.. ..?”
“என்ன ஆச்சு உனக்கு? என்ன அப்படி ஒரு ரோசனை?”
“வள்ளி! ஓங்கிட்ட ஒரு ரகசியம் சொல்லட்டுமா? இத்தினி நாளும் எம் மனசுல போட்டு மூடி வெச்சுக்கிட்டிருந்த ரகசியம். வேற யாருக்குமே சொல்லாத ரகசியம்.”
“என்னடி சொல்றே, சின்னக்கண்ணு? என்ன ரகசியம் சொல்லப் போறே? யாரைப் பத்தினது?”
“அந்தப் பங்கஜம்மா பத்தின ரகசியம்தான்.”
“என்னடி புதிரு போடுறே?”
“எத்தினி நாளா என்னய உறுத்திக்கிட்டிருக்குது தெரியுமா, அந்த ரகசியம்? உள்ள போய் உக்காந்து பேசலாம், வா. உம் மக கூட பக்கத்துல இருக்க வேணாம்.”
“அப்பிடி என்ன ரகசியம்டி சொல்லப் போறே?” என்றவாறு வள்ளி அடக்க முடியாத ஆவலுடன் சின்னக்கண்ணுவோடு தன் குடிசைக்குள் நுழைந்தாள்.
இருவரையும் பார்த்ததும் வள்ளியின் மகள் பேபி எழுந்து நின்றாள்: “பெரியம்மா வந்து அரை மணி நேரமாச்சும்மா. காத்தாட குந்திக்கிறேன்னு சொல்லிட்டு வாசப் பக்காம் போயிடிச்சு. காப்பித்தண்ணி கூடக் குடிக்கல்லே இன்னும். நீ வந்த பெறகு குடிக்கிறேன்னிடிச்சு.”
காப்பி கலக்க எழுந்து நடந்த பேபியின் முதுகுப் புறத்தைப் பார்த்தபடியே, “அப்புறம் சொல்றேன், வள்ளி. இப்ப முதக்கா எனக்குக் காப்பி வேணும்,” என்றவாறு கண்ணைக் காட்டினாள் சின்னக்கண்ணூ. புரிந்துகொண்ட வள்ளி அவள் தானாக அந்தப் பேச்சை எடுக்காத வரையில் எதுவும் கேட்கக்கூடா தென்னும் முடிவுக்கு வந்தாள்.
சற்றுப் பொறுத்து மூவரும் காப்பி குடித்தார்கள்.
“அம்மா! பெரியம்மா இந்த வளவி, ரிப்பன், பவுடரு எல்லாம் வாங்கியாந்திச்சு.”
“ஒனக்கென்னடி? யோகந்தான். எனக்கு இப்பிடி ஒரு பெரியம்மா இருக்கல்லியே? .. .. சரி. உன் பெரியம்மாவும் நானும் இப்பிடி கொஞ்ச நேரம் வெளியில காலாற நடந்துட்டு வர்றோம். நீ படலை மூடித் தாப்பாப் போட்டுக்கிட்டுப் பத்திரமா யிருந்துக்க. ஒரு அரை மணியில வந்திருவோம்,” என்ற வள்ளி எழுந்து கொள்ள, சின்னக்கண்ணுவும் அவளைப் பின்தொடர்ந்தாள். பின்னாலேயே வந்த பேபி படலைச் சாத்திக்கொண்டாள்.
கொஞ்சத் தொலைவு நடந்ததன் பின்னர், “ சொல்லு, சின்னக்கண்ணு. என்ன ரகசியம் சொல்லப் போறே அந்தப் பங்கஜம்மாவைப்பத்தி?” என்று வள்ளி பொறுக்க முடியாத ஆவலுடன் வினவினாள்.
“இத்தினி நாளும் நான் எம்மனசில பொத்திப் பொத்தி வெச்சுக்கிட்டிருந்த ரகசியம். என்னய வண்டாக் கொடைஞ்சுக்கிட்டிருந்த ரகசியம்டி அது. இது வரையில் என் புருசன் கிட்ட கூடச் சொல்லாம நான் எப்பிடித்தான் அதைக் கட்டிக் காத்தேனோ, தெரியல்லே. “
“ சீக்கிரம் சொல்லுடின்னா?”
“ சொல்றேன், சொல்றேன். .. .. பங்கஜம்மாவுக்குப் பொறந்த மொத ரெண்டு கொளந்தைங்களும் செத்திருச்சில்ல?”
“ஆமா. நீ சொல்லி யிருக்கே. நல்லா நெனப்பு இருக்கு.”
“ஆனா, மூணாவதாப் பொறந்த கொளந்தை சாவல்லே, வள்ளி!”
“என்னது! சாவல்லியா! அப்படின்னா? என்னடி சொல்றே நீ?”
“ அது ஒரு பணக்கார எடத்துல சவுக்கியமா வாள்ந்துக்கிட்டு இருக்கு. .. இருக்கணும்!”
“என்னடி இது, புதிரு போடுற மாதிரிப் பேசிக்கிட்டு! முளுக் கதையையும் வெவரமாச் சொல்லுடி!”
“ சொல்றேன். மூணாவது கொளந்தை பொறந்தப்ப நான் அவங்க வீட்டுலதான் இருந்தேன். மூணாவதும் பொட்டப்புள்ளயாப் பொறந்திருச்சேன்னு மாமியாளுக்கும் மாமானாருக்கும் ஒரே எரிச்சல். ஏமாத்தம். கோவம். அதுக்கு அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? பாவம்! கடவுள் எப்படி விதிக்கிறாரோ அப்பிடித்தானே நடக்கும்? ‘மொதக் கொளந்தைங்க ரெண்டும் தானாச் செத்திடிச்சுங்க. ஆனா, இதுவும் அப்பிடிச் சாவும்னு சொல்ல முடியாது. அதனால சாவடிச்சுடலாம்’ அப்படின்னு மாமியாக்காரி முடிவு பண்ணிடிச்சு. கொளந்தை பொறந்த நாளு ராத்திரி என்னய வரச்சொல்லிச்சு. வந்த ஏங்கையில கொளந்தையைக் குடுத்து, ‘இதை ஓசைப்படாம ஆத்துல வீசிப் போட்டுடு. கெட்ட நச்சத்திரத்துல பொறந்திருக்குது. இது உசிரோட இருந்தா அப்பனுக்கு ஆவாது’ அப்படின்னிச்சு. அப்ப ஆத்துல நல்ல வெள்ளம் ஓடிக்கிட்டிருந்திச்சு. அதைக் கொன்னுடணும்னு அவங்க பேசிக்கிட்டதை நான் கேட்டுட்டதால, கெட்ட நச்சத்திரம்கிறதெல்லாம் வெறும் பொய்யின்னு புரிஞ்சுக்கிட்டேன். நான் பெரமிச்சுப் போயி நின்னேன். ‘என்னடி என்னவோ பேயறஞ்சமாதிரி முளிக்கிறே? நீங்கல்லாம் ஆடு, கோளிங்களையெல்லாம் வெட்றவங்கதானே? உன்னால முடியும். என்னாலயும் அய்யாவாலயும் முடியாது. எங்களுக்குக் கொலை செய்ய மனசு வராது’ அப்படின்னிச்சு! என்ன ஒரு சாலக்குப் பாரேன்! சரிதான்னு வாங்கிக்கிட்டேன்.”
“பங்கஜம்மாவுக்குத் தெரியாம எப்படி .. ..”
“அதுக்குத்தான் பெரசவிச்ச பெறவு ரொம்ப நேரத்துக்கு மயக்கமே தெளியல்லியே! அதனாலதான் அப்பிடி ஒரு திட்டம் போட்டுதுங்க ரெண்டுமாச் சேந்துக்கிட்டு!”
“ நீ ஏண்டி அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டே? ஒனக்கு அப்ப கலியணம் ஆயிருந்திச்சில்ல? எப்படி மனசு வந்திச்சு ஒனக்கு?”
“அட, முளுக்கக் கேட்டுட்டுப் பேசு, வள்ளி. அப்ப நீ ரெண்டுங்கெட்டான் வயசு. இல்லாட்டி ஒங்கிட்ட சொல்லியிருப்பேன்.”
“அப்ப வேணா ரெண்டுங்கெட்டான் வயசு. அதுக்குப் பெறவு மட்டும் சொன்னியா, என்ன? இத்தினி வருசங்களிச்சு இப்பதானேடி சொல்றியாம்?”
“அப்ப எனக்கும் சின்ன வயசுதானே? தவிர, ரொம்பவே அந்தம்மாவும் அய்யாவும் என்னய மெரட்டி வெச்சிருந்தாங்க. நம்ம சிண்டு அவங்க கையில இருக்குறப்ப, என்ன செய்ய முடியும்? வருசா வருசம் அரிசி பொடச்சு, நொய்யும், அரிசியும், கூலியும் தர்ற பெரிய எடமாச்சே!”
“சரி, சொல்லு.”
“ராவைக்கி அவங்க வரச் சொன்ன நேரத்துக்குப் போனேனா? கொளந்தையை ஏங்கையில குடுத்தாங்க. எடுத்துக்கிட்டு ஆத்துப் பக்கம் போனேன். வளியெல்லாம் எனக்கு அளுகை அளுகையா வந்திச்சு. ஆத்தங்கரையில போய் நின்னேன். ஆத்துலெ வீசிப் போட மனசே வராம கரையிலெயே கொஞ்ச நேரம் போல நின்னுக்கிட்டிருந்தேன். அப்ப ஒரு அய்யா அங்கிட்டு வந்தாரு. எனக்குப் பின்னால வந்த அவரை நான் கவனிக்கல்லே. கடேசியா, மனசக் கல்லாக்கிக்கிட்டு அதை நான் போடுறதுக்குக் குனிஞ்ச நேரத்துல டக்குனு அவரு ஏங்கையைப் பிடிச்சுட்டாரு. எனக்குப் பக்குனு ஆயிருச்சு. ஒடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடிச்சு.”
“அப்புறமேல்பட்டு என்ன நடந்திச்சு?”
“.. .. ‘சாமி, சாமி! இது ஏங்கொளந்தை யில்லே. பொண்ணாப் பொறந்திடிச்சு, அப்பனுக்கு ஆவாத நச்சத்திரம்னு சொல்லி உங்க சாதிக்காரங் கதான் அதை ஆத்துல போட ஏங்கிட்ட குடுத்தாங்க’ ன்னு சொல்லி அழுதேன். ‘சரி, கொளந்தையை ஏங்கிட்ட குடுத்துடு. அதை ஆத்துல போட்டாச்சுன்னு அந்தப் பாவிங்க கிட்ட சொல்லிடு’ ன்னாரு. கொளந்தையையும் பிடுங்கி வெச்சுக்கிட்டாரு.”
“அய்யமாரா?”
“ஆமா. அய்யமாருதான். நல்ல இருட்டுதான் ஆனா, கையில பல்பு வெளக்கு (torch light) வெச்சிக்கிட்டிருந்தாரு. ஒரு கையால அதைக் கொளுத்தி கொளந்தையக் காட்டச் சொல்லி நல்லாப் பாத்தாரு. ஏதாச்சும் ஒச்சம் ஊனம் இருக்குதான்னு பாக்குறதுக்கோ என்னமோ, கொழந்தையை நல்லா பொரட்டிப் பொரட்டிப் பாத்தாரு. அப்ப, அதனோட வலது தோள்பட்டையிலே – நாம மூணு புள்ளிக் கோலம் போடுவமே அது மாதிரி – மூணு புள்ளிங்க – அதாண்டி மச்சம் – இருந்திச்சு. மேல ஒண்ணு, கீழ ரெண்டு. ரொம்பவே அழுத்தமா யிருந்திச்சு மூணு மச்சமும். ‘அட! முக்கோணமா மூணு மச்சம் இருக்கே! அதிருஷ்டக்காரியாத்தான் இருக்கணும்! அதான் எங்கிட்ட வந்து சேந்துடுத்து!’ அப்படின்னுட்டு அந்தய்யா கொளந்தையைச் சேத்து அணைச்சுக்கிட்டாரு. பெறகு, இடுப்பிலேர்ந்து ரெண்டு பத்து ரூவா நோட்டை எடுத்து எனக்குக் குடுத்தாரு. ‘இத பாரும்மா. எனக்குக் கொளந்தை இல்லே. எம்பொஞ்சாதியும் நானுமா இந்த ஊருக்கு ஒரு கலியாணத்துக்கு வந்தோம். எனக்கு ராவுல குளிக்கிறது வாடிக்கை. நீச்சலும் பிடிக்கும். அதான் வந்தேன். வந்தது நல்லதாப் போச்சு. கொலை பண்ற பாவத்துலேர்ந்து நீயும் தப்பிச்சே. எங்களுக்கும் ஒரு கொளந்தை கெடைச்சுது. ஆனா, கொளந்தையும் கையுமா இப்ப நான் கலியாண வீட்டுக்குத் திரும்பிப் போக முடியாது. அதனால நீ இன்னும் ஒரு அரை மணி நேரம் இங்கேயே அந்த மரத்தடியில இரு. நான் போய் எம் பொஞ்சாதியோட வறேன். ஊருக்கு அவசரமாக் கெளம்ப வேண்டியிருக்குன்னு பொய் சொல்லிட்டு வந்துட்றேன். இங்க வர்ற வளியில தந்திச் சேவகன் கிட்டேர்ந்து ஒரு தந்தியை வாங்கினதாச் சொல்லிக்கிறேன். எங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லேன்னு தந்தி வந்ததாப் பொய் சொல்லிட்டுக் கெளம்பிடுவேன். அதனால நாங்க இந்தக் கொளந்தையைத் தூக்கிட்டுப் போனது யாருக்கும் தெரியவராது. நீயும் கொலைப்பளியிலேர்ந்து தப்பிச்சுட்டே. உனக்கும் எந்தப் பிரச்னையும் வராது’ அப்படின்னாரு. .. .. சொன்னபடியே அரை மணி களிச்சுப் பொஞ்சாதியோட வந்தாரு. அந்தம்மாவுக்குக் கொழந்தையை பாத்ததும் ஒரே சந்தோசம். தன்னோட தங்க மோதிரத்தைக் களட்டி எங்கிட்ட குடுத்தாங்க. .. .. அது இன்னமும் ஏங்கிட்ட பத்திரமா இருக்கு. .. பேபிக்குக் கலியாணத்தப்ப குடுக்கலாம்னு இருந்தேன்.. .. ..”
“கதை மாதிரியில்லே இருக்கு! அது சரி, அந்தம்மாவை இருட்டுல ஒன்னால சரியாப் பாக்க முடிஞ்சிச்சா?”
“ஓ! நல்லாவே பாக்க முடிஞ்சிச்சு. அந்தய்யா கொளந்தையை அவங்களுக்குக் காமிக்கிறதுக்காக பல்பு வெளக்கைப் பொருத்தினப்ப அவங்களயும் நல்லாவே பாக்க முடிஞ்சிச்சு. ஒருதரம்தான் பாத்தேன்னாலும், அவங்க மொகம் எம் மனசுல அப்படியே பதிஞ்சு போயிறுச்சு. ரொம்ப வருசம் ஆயிறுச்சு. ஆனாலும், அவங்க ரெண்டு பேத்தையும் இன்னைக்கும் என்னால அடையாளம் கண்டுக்க முடியும்! அந்தய்யா மூகு நுனி வலது பக்கம் லேசா வளைஞ்சிருக்கும். மோட்டு நெத்தி. நீள மூஞ்சி. காதுல கடுக்கன் போட்டிருந்தாரு. நல்ல சேப்பு. ஒசரம். அவரோட எம்பது வயசுலேயும் என்னால அவரை அடையாளம் கண்டுக்க முடியும் அப்படி ஒரு மொகம்!”
“அந்தம்மா?”
“ அவங்களையும்தான்!” என்றாள் சின்னக்கண்ணு நம்பிக்கையோடு.
தொடரும்
jothigirija@vsnl.net
- கடிதம்
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- மிஸ் இந்தியா
- கடிதம்
- சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்
- பூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்
- நூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்
- உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”
- கடிதம்
- “வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி
- கடிதம்
- கடிதம்
- பென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)
- கடிதம்
- விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
- திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1
- கரை மேல் பிறக்க வைத்தார்
- ஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்
- எதிர்மறைகள்
- ‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது?
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17
- உம்மும்மா நேசித்த ஊசிக்கிணறு
- டர்மெரின் – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)
- எடின்பரோ குறிப்புகள் – 12
- ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்
- பயங்கர மனநோயாளிகள்
- தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்
- புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3
- வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்
- இவை எழுதப்பட்ட காலங்கள்–1
- கீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பாயடி பாரதமே! பாய் !
- பெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நீங்கள் மகத்தானவர்!
- குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
- சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்
- அ வ னா ன வ ன்