மலர்மன்னன்
“இவர் கள்ளங் கபடமற்றவர்!”
இப்படிச் சொன்னவ்ர் பூமி தானத்திற்கென சர்வோதய இயக்கம் தொடங்கி, பாத யாத்திரையாகவே பாரதம் முழுவதும் பயணம் செய்த ஆசாரிய வினோபா பாவே அவர்கள். 1956 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோது, ஜூன் மாதத்தில் ஒருநாள் காஞ்சிபுரம் அருகே தம்மனூர் என்ற சிற்றூரில் சிறிய கோயில் ஒன்றில் தங்கியிருக்கையில் இவ்வாறு மனம் திறந்து, வாய் நிறையச் சிரிப்புடன் அவர் பாராட்டியது, வேறு எவரையு மல்ல, நம் அண்ணாவைத்தான். அண்ணாவுடன் சிறிது நேரம் உரையாடியதுமே வினோபா பாவே அண்ணாவை இவ்வாறு புரிந்துகொண்டுவிட்டார்.
பூதானத்திற்காகத் தமிழ் நாட்டிற்கு வந்த வினோபா தமது இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேச விரும்பினார். அதன் அடிப்படையில் திராவிடர் கழகம், தி.மு.கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களையும் தாம் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தி.க., தி.மு.க. இரண்டையும் இரு நாகப் பாம்புகளாகவும், வினோபா பாவே அவற்றின் எதிரே மகுடி வாசிப்பதாகவும் கேலிச் சித்திரம் வரைந்து வினோபாவின் விருப்பத்தை விமர்சித்தது, ஆனந்த விகடன். எனினும், குறிப்பாக அண்ணாவைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார், வினோபா. அண்ணாவிடம் வினோபாவின் விருப்பத்தை வெளியிட்டு, வினோபாவைச் சந்திக்க வருமாறு அண்ணாவைத் தொடர்ந்து அழைத்து வந்தார், தமிழ் நாட்டில் பூதான இயக்கத்தை முன்னின்று நடத்தி வந்த ஜகன்னாதன்.
அண்ணாவுக்கும் வினோபா பாவேயைச் சந்திப்பதில் விருப்பம் தான். எனினும் தமது சந்திப்பால் வினோபா அன்றைய
ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளாகி அவரது பணிக்கு இடையூறு ஏற்பட்டுவிடுமோ என்கிற த்யக்கம் அண்ணாவுக்கு இருந்ததால் சந்திப்பைத் தள்ளிப் போட்டு வந்தார்.
இதுதொடர்பாக, ‘வினோபாவைச் சந்தித்தேன்’ என்ற தலைப்பில் 17 ஜூன் 1956 ‘திராவிட நாடு’ இத்ழில் தமது பிரசித்திபெற்ற தம்பிக்கு கடிதத்தில் பின்வருமாறு எழுதினார், அண்ணா:
“புனிதமான புத்தர் விழாவைக் கெடுத்துத் தொலைத்தான் பாவி,
தூய்மை நிரம்பிய தமிழ்ச் சங்கப் பொன்விழாவைப் பாழாக்கிவிட்டான் பாதகன்
என்றெல்லாம், பழிசுமத்தப்படுகிறது உன் அண்ணன் மீது. ஏன்தான் நமக்கு இந்தத் தொல்லைகள் தாமாக வந்து தாக்குகின்றனவோ என்று நான் சில வேளைகளிலே கவலைப் படுவதும் உண்டு – எனினும் என் செய்வது? சில பல நிகழ்ச்சிகளில் நான் ஈடுபட நேரிடுகிறது. நான் ஈடுபடுவதனாலேயே நிகழ்ச்சிகள் கெட்டு விடுகின்றன என்று கூறி, நான் தாக்கப்படுகிறேன். அந்த முறையில், இதற்கு என்ன பழி சுமத்தப்படுமோ என்ற அச்சத்துடனேயே நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவேண்டி இருக்கிறது. என் செய்வது?
வினோபாவைக் கண்டேன்! தமிழகத்தில் தண்ணொளி பரப்பும் நோக்குடன் தவப்புதல்வர் வருகிறார், மும்மலங்களை விட்டொழித்திடச் சொல்லும் முனிபுங்கவர் வருகிறார், பூதானம் பெற்று, மக்களில் ஒரு சாராரின் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் பேராசையை விரட்டிடும் பெம்மான் வருகிறார், அவருடைய புனிதப் பாதம் பட்டதால், தமிழ்நாட்டின் சாபம் விமோசனமாகும் என்றெல்லாம் பக்கம் பக்கமாகப் பத்திரிகைகள் எழுதியது கண்டு, அவரைக் காண வேண்டும் என்று நானும் ஆவல்கொண்டேன் – உடனே ஒரு அச்சமும் பீடித்துக் கொண்டது – நாம் நுழைவதாலேயே, பல நற்காரியங்கள் நாசமாகிவிடுவதாகக் கூறும் “நல்லவர்கள்’ இருக்கிறார்களே! ஏழை எளியோர்பால் இரக்கம் காட்டச் சொல்லி, இரும்பு இருதயங்களையும் கனியச் செய்யும் இணையற்ற திருத்தொண்டு புரிந்துவரும் வினோபாவை நாம் சென்று காண்பதால், பதறிக் கதறி, கைபிசைந்து கண் கசக்கிக்கொண்டு, இங்கும் வந்து தொலைத்தானா இக்கெடுமதியாளன்? நிம்மதியும் நிர்மலமும் பெறுவதற்கு ஏற்ற இடம் என்று இந்தக் “குடில்’ வந்தோம், இங்கும், விடமாட்டேன் என்று வந்துவிட்டானே இந்த வீணன் என்று ஏசித் தமது மனதுக்குத் தாமாகப் புண் ஏற்படுத்திக் கொள்வார்களே சில புண்ணியவான்கள்’ என்று எண்ணினேன். ஆவலை அடக்கிக் கொண்டேன்.”
அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சியிலேயே சர்வோத்ய மாநாடு நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி, அப்போதைய முதல்வர் காமராஜர் எனப் பலரும் மாநாட்டில் பங்கேற்றனர். அண்ணாவும் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் எனப் பெரிதும் விழைந்தார், வினோபா. அவரது விருப்பம் ஜகன்னாதன் மூலமாகவே அண்ணாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் தமது பங்கேற்பு வினோபாவின் நோக்கத்திற்கு எதிரான விளைவைத்தான் ஏற்படுத்தும் என்று கருதிய அண்ணா, அந்த விருப்பத்திற்கு இணங்குவதைத் தவிர்த்தார். அந்தச் சமயத்தில் திருச்சியில் தமது கட்சியின் மாநில மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகக் கவனிக்க வேண்டியிருப்பதாகச் சாக்குக் கூறி, காஞ்சி சர்வோதய மாநாட்டிற்குச் செல்லாமல் இருந்துவிட்டார். பிறகு, தனிமையான சூழலில் வினோபாவைச் சந்திக்க இணங்கி, ஜகன்னாதன் தூணையுடன் தம்மனூர் சென்றார்.
அந்தக் கால கட்டத்தில் தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையை மிகத் தீவிரமாக வலியுறுத்தி வந்ததால், வினோபா பாவே அண்ணாவிடம் அதுபற்றியே அதிக நேரம் உரையாடினார். தனி நாடாக இயங்குவது கஷ்டமாக இருக்காதா என்று வினோபா கேட்டபொழுது, பத்து ஆண்டுகள் தனி நாடாக இருந்து பார்த்து, கஷ்டமாக இருந்தால் மீண்டும் பாரத தேசத்துடன் இணைந்து கொள்வோம் என்று சிறிதும் தயக்கமின்றி அண்ணா கூறியதைக் கேட்டுத்தான் ‘இவர் கள்ளங் கபடமற்றவர்’ என்று அண்ணாவைப் பற்றிக் கூறினார், வினோபா.
மேலும், திராவிட நாடு பற்றி விளக்கமளித்த அண்ணா அது இந்தியக் கூட்டமைப்பின் துணைக் கூட்டமைப்பாகவே இருக்கும் என்றார். ‘சப் பெடரேஃஷன்’ என்ற ஆங்கிலச் சொல்லை அண்ணா இதற்குப் பயன்படுத்தினார்.
தமது கட்சியில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற பேதமின்றி யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று விளக்கிய அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற திருமூலர் வாக்கே எங்கள் கொள்கை என்றும் தெரிவித்தார். இவையெல்லாம் வினோபாவை மிகவும் மகிழ்வித்தன. அண்ணாவை மீண்டும் சந்த்திதுப் பேசவும் அவர் தம்முடன் பாதயாத்திரை செய்ய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். அண்ணாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் இரண்டாவது சந்திப்போ, வினோபாவுடன் சேர்ந்து பாதயாத்திரை செல்வதோ அண்ணாவுக்குச் சாத்தியமில்ல லாமலே போயிற்று.
அண்ணாவுடன் ஒரேயொரு மணிநேரம் பழகினாலும் போதும், அதன்பின் யாரானாலும் அண்ணாவின் மீது அபிமானம் கொள்ளாமல் இருக்க இயலாது. இதற்கு வினோபாவும் விதிவிலக்கு அல்ல
1954-ல் தி.மு.க. ஒரு நாத்திகக் கட்சி என்றே அறியப்பட்டது. குறிப்பாக அது ஹிந்துகள் வழிபடும் கடவுளரை நம்பாத கட்சி என்ற கருத்தும் மிக வலிமையாக இருந்து வந்தது. திராவிடர் கழகத்தின் தாக்கம் தி.மு.க.வில் இருந்த முன்னணியினர் அனைவரிடமும் விலகாமலே இருந்த சமயம் அது. அந்தக் கால கட்டத்தில் கண்ணதாசனும் தி.மு.க.வில் தீவிரமாக இயங்கி வந்தார். அப்போது மங்கையர் திலகம் என்ற திரைப்படத்திற்கு துளசி பூஜைப் பாடல் ஒன்றை எழுதினார், அவர்.
‘எங்கள் குல தேவி நீயே, ஸ்ரீ துளசி அம்மா, அன்புத் தாயே’ என்று தொடங்கும் பாடல் அது.
படம் வெளியானதும், கழகக் கோட்பாடுகளுக்கு விரோதமாகக் கண்ணதாசன் நடந்துவிட்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதி பிரச்சினை கிளப்பினார். தமக்கு ஆதரவாக அப்போதே கட்சியில் ஒரு கோஷ்டியைத் திரட்டி வைத்திருந்த கருணாநிதி, கண்ணதாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழச் செய்தார்.
அச்சமயம் அண்ணாவுக்குச் சென்னையில் சொந்தமாக வீடு இல்லை. காஞ்சியிலிருந்தோ வேறெங்கிலுமிருந்தோ சென்னைக்கு வரும்போததெல்லாம் புரசைப்பாக்கம் வெள்ளாளர் தெருவில் வாடகை கொடுத்து வசித்து வந்த அன்பழகன் வீட்டில் தங்குவதை பெரும்பாலும் வழக்கமாகக் கொண்டிருந்தார், அண்ணா. அப்படித்தான் ஒருமுறை அண்ணா காஞ்சியிலிருந்து சென்னைக்கு வந்தபோது அவருடன் நானும் வந்து அன்பழகன் வீட்டிலிருந்தேன். அண்ணா சென்னை வந்து அன்பழகன் வீட்டில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்ட கண்ணதாசன், த்ம் மீது கிளப்பிவிடப்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து முறையிட வந்தார்.
கண்ணதாசன் மனம் குமுறக் குமுற எடுத்துக் கூறியதைப் பொறுமையாக கேட்டு முடித்த அண்ணா, “அதுசரி, நீ அந்தப் பாட்டை வெறும் தொழில் முறையில் எழுதினாயா இல்லா விட்டால் முழு தெய்வ நம்பிக்கையுடன் மனதார பக்தியுடன் எழுதினாயா” என்று கேட்டார்.
முழு மனதுடன் தெய்வ நம்பிக்கையுடன்தான் அப்பாடலை எழுதியதாகக் கண்ணதாசன் ஒப்புக் கொண்டார்.
“அப்படியானால் அதில் தவறில்லை. உனக்குச் சரியென்று பட்டதைச் செய். கடவுள் இல்லை என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை” என்றார், அண்ணா!
கண்ணதாசன் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருசேர வெளிப்பட்டன.
1954-லேயே துளஸி மாதாவைத் துதிக்கும் பாடலை கண்ணதாசன் எழுதியதை அண்ணா அங்கீகரித்தார். மட்டுமல்ல, நம்பிக்கை இன்றி வெறும் தொழில் முறையாக அவர் அவ்வாறு எழுதியிருந்தால்தான் தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்ப தையும் குறிப்பால் உணர்த்தினார், அண்ணா.
இச்சம்பவத்தை கண்ணதாசனும் ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் (வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17. பக்கம் 17). கண்ணதாசன் தி.மு.க. விலிருந்து விலகியபின் எழுதிய நூல் அது. எனவே அண்ணா வின் பண்பினைப் போற்றாமல், முழு விவரமும் சொல்லாமல் சிறு தகவலாகவே இச்சம்பவத்தை அதில் பதிவு செய்துள்ளார்..
சமபத் தி.மு.க.விலிருந்து விலகி, தமிழ் தேசியக் கட்சி தொடங்கி நடத்தியபோது, ஏ.வி.பி. ஆசைத்தம்பி தி.மு.க.வில் இருந்து கொண்டே அப்போது தாம் நடத்தி வந்த ‘தனி அரசு’ என்ற நாளிதழில் ஒரு பக்கம் முழுவதும் சம்பத் கட்சிச் செய்திகள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆசைத்தம்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுந்தது. கோரிக்கை அண்ணாவிடம் வந்தது.
‘தனி அரசு எத்தனை பக்கம் வருகிறது’ என்று கேட்டார், அண்ணா.
‘நான்கு பக்கங்கள்’ என்றார்கள்.
‘அதில் ஒரு பக்கம் சம்பத் கட்சி செய்திகளாக வருகிறது என்கிறீர்கள். அப்படியானால் மீதி மூன்று பக்கங்கள் நம் கட்சிச் செய்திகள்தானே போடுகிறார்! அவர் மீது நடவடிக்கை எடுத்தால் பிறகு நான்கு பக்கங்களுமே சம்பத் கட்சிச் செய்திகளாக வர ஆரம்பித்துவிடுமே, பரவாயில்லையா’ என்று தமக்கே உரித்தான குறும்புச் சிரிப்புடன் கேட்டார், அண்ணா.
ஆசைத்தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற ஆக்ரோஷமான கோரிக்கை அக்கணமே பிசுபிசுத்துப் போனது!
அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது மாதச் சம்பளம் பெறுவதற்காகப் பாராளுமன்ற்த்திலேயே செயல்பட்டு வந்த ஸ்டேட் பாங்க் கிளையில் சேமிப்புக் கணக்குத் தொடங்க வேண்டியதாயிற்று. அதுதான் அண்ணா தமது பெயரில் முதல் முதலாகத் தொடங்கிய வங்கிக் கணக்கு! அவர் சென்னைக்கு வந்தபின் அந்தக் கணக்கும் முடங்கிப் போனது. தமிழக முதல்வராக அண்ணா பதவியேற்றபின் மீண்டும் அவர் பெயரில் வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்க வேண்டியதாயிற்று.
அதுவரை தாம் நடத்தி வந்த இதழ்களின் பெயரில்தான் அண்ணா வங்கியில் ஒரு அவசியம் காரணமாகக் கணக்கு வைத்திருந்தார்.
வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் அண்ணா என்று யாராவது வற்புறுதினால், என் பெயரில் ஸேவிங்ஸ் அக்கவுண்டோ கரண்ட் அக்கவுண்டோ வைத்துக் கொள்ள நான் என்ன தொழிலா செய்கிறேன் என்று கேட்பார், அண்ணா.
அண்ணாவின் காஞ்சிபுரத்து வீட்டில் மின்விசிறிகூட இல்லாத நாட்களை நான் கண்டிருக்கிறேன். விரைவாக வீடு திரும்பும் அண்ணா, ஆயாசம் காரணமாக வெறும் தரையில் படுத்து விடுவதையும் பார்த்திருக்கிறேன். சோர்வுடன் கண்ணயர்ந்து கிடக்கும் அண்ணனுக்குப் பனை ஓலை விசிறியால் விசிறிவிட்ட நாட்கள் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்கள்.
அண்ணாவுக்கு இன்றளவும் எல்லாத் தரப்புகளிலும் பல அபிமானிகள் எஞ்சியிருப்பதற்கு இதெல்லாம்தான் காரணம்.
+++++
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- பார்சலோனா -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- தந்தையும் தாயுமான அதிபர்.
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- கடிவாளம்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- மேட்ரிக்ஸ் தமிழில்
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- வனச்சிறுவனின் அந்தகன்
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- உவமையும் பொருளும் – 1
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- இரண்டு கவிதைகள்
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- சும்மாக் கிடந்த சங்கு
- குற்றமிழைத்தவனொருவன்
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- காதுள்ளோர் கேட்கட்டும்
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- மறுபடியும் அண்ணா
- எரியாத முலைகள்
- இசட் பிளஸ்
- கோகெய்ன்