மரபணு மருத்துவம்.

This entry is part [part not set] of 4 in the series 20000206_Issue

வெங்கடரமணன்.


உயிரின் அடிப்படை மூலக்கூறு டி.என்.ஏ என்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மற்ற எல்லா மூலகூறுகளுக்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு. டி.என்.ஏ தன்னைத் தானே சுயநகலாக்கம் செய்ய வல்லது, இது உயிரின் அடிப்படை. ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்ஸிஸ் கிரிக் இருவரின் நோபல்பரிசு கண்டுபிடிப்பான டி.என்.ஏவின் அமைப்புவடிவு இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது உயிர்தொழில்நுட்பம் எனும் புதிய அறிவியல் சிந்தனைக்கு அடிகோலியது. இதன் அடிப்படை ஆய்வு நோக்கம் உலகின் அனைத்து உயிர்களின் மரபியல் தொகுப்புகளின் வரைபடங்களைத் தயார் செய்வது. வரைபடம் ஏன் தேவை ? ஓரிடத்திலிருந்து வேறிடம் செல்வதற்கு, குறுகிய மற்றும் ஆபத்தற்ற வழியைக் கண்டுகொள்வதற்கு – ஓரு உயிரிலிருந்து வேறோரு உயிரை எளிதாக உருவாக்க. உருவாகும் புதிய உயிரிலில் மரபுவழியாகத் தோன்றும் வியாதிகளை அடையாளம் கண்டுகொள்ள – அதனை மரபணு வரிசை மாற்றியமைத்து சரிசெய்ய.

இது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒருசெல் உயிரிகளும், உயிரியல் அமைப்புவரிசையின் அடித்தட்டில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கும், இத்தகைய மரபுச் சொற்றொடர்கள் பல்லாயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்டவை. இதில் ஒருசில உயிரிக்களுக்கே தற்சமயம் முழுமையான மரபு வரைபடம் தயாரகியுள்ளது. பரிணாம வளர்ச்சியின் மேல்தட்டில் இருக்கும் மனிதனுக்கான இந்த மரபு வரைபடம் இதுவரை நம்மால் கற்பனை செய்யக் கூடவியலாத அளவிற்குச் சிக்கலானது. எனினும் முற்றிலும் வணிக சிந்தனையுடைய சர்வதேச உயிர்தொழில்நுட்ப வர்த்தக நிறுவனங்கள் இவற்றில் முனைகின்றன. இது எந்த அளவிற்குச் சாத்தியம் ?

சென்ற பத்தியில் நாம் உபயோகப் படுத்திய வார்த்தைகள் ‘நீளமான மரபுச் சொற்றொடர்கள், ‘முற்றிலும் சிக்கலானவை ‘ எனபன. இவைதான் இந்த வணிக அடிப்படையிலான ஆராய்ச்சிகளின் அடிப்படை நம்பிக்கை. உலகு முழுவதையும் சுற்றும் திறமுடைய கப்பல் ஒன்றைக் கட்டியபிறகே கடலில் இறங்குவேன் என்று கொலம்பசும், வாஸ்கோடகாமாவும் நீலவானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்திருந்தார்களேயானால் அமெரிக்காவும், ஆசியாயும் இருக்குமிடம் ஐரோப்பியர்களுக்குத் தெரிந்திருக்காது. பின்னொருநாளில் அங்கே வணிகம் புரிந்து அவற்றின் அரசியலையும், வரலாற்றையும் மாற்றி எழுதியிருக்க முடியாது. நீளமான சொற்றொடர்கள் என்பது இயலாமையைக் குறிக்கவில்லை – நம்முடைய தற்காலத் திறனின் வரையறையது. குழப்பமென்பதும் நமது தெளிவற்ற சிந்தனையே. புதிரின் இன்னொரு துண்டு அதனிடத்தில் ஒட்ட புதிர் எளிதாகுமல்லவா ? மனிதனின் மரபுக் குறியீடு இறையால் எழுதப் பட்ட ஒரு முழுகாவியம் என்று கொண்டால், இவ்வணிக ஆய்வுநிறுவனங்கள் குறியாகக் கொண்டவை அக்காவியத்தின் ஒருசிறிய பத்தியே. இவை இச்சிறிய பத்தியைத் தெளிவாக, தவறின்றி புரிந்து கொள்ள முற்படுகின்றன.

புற்றுநோய்

உதாரணமாக, நம்முடலில் தோன்றும் புற்றுநோய் இயற்கையால் எழுதப்பட்ட அந்த மரபுக்காவியத்தின் ஒரு அத்தியாயம் எனக் கொள்வோம். மனிதனின் உயிர்ச்செல்கள் இளமையில் வேகமாகவும் கட்டுப்பாடகவும் இரண்டாகப் பிளந்து, பல்கிப் பெருகக் கூடியவை. இது நம் உடல் வளர்ச்சியின் அடிப்படை. வயதாக ஆக, இவற்றின் பெருகு திறன் குறைகின்றது. மனிதனின் உடல்வளர்ச்சி தடைப்படுகின்றது. நம்முடலின் ஒரு கோளாறான புற்றுநோய் பெரும்பாலும் வயதான உடலிலேயே தோன்றுகின்றது. இதன் பெருக்கம் முடிவதில்லை, இதில் கட்டுப்பாடும் கிடையாது. தற்காலத்தில் இதற்கு காமாகதிர்வீச்சு சிகிச்சையளிக்கின்றார்கள். இது இப்புறை செல்களைத் தீய்க்கின்றது. இதனால் புறையின் பெருக்கம் குறையுமென்று உத்தரவாதமாகக் கூறவியலாது. மேலும் இத்தகையக் கதிர்வீச்சுகளால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. நமக்கு இத்தகைய புறைகளை விளைவிக்கும் மரபுக்குறிகள் தெரிந்தால் இதற்கு ஒரு அடைப்பானை ஏற்படுத்தி இதனை வளர்ச்சியிலிருந்து தடுத்து நிறுத்தவியலும். அல்லது புறைசெல்களின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த இயலும். அறிவியலார் மரபுக்காவியத்தின் புற்றுநோய் அத்தியாயத்தை நன்றாகப் படித்துப் புரிந்துகொண்டு விட்டார்கள் எனக் கொள்வோம்.

காலத்தை வெல்லுதல்

மனித மரபுக்காவியத்தின் இன்னொரு அத்தியாயம் – முதுமை. சென்ற பத்தியை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும். மனிதனின் செல்கள் வயதடைகின்றன – மனிதன் வயதடைகின்றான். ஆதியிலிருந்து இன்று வரையில் மனிதனுக்குள்ள தீராத ஆசை – கட்டுடல். எகிப்தியப் பேரழகி கிளியோபாத்ரா தான் இளமையுடனிருப்பதற்காகக் கழுதைப்பாலை அருந்தியதாக வரலாறு( ?) கூறுகின்றது. இன்னும் பாலில் முத்துக்களைத் தோய்த்து அருந்துதலிருந்து, துக்ளக் பத்திரிக்கை பின்னட்டையின் நிரந்தர விளம்பரமாகிய ஏழுதலைமுறை வைத்தியர்களால் தயாரிக்கப் பட்ட தங்கபஸ்பம் (இதில் ஏழாவது தலைமுறைக்கு இன்னமும் ஏழுவயதுகூட ஆகவில்லை), சனிக்கிழமை சந்தையில் பாம்பு-கீரி வித்தைகாட்டி விற்கப்படும் சிட்டுக்குருவி லேகியம், புதுக்கோட்டை மீரான் வல்லாரை லேகியம் வரையில் அவரவர்களின் தகுதிக்கும் பொருளாதார வரையறைக்கும் தக்க, இளமைக்கு உத்தரவாதம் அளிக்கும் சஞ்சீவிகள் பல. இன்றைய உயிர்தொழில்நுட்பவியலார் என்ன செய்கின்றார்கள் ? புற்றுநோய் செல்களின் ஒரு முக்கியத் தன்மை நிரந்தரமான பெருக்கம் – காலத்தால் அழியாத இளமை. இதன் மரபுக்கூறை ஆராய நமக்கு சாதாரண உடலில் வயதாகும் தன்மை விளங்கும். அழியாமையின் அடிப்படைச் சொற்றொடரைக் கருவிலேயே மனித உடலில் இட, என்றும் பதினாறு. மார்க்கண்டேயன்.

இப்படியாக முழுபுத்தகத்தையும் ஒருசேரப் படித்துப் புரிந்து கொள்ளாமல், ஒவ்வொரு அத்தியாயமாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்துகொள்ளவே பன்னாட்டு வணிக நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. இதில் ஒரு நிறுவனம் புற்றுநோயை ஆராய்கின்றது என்றால் வேறொரு நிறுவனம் அழகையும் முதுமையையும் ஆராய்கின்றது. இந்த அதிவேக ஓட்டப் பந்தயத்தில் முதலில் வருபவர், ஒரு குறிப்பிட்ட மருந்திற்கான அல்லது சிகிச்சை முறைக்கான காப்புரிமையைப் பெற்று வணிக அளவில் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது.

இன்னும் மரபுமருத்துவம் என்னவெல்லாம் முயற்சி செய்கின்றது எனக் காண்போமா ?

நாற்பது வயதானால் உதிரத்தொடங்கும் (தற்காலங்களில் இருபதுகளில்) தலைமுடிக்குக் காரணம் உறக்கத்தில் ஆழ்ந்த மயிர்கால்களே. மரபுச் சிகிச்சை மூலம், இந்த மயிர்கால்களை தூக்கத்திலிருந்து எழுப்ப முயலுவர்.

அடைபட்ட இரத்தக் குழாய்களே மாரடைப்புக்குக் காரணம், நேரடியாக இருதயத்தில் நோயாளியின் மரபுச்சொற்றொடர் அமைப்பிற்கு ஏற்றபடி தயாரிக்கப் பட்ட மருந்துகளை ஏற்றி, இரத்தக் குழாயில் அடைபட்ட கொழுப்பினைக் கரைப்பார்கள்.

சுருங்கும் பின்கைத் தோலைப் பளபளப்பாக்கி நிறுத்த மரபியல் குணம்,

உடைந்தால் வளராத முற்றிய எலும்புகளுக்குத் தற்காலத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட எலும்புகள் அல்லது உலோக எலும்புகளை உள்ளிடுகின்றார்கள். இதில் நோயாளியின் உடல் அதனை ஏற்றுக் கொள்ளாது, புறையோடும் சாத்தியம் இருக்கின்றது. இதுபோல இல்லாமல், எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டும் கட்டுமான அணுக்கள் ஊசிமூலம் ஏற்றப்பட்டு எலும்புகள் மீண்டும் வளரும் தன்மையை அவற்றுக்கு அளிப்பார்கள்.

தொய்யும் கொங்கைகளுக்கு இன்று காற்றடைத்த, நீரடைத்த பைகள் உள்ளிடப் படுகின்றன. இதிலும் உடல் அவற்றை சிலசமயம் ஏற்பதில்லை. ஆசைக்கேற்ற அழகிய மார்பகங்களுக்கு, மரபுவழி கட்டுமானங்கள் தயாராகி வருகின்றன.

இழந்த ஆண்மைக்கு சுயஎழுச்சியளிக்க மரபியல் மருந்துகள்.

ஏன் மறதிக்குக் கூட மரபுநுட்பத்தால் மாற்று, ….

இதற்கெல்லாம் காலம் தொலைவிலில்லை. இவற்றில் பெரும்பாலான சிகிச்சை முறைகள் தற்பொழுது ஆய்வக அளவிலும், சோதனை விலங்குகளிலும் செயலாக்கிக் காண்பிக்கப் பட்டுவிட்டன. இன்று கற்பனைபோல் தோன்றும் இந்த சிகிச்சை முறைகளெல்லாம் செயல்படுத்திக் காட்டுவதோட்ய் நில்லாமல், மனிதனின் பெரும்பாண்மையான வியாதிகளை கருவிலேயே தவிர்க்கும் சாத்தியங்களும் மரபியல் மருத்துவத்தில் உண்டு.

நோயாளி சார்ந்த மருத்துவம்

இதனைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் புளூ காய்ச்சலால் அவதிப்படுகின்றீர்கள். அதிக உடல்வலியாலும் தலைவலியாலும் சோர்வடைந்து வேலைக்கு ஓய்வு எடுக்கின்றீர்கள். மருத்துவமனை சென்று மருத்துவரிடம் கூற அவர் உடனே உங்கள் மரபுபணு அமைப்பு அட்டையைக் கேட்கிறார். நீங்கள் உங்கள் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறிய அடையாள அட்டையை எடுத்துத் தருகின்றீர்கள். அவர் உங்கள் ஒருசொட்டு இரத்தத்தையும், அடையாள அட்டையையும் தன்னுடைய குறிப்புடன் மருந்துக்கடைக்கு அனுப்புகின்றார். மாலை நீங்கள் கடைக்குச் சென்று, மருந்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இது உங்களைத் தற்சமயம் தாக்கியிருக்கும் காய்ச்சலை உண்டுபண்ணும் நுண்ணுயிரியை அடையாளம் கண்டு, உங்கள் உடலின் அடிப்படை அமைப்பிற்கு ஏற்ப தயார் செய்யப்பட்ட உங்களுக்கு மட்டுமான விசேட மருந்து. இதில் குணம் உத்தரவாதம். இதுபோன்று பெரும்பாலான வியாதிகளுக்கும் உங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கும். பொதுவில் மருத்துவம் என்பது தனிப்பட்ட நோயாளிக்காக என்று மாற்றியமைக்கப்படும். சில தீர்க்க முடியாத வியாதிகளைத்தவிர பெரும்பாலானவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட மாட்டாது. அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்தின் ஒரு தோல்வியாகவே கருதப்படும். குணமளிப்பது உங்கள் உடல் இழந்துபோன நோய் எதிர்ப்பு சக்தியை திரும்ப அளித்து, தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் முறையாக மாற்றப்படும். இதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை – உடல்தொழில் நுட்பவியலார், இது 2015க்குள் துவங்கிவிடும் எனத் திட்டமிட்டுள்ளனர்.

சில எச்சரிக்கைகள்

மனிதனின் இயற்கையை வெல்லும் ஆசைக்கு முடிவில்லை. நாம் காட்டியது போல் உயிர்தொழில்நுட்பம் மரபுவரைபடத்தைப் பெறுவதுடனும், புற்றுநோயைக் குணப்படுத்துவதுடனும், இன்னபிற மரபுவழியாக தலைமுறையாகத் தொடரும் வியாதிகளைக் கருவிலேயே கண்டு தெளிந்து குணமளிப்பதுடனும் நிற்கப் போவதில்லை. இது கட்டழகிகளை உருவாக்குவதில் தொடர்ந்து, உடலில் வலிமை, சிந்தையில் கூர்மையுள்ள அதிமனிதனைப் படைக்க எத்தனிப்பதுவரைச் செல்லும். அத்தகைய அதிமனிதன் நம்மிலிருந்து வேறுபட்டவனாக இருப்பான், அவனைவிட நாம் செயலாலும், அறிவாலும் குறைந்து, அடிமைகளாக மாறக்கூடும். இது உணர்ந்த நெறியியலார் சிலர் இப்பொழுதே மரபியல் கருமாற்றங்களுக்குத் தடைவிதிக்கக் கோருகின்றனர். இதற்கு முடிவில்லை. ஆனால் இயற்கையின் சோதனைகளுக்கும் முடிவில்லை. எய்ட்ஸ் உட்பட இந்த நூற்றண்டின் அவலங்கள் மனிதனின் ஆய்வகச் சாலையிலேயே தோன்றியதாக அஞ்சப்படுபவை. எழுபத்தைந்து வயதில் பதினாறு வருடங்களாக நோயின்றி வாழ்ந்து, தன்னுடைய வேட்டியின் கிழிசலைத்தானே தைத்துக்கொண்டு, அதைத் தன் கையால் தோய்த்து உடுத்தி, ஒரு மதியவேளையின் அரைத்தூக்கத்தில் புன்சிரிப்புடன் மரித்துப்போன என்னுடைய தாத்தாவின் மன அமைதிக்கும், நிறைவான தன்மைக்கும் உயிர்தொழில் நுட்பத்தால் உத்தரவாதம் அளிக்க முடியுமா ?

வெங்கடரமணன்,

தோக்கியோ, 4 ஜன. 2000


தொடர்புள்ள கலைச்சொற்கள்

மரபியல் – genetics
உயிர்தொழில்நுட்பம் – biotechnology
மூலக்கூறு – molecule
சுயநகலாக்கம் – self-replication
மரபு வரைபடம் – gene map
நுண்ணுயிரி – micro organism
மரபணு வரிசை – gene sequence
பரிணாமம் – evolution
புற்றுநோய் – cancer
உள்ளீடு – implantation
கட்டுமாணம் – scaffold

தொடர்புள்ள இணையப் பக்கங்கள்

அ. பொதுப் படிப்பிற்கு

1. Soul searcing with Francis crick – An interview with the co-inventor of the DNA structure
http://cgi.student.nada.kth.se/~d95-aeh/crick.html

2. A Visit With Dr. Francis Crick
http://www.accessexcellence.org/AE/AEC/CC/crick.html

3. James Watson – the Nobel foundation biography
http://www.nobel.se/laureates/medicine-1962-2-bio.html

4. Rare genetic disceases in children web page
http://mcrcr2.med.nyu.edu/murphp01/homenew.htm

ஆ. அறிவியல் அறிய

1. DNA structure an interactive tutorial (you need chime pluggin for your browser to learn interactively)
http://www.umass.edu/microbio/chime/dna/index.htm

2. Introduction to DNA structure
http://www.blc.arizona.edu/Molecular_Graphics/DNA_Structure/DNA_Tutorial.HTML

3. MITs biology hypertextbook
http://esg-www.mit.edu:8001/esgbio/7001main.html

4. DNA self-replication a macromedia flash movie
http://www.kadets.d20.co.edu/~lundberg/DNA_animations/dna.dcr

இ. அறிவியல் ஆராய்ச்சியில் நெறிமுறைகள்

1. Humon genome ethics group
http://www.kumc.edu/gec/mentor.html

2. Genetics and ethics homesite
http://www.ethics.ubc.ca/brynw/index.html

3. Bioethics discussion group
http://www.ethics.ubc.ca/brynw/index.html

4. The gene letter – US government granted ethics in genetics website
http://www.genesage.com/geneletter/

உ. Books for general reading

1. The Double Helix : A Personal Account of the Discovery of the Structure of DNA by James D. Watson, Gunther S. Stent, (New American Library paperback edition)

2. What Mad Pursuit : A Personal View of Scientific Discovery by Francis Crick (Sloan Foundation for Science)

3. The Astonishing Hypothesis : The Scientific Search for the Soul by Francis Crick, (Touchstone books)

4. How to Live Longer and Feel Better by Linus Pauling (Mass Market Paperback)

Thinnai 2000 February 6

திண்ணை

Series Navigation

வெங்கடரமணன்.

வெங்கடரமணன்.