மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

பாவண்ணன்


தனித்துத் திரியும் காலத்தின் வெவ்வேறு கோலங்களை கவிதைச் சித்திரங்களாக இத்தொகுதியில் வடித்திருக்கிறார் மலர்ச்செல்வன். தனித்துத்திரிதல் என்னும் சொல்லே கவித்துவம் நிறைந்ததாக உள்ளது. உலகத்தோடு ஒட்டி வாழவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிற சூழலில் உலகத்திலிருந்து விலகி தனித்துத் திரியும் விருப்பம் ஒருவனுடைய மனத்தில் எப்படி முளைவிடுகிறது என்பது முக்கியமான கேள்வி. சுற்றியிருக்கிற உலகத்திலிருந்து அவனால் வாழும் விருப்பத்தையோ அன்பையோ பெறமுடியாமல் போனது ஏன் என்பதும் முக்கியமான கேள்வி. மறுகணம் உயிர்த்திருப்போமா என்பதே உறுதியாகத் தெரியாத இன்றைய இலங்கைச்சூழல் நம்பிக்கைக்குப் பதிலாக பீதியையும், வேகத்துக்குப் பதிலாக விரக்தியையும் மனத்தில் கவியவைத்துவிட்டன. ஒரே ஒரு மணிநேரம் கூட நிம்மதியாக உறங்கமுடியாததாக மாறிவிடுகிறது இரவு. பீதியிலிருந்தும் விரக்தியிலிருந்தும் தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொள்ள தங்குமிடத்திலிருந்து கிளம்பித் திரிய வேண்டியிருக்கிறது. திரியும் தருணத்தில் குலைந்துபோய் கண்ணில் படும் காட்சிகள் பழைய நினைவுகளைக் கிளறிவிடுகின்றன. மரணக்காட்சிகளும் மரணச்செய்திகளும் நிலைகுலையவைக்கின்றன. தனித்துத் திரிவது தாங்கமுடியாத பதற்றத்தைத் தரத்தொடங்கியதும் அறையை நாடி ஓடிவருகிறது மனம். அறையின் தனிமை அதைவிட கூடுதலான பதற்றத்தைத் தரும்போது வெட்டவெளியையே தன் உலகாகக் கொண்டு தனித்தலைய மீண்டும் ஓடுகிறது. நிலைகொள்ளமுடியாத இக்கொடுமையை தொடர்ச்சியாக சந்தித்துவரும் மனம் தீட்டிய சித்திரங்களே இக்கவிதைகள். மரணம் மையமாக உள்ள ஒரு பொதுஉண்மை. அதை வாழ்வின் வட்டப்பாதையின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் தம் கோணத்தில் தரிசிக்கின்றன மலர்ச்செல்வனின் கவிதைகள்.

அரைத்தூக்கத்தில் பீதியில் விழித்தெழுந்து அலறுபவனின் மனக்குறிப்பாக விரிவடையும் “காடேறிப் பிசாசுகளும் என்னில் எழுந்த உயிர்க்கவிதையும்” என்னும் கவிதை மரணம் ஓர் அன்றாடக் காட்சியாக மாறும் வேதனையையும் மனத்தத்தளிப்பையும் இணைத்துச் சித்தரிக்கிறது. தன்னுரையாக முன்வைக்கப்படும் அக்கவிதையில் பீதியில் அலறியெழுந்ததற்கான காரணம் முதலில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. அது ஒரு கனவு. அக்கணத்தில்தான் அது கனவேயொழிய, உண்மையில் முதல்நாள் பட்டப்பகலில் நேருக்குநேர் கண்ட காட்சி. சிதைத்து தெருவோரத்தில் வீசப்பட்ட இளம்பெண்ணுடல் கிடந்த காட்சி. அக்கணத்தில் உடனடியாக சீற்றம் பொங்குகிறது. கண்கள் தழலாகின்றன. எதையாவது செய்து மனத்தைச் சமநிலைக்குக் கொண்டுவர கையும் கால்களும் பரபரக்கின்றன. எல்லாமே ஒரு கணம்தான். அப்புறம் எல்லாவற்றையுமே இயலாமை உணர்வோடு அடக்கிக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. மரணத்தைவிட மரணத்துக்கு மௌனசாட்சியாக இருப்பதுதான் உண்மையில் கொடும்வேதனை. அடக்கப்பட்ட அந்த வேதனைதான் கனவுக்காட்சியாக மீண்டும்மீண்டும் பொங்கியெழுந்து துயரத்தில் ஆழ்த்துகிறது. தன்னைத்தானே வெறுத்துக்கொள்கிறது. சுயவெறுப்பிலிருந்து மீள்வதற்காகவாவது உயிர்த்துடிப்பான ஒரு கவிதையை இன்று எழுதவேண்டும் என்று நினைக்கிறது மனம். கவிதை ஒரு வடிகால் ஊடகமாக மாற்றமடைகிறது.

மரணத்தைப்பற்றிய நேரடிச் சித்திரமாக இல்லாவிட்டாலும் மரணத்தின் பாதிப்பை இன்னொரு கோணத்தில் முன்வைக்கும் ஒரு கவிதை “மொத்திய இரவு”. இதுவும் இரவுக்காட்சி. ஊரெங்கும் நிகழும் கொலைகளாலும் மரணங்களாலும் பீதியும் மனச்சோர்வும் கொண்ட ஆணும் பெண்ணும் தனியறைக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். புறஉலகில் பகலில் மற்றவர்கள் பார்வையின்முன் வெளிப்படாத ஆண்மையும் வீரமும் கனவில் உறக்கத்தில் பாலுறவின் உச்சமாக வெளிப்படுகிறது. வெறுப்பும் இச்சையும் உந்த, கனவில் நிகழ்ந்த உறவை நிஜத்தில் நிகழ்த்த விரும்புகிறது மனம். சற்றே தள்ளி உறங்குபவளை தட்டி எழுப்புகிறது. கனவின் வேகம் நிஜத்தில் கைகூடாதபோது வெறுப்பும் விரக்தியும் உச்சமடைகின்றன. அவை மேலும் முற்றி வெறியாக மாற்றம் பெற்றுவிடாதபடி, நேர்த்தியாக சமாளிக்கிறாள் அப்பெண். தற்காலிகமாக அறையில் அமைதி நிலவுகிறது. உறக்கம் கலைந்துபோன அந்நள்ளிரவு அப்படியே உறைந்துபோகிறது. மறுகணம் மரணம் என்று உறுதியாக நம்புகிற மனத்தில் நிரம்பித் ததும்பும் ஒரே உணர்வு பாலுணர்வு என்னும் மனவியல் ஆய்வுமுடிவை இக்காட்சியோடு இணைத்துப் பார்க்கலாம். உபயோகமற்ற உறவு என்றாலும் மனம் அந்த உறவையே இயல்பாக விழைகிறது. இவ்விழைவின் பின்னணித்தூண்டுதல் ஏக்கமோ இன்பமோ அல்ல. ஒரு பாதுகாப்புணர்வு. தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சி. வாழ்க்கையில் நிலவும் அவலங்கள் பட்டியலிடப்பட முடியாதவை.

“மனவெளியில் ஒரு கப்பல்” என்னும் கவிதையும் குறிப்பிடத்தக்க ஒன்று. கவிதையில் மூன்று காட்சிகள் கட்டியெழுப்பப்படுகின்றன. மீட்க முடியாத அடித்தளத்தில் அசைந்தசைந்து செல்கிறது ஒரு கப்பல் என்பது ஒரு காட்சி. அதை மீட்டெடுக்க அல்லது கவிழ்க்க அலைகள் முயற்சிசெய்கின்றன என்பது இன்னொரு காட்சி. அலைகளைத் தோற்கடித்துவிட்டு தப்பித்துச் சென்ற கப்பல் வேறொரு கரையில் வேறொரு வெளியில் தனிமையில் ஒதுங்கிக்கிடக்கிறது என்பது மற்றொரு காட்சி. முதலில் வாழும் இடத்தில் ஊர் இருக்கிறது. உறவு இருக்கிறது. ஆனால் ஊரோடும் உறவோடும் சேர்ந்து வாழமுடியாத கொந்தளிப்பான நிலையும் இருக்கிறது. எங்காவது உயிரோடு வாழ்ந்தால் போதும், பிழைத்துக் கிடந்தால் என்றாவது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு தப்பித்தோடுகிறான் மனிதன். தப்பித்து, மற்றொரு இடத்தில் கால் ஊன்றியதுமே, ஊரின் நினைவும் உறவின் நினைவும் வாட்டியெடுக்கத் தொடங்கிவிடுகிறது. ஊரில்லாமலும் உறவில்லாமலும் வாழ்கிற கொடுமையை தாங்கிக்கொள்ள இயலாமல் தவிக்கிறது. உண்மையில் இந்தத் தப்பித்தல் பயணம் நிகழவே இல்லை. தப்பித்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனைவெளியில் எழுதிப் பார்க்கிறது மனம். ஏற்கனவே தப்பித்துப் போனவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அந்தக் கற்பனைப் பயணத்தை நிகழ்த்துகிறது மனம். தோற்றத்தில் தனிமனிதத் துயரை அவலச்சுவையோடு முன்வைப்பதுபோல இருந்தாலும் உள்ளோட்டமாக அரசியல் கொடுமையையும் வன்முறையையும் முன்வைப்பதைக் காணலாம். வாழும் இடத்தில் ஊரற்றவனாகவும் உறவற்றனாகவும் இருந்தால்மட்டுமே வாழலாம் என்னும் கொடுமையான போர்ச்சூழல். வாழ்வதற்காக தப்பித்துச் சென்ற இடத்திலும் ஆதரவின்றி ஊரற்றவனாகவும் உறவற்றவனாகவும் வாழவேண்டிய தனிமைச்சூழல். இரண்டும் ஒன்றுதான். ஆனால் இந்த இரண்டில் ஒன்றைமட்டுமே தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கிற சூழலின் அரசியல் கற்பனைகூட செய்யமுடியாத அளவுக்கு கொடுமை மிகுந்தது.

தனிமைத்துயரத்தையும் அரசியலையும் இணைத்து முன்வைக்கும் மற்றொரு கவிதை “பயம் கொல்லுகின்ற புதிய இரவு”. ஓர் இரவின் சித்திரம் இக்கவிதையில் இடம்பெறுகிறது. எங்கோ நாய்ச்சத்தம் இடைவிடாமல் கேட்கிறது. அது காதில் விழுந்ததும் தன்னிச்சையாக நெஞ்சில் பதற்றமும் பயமும் பரவுகின்றன. மதியத்தில் ஏற்கனவே கேட்ட செய்தியையும் அந்த நாய்க்குரைப்பையும் இணைத்து எண்ணிக்கொள்வதால் நடுக்கம் அதிகமாகிறது. எக்கணமும் ஒரு துப்பாக்கியை நீட்டியபடி யாராவது தன் முன்னால் தோன்றக்கூடும் என்று தோன்றகிறது. மொத்தத்தில் பீதி நிறைந்ததாக இருக்கிறது இரவு. மரணத்தின் வருகையை நாய்கள் மட்டுமே உணரமுடியும் என்பதும் இரவில் எழும் நாயின் ஊளையைக் கேட்டு மனம் பதறுவார்கள் மக்கள் என்பதும் கிராமத்து நம்பிக்கை. அந்தக் கிராமத்து நம்பிக்கையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது கவிதை. இங்கு மரணம் துப்பாக்கி ஏந்திய ராணுவவீரர்கள் மூலமாக வருவதைக்கண்டு நாய்கள் குரைக்கின்றன. மதியம் பரவிய செய்தி ராணுவவீரர்களின் வருகை குறித்ததாகவே இருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. உயிராசை கொண்ட ஒருவனுடைய பீதியை முன்வைப்பதாக கவிதை தோற்றம் தந்தாலும், உண்மையில் இரவு நேரங்களில் ராணுவ வீரர்கள் வீடு புகுந்து இளைஞர்களைக் கொல்லும் அரசியல் தகவலையே சூட்சுமமாக முன்வைத்திருக்கிறது.

தொகுப்பில் சிறந்த கவிதைகளில் ஒன்று “ஜூலை-5” என்ற தலைப்பிட்ட கவிதை. அறையிலிருந்து தொடங்கி அறைக்குள் முடிவடைகிறது கவிதை. அறை முழுதும் இருநாள்களாகக் கவிகிறது அவன் பேச்சு என்று கவிதை தொடங்கும்போது, அறைக்குள் இருவர் இருக்கிறார்கள், அவர்களில் யாரோ ஒருவன் இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கிறான் என்கிற எண்ணத்தைத்தான் முதலில் அக்காட்சி தருகிறது. பல நாள்களாகப் பார்க்காத நண்பர்கள் பேசிப்பேசி மனத்துயரை ஆற்றிக்கொள்கிறார்கள் போலும் என்றுதான் நினைக்கிறோம். அடுத்தடுத்த வரிகளை வாசிக்கும்போதுதான் நிகழ்ந்துபோன மரணத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. மரணத்துக்கு முன்னர் நிகழ்ந்த சந்திப்பில் பரிமாறிக்கொண்ட உரையாடல்கள், அவனில்லாத அறையில் உயிரோடு இருப்பவனின் மனத்திரையில் எதிரொலிக்கின்றன. அறை சொற்களால் நிரம்பிவழகிறது. இரண்டு நாட்களாக காதில்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் அக்குரல் தாங்கமுடியாத வேதனையைக் கொடுக்கிறது. வெளியே கடும்மழை. துயரம் ஒரு பெரும்பாரமாக அழுத்தத் தொடங்கியதும் அறையைவிட்டு மழையைப் பொருட்படுத்தாமல் வெளியேறுகிறான் அவன். மழை அவனை நனைக்கிறது. மண்ணை ஈரமாக்கிக் கரைக்கிற மழையால், இறந்தவன் நினைவைக் கரைக்கமுடியவில்லை. அது திடமாக உறைந்து, துயரத்தின் வலியை இன்னும் பலமடங்காகப் பெருக்குகிறது. மழையால் ஆற்றமுடியாதபடி வேதனையின் வெப்பம் அதிகரிக்கிறது. அந்த வெப்பத்தோடு வேறு போக்கிடமில்லாமல் மீண்டும் அறைக்கே திரும்புகிறான் அவன். சொற்களால் நிரம்பிய அந்த அறை அவனை உள்ளே ஏற்றுக்கொள்கிறது. அறை இன்னும் இறந்துபோன நண்பனுடைய வாசத்தோடுதான் இருக்கிறது.

கவிதையின் பின்னணியில் இயங்குகிற மழை, கண்ணீரின் படிமமாகவும் துயரத்தின் படிமமாகவும் விளங்குகிறது. கவிதையில் அவன் அழுவதாக எங்கும் குறிப்பில்லை. அடுத்தடுத்த மரணங்களைப் பார்த்துப்பார்த்து அவன் கண்ணீர் வற்றிப் போயிருக்கலாம். மனிதர் அழமுடியாதபோது இயற்கை அழுகிறது. அறை, மழை, மீண்டும் அறை என்ற புள்ளிகளில் இயங்கும் கவிதை. கற்பூரமாய் அவன் வாசம் என்னும் தொடர் பொருள்பொதிந்த ஒன்று. கற்பூரம் இப்போது இல்லை, அதன் வாசம்மட்டுமே இப்போது இருக்கிறது என்பதில் ஒரு மரணச்செய்தியும் மறைந்திருக்கிறது. ஒயாத உரையாடல்களின் குரல் விரட்டியடிப்பதற்குப் பதிலாக வாசமாக மாறி நெஞ்சில் நிறைகிறது. ஒவ்வொரு நாளும் யாரோ முகம்தெரிந்த அல்லது முகப்பழக்கமற்ற ஒரு நண்பனின் மரணம் தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கிற மண்ணில் எல்லாரையும் தேதிகளாக மாற்றி நினைத்துக்கொள்கிற துயரமும் வலியும் கொடுமையானவை.

( தனித்துத் திரிதல். த.மலர்ச்செல்வன். கவிதைத்தொகுதி. மறுகா பதிப்பகம். மட்டக்களப்பு, இலங்கை.)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்