மரணதேவனுடன் ஒரு உரையாடல்

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

கவிதா, நோர்வே


– மரணதேவா எங்கிருக்கிறாய் நீ!

– என்ன வேண்டும் சொல்
நான் எங்கும் இருப்பேன்

– மரணத்தின் வலி பற்றி
என்றாவது சிந்தித்திருக்கிறாயா நீ

– என்னைவிட மரண வலி
அறிந்தவன் இங்குண்டோ

– ஏன் ஈழத்தமிழனை நீ
பார்த்ததில்லை என்றா சொல்கிறாய்

– ஏன் இல்லை?
இப்பொழுதெல்லாம் என் இருப்பிடம்
அங்கு தானே

– எப்படி முடிகிறது
பச்சிளம் குழந்தைகளின்
உடல் சிதற
தாயின் தலை கொய்ய…
நீ மனித தன்மையற்றவன்
எப்படி எம் வலி அறிவாய்

– மனிதர்
இறப்பதற்காகவே பிறந்தவர்கள்

– அதற்கிடையில் வாழுதல் என்ற
அழகியல் இருக்கிறதே
ஈழத்தமிழர்க்கு மட்டும்
நிகாரிக்கப்பட்டதோ…
யார் எடுத்த முடிவு?

– மனிதா!
நான் மனிதத் தன்மையற்றவன் தான்
அதனால் பூரிப்பே அடைகிறேன்

– புரியவில்லை

– சிந்தித்துப்பார்…
என்னை தேவன் என்று நீதான்
அழைத்தாய்…
பிரார்திக்கிறாய்
அழுகிறாய்
சமயங்களில் திட்டுகிறாய்
மனிதனாக இருப்பதை மட்டும்
மறந்து விடுகிறாய்.
யார் காரணம் மரணவலிக்கு
நானா…?
மனிதனாகப் பிறந்த
ஒவ்வொருவனும் பங்கெடுத்தல் வேண்டும்
இந்தக் கொலை வழக்கில்

– ஏன் நான் என்ன தவறு செய்தேன்.
எதுவும் செய்ததில்லை நான்
ஆனாலும் எத்தனை இழப்புகள் எனக்கு

– மனிதா நீ எதுவும்
செய்யாது இருப்பதிலும்
பங்கு இருக்கத்தானே செய்கிறது.
உனக்காக படைக்கப்பட்டது
இயற்கை மட்டுமே
செய்ற்கை சுடுகுழல் அழி
முடிந்தமட்டும்
மனிதம் பற்றி
பேச வை!
இயலாமை ஆற்றாமை கழி
மரணம் பற்றிய குறிப்புகள் திரட்டி
வாழ்தல் பற்றி
இனியாவது….


– கவிதா நோர்வே
26.02.2009
kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே