சேவியர்.
மன்னியுங்கள்…
மன்னிக்கப்படுவீர்கள்.
தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு
தண்டனையின் கோடரி வீச்சு
தற்காலிகத் தீர்வுகளையே
தந்து செல்லும்.
மாற்றங்களின்
மெழுகுவர்த்திகளை
மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும்.
பயத்தின் மூக்கணாங்கயிறுகளில்
மனக்காளைகள்
பாதி நேரம் மண்டியிட மறுக்கும்.
தப்பிக்கும் சுரங்கம் தோண்ட
மீதி நேரம் தப்புக்கள் செய்யும்.
தூண்டிலில் மாட்டுவதே
மீனுக்குத் தண்டனை…
தொடர்ந்து தூண்டில் தேடும்
மீன்களுக்கோ
நெருங்கி வரும் வலை
தெரிய வருவதில்லை.
தண்டனையின் காயம்
இன்னொரு பிழைக்கு
பிள்ளையார் சுழியாவதுண்டு.
மன்னிப்பின் மடியிலோ
மரணம் கூட மகத்துவமானது.
மன்னிப்பு,
குற்ற உணர்வுகளை
வெற்றி கொள்ளும்.
மற்ற உணர்வுகளை கொஞ்சம்
மாற்றியே வைக்கும்.
தண்டனை
அணைகளைக் கட்டும் முயற்சி.
மன்னிப்போ
வாய்க்கால் வெட்டும் முயற்சி.
தண்டனை,
உடல் சார்ந்த உபாதை,
மன்னிப்போ
மனம் சார்ந்த பாதை.
தண்டனை,
ஒற்றை முகத்தோடு
உலகம் பார்க்கும்.
மன்னிப்போ,
இன்னோர் முகத்தோடு
இதயம் பார்க்கும்.
தண்டனை,
உலகம் பேச
உள்ளத்தை ஊமையாக்கி வைக்கும்.
மன்னிப்போ
மனசை மனசோடு
மதிப்பீட்டு மாநாடு நடத்த வைக்கும்.
தண்டனை,
உயிருக்குள்
கூர்க் கத்திகள் கோர்த்து வைக்கும்.
மன்னிப்போ
உணர்வுகளின்
துருக் கறைகளை துலக்கி வைக்கும்.
தண்டனை,
அழுத்தமாய் எழுதமுயலும்
சுதந்திரம்,
மன்னிப்பு,
சுதந்திரமாய் எழுதும் அழுத்தம்.
மன்னிப்பு,
விலங்குகளிடமிருந்து
மனிதனை
வித்யாசப் படுத்தும் விருது.
ஆறறிவு மனிதனுக்கு மட்டுமான
ஆத்மார்த்த நன்கொடை.
மன்னியுங்கள்
மன்னிக்கப்படுவீர்கள்.
- இவள் யாரோ ?
- பனி பொழுதில்…
- வழித்துணை
- சொன்னார்கள்
- இந்திய நரகம்
- திரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்
- விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.
- விஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…
- ஆப்பிள் சாஸ்
- வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி
- ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்
- ‘புது மரபு ‘
- காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.
- ஒத்திகைகள்
- நண்பா…..
- வெற்றிடம்
- காத்திருக்க வேண்டுமன்றோ
- குட்டாஸ்
- மன்னிப்பே தண்டனை…
- முடிக்கக் கூடாத கவிதை
- மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை
- சூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002
- இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.
- ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001
- நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி
- என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்
- வழித்துணைவன்
- ஒரு நாள் கழிந்தது