மனித அறிவியலின் பரிணாமம்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

டெட் சியாங்


(தமிழில் : ராமன் ராஜா)

கி.பி. 3000-ஆவது ஆண்டில் நடக்கும் கதை இது : செயற்கை மனிதர்கள் உருவாக்கப் பட்டுவிட்டார்கள்… சூப்பர் மூளை ! நாளடைவில் சாதா மனிதர்களைப் பின்தள்ளிவிட்டு இந்த ‘மீமக்களின் ‘ (metahumans) விஞ்ஞானம் மிகவும் முன்னேறிவிடுகிறது. அவர்கள் தங்களுக்குள் நேரிடையாக டெலிபதி மாதிரி மூளைக்கு மூளை செய்தி பறிமாறிக்கொண்டு அறிவியலில் எங்கேயோ போய் விடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அறிவியல் ஆராய்ச்சிப் பத்திரிகை ஒன்றில் வெளியாகும் தலையங்கம் (எடிட்டோரியல்) எப்படி இருக்கும் ?…

2000-ல் ‘ ‘நேச்சர் ‘ இதழில், ஆனால் வேறு ஒரு தலைப்பில் வெளியானது டெட் சியாங் (Ted Chiang) எழுதிய இந்த புனைகதை.

தமிழ் நாட்டில் கூட இப்போது பிரபலமாகி வரும் அறிவியல் புனைகதை ஆசிரியர் ஐசக் ஆசிமோவின் மிகப் பிரசித்தி பெற்ற ‘நிறுவனம்’ (foundation series) தொடர் நாவல்களின் மையக் கருக்களில் ஒன்றிற்கும், இக் கதைக்கும் உள்ள ஒற்றை வரித் தொடர்பு நம்மைச் சற்று இக் கதையோடு தங்கி இருந்து வியக்க வைக்கிறது. இது மேலும் பல தளங்களில் நமது ஊகச் சிந்தனையைத் தட்டி ஓட விடுகிறது என்பது, எத்தனை பக்கங்கள் கற்பனை வளத்தோடு எழுதுகிறோம் என்பதை விட எத்தனை நுட்பமாக அறிவியல் புனைவுகள் இயங்குகின்றன என்பதுதான் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது. 1992-லேயே மறைந்து விட்ட ஆசிமோவ் இக் கதையைப் படித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்வது கூட மிகச் சுவாரசியமானது.

டெட் சியாங் 90-களில் எழுத ஆரம்பித்து அறிவியல் புனைகதை உலகில் ஓர் அதீதமான திறமை படைத்த எழுத்தாளராகத் தெரிய வந்திருக்கிறார். அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரில் வாழும் டெட் சியாங் ஒரு சீன அமெரிக்கர்.

அதிகம் எழுதாமலே குறுகிய காலத்தில் சக படைப்பாளிகளின் மதிப்பை அனாயாசமாகப் பெற்று விட்ட டெட் சியாங்கின் ஒரு முக்கியமான சிறுகதைத் தொகுப்பு- ‘உன் வாழ்வின் கதைகளும் மற்றவையும்’ (Stories of Your Life and Others: 2002, Tom Doherty Associates). இவர் தொடர்பான வலை மையப் பக்கங்கள் மிகவும் சுவையான நேர்காணல்களை அளிக்கின்றன. இவற்றைப் படிக்கையில், புனைகதை உலகில் என்ன விதமான கூரிய அறிதிறன் நம் கைவசப்படுகிறது என்பதை அறிய நமக்கு வியப்பு கூடவே செய்கிறது.

—-

சுயமாக ஆராய்ச்சி செய்து கண்ட முடிவுகளை அறிவித்து எழுதப்பட்ட அறிவியல் கட்டுரை எதுவும் பிரசுரத்திற்காகப் பதிப்பாசிரியர் குழுவிற்கு வந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன.

இந்தத் தருணத்தில், அன்று விரிவாக விவாதிக்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றை மறுபடி புரட்டிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்: நவீன அறிவியலின் எல்லைகள் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத தொலைவுக்கு விரிவடைந்து விட்ட நிலையில், மனித விஞ்ஞானிகள்தான் எதற்கு ?

ஒரு கால கட்டத்தில், முதன் முதலாக ஏதும் கண்டுபிடித்தவர்கள் அதைப் பற்றிய கட்டுரைகளைத் தாமே எழுதி வந்தது நம் வாசகர்களில் பலருக்கும் நினைவிருக்கக் கூடும். பிறகு, மீமக்கள் சோதனை முறை அறிவியல் துறையைத் தங்கள் வசமாக்கி பெருவாரி அறிவியல் கண்டுபிடிப்புகளையும் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் அக் கண்டுபிடிப்புகளை வெளியிட ஏதுவாக பரஸ்பரம் மூளை நரம்பணுக்கள் மூலம் நேரிடையாக டிஜிட்டல் செய்தியாக அனுப்பும் முறையையே (Digital neural transfer – DNT) கையாள ஆரம்பித்த பிறகு, அறிவியல் பிரசுரங்களுக்கு இரண்டாம் கைச்செய்திகளாக அக் கண்டுபிடிப்புகளை மொழி பெயர்த்து, மனித மொழிகளில் பிரசுரிக்கும் வேலைதான் எஞ்சியது.

மனிதர்களுக்கு நரம்பணுவழி டிஜிட்டல் செய்தித் தொடர்பு சாத்தியமில்லாததால், புதிய அறிவியலின் பின்னணித் தகவல்களை முழுவதும் புரிந்து கொள்ள முடியாமலும், புதிது புதிதாய் வெளிவரும் ஆராய்ச்சிக் கருவிகளைக் கையாள முடியாமலும் பின் தங்க ஆரம்பிக்க, மீமக்கள் தங்கள் நரம்பணு செய்தித் தொடர்பை இன்னும் மேம்படுத்திக் கொண்டு தங்களுக்குள்ளேயே கலந்துறவாடத் தலைப்பட்டனர். மனிதர்களுக்கான அறிவியல் இதழ்கள் யாவும், மீமக்களின் கண்டுபிடிப்புக்களை எளிமைப்படுத்திப் பிரபலப்படுத்த முயற்சி செய்யும் ஊர்திகளாக மட்டுமே மாறிப்போயின. அதையும் அவை சரிவரச் செய்ய முடியவில்லை. ஏனெனில் மிகவும் கூரிய மதி உள்ள மனிதர்கள் கூட புதுப் புதுக் கண்டுபிடிப்புக்களை மொழிபெயர்ப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினார்கள்.

மீமக்களின் அறிவியல் ஆராய்ச்சியினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது; ஆனால் அதற்கு நாம் தந்த விலை என்ன ? மனிதர்கள் எவரும் இனி ஒரு போதும் விஞ்ஞான முன்னேற்றத்திற்கு சுயமாக எதுவும் பங்களிக்க முடியாத நிலை தோன்றிவிட்டது. இதனால் பல விஞ்ஞானிகள் அறிவியலை விட்டே ஒதுங்கி விட்டார்கள்; மற்றவர்கள் உரை எழுதத் துவங்கி விட்டார்கள்: மீமக்களின் கண்டுபிடிப்புக்களுக்கு விளக்கவுரைகளை எழுதுவதன் மூலம்.

கிடைத்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு எழுத்தில் விளக்க உரையெழுதுவது முதலில் பிரபலமாயிற்று. ஏனெனில் மீமக்கள் ஏராளமாக எழுதி வைத்திருந்த தகவல்களின் மொழி பெயர்ப்புகள் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருந்தாலும், அவற்றின் உள்ளடக்கம் அனேகமாகப் பிழைகளற்று இருந்தது. மீமக்களின் எழுத்துக்களைப் புரிந்து கொள்வதை பழங்காலக் கல்வெட்டு ஆராய்ச்சியுடன் ஒப்பிட முடியாதெனினும், இத்துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: சமீபத்தில் நடந்த ஆய்வுகளின்படி, பத்தாண்டு முந்தையதான மரபியல் வரலாற்று இயைபுகள் பற்றிய மொழி பெயர்ப்புகள் சரியாகவே அமைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீமக்களின் தொழில் நுட்பத்தால் உருவான பயன் பொருள்களை அலசி ஆராய்ந்து அமைப்பிற்கு விளக்கம் எழுதும் முயற்சிகள் எழுந்தன. அவர்களின் கருவிகளை ஆராய்ந்து அவற்றின் அறிவியலைப் புரிந்து கொள்ளும் முயற்சிகளும் தோன்றின. கருவிகளின் பொறியியல் கட்டுமானத்தைப் பின்னோக்கி அலசிப் பார்க்கச் செய்த முயற்சிகள் யாவும் போட்டியாக அதே போன்றவற்றை நாமும் வடிவமைப்பதற்கு அல்ல; அவற்றின் பின்னுள்ள இயற்பியல் விதிகளைப் புரிந்து கொள்வதற்கே. மூலக் கூறுகளை ஒன்றிணைத்து எப்படி மிகச்சிறிய நுண்-அமை கருவிகளைச் (nanoware) செய்கிறார்கள் என்பதை ஆராயப் படிகவியல் (Crystallography) அனேகமாகப் பயன்பட்டது.

மீமக்களின் அறிவியலுக்குள் புக இப்போதெல்லாம் ஒரு பரீட்சார்த்தமான முறை கைக்கொள்ளப்பட்டு வருகிறது: வெளியிலிருந்தபடியே தொலைத்தொடர்பு மூலம் அவர்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்குள் உற்று நோக்குவது. இவ் வகையில் சமீபத்தில் செய்யப்பட்ட முயற்சி, கோபி பாலைவனத்தில் அவர்கள் அமைத்துள்ள மாபெரும் அணுத்துகள் சோதனைக் கருவியைப் புரிந்துகொள்ள முயன்றதேயாகும். இந்தக் கருவியின் புதிரான நியூட்ரினோ தடயங்கள் பற்றிப் பலவிதக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. (கைக்கு அடக்கமாக ஒரு நியூட்ரினோ அளவிடும் கருவியை அவர்கள் எப்படிச் சாதித்தார்கள் என்பதே மற்றொரு பிடிபடாத புதிர்).

இப்போது மீமக்களின் அறிவியலைப் புரிந்து கொள்ளூம் முயற்சிகளே அவசியம்தானா என்ற கேள்விக்கு வருவோம்: இது தேவையற்ற காலவிரயம் என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் ஐரோப்பிய எஃகுக் கருவிகள் புழக்கத்திற்கு வந்த பிறகும் அமெரிக்கப் பழங்குடியினர் சிறிது காலம் வெண்கலம் தயாரிக்கும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தது போலிருக்கிறது என்பது அவர்கள் வாதம். ஆனால் இப்படிப்பட்ட ஒப்பீடுகள், மனிதர்களுக்கும் மீமக்களுக்கும் இடையே போட்டி ஏதும் இருந்தால்தான் பொருந்தும். எல்லோருக்கும் எல்லாம் தராளமாகக் கிடைக்கும் இன்றைய பொருளாதாரத்தில், இத்தகைய போட்டி நிலவுவதற்கான அறிகுறிகள் இல்லை. சொல்லப்போனால், தற்போதைய நிலையே வேறு – முந்தைய காலகட்டங்களில், தொழில் நுட்பத்தில் முன்னேறிய ஒரு பண்பாடும், பின் தங்கிய ஒரு பண்பாடும் நேருக்கு நேர் சந்தித்த போது என்ன நடந்தது என்பது வரலாறு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மனித இனத்திற்கு அது போல முழுவதும் கரைந்து போவதோ, அல்லது அழிவோ நேரும் அபாயம் எதுவும் இல்லை.

மனித மூளையை மீமக்களுக்கு இணையாக வலுப்படுத்துவது சாத்தியமில்லை. கருவில் மூளை செல்கள் உருவாவதற்கு முன்னரே சுகிமோட்டோ மரபணு சிகிச்சை செய்வதுதான் இதற்கு ஒரே வழி. ஆனால் இப்படித் தயாரிக்கப்பட்ட மீகுழந்தைகளுடைய பெற்றோர்களின் நிலை சிக்கலானது: குழந்தை வளர வளர அது மீமனிதர்களுடனேயே மேலும் மேலும் நேரடி நரம்பணுத் தொடர்பு கொண்டு, தங்களுக்குப் புரியாத ஜீவனாக வளர்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதா, அல்லது குழந்தையின் ஆரம்ப வருடங்களில் வெளியுலகத்துடன் நரம்பணுத் தொடர்பு கொள்வதையே குறைத்துத் தடுத்து அதன் மன வளர்ச்சியையே முடக்கி விடுவதா என்பது சிக்கலான கேள்வி. இப்போதெல்லாம் பெற்றோர்கள் சுகிமோட்டோ சிகிச்சையை நாடுவது அனேகமாக நின்றுவிட்டதில் வியப்பில்லை.

எனவே, மனித நாகரீகம் இன்னும் பல காலம் உயிர் வாழும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சம், அறிவியல் தேடல். சுயமான கண்டுபிடிப்புகளைத் தவிர, மற்றவர் கண்டுபிடிப்பைப் பகுத்துணர்ந்து கொள்வதும் கூட மனித அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு ஒரு வழியே. இதில் தவறு ஏதுமில்லை.

மீமக்கள் தொடராமல் விட்டு வைத்திருக்கும் சில ஆராய்ச்சித் துறைகளை மனித விஞ்ஞானிகள் இனம் கண்டுகொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மீமக்கள், தங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட தகவல் தொடர்பு வசதியின் காரணமாக மனிதர்களின் சில குறைபாடுகளை உணராமலேயே இருக்கக் கூடும். உதாரணமாக, மனித மூளையைப் படிப்படியாக வளர்த்து மீமக்கள் அளவுக்குக் கொண்டு செல்லும் ஒரு தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்படுகிற வாய்ப்பு இருந்தால், நம்மிரு உயிரினங்களுக்கிடையேயான அறிவுப் பள்ளத்தை நிரப்ப முடியும். ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும் என்றே மீமக்களுக்குத் தோன்றாது. இந்த ஒரு சாத்தியக்கூறே போதும், மனித இனத்தின் விஞ்ஞான ஆராச்சியைத் தொடர்ந்து நடத்துவதற்குப் போதுமான காரணம் கொள்வதற்கு.

மீமக்களின் அறிவியல் சாதனைகளின் அளவைக் கண்டு நாம் ஒன்றும் மலைத்துச் செயலிழந்து நிற்கத் தேவையில்லை; மீமக்களை முதலில் தயாரித்த தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்ததே நம் போன்ற மானிடர்கள்தாம் – அவர்கள் எப்படியும் நம்மைவிட அறிவில் மேம்பட்டவர்களாக இருந்திருக்க முடியாது.

r_for_raja@rediffmail.com

Series Navigation

டெட் சியாங்

டெட் சியாங்