ஒளியவன்.
அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர் கூறியிருந்தார்.
“என்ன பாண்டியண்ணே புதுசா இன்னைக்கு யாரோ வர்றாருன்னீங்க, இன்னும் வரலையா?”
“வந்துடுற நேரம்தாம்பா, 8.00 கு இன்னைக்கு வர்றேன்னாரு, 8.30 ஆயிடுச்சு, வந்துடுவாரு.”
“சரிண்ணே, புதுசா ஒரு சாவி போட்டுருங்க, இன்னைக்கு வர்றவருக்குத் தேவைப்படும். நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன்.”
வீட்டைக் காலிபண்ணும்போது சாவியையும் சேர்த்தே கொண்டு போயிடுறானுக, ஒவ்வொரு தடவையும் புது சாவி போட வேண்டி கெடக்கென்று புலம்பிக் கொண்டே சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்.
கட்டிட வேலை கண்காளிப்பாளன்ங்குறதால அடிக்கடி ஒவ்வொரு ஊருக்குப் போக வேண்டியிருக்கும். இந்த தடவை மதுரைக்கு வந்திருந்தான். பல நேரம் வேலைக்குப் போயிட்டு அடுத்த நாள் காலையில கூட வருவான். வழக்கமா போற திருமங்கலம் ரோட்டுல பேருந்துல இருந்து இறங்கி கட்டிடம் கட்டுற இடத்துக்குப் போயிகிட்டு இருந்தான். வழியில கொஞ்சம் கூட்டமா இருக்குறதப் பார்த்து அங்கே போனான்.
“என்னாச்சுங்க, எதுக்கு இவ்வளவு கூட்டம்?”
“யாரோ வலிப்பு வந்து கிடக்குறாங்க, சாவி கொடுத்தும் நிக்கல” கூட்டத்துல இருந்த ஒருத்தர் கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னார்.
“தள்ளி வாங்க, அவருக்கு ஏதாவது ஆயிடப் போகுது, பக்கத்துல மருத்துவமனை எங்க இருக்கு?”
“பக்கத்து தெருவுல கூட ஒண்ணு இருக்குப்பா”
சடாலென கீழே விழுந்திருந்தவரைத் தூக்கிக் கொண்டே கொஞ்ச தூரத்துலேயே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அளவுக்கு அதிகமாகவே கொஞ்சம் மருத்துவமனையை பரபரப்பாக்கிவிட்டான் அப்துல்லா.
“யாருப்பா இங்க இவரை சேத்தது, அவருக்கு சரியாயிடுச்சு, கூட்டிகிட்டுப் போகலாம். அப்படியே நர்ஸைப் பாத்து காசு எவ்வளவுன்னு கேட்டுக்குங்க” டாக்டர் எந்தவித சலனமுமின்றி தனது வேலையை முடித்துவிட்டுக் கூறினார்.
வெளியே இருந்து ஓடிவந்த அப்துல்லா, மூச்சு இளைத்துக் கொண்டே கையிலிருந்த பையை கீழே வைத்தான்.
“நாந்தான் டாக்டர், அவரைக் கூட்டிகிட்டு வந்தேன். எப்படி இருக்காரு, பிரச்சினை ஒண்ணுமில்லையே?!”
உள்ளே சென்று அந்த நபரைப் பார்த்தான்.
“எப்படி இருக்கீங்க. உங்க பை இதுன்னு நினைக்குறேன். எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க. உங்களுக்கு எதுவும் பிரச்சினையில்லையாம். நீங்க இனி உங்க வீட்டுக்குப் போகலாம். பணத்தைக் கட்டிட்டேன். உங்களுக்கு ஆட்டோக்கு எதுக்கும் காசு வேணுமா?”
“உங்களைப் பார்த்தா இஸ்லாம் மாதிரி தெரியுது, நானும்தான். இன்ஷா அல்லா, நல்ல நேரத்துல என்னைக் காப்பாத்துனீங்க. இல்லைன்னா அங்கேயே செத்திருப்பேன்.”
“யாருக்கா இருந்தாலும் செஞ்சிருப்பேன். எல்லாமே உயிர்தானே. காப்பாத்த மட்டும்தான் அல்லா உத்தரவிட்டிருக்கான் அழிக்க இல்ல. எனக்கு நேரமாகுது நான் கிளம்பணும். நீங்க எங்க போகணும்னு சொல்றீங்களா?”
“நீங்க செஞ்ச உதவியே போதும். இனி நான் போய்க்குறேன். நீங்க செஞ்ச உதவியை அல்லாகிட்ட போற வரைக்கும் மறக்க மாட்டேன்”.
பையையும் எடுத்துக் கொண்டு சேவல் பண்ணையை நோக்கி நடந்தான் காதர்.
“இன்னைக்கு வர்றேன்னு சொன்னவன் நான்ந்தான். வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு. என்னோட அறை எதுன்னு சொல்றீங்களா?”
பாண்டியன், அப்துல்லா அறைக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார். உள்ளே இருந்த அப்துல்லாவின் படத்தைப் பார்த்துவிட்டு வியப்படைந்த காதர்
“இவருதான் இங்க தங்கியிருக்காரா? இன்னைக்கு நான் செத்துருக்க வேண்டியவன், இவர்தான் என்னைக் காப்பாத்தினாரு” என்று நடந்ததைக் கூறினான்.
“இவனா, நல்ல பையன்பா, இந்தப் பண்ணையில இந்த மாதிரி பையனை நான் பாத்ததில்ல, இங்க திருமங்கல ரோட்டோரத்துல இருக்க ஒரு கோவிலுக்குப் பக்கத்துல ஒரு கட்டிடம் கட்றாங்க, அங்கதான் வேலை பாக்குது இந்தத் தம்பி. சாய்ந்திரம் வந்திடும்.”
இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு பையிலிருந்து ஒரு கட்டிங் ப்ளேயரும், கத்தியும் எடுத்துகிட்டு உடனே தலை தெறிக்க ஓடினான். அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்தோட அஸ்திவாரத்துக்கு ஓடினான். மதுரையில தொடர்ந்து ஒரு மாசத்துக்கு அங்க இங்கன்னு குண்டு வைக்குறதுக்காக வந்தவந்தான் காதர். தன்னோட உயிரையே காப்பாத்துன அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்துல மூன்று குண்டுகளை வைத்திருந்தான். வேக வேகமாக ஒவ்வொரு குண்டா செயலிழக்க வச்சுகிட்டு இருந்தான். மூன்றாவது குண்டு படாரென்று பெரிய சத்தத்தோடு வெடித்தது. மேலே நின்ற அப்துல்லா முதற்கொண்டு இரண்டு பேர் கீழ விழுந்தார்கள். அடி பலமா படலைன்னாலும் அப்துல்லாவிற்கு கை பிசங்கிக் கொண்டது.
அடுத்த நாள் பாண்டியனிடம் நாளிதழ் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தான் அப்துல்லா பிசங்கிய கையில் கட்டோடு.
“ஏண்ணே, வீட்டுக்கு வந்தவரோட பை இருக்கு, ஆனா ஆள் வரவே இல்லையே?!”
“வந்து பைய வச்சுட்டு இதோ வர்றேன்னு ஓடிப் போனவருதாம்பா. ஆளைக் காணோம். இன்னைக்குப் பார்ப்போம், வரலைன்னா பையை தூக்கி வெளியே போட்டுடுவோம்”
செய்தித்தாளை உரக்க வாசித்தான்.
“இந்தியாவின் பல நகரங்களையடுத்து மதுரையிலும் குண்டு வெடிப்பால் மக்கள் பீதி. திருமங்கலம் செல்லும் சாலையில் ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டால் சரிந்தது. வெடியில் சிக்கிய ஒரு வாலிபர் அடையாளம் காணமுடியாத வகையில் உடல் கருகி மரணம். அங்கே வெடிக்காத இரண்டு குண்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டது….”
- தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6
- ஒளியூட்டுவிழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 11 (இறுதிக் காட்சி)
- பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்
- எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “
- கிராமியப் பாடல்களில் கட்டபொம்மன்
- இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்
- நீர் வளையங்கள்
- அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !
- “கிளர்ச்சி”
- வேதவனம் -விருட்சம் 6
- வனாந்திரத்தின் நடுவே..
- கடவுளானேன்.
- அண்ணலே நீக்குவாய் இன்னலே
- பிம்பங்கள்.
- இசைபட…!
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 3
- நவராத்திரி – பசுமையான நினைவுகள்
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 2
- நினைவுகளின் தடத்தில் – (20)
- அப்பாச்சி -2
- அப்பாச்சி
- என் பெயர் ஒளரங்கசீப்!
- உதவி
- சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்து
- மனிதமென்னும் மந்திரம்