மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

அசுரன்


இப்பூவுலகிலுள்ள உயிரினங்களின் உயிர் வாழ்வுக்குத் தேவையான இயற்கை வளங்களில் மூன்றில் இரண்டு பங்கை சுரண்டியதன் மூலம் மனிதகுலமானது இப்பூவுலகின் மிக மோசமான சுரண்டல் கும்பலாக உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். யாரோ ஒரு பொறுப்பற்ற அல்லது பரபரப்பு விஞ்ஞானியில் திகைப்பூட்டும் அறிக்கையல்ல இது. 95 நாடுகளைஷ சேர்ந்த 1,360 விஞ்ஞானிகளின் தீவிர ஆய்வின் சாரமாக வெளிப்பட்டுள்ள உண்மையே இது. இவர்களில் சிலர் தமது துறைகளில் உலகப்புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையானது உலக வங்கியின் முதன்மை விஞ்ஞானியும், வெள்ளை மாளிகையின் முன்னாளைய அறிவியல் ஆலோசகருமான இராபர்ட் வாட்சனின் தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்டு வாஷிங்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் வாழும் உயிரினங்களுக்குத் தேவையான வகையில் காற்றை, நீரை, சத்துப்பொருட்களை மறுசுழற்சி செய்து அளிக்கவல்ல காடுகள், நஞ்சை நிலங்கள், சதுப்புநிலங்கள் போன்ற இயற்கை அமைப்புகள் யாவும் மீண்டும் சீரமைக்க இயலாத அளவிற்கு மனிதகுலத்தால் சீரழிக்கப்பட்டுவிட்டதாகவும், இதன்விளைவாக இப்பூவுலகிலுள்ள ஒரு இனம் (மனிதர்கள்) எஞ்சிய சுமார் ஒரு கோடி இனங்களுக்கு மட்டுமல்லாது தனக்கேகூட ஆபத்தானதாகிவிட்ட அவலம் ஏற்பட்டுள்ளதாக இந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மனிதகுல நடவடிக்கைகளின் விளைவாக பூமியின் இயற்கையான செயல்பாடுகளின்மேல் சுமத்தப்பட்டுள்ள இந்த அழுத்தத்தால், நமது எதிர்காலத் தலைமுறையினருக்கும் தேவையானவற்றை வழங்கி, தாங்கும் தன்மையை இப்பூவுலகானது இழந்துவிடும் என்றும் எச்சரிக்கிறது அந்த அறிக்கை.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் நம் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன், நாம் இயற்கையைப் புரிந்து, அத்துடன் இணைந்து வாழவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துபவையாக உள்ளன.

ஃ மக்கள்தொகை அதிகரிப்பால் உணவு, நன்னீர், மரம், நார், எரிபொருள் ஆகியவற்றின் தேவை அதிகரித்ததால் 18, 19 ஆகிய இரு நூற்றாண்டுகளிலும் சேர்த்து எவ்வளவு நிலம் அதிகமாகப் பயிரிடப்பட்டதோ அதேயளவு நிலம் கடந்த 60 ஆண்டுகளில் மட்டும் அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளது. இப்போது பூமியின் பரப்பளவில் 24% நிலத்தில் பயிரிடப்படுகிறது.

ஃ கடந்த 40 ஆண்டுகளில் நீர்நிலைகள், ஆறுகளில் இருந்து நீரை எடுப்பது இரு மடங்காகியுள்ளது. பூமியில் ஓடும் நன்னீரில் 40% முதல் 50% மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது.

ஃ உலகில் மொத்த மீன் இருப்பில் 25%க்கும் அதிகமாக பிடிக்கப்பட்டுவிட்டது. சில பகுதிகளில் தொழில்மயமாக்கப்பட்ட பின்னர் மீன்பிடிப்பானது கிட்டத்தட்ட நூறு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃ 1980ஆம் ஆண்டின் பின்னர் மட்டும் உலகிலுள்ள அலையாத்திக் காடுகளில் 35% அழிக்கப்பட்டுவிட்டன. உலகின் பவளப்பாறைகளில் 20% அழிக்கப்பட்டும், மேலும் 20% அழிவபாயத்திலும் உள்ளன.

ஃ காடழிப்பு போன்றவற்றால் மலேரியா, காலரா போன்ற நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது. மேலும், இதுவரையிலும் நாம் கண்டறிந்திராத புதிய புதிய நோய்கள் உருவாகிப் பரவி வருகின்றன.

என்றெல்லாம் எச்சரித்துள்ளது இந்த விஞ்ஞானிகள் குழுவின் அறிக்கை.

1997ஆம் ஆண்டில் ஒரு உயிரியலாள˜கள் குழு இயற்கையால் மனிதகுலத்திற்கு இலவசமாக வழங்கப்படும் ‘சேவையின் ‘ பொருளாதார மதிப்பைக் கணக்கிட்டது. அதாவது மகரந்த சேர்க்கை, வெப்பத்தைக் குறைத்து காற்றை பதப்படுத்தும் காட்டுத் தாவரங்களின் பணி, கடலால் சத்துக்கள் மறுசுழற்சி செய்யப்படுவது போன்ற சேவைகள் பொருளாதாரரீதியாகக் கணக்கிடப்பட்டன. அது 33,0000 கோடி டாலர் (33 டிரில்லியன் டாலர்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஓராண்டில் உலகின் மொத்த பொருளாதார உற்பத்தியைப்போல கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும்.

நாம் இயற்கையைப் பயன்படுத்துவதைக் குறித்து தெளிவாகக் கணக்கு பார்த்து செயல்படவேண்டியது அவசியமாகும். இதனை வலியுறுத்துகிறது இந்தச் செய்தி. எடுத்துக்காட்டாக, நிலத்தடி நீராதாரமானது மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் வேகத்தைவிட அதிவிரைவாக நாம் நிலத்தடி நீரைச் சுரண்டிவருகிறோம். மேலும், மனிதப் பயன்பாட்டால் ஆறுகளிலும் நீரோட்டமானது நாம் அதிர்ச்சியடையும் அளவிற்குக் குறைந்துவருகிறது. எடுத்துக்காட்டாக, சீனாவின் மஞ்சள் ஆறு, ஆப்பிரிக்காவின் நைல் ஆறு, வடஅமெரிக்காவின் கொலராடோ ஆறு போன்ற உலகின் பெரிய ஆறுகள் ஆண்டில் பல நாட்கள் கடலைத் தொடாமலேயே வறண்டுவிடுகின்றன.

கடலிலுள்ள துனாமீன், வாளைeன், சுறாமீன் போன்ற மாமிச உண்ணி மீன்களில் 90% அண்மைய ஆண்டுகளில் மட்டும் அழிந்துள்ளன. மேலும் பறவை இனங்களில் 12%மும், பாலூட்டிகளில் 25%மும், நீர்நிலவாழ்விகளில் 30%மும் அடுத்த நூற்றாண்டில் அழிந்துவிடும் ஆபத்தில் உள்ளன. இவற்றில் பல அச்சூழலுக்குப் புதிதாக வந்துசேரும் ஊடுருவல் வகைகளால் அச்சுறுத்தப்படுகின்றன என்பது இன்னொரு முக்கியமான செய்தி.

எடுத்துக்காட்டாக, பால்டிக் கடல் பகுதியில் உலகின் பிற பகுதிகளைஷ சேர்ந்த சுமார் 100 வகையான உயிரினங்கள் (ஊடுருவி) புகலிடமாகக்கொண்டுள்ளன. இவற்றில் 75% அமெரிக்காவின் பெரிய ஏரிகளைஷ சேர்ந்தவை. இதேபோல, அமெரிக்காவின் பெரிய ஏரிகளிலுள்ள 170 அந்நிய (ஊடுருவிய) மீனினங்களில் 75% பால்டிக் கடலைத் தாயகமாகக்கொண்டவை.

இப்படியாக ஊடுருவும் உயிரினங்கள் அப்பகுதியின் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க கொண்டை ஜெல்லி மீன்கள் கருங்கடலில் ஊடுருவியதால் வணிக முக்கியத்துவம் வாய்ந்த 26 மீனினங்கள் அழிக்கப்பட்டன. (சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வேறு பகுதிகளிலுள்ள மீன்கள் வந்து குவிந்து, மன்னார் பகுதி மீனவர்களின் வாழ்வு செழிக்கும் என்று வாதிட்ட ‘அறிஞர்கள் ‘ இதனைக் கவனிக்கவும்.) அதோடு, புவிசூடாதல், காலநிலை மாற்றம் போன்ற நிகழ்வுகளும் ஒவ்வொரு பகுதிகளிலுமுள்ள உயிரினங்களின் வாழ்வை சிக்கலானதாக்குகின்றன.

இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்ற முழக்கமானது ஏதோ பொழுதுபோகாத, புகழை விரும்புகிற, மேல்தட்டு வர்க்கத்தின் குரல் அல்ல; அது இப்பூவுலகில் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ விரும்புகிற உயிர்ம நேய அன்பர்களின் குரலே என்பதை அனைவரும் புரிந்துகொண்டு, இப்பூவுலகின் சூழலைக் காக்கும் பணியில் அணிவகுக்கவேண்டும்.

மாறாக, 600 கோடி மனிதர்களின் வாழ்வே முக்கியமானது என்று கருதி, இயற்கையோடு ஒத்துழைத்து வாழ்வதை மறப்போமானால்; மறுப்போமேயானால்… இப்பூவுலகின் இயற்கை எதுவரை ‘சேவை ‘ வழங்குகிறதோ அதுவரை மட்டுமே நாம் உயிருடன் இருக்கமுடியும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நன்றி: பசுமைத் தாயகம்

ஏப்ரல் 2005

(asuran@sancharnet.in)

Series Navigation

அசுரன்

அசுரன்