மனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

தமிழ்மணவாளன்


கவிமனத்துக்கு எப்போதும் துணையாக வருவது கவிதையைத்தவிர

வேறேதுமில்லை. எவ்விதமான மனச்சலனத்துக்கும் மாற்றாக – மருந்தாக

கவிதைதான் வாய்க்கிறது. எழுதப்பட்டாலும் அல்லது எழுதப்படாதிருந்தாலும்

உள்ளுள் கவிதை உருவான வண்ணமே உள்ளது. ஆகவே நிகழ்வுகளை

அர்த்தமுள்ளவைகளாகவும், அர்த்தமற்றவைகளாகவும் அடையாளம் காட்டுகிறது.

மொழியின் எந்தப் பரிமாணத்திலும் ஒன்றிப்போவதாய் இருக்கிறது. எப்போதும்

நமக்கானதாய் , சகமனிதனுக்கானதாய் , சமூகத்தின் சகலவிதமான சங்கடங்களின்

வலி நிறைந்ததாய் -காக்கைக்கும் குருவிக்கும், வாடிய பயிருக்கும் கவனம் தருவதாய்

இருக்கிறது.

எனவே தான் எல்லாவற்றிலும் கவிதையே வாசகனுக்கு மிக அன்னியோன்யமாய்

இருப்பது சாத்தியமாகிறது.

**** **** **** ****

இளம்பிறையின் ‘முதல் மனுஷி ‘ கவிதைத் தொகுப்பை அண்மையில்

படிக்கநேர்ந்தது.

ஆட்டுக் குட்டியை

மடியில் போட்டு

ஈத்திக்கொண்டிருக்கும்

அம்மாவும்

பசுவுக்கு

உண்ணி பிடுங்கி நிற்கும்

அப்பாவும்

படித்ததில்லை

‘உயிர்களிடத்தில் அன்பு வேணும் ‘

(படிக்காதவர்கள்)

கிராமத்துத் தாய் தந்தை குறித்த , அவர்கள் தாம் வளர்க்கும் ஆடு, மாடுகளிடம் கூட எத்தகைய அன்பின் ஊற்றை அடைபடாது காக்கிறார்கள் என்பதை

பேசும்போது ‘ஆட்டுக்குட்டியை மடியில் போட்டு ஈத்துவதையும், பசுவுக்கு உண்ணி ிடுங்குவதையும் அவர்கள் அந்த ஜீவராசிகள் மீது காட்டும் அன்பை உச்சபட்சமாக காட்டிவிட்டு, ஆனாலும் அவர்கள் படித்ததில்லை , ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும் ‘ என முடிகிறது.கிராமத்து வாழ்க்கை கள்ளம் கபடமற்ற அன்பை செலுத்தும் கருத்து வெளிப்படை.

மேலும், வாசகதளத்தில் இது எத்தகைய எண்ண அலைகளை உருவாக்க முடியும்

என்பதை கவனிக்க வேண்டும்.

* கிராமம் சார்ந்த மக்கள் உயிர்களிடத்தில் அன்புகொண்டவர்களாக இருக்கிறார்கள்.

* ஆனால் ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும் ‘ எனப் படித்ததில்லை அவர்கள்

*அவ்விதமாயின், அவ்வுணர்வு அத்தனை இயல்பானதாய் இருக்கிறது அல்லது இன்னமும் பேணப் படுகிறது.

* ஆனால் அதைப் படித்தவர்கள் அவ்விதம் இருக்கிறார்களா ?

* இருப்பதற்கு நகர் சார்ந்த வாழ்க்கை இடமளிக்கிறதா ?

இப்போது கிராமம் சார்ந்த அனுபவம் வாய்த்த வாசகன், கவிதை காட்டும் சித்திரத்தால் தன்னனுபவமாய் எளிதில் எதிர்கொள்ளவியலும். அவிதமான வாய்ப்பில்லாத வாசகனும், மறைமுகமாய் உணர்த்தும், படிப்ப்றிவின் கைங்கர்யமான அன்பு காட்டுவதையும் ஏமாளித்தனமாய் எச்சரிக்கும் முனைப்பின் எத்தனையோ சாட்சியங்களை முன்வைத்து இக்கவிதையை அடைந்துவிடுவது ஏதுவாகும்.அதுஇக்கவிதையின் இருகோண அடைவெனக் கொள்ளலாம்.

இன்னொரு கவிதை. ‘அப்பாவின் நினைவுக்கு ‘.

தேசத்தில் கற்றோர் கணக்கெடுப்பு சதவீதமே கையெழுத்திடத் தெரிந்தவகளைச் சேர்த்துத் தான் என்கிறது புள்ளி விவரம். கிராமத்தில் கையெழுத்துப் போடத் தெரிந்து கொண்டாலே படித்தவராய் மனம் கற்பிதம் செய்து கொண்டு சந்தோஷிக்கும். அது கெளரவம். எல்லாம் அறிந்த லோக குருவுக்கு வேண்டுமெனில் கட்டை விரல் ரேகை கெளரவமாய் இருக்கக் கூடும்.

மதிப்பெண் அட்டையில் தந்தையிடம் கையெழுத்து வாங்கும் சிறுமியின் மனத்தையும் ‘ அந்த முக்கியமான இடத்தில் கையெழுத்துப் போட வாய்த்த தந்தையின் மனத்தையுமுரையாடலாய் உணர்த்திக்காட்டும் கவிதை.

பேனாபிடிப்பார்

கலப்பை போல.

அங்கதமாய் இவ்வரிகள் பேனாபிடிக்கத் தெரியாத தந்தையின் பேனாபிடித்தலைச் சுட்டினாலும், மேலும் செல்லமுடியும். நிலத்தை உழும் பணிக்கொப்பத்தானே மனங்களை உழும் பேனாவின்பணியும்.அதுபோல, காலமெல்லாம் கலப்பை பிடிப்பதைத் தவிர வேறொன்றறியா பாமர விவசாயி வேறெப்படிப் பிடிப்பது சாத்தியமாகும், என்பதாக. பெயரை எழுதிக்காட்டி அதை மீண்டும் கையெழுத்தாய் வாங்கிச் செல்லும் சிறுமி சகமாணவர்கள் மத்தியில் சுப்பிரமணிய வாத்தியார் கிண்டலும் கேலியும் செய்து

விடுவாரோவென கவலையோடு முடியும். ஒரு description பூர்த்தியாவதை உறுதி செய்யும் விதமாய் அங்கங்கே விரவிக்கிடக்கும் உவமைகள். ‘வண்டு பூ நிற மதிப்பெண் அட்டை ‘, ‘மாடொன்றைத் தவறவிட்டு வந்து பண்ணையார் முன் நிற்கும் மேய்ப்பராய் ‘,என்கிறார். வலிந்து எழுதாத இவரின் வார்த்தைகள் பூடகமோ பாசாங்கோ இன்றி வெகு இயல்பாய் இருக்கின்றன.

**** **** ****

அண்மைக்காலமாக பெண்மொழி குறித்து பெரிதும் பேசப்படுகிறது. பெண்கவிஞர்கள் தமக்கான மொழியை சுதந்திரமாக தாமே கண்டடைவதற்கான பயணம் நிகழ்கிறது. அதன் முக்கியக் கூறாக ஆணாதிக்க மனோபாவத்தின் மீதான எதிர்வினை உணர்வுபூர்வமாகவும், உத்வேகத்தோடும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதன் வாயிலாக ஆணாதிக்கத்தின் மீதான எதிர்வினை ஆண்களின் மீதானதாய் ,வெறுப்புமிழ்வாய் மாறிவிடக்கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுஇயல்பானது. அதுவே பரிணாமத்தின் புத்துயிர்ப்பை கட்டமைக்கக்கூடியது.

அவ்விதத்தில், இளம்பிறையின் கவிதைகளில், ஆணாதிக்கத்திற்கெதிரான குரல் பதிவாகும் அதே வேளை ஆணுக்கும் பெண்ணுக்குமான மனரீதியான இடைவெளிகளும் இடைவெளிகளை நிரப்புதலும் வாழ்வின் பாதையில் நிகழும் யதார்த்தமான , சுவார்ஸ்யமான அம்சமென்பதை மறுதலிக்காத பதிவுகளும் இருக்கின்றன. அதை ஒரு முக்கியமான அம்சமாக ,திட்டமிட்டு கட்டமைக்கப்படாத மன வெளிப்பாடாக அறியமுடிகிறது. ‘பனிக்காலப் பதிவுகள் ‘ அத்ற்கு சரியான அடையாளம்.

நெகிழ்ந்து போகிறேன்

உன்னோடு பேசிக்கொண்டிருப்பதை விட

உன்னைப் பற்றி

பேசிக்கொண்டிருப்பதில்

இன்னும் கூடுதலாய்

அண்மையில் நான் வாசித்த லீனா மணிமேகலையின் ‘ஒற்றையிலையென ‘ தொகுப்பிலும்

காண முடிகிறது.

காதல் அனுபவம் யார்க்கும் வாய்க்கக் கூடியது தான். மானுடத்தின் தொடக்கத்திலிருந்து நிகழ்வது தான். எத்தனையோ கோடி கோடி காதலர்களை இவ்வுலகம் கண்டிருக்கும் ; இனிமேலும். ஆயினும் கூட அவரவர்க்கான காதல் புதியது ;புத்தம் புதியது ; சிறப்பானது ; பிரத்யேகமானது. வேற்ந்தக்காதலோடும் ஒப்பிடமுடியாத உய்ர்வானது.

பேசிக்கொள்வார்கள் தானே

நம்மைப்போல் யாரும்

இருக்க முடியாதென

நம்மைப் போலிருக்கும்

நிறயக் காதலர்கள் (பனிக்காலப் பதிவுகள்)

**** **** **** ****

இடம் பெயர்தலென்பதும் , அதனூடாக சந்திக்க நேரும் புதிய மனிதர்களும் , புதிய சூழ்நிலையும் அச்சூழலோடு ஒத்திசைய அல்லது இயலாத ம்னோபாவத்தின் இடர்பாடும் வாழ்க்கைப்போக்கில் மிகமுக்கியமானது. நகர் நோக்கி நகரும் கிராமமக்களின் ஒவ்வோர் மனமும் குறிப்பிடத்தக்க இத்தகைய தருணங்களை தவிர்க்கவியலாது.

‘நான் பேசும் போதெல்லாம்

கூடகூடச் சிரிக்கிறீர்களே, ஏன் ?

‘பீச்சப் போயி கடற்கரங்கிற

பேப்பர செய்தித்தாள்ங்கிறே

ஸ்கூலப் பள்ளிங்கிறே

ஃப்ரண்டை தோழிங்கிறே

சிரிப்பு வராதா எங்களுக்கு ? ‘

**** **** **** ****

புத்தகத்தின் தலைப்பான ‘முதல் மனுசி ‘ , ‘உனக்கான கவிதை ‘ , ‘கரைந்துபோதல் ‘ போன்ற மேலும் சொல்வத்ற்கு கவிதைகள் உண்டு. நகருக்கு அழைத்து வந்து விட்டதால் தன் மழலை இழந்ததைப் பேசும் ‘தொட்டிச் செடியும் ‘.

‘ கபடம் ‘ கவிதையில் ,

அறியாமல் அல்ல

உன் கபடங்களோடு சேர்த்தே

அணைத்துக்கொள்கிறேன்

என்று ‘எல்லா அறிதல்களோடும் விரிகிறெதென் யோனி ‘ என்னும் சல்மாவின் வரிகளின்

சாயலோடு ஒத்துப்போகிறது.

புனைவு தளத்தில் புதிய உத்திகளை எதிர்காலத்தில் தான் இவர் கைக்கொள்ளக்கூடும். தொடரும் இயக்கத்தில் பலபரிசோதனை முயற்சிகள் சாத்தியமாகக்கூடும் . சில கவிதைகள் நிகழ்சிப் பதிவாக நின்றுபோய் விடுகின்றன. அதனால் என்ன ? மனதோடு உறவாடும் மற்ற கவிதைகளுக்காக பாராட்ட வேண்டும் தானே!

—-

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்