மனத்தின் வைரஸ்கள்

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

ரிச்சர்ட் டாக்கின்ஸ்


(Viruses of the Mind , Richard Dawkins, 1991)

மீம்கள் தங்கி வசிக்கும் இடம் மனித மனம். ஆனால், மீம்கள் தாங்கள் வசிக்க வசதியாக கட்டிய ஒரு வாசஸ்தலமே மனித மனம் என்பதும். இவைகள் நுழையவும், வெளியேறவும் கட்டிய வழிகள் வசிக்கும் ஒவ்வொரு பிராந்திய சூழ்நிலைகளையும் பொறுத்தது. செயற்கையாகக் கட்டப்பட்ட கருவிகள் மூலம், ஒரே மாதிரியாகவும் வசதியாகவும் பிரதியெடுப்பதன் மூலம் இன்னும் வலிமையடைகிறது. சீனாவில் வாழும் சீனர்களது மனம், ஃப்ரான்ஸில் வாழும் ஃப்ரெஞ்சின் மனத்தை விட மாறுபட்டது. படித்தவர்களது மனம் படிக்காதவர்களது மனத்தை விட மாறுபட்டது. தாங்கள் வாழும் மனத்தின் சொந்தக்காரருக்கு இந்த மீம்கள் அளிக்கும் பயன்கள் ஏராளமானவை. அத்தோடு கூட சில ட்ரோஜன் குதிரைகளும் நல்ல எண்ணிக்கையில் வருகின்றன…

டானியல் டென்னட், ‘தன்னுணர்வு விளக்கம் ‘ Consciousness Explained என்ற புத்தகத்தில்

1. பிரதியெடுக்க ஒரு தீனி (Duplication Fodder)

என் அருகில் நிற்கும் 6 வயதுக் குழந்தை, தாமஸ் என்ற பேசும் ரயில் வண்டி எஞ்சின் உண்மையிலேயே இருக்கிறது என்று நம்புகிறாள். கிரிஸ்மஸ் தாத்தா உயிருடன் இருப்பதாகவும் நம்புகிறாள், பெரியவளானதும் அவள் பல்லுக்கான தேவதையாகவும் விரும்புகிறாள். அவர்கள் மதிக்கும் வளர்ந்த பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகளை அவளும் அவளது சினேகிதிகளும் நம்புகிறார்கள். நீங்கள் எது சொன்னாலும் நம்பும் வயது அந்தச் சிறு பெண்ணின் வயது. இளவரசர்களை தவளைகளாக மாற்றி விடும் சூனியக்காரிகளைப் பற்றிச் சொன்னாலும் அவர்கள் நம்புவார்கள். கெட்ட சிறுமிகளை நரகத்தில் நெருப்பில் சுடுவார்கள் என்று சொன்னால் அவளுக்கு இரவெல்லாம் தீக்கனவுகள் வரும். அப்படிப்பட்ட இந்த 6 வயதுச் சிறுமி தந்தையாரின் அனுமதியில்லாமல், வாராவாரம் ஒரு ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரியிடம் அறிவுரைகளைக் கேட்க அனுப்பப் படுகிறாள் என்பதை. நான் சமீபத்தில் தான் கண்டுபிடித்தேன். இவளுக்கு என்ன எதிர்கால வாய்ப்பு இருக்கிறது ?

ஒரு மனிதக்குழந்தை தனது மக்களின் கலாச்சாரத்தை உறிஞ்சிக்கொள்ளுமாறு பரிணாமத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் தெளிவாக, தங்களது மொழியின் அடிப்படைகளை சில மாதங்களிலேயே கற்றுக்கொள்கிறது. ஒரு பெரிய அகராதி அளவுக்கு இருக்கும் வார்த்தைகளைப் உச்சரிக்கவும், ஒரு கலைக்களஞ்சியம் அளவுக்கு இருக்கும் விஷயங்களை பேசவும், கடினமான மொழியியல் வடிவமைப்புகளும், பெரியவர்களின் மூளையிலிருந்து இந்த இளம் மூளைக்கு மாற்றப்படுகிறது (அனுப்பபடுகிறது). மிகவும் உபயோகமான விஷயங்களை அதிக வேகத்தில் இறக்கிக்கொள்ள உங்களது மூளை வடிவமைக்கப்பட்டிருக்கும்போது, தவறான, ஆபத்தான விஷயங்களை அதே நேரத்தில் தடுப்பதும் கடினமானது. இத்தனை மன ‘பைட் ‘டுகள் இறக்கப்படும்போது, மன ‘கோடான் ‘கள் பிரதியெடுக்கப்படும்போது, குழந்தைகளின் மூளை ஏமாற்றப்படுவதற்கு எளிதானதாகவும், எதைச் சொன்னாலும் நம்புவதாகவும் இருப்பதில் ஆச்சரியமில்லை. இது மூனிகள், ஸயன்டாலஜி ஆட்கள், கத்தோலிக்க கன்யாஸ்திரிகள் போன்றோருக்கு எளிமையான பலிகடாவாக இருப்பதில் ஆச்சரியமில்லை. எதிர்ப்புச் சக்தியற்ற நோயாளிகள் போலவே, பெரியவர்கள் எளிதாக தூக்கி எறிந்துவிடும் விஷயத்திடமிருந்து கூட, குழந்தைகளால் தங்களைக் காத்துக்கொள்ள முடிவதில்லை.

டி என் ஏ விலும் ஒட்டுண்ணி கோடான்கள் இருக்கின்றன. நமது செல்லின் உள்ளே இருக்கும் அமைப்பு, டி என் ஏவை பிரதி எடுக்கும் வேலையில் வல்லமை படைத்தது. டி என் ஏவைப் பொறுத்த மட்டில், அது தன்னைப் பிரதிஎடுக்க எளிமையாகவும் அனுமதிக்கிறது. செல் நியூக்கிளியஸ் என்ற மையப்பகுதி மிகவும் நிபுணத்துவத்துடன், வேகமாகவும், துல்லியமாகவும் டி என் ஏவைப் பிரதிஎடுக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது.

நமது உடலின் உள்ளே இருக்கும் செல் அமைப்பு டி என் ஏ பிரதி எடுப்பதில் மிகவும் ஆவலாக இருக்கின்ற படியால், நமது செல் டி என் ஏ ஒட்டுண்ணிகளுக்கும் வேலை செய்வதில் ஆச்சரியமில்லை. வைரஸ்கள், வைராய்ட்கள், பிளாஸ்மிட்கள், இன்னும் பல ஏமாற்றுவேலை பண்ணும் ஜெனடிக் பிரயாணிகளையும் நமது செல் பிரதி எடுத்துத் தள்ளுகிறது. ஒட்டுண்ணி டி என் ஏ அழகாக பிரிக்கப்பட்டு குரோமசோம்களாக உடைகிறது. இந்த ஒட்டுண்ணி குரோமசோம்கள் இன்னும் பலவாறாக பிரிந்து தங்களை பிரதியெடுத்துக்கொண்டே போகின்றன. அத்தோடு தங்களை நமது குரோமசோம்களோடு ஒட்டிக்கொண்டும் விடுகின்றன. ஆபத்தான ஆன்கோஜென் (oncogens) நமது உண்மையான ஜீன்களிடமிருந்து வித்தியாசமே பார்க்கமுடியாதபடிக்கு இணைந்துவிடுகின்றன. பரிணாமத்தில் பார்த்தால், இவ்வாறு ஜீன்கள் உள்ளே வருவதும் வெளியே போவதும், நேரான ஜீன்கள் துரத்தப்படுவதும், வெளியே இருக்கும் துரத்தப்பட்ட ஜீன்கள் உள்ளே வந்து நேரான ஜீன்களாக ஆவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது (டாக்கின்ஸ், 1982). டிஎன் ஏ வெறும் டி என் ஏதான். ஒரு வைரஸ் டி என் ஏவுக்கும், உள்ளே இருக்கும் நேரான டி என் ஏவுக்கும் வித்தியாசம் அவை எப்படி அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன என்பதை வைத்துத்தான். நேரான டி என் ஏ அடுத்த தலைமுறைக்கு, விந்து, முட்டை வழியாகச் செல்கிறது. ‘துரத்தப்பட்ட ‘ டி என் ஏ, காயத்தில் வரும் ரத்தத்தில் ஒட்டிக்கொண்டோ, விழும் ஒரு தண்ணீர் துளி மூலமாகவோ குறுக்கு வழியில் நேரான டி என் ஏவுக்குள் புகுகிறது.

நமது கணினியில் உபயோகப்படுத்தும், செய்தித் தகட்டைப் பார்ப்போம். இதுவும், நமது செல் எப்படி டி என் ஏவை நகலெடுக்க ஆர்வமாக இருக்கிறதோ அது போல இதுவும் செய்திகளை நகலெடுக்க எளிமையாக இருக்கிறது. கணினிகளும், அதனுடன் கூட உபயோகப்படுத்தும் தகடுகளும், செய்தி நாடாக்களும், துல்லியத்தையும் சரியாக நகலெடுத்தலையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. டிஎன்ஏ மூலக்கூறுகள் போல, காந்த பைட்கள் பரிசுத்தமாக நகலெடுக்க ‘வேண்டு ‘வதில்லை. இருப்பினும், தன்னைத்தானே பிரதியெடுத்துக்கொள்ளும் ஒரு நிரலை (புரோகிராமை) நம்மால் எழுத முடியும். தன்னைத் தானே நகலெடுத்தலை மட்டுமல்ல, இன்னும் பல கணினிகளுக்கு பரவும் படிக்கும் அந்த நிரலை எழுத முடியும். கணினிகள் பைட்டுகளை நகலெடுப்பதில் துல்லியமானவையாக இருப்பதாலும், அந்த நிரலில் சொல்லப்பட்ட கட்டளைகளை துல்லியமாக நிறைவேற்றுவதில் சரியானவையாக இருப்பதாலும், தன்னைத்தானே நகலெடுத்து பரப்பும் நிரல்களுக்கு பலிகடாக்களாக உட்கார்ந்திருக்கின்றன. ‘சுயநல ஜீன்கள் ‘ பற்றிப் படித்த எவரும், இந்த கணினி உலகத்தையும், அதில் இருக்கும் இணைப்புகளையும், தகடுகளையும், மின்னஞ்சல் இணைப்புகளையும் பார்த்துவிட்டு, எவ்வளவு எளிதாக

பிரச்னையை உண்டுபண்ணலாம் என்று உடனே உணர்ந்து கொள்ளலாம். சமீபத்திய கணினி வைரஸ் பிரச்னைகளைப் பார்க்கும் போது அவை ஏன் இவ்வளவு தாமதமாக வந்தன என்பதுதான் ஆச்சரியம்.

2 கணினி வைரஸ்கள். நோய்களுக்கு ஒரு மாதிரி வடிவம் ( Computer Viruses: a Model for an Informational Epidemiology)

ஏற்கெனவே இருக்கும் சரியான, சட்டரீதியான நிரல்களோடு ஒட்டிக்கொள்ளும் கணினிக் கட்டளைத் தொகுப்பையே கணினி வைரஸ்கள் என்று அழைக்கலாம். இவை இவ்வாறு ஒட்டிக்கொண்டு, அந்த நிரல் செய்யும் வேலையைத் தடுக்கவும், அல்லது மோசமான விளைவை ஏற்படுத்தவும் செய்கின்றன. இவை பரிமாறிக்கொள்ளப்படும் கணினித் தகடுகள் மூலமாகவும், இணைய இணைப்பு மூலமாகவும் பரவுகின்றன. இவைகளை தொழில் ரீதியில் புழுக்கள் (worms) இடமிருந்து பிரித்துப் பார்க்கலாம். புழுக்கள் முழு நிரல்கள். இவை இணையம் மூலமாக மட்டுமே பரவுகின்றன. இவைகள் ‘டிரோஜன் குதிரைகள் ‘ நிரல்களிடமிருந்து வேறுபட்டவை. டிரோஜன் குதிரைகள் தானாக தன்னை பிரதியெடுக்கும் வேலையைச் செய்வதில்லை. இவைகள் மனிதர்களுக்கு கவர்ச்சியாக தோன்றும் விஷயங்களோடு (அழகான படங்கள், ஆவணங்கள் போன்றவையோடு) ஒட்டிக்கொண்டு அவர்களை பிரதியெடுக்க உபயோகப்படுத்திக்கொள்கின்றன.

இதை உருவாக்கிய ஆசிரியர்களது முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இன்னும் பல விஷயங்களையும் இந்த கணினிக் கிருமிகள் செய்யலாம். இதன் பக்க விளைவுகள் நகைப்புக்கிடமாகவும் (மாக்கின்டோஷ் கணினியின் ஸ்பீக்கர் ‘பயப்பட வேண்டாம் ‘ என்று சொல்லிவிட்டு அதற்கு நேர் எதிரான விளைவை கணினியில் ஏற்படுத்தும் வைரஸ்), தீங்கானதாகவும் (உங்களது வன் தகடு (hard disk) அழியப்போகிறது என்று திரையில் எச்சரித்துவிட்டு அழிக்கும் வைரஸ்), அரசியல் ரீதியானதாகவும் (பீகிங்கில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் பேசும் வைரஸ்களும், ஸ்பானிய தொலைபேசி நிறுவனம் அதிக பணம் பிடுங்குவதை எதிர்த்தும் வந்த வைரஸ்கள்), எதிர்பாராத விளைவுகள் (நிரல் எழுதிய நிரல் எழுத்தாளர் (புரோகிராமர்) அவ்வளவு திறமைவாய்ந்தவராக இல்லாததால் வரும் விளைவுகள்) போன்றவை. நவம்பர் 2 1988ஆம் நாள் அமெரிக்காவின் கணினிகளை நிறுத்திய வைரஸ் தீங்கு செய்ய வேண்டும் என்ற கருத்தில் எழுதப்படாமல் இருந்தாலும், கட்டுப்பாட்டுக்கடங்காமல் போய் 24 மணி நேரத்தில் 6000 கணினி ஞாபகங்களை அழித்து மிக வேகத்தில் பெருகியது ஒரு உதாரணம்.

‘இன்று உலகத்தில் ஒளி வேகத்தில் மீம்கள் பரவுகின்றன. இவைகளை ஒப்பிட்டால், ஈஸ்ட் செல்களும், பழப்பூச்சிகளும் ஆமை வேகத்திலேயே பரவுகின்றன. மீம்கள் ஒரு வாகனத்திலிருந்து மறு வாகனத்துக்கு தாவுகின்றன, ஒரு வழியிலிருந்து மறு வழிக்கு தாவுகின்றன. இவைகளை தடுத்து நிறுத்துவது ஏறத்தாழ முடியாத விஷயம் ‘ (டென்னட் 1990, பக்கம் 131). வைரஸ்கள் வெறுமே மின்னணு சாதனங்களிலும், தகடுகளிலும், இணைய இணைப்புகளிலும் மட்டும் வாழ்பவை அல்ல. ஒரு கணினியிலிருந்து மறு கணினிக்குச் செல்லும் வழியில் அவை பதிவு செய்யப்பட்ட காகிதத்திலிருந்து மனிதக் கண்ணுக்கும் பிறகு மூளைக்கும் சென்று பிறகு மனிதக் கைகள் மூலம் மீண்டும் கணினிக்குள்ளும் செல்லலாம். ஒரு கணினி நிபுணத்துவத்துக்கான பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கணினி வைரஸின் நிரல் பலரால் வெகுவாக கண்டிக்கப்பட்டது. இவ்வாறு வைரஸ் கருத்து வெளிப்படுவது ஒருவித மோசமான மனநிலையைக்குறிக்கிறது. இவ்வாறு பிரசுரிப்பதும், எப்படி எழுதுவது என்று பரப்புவதும் பொறுப்பற்ற காரியமாக, சரியாகத்தான் பார்க்கப்படுகிறது.

நான் வைரஸ் நிரலை பிரசுரிக்கப்போவதில்லை. ஆனால், நல்ல வைரஸ் வடிவமைப்புக்கு சில தந்திரங்கள் இருக்கின்றன. இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். இவைகளை இங்கே குறிப்பிடுவதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை. என்னுடைய கட்டுரையை மேலே கொண்டுசெல்ல இந்த குறிப்புகள் தேவை. இவை எல்லாமே வைரஸ் பரவும்போது, தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொள்வதையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

ஒரு கணினிக்குள் அதிவேகமாக தன்னைத்தானே பிரதியெடுக்கும் வைரஸ்கள் உடனே கண்டுபிடிக்கப்பட்டுவிடும். ஏனெனில் இவை உடனே தன்னுடைய இருப்பை கணினியின் ஞாபகத்தை அழிப்பதன் மூலம் வெளிக்காட்டி விடுகின்றன. ஆகவே இந்தக் காரணத்தால், பல வைரஸ் நிரல்கள் ஒரு கணினியை பாதிக்கும் முன்னர், தான் இங்கே முன்னமே இருக்கிறோமா என்று பரிசோதிக்கின்றன. (தடுப்பு மருந்து போல, இது ஒரு கணினியை பாதுகாக்கும் வழியையும் உருவாக்கித் தருகின்றன.) ஒரு வைரஸ் தடுப்பு மருந்து நிரல்கள் வியாபார ரீதியில் வெளிவருவதற்கு முன்னால், நானே என் கணினியை இது போல தடுப்பு மருந்து கொடுத்தேன். அந்த கணினி வைரஸை அழிக்காமல், அந்த வைரஸின் உள்ளே இருந்த கட்டளைகளை மட்டும் அழித்துவிட்டு, அந்த உருவத்தை விட்டு விட்டேன். அதன் பின்னர் என் கணினிக்குள் வந்த அதே வைரஸ்கள், தான் அங்கே முன்னமே இருப்பதைப் பார்த்துவிட்டு மறுபடி பாதிக்காமல் போயிருக்கலாம். இந்த தடுப்பு மருந்து உண்மையில் வேலை செய்ததா என்று எனக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் இது போல வைரஸின் உள்ளே இருக்கும் கட்டளைகளை எடுத்துவிட்டு உருவத்தை விட்டு விடுவது சரியானதாக இருந்தது. இந்தக்காலத்தில் இது போன்ற வேலைகளைச் செய்ய வியாபார ரீதியில் கிடைக்கும் வைரஸ் எதிர்ப்பு நிரல்களை ஓடவிடுவதே சரியானது.

மிகவும் அதிவேகத்தில் பரவி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். எந்த வைரஸ் உடனுக்குடனே மிக மோசமாக கணினிகளை அழிக்கிறதோ, அந்த வைரஸ் அதிக கணினிகளுக்குப் பரவாது. ஒரு கணினியில் முழு டாக்டரேட் தீஸிஸையும் அழிக்கும் (அல்லது இன்னும் நகைப்புக்கிடமான வேறெதையாவது செய்யும்) வைரஸ், எல்லா கணினிகளுக்கும் பரவாது. ஆகவே, சில வைரஸ்கள் கண்டுபிடிக்க முடியாதது போல மிகச்சிறிய விளைவை ஏற்படுத்துவதாகவும், அதே நேரத்தில் மோசமான விளைவையும் ஏற்படுத்துபவையாகவும் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே ஒரு வித வைரஸ், வன்தகடுகளை முழுவதுமாக அழிக்காமல், கணக்குப்போடும் படிவங்களை (spreadsheets) அழிக்கும் படிக்கு (அல்லது அந்த படிவங்களில் சில இடங்களில் எண்களை மாற்றிப்போடுபவையாக ) இருக்கின்றன. மற்றும் சில வைரஸ்கள் திடார் திடாரென தாக்கும்படிக்கு, அல்லது எப்போதோ ஒரு முறை தாக்கும்படிக்கு அமைக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு வைரஸ் 16 வன்தகடுகளை தாக்கினால், அதில் ஒன்றே ஒன்றை மட்டும் அழிக்கும்படிக்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில வைரஸ்கள் டைம்பாம் போல, ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் வேலை செய்யும் படிக்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. (உதாரணமாக ஏப்ரல் முட்டாள் தினத்தில் அல்லது வெள்ளிக்கிழமை 13ஆம் தேதியன்று தாக்கும்படிக்கு). ஒட்டுண்ணியின் நோக்கில், விளைவு எவ்வளவு மோசமானது என்பது முக்கியமில்லை. அந்த விளைவுக்கு முன்னர் எந்த அளவு பரவ முடிகிறது என்பதே முக்கியம். (இது சங்கடமான ஒரு ஒற்றுமையை மெடவார் வில்லியம்ஸ் தேற்றத்தோடு கொண்டிருக்கிறது. அதாவது நமது உடலில் இருக்கும் சில உயிருக்கு ஆபத்தான ஜீன்கள் முதிர்ச்சியடைய ஒரு குறிப்பிட்ட காலம் ஆகிறது என்பதும், அதனாலேயே நாம் வயது முதிர்வதால் இறக்கிறோம் என்றும் இந்த தேற்றம் கூறுகிறது (வில்லியம்ஸ் 1957)) இதனால், சில பெரிய நிறுவனங்கள் தங்களது கணினிக்கும்பலில் ஒரு சில கணினிகளை தனியாகப் பிரித்து அந்த கணினிகளுக்கு நேரத்தை ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ முன்னுக்கு நிறுத்தி வரப்போகும் ஆபத்தை முன்னமே உணர்வதற்கு அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கின்றன.

மீண்டும், எதிர்ப்பார்க்கக்கூடியது போலவே, கணினி வைரஸ்கள் ஒரு ஆயுதப் பந்தயத்தை உருவாக்கி விட்டன. வைரஸ் எதிர்ப்பு நிரல்களும் மென்பொருளும் அட்டகாசமாக வியாபாரமாகின்றன. இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் பலவித தடுப்பு மருந்து முறைகளைக் கையாள்கின்றன. சில ஒரு குறிப்பிட்ட வைரஸ் கும்பலுக்கு எதிரானதாக எழுதப்படுகின்றன. கணினியில் சில முக்கியமான ஞாபக இடங்களைப் பாதுகாத்து, உபயோகிப்பாளரை எச்சரிக்கின்றன.

இந்த வைரஸ் கருத்துருவாக்கத்தை, தீங்கு விளைவிக்காத, நன்மை செய்யக்கூடிய விஷயத்துக்குக்கூட உபயோகப்படுத்தலாம். திம்ப்லி (1991)இல் ‘உயிர்பொருள் ‘ (liveware) என்ற வார்த்தையை உருவாக்கினார். இந்த தொத்துநோய் கருத்தைப் பயன்படுத்தி ஒரு செய்தித்தளத்தை (database) பல பிரதிகள் எடுக்கவும், சரியானதாக இந்தப் பிரதிகளை வைக்கவும் பயன் படுத்தினார். ஒவ்வொருதடவையும் ஒரு தகட்டை ஒரு கணினியில் செருகும்போதும், செய்தித்தளம் அதில் இதே போல ஒரு பிரதி இருக்கிறதா என்று பார்க்கிறது. அப்படி ஒரு பிரதி இருந்தால், எது சமீபத்தியதோ அந்தப்பிரதி, தன்னையே பழைய பிரதி மீது எழுதுகிறது. இந்த செய்தித்தள முறை மூலம், ஒரு கல்லூரியில் இருக்கும் நண்பர்களிடம், யாரிடம் சமீபத்திய புத்தகத் தொகுப்பு இருக்கிறது என்பது கவலையில்லை. எப்போது ஒருவர் தன்னுடைய தகட்டை நண்பரின் கணினியில் செருகுகிறாரோ அப்போதெல்லாம் அவரது புத்தகத்தொகுப்பு செய்தித்தளம் மாறுபாடு அடைந்து சமீபத்தியதாக மாறுகிறது. திம்ப்லியின் உயிர்பொருள் சரியாகச் சொன்னால் வைரஸ் இல்லை. இது யாருடைய கணினிக்கும் சென்று அவரது கணினியில் தன்னைப் போட்டுவிடாது. ஏற்கெனவே தன்னைப்போல பிரதி இருக்கும் ஒரு கணினியை மட்டுமே அது பாதிக்கும். நீங்கள் கேட்டுக்கொண்டாலன்றி உங்களை இந்த உயிர்பொருள் பாதிக்காது.

வைரஸ் பிரச்னையைப் பற்றிக் கவலைப்படும் திம்பில்பி, மற்றவர்கள் உபயோகிக்காத கணினி வகையறாக்களை உபயோகிப்பதன் மூலம் பாதுகாப்பு பெறலாம் என்று கூறுகிறார். பொதுவாக, எல்லோரும் உபயோகிக்கும் கணினி வகையை நாம் உபயோகப்படுத்துவதன் காரணம் அது எல்லோரும் உபயோகிப்பது என்பதால்தான். விவரம் தெரிந்த எல்லோரும் சொல்வது என்னவென்றால், அவ்வாறு பொது உபயோகத்தில் இல்லாத சிறுபான்மை கணினி வகை பெரும்பான்மை கணினி வகையை விடச் சிறந்தது என்பதை. இருப்பினும், ‘எல்லோரிடமும் இருக்கிறது ‘என்ற விஷயமே பயனுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. ‘போதுமானது ‘ என்பது ‘குணத்தை ‘ விட முக்கியமானதாகி விடுகிறது. எல்லோரிடமும் இருக்கும் மென்பொருள்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதாலேயே எல்லோரிடமும் இருக்கும் வன்பொருளையும் வாங்குகிறார்கள் மனிதர்கள். பெரும்பான்மை வகை கணினிக்கு பல வகை மென்பொருள்கள் கிடைக்கும் என்ற காரணத்தாலேயே (நமக்கு அவை பிரயோசனமாக இருக்கிறதோ இல்லையோ) நாம் பெரும்பான்மை வகை கணினியை வாங்குகிறோம். ஆனால், இந்த வைரஸ் பிரச்னை காரணமாக, பிரயோசனம் மட்டுமே நமக்குக் கிடைப்பதில்லை. கூடவே பெரும்பான்மை வகை கணினிகளைப் பாதிக்கும் வைரஸ்களுக்கு நாம் பலிகடாவாக ஆகி விடுகிறோம். பெரும்பான்மை வகை கணினிகளை குறிவைத்து தாக்குவதால், நம் கணினிகளைத் தாக்கும் வைரஸ்களும் பெரும்பான்மையாகவே இருக்கின்றன.

வைரஸ்களை நல்ல முறையில் உபயோகப்படுத்தும் விஷயத்துக்கு வருவோம். இந்த ஆலோசனைகள் எல்லாம், ‘முள்ளை முள்ளால் எடுப்பது, திருடனைவைத்து திருடனை பிடிப்பது போன்றவைகள். எளிய வழி, இன்றைய தடுப்பு மருந்து போடும் வைரஸ் எதிர்ப்பு நிரலையே ஒரு வைரஸ் போல வடிவமைத்து, இவைகளை இணைய வலை மூலம் எல்லா கணினிகளுக்கும் அனுப்புவது. எந்த கணினி வைரஸ்களுக்கு எளிதான இலக்காக இருக்கிறதோ, அந்த கணினி இந்த வைரஸ் எதிர்ப்பு வைரஸ்உக்கும் எளிதான இலக்காக இருக்கும். இன்னும் கூர்மையான வைரஸ் எதிர்ப்பு நிரல், கற்றுக்கொள்ளும் படியும் வடிவமைக்கலாம். எப்போதெல்லாம் வைரஸ் வருகிறதோ அந்த புதுவைரஸை தானே அறிந்து செயலிழக்கச்ச் செய்யும் படிக்கும் இந்த நிரல்களை அமைக்கலாம்.

இந்த வைரஸ் கருத்துருவாக்கத்தை இன்னும் பல பயனுள்ள வழிகளாக (சற்று சுயநல வழிகளாக) நான் கற்பனை செய்யமுடியும். சந்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனம் தன்னுடைய பயனீட்டாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான வடிவமைப்பை அவர்கள் விரும்புவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் இந்த வைரஸ் கருத்துருவாக்கத்தைப் பயன்படுத்தலாம். மென்பொருளுக்கு வெறுமே பெயர் மட்டும் வைக்க விரும்புகிறார்களா அதனுடன் கூட படமும் இணைத்திருப்பதை விரும்புகிறார்களா ? எந்த அளவுக்கு கோப்புக்களை ஒன்றின் கீழ் ஒன்றாக வைக்கிறார்கள் ? ஒரு கோப்புக்குள் இன்னொரு கோப்பாக எவ்வளது தூரம் வைக்கிறார்கள் ? எந்த மென்பொருளை அடிக்கடி உபயோகப்படுத்துகிறார்கள் ? ஒரு மென்பொருளுக்கும் அடுத்த மென்பொருளுக்குமாக அடிக்கடி மாறி மாறி உபயோகப்படுத்துகிறார்களா ? நேராக தன்னுடைய எலியை தேவையான புள்ளிக்கு கொண்டு செல்கிறார்களா ? அல்லது தடவித்தடவி திரையெங்கும் சுற்றித்திரிந்து விட்டு குறியை அடைகிறார்களா ? இதனைசரிப்படுத்த நாம் வடிவமைப்பை மாற்ற வேண்டுமா ?

ஒரு நிறுவனம் இந்தக்கேள்விகளுக்கான பதில்களை பெற ஒரு சர்வே காகிதம் எழுதி எல்லா பயனீட்டாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடம் பதில் பெறலாம். ஆனால் அவை மனச்சாய்வு பெற்றவையாக இருக்கும். மேலும் தவறானவையாகவும் இருக்கலாம். இதற்கு இதைவிட நல்ல முறை ஒரு கணினி நிரல்தான். பயனீட்டாளர்கள் தங்களது கணினியில் இந்த நிரலை சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் அது ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்கும் படி வடிவமைக்கலாம். பயனீட்டாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களா அவையெல்லாம் ஆராய்ந்து வருடக் கடைசியில் செய்தித்தொகுப்பை பயனீட்டாளரையே நிறுவனத்துக்கு அனுப்பும்படிக் கேட்டுக்கொள்ளலாம். இருப்பினும், பல பயனீட்டாளர்கள் இதற்காக ஒத்துழைக்க மாட்டார்கள். இதனை தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் இடையூராகப் பார்க்கவும் செய்யலாம்.

ஒரு நிறுவனத்தின் கண்ணோட்டத்தில், மிகச்சிறந்த தீர்வு வைரஸ்தான். எந்த ஒரு வைரஸைப் போலவும், இதுவும் தன்னைத் தானே பிரதி யெடுத்துக்கொள்ளவும், கணினியை அழிக்காமலும், தொடர்ந்து பரவும் படிக்கும் வடிவமைத்து, மேற்கண்ட வேலைகளைச் செய்யும்படி சொல்லலாம். எல்லா வைரஸ்களைப் போலவும் இதுவும் பரவும். மின்னஞ்சல் மூலமாகவும், தகடுகள் மூலமாகவும் பரவும் இந்த வைரஸ் போகும் இடமெல்லாம் தங்கி அங்கு பயனீட்டாளர் எவ்வாறு தனது கணினியை உபயோகிக்கிறார் என்று ஆராய்ந்து அந்த செய்தியைச் சேகரித்து மீண்டும் அடுத்த கணினி தாண்டி அங்கும் சேகரித்து இறுதியில் தான் ஆரம்பித்த நிறுவனத்தின் கணினிக்கே வந்து சேரும். அங்கு இந்த செய்தியை பிரித்து ஆராய்ந்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

எதிர்காலத்தில், இந்த நல்ல வைரஸ்கள், கெட்ட வைரஸ்கள், சட்டரீதியான நிரல்கள், சட்டத்துக்குள் வராத நிரல்கள் எல்லாம் இணைந்து ஒரு ஸிலிகோஸ்ஃபியர் என்ற சூன்யவெளியின் சுற்றுச்சூழலில் வாழ்வதை கற்பனை செய்யலாம். இன்றைக்கு ஒரு மென்பொருள் ‘ஸிஸ்டம் 7 உடன் ஒத்துப் போகக்கூடியது ‘ என்று அறிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில், ஒரு மென்பொருள் ‘1998இன் உலக வைரஸ் கணக்கெடுப்பின் படி கண்டறியப்பட்ட வைரஸ்களுடன் ஒத்துப் போகக்கூடியது ‘ என்று அறிவிக்கப்படலாம். சில ஆவண உருவாக்க மென்பொருள்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அங்கிருக்கும் சில வைரஸ்களை இணையத்துக்குள் சென்று தேடி செய்து தரும்படிக்கு கேட்டுக்கொள்ளலாம்.

Looking even further into the future, whole integrated software systems might grow, not by design, but by something like the growth of an ecological community such as a tropical rain-forest. Gangs of mutually compatible viruses might grow up, in the same way as genomes can be regarded as gangs of mutually compatible genes (Dawkins, 1982). Indeed, I have even suggested that our genomes should be regarded as gigantic colonies of viruses (Dawkins, 1976). Genes cooperate with one another in genomes because natural selection has favored those genes that prosper in the presence of the other genes that happen to be common in the gene pool. Different gene pools may evolve towards different combinations of mutually compatible genes. I envisage a time when, in the same kind of way, computer viruses may evolve towards compatibility with other viruses, to form communities or gangs. But then again, perhaps not! At any rate, I find the speculation more alarming than exciting.

அதையும் தாண்டி ஒரு எதிர்காலத்தை பார்த்தால், ஒன்றிணைக்கப்பட்ட மென்பொருள் அமைப்புகள் வளரலாம். முன்வடிவமைப்புடன் அல்லாது, தானாக வளரும் (ஒரு பூமத்திய ரேகை மழைக்காட்டு சுற்றுச்சூழல் போல) ஒரு வைரஸ்கள், மென்பொருள்கள் நிறைந்த சமூகமாக வளரலாம். எப்படி ஜினோம்களை தங்களுடன் ஒத்துப்போகும் ஜீன்களின் கூட்டமாகப் பார்க்கலாமோ அதுபோல (டாக்கின்ஸ், 1982). உண்மையிலேயே, நமது ஜினோம்களை பெரிய வைரஸ் குழுமங்களாகப் பார்க்கலாம் என்று எழுதியிருக்கிறேன் (டாக்கின்ஸ், 1976). ஜீன்கள் அத்தோடு இருக்கும் மற்ற ஜீன்களோடு ஒத்துப் போவதன் காரணம், அவ்வாறு ஒத்துபோவாத ஜீன்கூட்டங்கள் (அந்த ஜீன் கூட்டங்கள் இருந்த உயிர்கள்) பரிணாமத்தால் (இயற்கைத் தேர்வால்) அழிக்கப்பட்டதால்தான். தனக்குள் ஒத்துபோகும் ஜீன்கள் இருக்கும் ஜீன் குழுமங்கள் தனித்தனியான முறையில் தனித்தனியான கூட்டமைப்பில் தனியாக பரிணமிக்கலாம். என்னால் இன்னொன்றையும் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில், கணினி வைரஸ்கள் மற்ற கணினி வைரஸ்களோடு ஒத்துப்போகுமாறு பரிணாமம் அடையலாம். இந்த வைரஸ் குழுமங்கள் ஒரு சமூகத்தையும் அல்லது கும்பலையும் உருவாக்கலாம். அப்படி உருவாகாமலும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இந்தக்கற்பனை பயங்கரமானதாகவே இருக்கிறது.

At present, computer viruses don ‘t strictly evolve. They are invented by human programmers, and if they evolve they do so in the same weak sense as cars or aeroplanes evolve. Designers derive this year ‘s car as a slight modification of last year ‘s car, and then may, more or less consciously, continue a trend of the last few years — further flattening of the radiator grill or whatever it may be. Computer virus designers dream up ever more devious tricks for outwitting the programmers of anti-virus software. But computer viruses don ‘t — so far — mutate and evolve by true natural selection. They may do so in the future. Whether they evolve by natural selection, or whether their evolution is steered by human designers, may not make much difference to their eventual performance. By either kind of evolution, we expect them to become better at concealment, and we expect them to become subtly compatible with other viruses that are at the same time prospering in the computer community.

இந்த நிகழ்காலத்தில், கணினி வைரஸ்கள் பரிணாமங்கள் அடைவதில்லை. இவை ஒரு மனித கணினி நிரல் எழுதுபவர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை பரிணமிக்கின்றன என்று பலவீனமாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு காரும் ஒரு விமானமும் பரிணமிப்பதுபோல என்று சொல்லலாம். வடிவமைப்பாளர்கள் சென்ற வருடக் காரைவிட சில இடங்களில் அங்கும் இங்கும் மாற்றி இந்த வருடக்காரை உருவாக்குகிறார்கள். இது சென்ற வருடத்தில் செய்ததையே இன்னும் கொஞ்சம் செய்வது என்று தான் (அதாவது இன்னும் கொஞ்சம் பின்பக்கத்தை கீழே இறக்குவது, காரின் முன் இருக்கும் ரேடியேட்டரை இன்னும் கொஞ்சம் பெரிதாக்குவது போல). ஆனால் வைரஸ் எழுதும் நிரல் எழுத்தாளர்கள் (புரோகிராமர்கள்) தடுப்பு மருந்து போடும் நிரல் வடிவமைப்பாளர்களை ஏமாற்ற, அவர்களை திணரடிக்க இன்னும் தீவிரமாக யோசித்து புதிய முறைகளில் வைரஸை உருவாக்குகிறார்கள். ஆனால் (இதுவரை) கணினி வைரஸ்கள் தானாக மாறுபட்டு (mutate) இயற்கைத் தேர்வில் பரிணாமம் அடைவதில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம். அவை தானாக மாறினாலும், அவை ஒரு நிரல் வடிவமைப்பாளரால் மாற்றப்பட்டாலும், அவற்றின் நடத்தையில் அதிக வித்தியாசம் வரப்போவதில்லை. எப்படி பரிணமித்தாலும், அவை மறைந்துவாழ்வதில் சிறப்பானதாகவும், மற்ற வைரஸ்களோடு ஒத்துபோவதாகவும், கணினி சமூகத்திற்குள் வளமையாக வாழ்வதையும் குறித்து முன்னேறுகிறது.

DNA viruses and computer viruses spread for the same reason: an environment exists in which there is machinery well set up to duplicate and spread them around and to obey the instructions that the viruses embody. These two environments are, respectively, the environment of cellular physiology and the environment provided by a large community of computers and data-handling machinery. Are there any other environments like these, any other humming paradises of replication ?

டி என் ஏ வைரஸ்களும், கணினி வைரஸ்களும் பரவுவதற்கு ஒரே காரணம்தான். ஒரு சுற்றுச்சூழல் இருக்கிறது. அந்த சுற்றுச்சூழலில் இவை பிரதி எடுத்துக்கொள்வதற்கும், அந்த வைரஸ்கள் சொல்லும் கட்டளைகளைக் கேட்பதற்கு தகுந்த சூழ்நிலையும் இருப்பதே அந்தக் காரணம். இந்த இரண்டு சுற்றுச்சூழல்கள், 1) மூலக்கூறு உயிரியல், 2) கணினிகளும், செய்தி பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும் இயந்திரங்களும். இது போன்ற வேறெதாவது சூழ்நிலை, பிரதி எடுக்கவும், செய்தி பரிமாற்றத்துக்கும் ஏதுவானதாக இருக்கிறதா ?

(அடுத்த வாரம் : பாதிக்கப்பட்ட மனம்.. (infected Mind))

Series Navigation

ரிச்சர்ட் டாக்கின்ஸ்

ரிச்சர்ட் டாக்கின்ஸ்