மந்திரியின் நலத்திட்டங்கள்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

எஸ். ஜெயலட்சுமி



.
”அம்மா,அம்மா”என்று யாரோ அழைக்கும் குரல்கேட்டு அம்புஜம் வெளியே வந்தாள்.வாசலில் லக்ஷ்மி தலையில் ஒரு அலுமினியப் பாத்திரத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
” என்ன லக்ஷ்மி?இந்தநேரம்,தலைல என்ன? அதையேன் கேக்கறீங்க இன்னிக்கு காய் விக்கல”
ஏன்?
”அதாம்மா நாள நாயித்துக் கெளமை,மந்திரிங்க வேற வராங்க,அதனால நாள காய்விக்க வுடமாட்டாங்கன்னு இன்னிக்கு வயக்காட்டுக்குப் போயி நெறைய காயும் பிஞ்சும் பழமும் பறிச்சிக்கிட்டு வந்தேன் கொஞ்சம் தான் வித்தேன்.அங்க ரோட்டில நெறைய ஆளுங்கள விட்டு பெருக்கி க்ளீன் பண்ணி,கம்பு கட்டி,கொடி நடுறாங்க.அதனால அங்க வெச்சு விக்கவிட மாட்டேங்கறாங்க.எல்லாத்தையும் வெரட்டி வெரட்டி விடறாங்க.” என்றாள்.மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதற்காக மந்திரி வரப்போவதாக பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங் களையும்”வள்ளலே வருக””விவசாயிகளின் விடியலே,ஏழைகளின் இறைவனே”,”இதய தெய்வமே” என்று எழுதப்பட்ட மிக உயரமான கட் அவுட்களையும் அலங்கார வளைவுகளையும் பார்த்தது அம்புஜத்தின் நினைவுக்கு வந்தது.

இதற்குள் தலையிலிருந்த அலுமினியப் பாத்திரத்தை இறக்கியிருந்தாள்.அது தவிர ஒரு அலுமினிய வாளியில் நன்கு .பழுத்த,வெடித்த வெள்ளரிப் பழங்கள் இருந்தன.வீட்டுப்படியிலேயே உட்கார்ந்து விட்டாள்.வெயிலின் கடுமை குறைந்து கொஞ்சம் காற்று வீச ஆ.ரம்பித்திருந்த போதிலும் உச்சிநேரம் என்பதால் சாலைத்தெரு முழுவதும் நடந்து வந்த களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
”லக்ஷ்மி தண்ணி வேணுமா?” என்று கேட்டபடியே மண்பானையிலிருந்து ஒரு செம்பு எடுத்து வந்தாள் அம்புஜம் அதை வாங்கிக் குடித்தவள் முகத்தையும் கழுவிக் கொண்டாள்.”ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா என்று முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
”ஒங்கூட வருவாளே,அவ பேரென்ன? அவ வரலியா?
”பேராச்சியா?அவளுக்கு இன்னும் காய் விக்கல.நல்ல நேரம் நா இன்னிக்குக் காய் வாங்கப் போகல.எங்க வயல்ல இருந்ததைப் பறிச்சிட்டு வந்தேன்.பேராச்சி காய் வாங்கப் போயிட்டு இப்பத்தான் வந்திருக்கா.ஆனா அங்க ரோட்டில காய் வெச்சு விக்க விட மாட்டேங்கறாங்க. ஒரே கெடுபிடி! அவ அவ்வளவு காயையும் எப்படித்தான் விக்கப்போறாளோ?அங்கன ரோட்டில இருந்தா எப்படியும் வித்துரும்.அம்புட்டுக் காயையும் தூக்கிக்கிட்டு தெருத்தெருவாச் சுத்தவும் முடியாது.என்ன செய்யப் போறாளோ? என்று மிகவும் அங்கலாய்த்தாள்
தங்கள் வயலில் காய் இல்லாத போது, இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாதன்குளம்,ஆதிச்சநல்லூர், போய் வெள்ளெரிக்காய் வாங்கிக்கொண்டு வருவார்களாம்.காலை மூன்றரை மணிக்கே எழுந்து போனால் தான் காய் வாங்கிக் கொண்டு வர சரியாக இருக்குமாம்.ஒரு வேனுக்கு 15பேர் 20பேர் வீதம் போவார்களாம்.ஆளுக்கு 20 ரூபாய்.எல்லோரும் வாங்கிய பின் மறுபடியும் வேனில் திரும்புவார்களாம். வண்ணார்பேட்டை, முருகன்குரிச்சி, பாளையங்கோட்டை, ஜங்ஷன் என்று ஒவ்வொருவரும் ஒரு இடத்தை வாடிக்கையாக வைத்துக்கொண்டிருப்பார்களாம்.
” சாப்பாட்டுக்கு என்ன செய்வே’?
”வீட்டில எம்மக மீனா,எங்க வீட்டாளிடம் கொடுத்து விடுவா.வெளியில காப்பி மட்டும் குடிப்போம்.வெளில சாப்பிட்டா கட்டுபடியாகுமா?
இந்தப் பெண்கள் தான் எவ்வளவு பொறுப்பாக உழைக்கிறார்கள்!

லக்ஷ்மி அறிமுகமானதே வெள்ளெரிக்காய் வாங்கும் போது தான்.ரெண்டு வருஷம் இருக்கும்,ஒரு நாள் டவுண் போய் விட்டு வண்ணார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்குப் போகும்போது முதல் ஆளாக லக்ஷ்மி மரத்தடியில் உட்கர்ந்திருந்தாள்.மணலை நீளமாகக் குவித்து அதன் மேல் சாக்கை விரித்து அதன் மேல் இளசான வெள்ளரிப் பிஞ்சுகளை கூறு கூறாக வைத்திருந்தள்.கூறு ஒன்று அஞ்சு ரூபாய் என்றாள்.”ரெண்டு கூறு தா” என்றாள் அம்புஜம்.லக்ஷ்மியின் அருகில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் நின்று கொண்டு ஏதோசத்தமாகப் பேசக்¢கொண்டிருந்தார்கள்.நடுத்தரவயதுடைய ஒருவரும் அவர்களோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.அவர் லக்ஷ்மியின் புருஷன் என்று பின்னால் தெரிந்தது.கவனித்ததில் படிப்பு சம்பந்தமான விவாதம் என்று தெரிந்தது.

காய் வாங்குவதையும் மறந்து அவர்கள் பேச்சைக் கவனித்தாள்.அந்தப்பையன் மேலே படிக்க வேண்டும் என்றான். பத்தாவது பாஸ் செய்திருந்தான்.+1ல் சேர வேண்டுமாம்.லக்ஷ்மி,அண்ணன் செந்திலைப் போல ஐ.டி படி என்றாள்.செந்திலுக்கு ஒரு கால் ஊனம்.அவன் ஐ டி படித்ததுபோல் நன் ஐ.டி படிக்க மாட்டேன்.நான் மேலே படிக்கணும் அப்பறம் காலேஜிலே போய் படிக்கணும்” என்றான் ரவி.மீனா ரவிக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினாள்.ரவியின் தகப்பனார் இது ஒன்றிலும் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல் நின்று கொண்டிருந்தார்.”ஆயிரம் ரூபாய்க்கு நா எங்க போவேன்? இது லக்ஷ்மி.ஆனால் ரவி சமாதானம் அடைவதாகத் தோன்றவில்லை.
இந்த நேரத்தில் அம்புஜம் குறுக்கிட்டாள்.ரவியிடம் தனியாகப் பேசினாள்.அவன்”நான் +1ல் தான் சேரணும்.ஐ.டி யில் சேர்ந்து விட்டால்
அப்புறம் +2ல் சேர முடியாமல் போய் விடும்.எனக்கு மேல படிக்கணும்” என்றான்
”அம்மா நீங்களே சொல்லுங்கம்மா.நா ஒருத்தி பாடு பட்டு என்னம்மா செய்ய முடியும்?என்றாள். லக்ஷ்மி.அம்புஜம் அவளிடம் காய் வாங்கியிருக்கிறாளே தவிர அவள் குடும்பம் பற்றி ஒன்றும் தெரியாது.லக்ஷ்மியின் புருஷன் காபி குடிக்கப் போய் விட்டதாலோ என்னவோ தன் மனதில் இருந்த வருத்தத்தைக் கொட்டி விட்டாள்.”நீங்களே சொல்லுங்கம்மா, எங்க வீட்டாளு கூறு கெடையாது.தண்ணி போடற பழக்கம் வேற.இவளும் அந்தப் பயலுக்கு சப்போட்டுப் பண்னறா.இப்ப பள்ளிக்கூடம் தொறந்தாச்சுன்னா நோட்டுப் பொஸ்தகம்,டிரெளசர். சட்டை அது இதுன்னு500 ரூபாய் வேணும்.நா எங்க போக?ஐ டி படிச்சான்னா, செந்திலோட பொஸ்தகம் யூனிபாம் எல்லாம் இருக்கு.அதான் சொன்னேன்”என்றாள்

அம்புஜத்துக்கு ரவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது.லக்ஷ்மி சொல்வதும் சரிதான்.சுமார் 40 வருடங்களுக்கு முன் இதே போல் தான் படிக்க முடியாமல் தவித்தது நினைவு வந்தது.ரவியிடம்”சாயங்காலம் எங்க வீட்டுக்கு வா,என்று அடையாளம் சொன் னாள். சொன்னபடியே ரவி வந்தான்.அவனிடமிருந்து அவன் குடும்பம் பற்றித் தெரிந்து கொண்டாள்.ரவிக்கு ஒரு அண்னன் இருக்கிறான்.ஆனால் அப்பாவைப் போல் பொறுப்பற்றவன்.சின்ன வயசிலே படிக்காமல் யாரோடோ பம்பாய் போய் விட்டான்.மீனாவுக்குக் கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷமே அவள் புருஷன் ஆக்ஸிடெண்டில் இறந்து விட்டான் குழந்தையில்லை.செந்தில் கொஞ்சம் நன்றாகப் படிப்பான்.
அவன் ஊனமுற்றோர் பள்ளியில் சேர்ந்து ஹாஸ்டலிலேயே தங்கிப் படித்தான்.இன்னும் ஒரு தம்பி எட்டாவது படிக்கிறான்
”என்ன படிக்கணும்னு ஆசைப் படற?”கருப்புக் கோட்டுப் போட்டுகிட்டு வக்கீலாக வேணும்னு ஆசை” என்றான் ரவி.அந்த வருடம் இரு
தவணைகளில் 1000 ரூபாய் கொடுத்தாள் அம்புஜம்.எதிர் பார்த்த அளவில் நிறைய மார்க் வாங்காவிட்டாலும்,ஓரளவு வாங்கி பாஸ்
செய்து விட்டான்.முன்பெல்லாம் அடிக்கடி வந்து போனவன் +2ல் மார்க் குறைந்து போனதால் இதுவரை வரவில்லை.காலேஜில் முதல் வருஷம் சேர்ந்திருப்பதாக லக்ஷ்மி சொன்னாள்.

லக்ஷ்மியை நினைத்தால் பாவமாக இருக்கிறது.இரண்டாவது பெண் கனியைக் கட்டிக் ,கொடுத்ததில் நல்ல செலவாம்.மீனாவின் நகையை அடகு வைத்துத்தான் கடன் வாங்கிச் செலவு செய்தார்களாம்.அடுத்த வருடமே குழந்தையும் பிறந்துவிட்டதால் ஏகப்பட்ட செலவு. பிரசவம் கொஞ்சம் சிக்கலாகவே உடையார்பட்டியிலுள்ள ஆசுபத்திரியில் சேர்த்ததில் வட்டிக்கு வாங்கவேண்டிய நிலை.கனி இப்பொழுது உண்டாகி இருக்கிறாள்.குழந்தைக்கு அடுத்த மாசம் தான் ஒரு வயதாகப் போகிறது.!இந்தியாவில் ஜனத் தொகை ஏன் இப்படி விஷம் போல்,விலைவாசி போல் ஏறுகிறது என்பது இப்போதுதான் தெரிகிறது.”லக்ஷ்மி,காபி தரட்டுமா?”என்றாள் அம்புஜம்.
”குடுங்கம்மா.இன்னிக்கு எந்த மொகத்தில முளிச்சேனோ தெரியல.ரோட்டில இருந்தா எப்படியும் காய் பழமெல்லாம் வித்திடும்.இந்தப்
பழத்தையெல்லாம் எங்க கொண்டுகிட்டுப் போயி விக்கறது?தெருவில போயி வித்தா தவிட்டுக்குக் கேக்கற மாதிரி கேப்பாங்க.அதான்
வந்துட்டேன்.சொமக்கவும் முடியல.நீங்க எடுத்துக்குங்க என்று நாலைந்து வெள்ளரிப் பழங்களை எடுத்து வைத்தாள்.இதற்குள் அம்புஜம் காபியும் ரெண்டு வாழைப் பழங்களையும் கொடுத்தாள்.”லக்ஷ்மி,இவ்வளவு பழங்களையும் நான் என்ன செய்ய?
”ஒங்க வீட்டில தான் ஐஸ் பெட்டியிருக்கில்ல.அதுல வையுங்க. ஒண்ணும் செய்யாது.ஜூஸ் போட்டுக் குடியுங்க.சீனி போட்டுக் குடிக்க
லாம்.இல்லைன்னா மோரு ஊத்திக் குடிக்கலாம்.”
அன்று மாலை திருப்புகழ் வகுப்பு இருப்பதால் அம்புஜத்தின் தோழிகள் வருவார்கள் என்பது நினைவு வந்தது.அவர்களிடம் ஆளுக்கொன்றாக வெள்ளெரிப் பழங்களைக் கொடுத்து விடலாம் என்று அவ்வளவு பழங்களையும்,கொஞ்சம் பிஞ்சுகளையும் காய்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.பழங்கள் பொன்னிறத்தில் பார்க்கவே நன்றாகயிருந்தது.மொத்தமாக 40 ரூபாய் கொடுத்தாள்.லக்ஷ்மி அதை வாங்க மறுத்தாள்.

”இதோ பார் லக்ஷ்மி நீயும் நஷ்டப்படக் கூடாது.ஒனக்கும் ஒரு உப்பு,புளிச் செலவுக்காவது ஆகும்.நாங்களும் சும்மாவாங்க மாட்டோம்.என் ·ப்ரெண்ட்ஸ¤க்குக் கொடுத்தால் பணம் தருவார்கள்.அதனால் எடுத்துக்க.”என்றாள் அம்புஜம்.காபியைக் குடித்த லக்ஷ்மி திருப்தியுடன் அலுமினியப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.அடுத்த நாள் அம்புஜத்தின் தோழிகளிடமிருந்து ஒரே போன் கால்கள்.”அம்புஜம் நீங்க கொடுத்த வெள்ளெரிப் பழத்தில ஜூஸ் போட்டோம்.மோர் சேர்த்துச் சாப்பிட்டோம் சூப்பர்!மந்திரிவாழ்க!அவர்கள் வருகையால் தானே நமக்கு இவ்வளவு அருமையான ஜூஸ் கெடச்சது” என்றார்கள்


Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி