ஷங்கன்னா
இன்றைய சமூக வாழ்வில் விழாக்களிடமிருந்து எந்த ஒரு தனிநபரும் தப்ப முடிவதில்லை. விலகிக் கொள்ளலாம் என்ற போதும் கூச்சல்களும், மேள சத்தங்களும் விரட்டுகின்றன எல்லா பக்கங்களிலும். விழாக்களின் காலம் நம்முடையது; கலாச்சார அடையாளம் போல. சமீபமாக மதுரையில் நடைபெற்ற நாடகவிழா நவீன நாடக, கலை விழாவாக மதுரை நிஜநாடக இயக்கத்தினரால் நடத்தப்பட்டது. 12 நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு நாடகம் பற்றிய தனி அபிப்பிராயங்கள் மாற்றம் எதையும் தோற்றுவித்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்த நாடக விழாவில் கவனிக்கப்பட்ட அல்லது கலகமான இரண்டு விஷயங்களை மட்டுமே முன் நிறுத்தி கவனிக்கலாம்.
தமிழகமெங்கும் பரபரப்பான ‘இரண்டாவது ஆட்டம் ‘ என்ற பாதி நிகழ்த்தப்பட்ட நாடகம் இந்த விழாவில் மிக முக்கியமான இடத்தை எடுத்துக் கொண்டு விட்டது. நவீன நாடகங்கள் என்ற பெயரில் புராதன வடிவங்களின் கூறுகளோடு வெளியான நாடகங்கள் (சதிபர்வம், ஒற்றையானை, தீனிப்போர், சிற்பியின் நரகம்) இதுவன்றி ‘கருஞ்சுழி ‘, அனந்த கிருஷ்ணனின் ‘கடல் போக்கிகள் ‘ பெண்ணேஸ்வரனின் ‘முறைப் பெண் ‘ ஐந்துகோவிலானின் ‘அச்சாணி ‘ நிகழ்த்தப்பட்டன. தமிழ் நாடகங்கள் என்றில்லை, இந்திய நாடகங்கள் பலவற்றிலும் பாரம்பரிய வடிவம் பயன்படுத்தப்படுவதே நவீனம் என்ற போக்கு இருந்து வருகிறது. பழங்கதைகளுக்கு புதிய விளக்கம் கொடுப்பதோ, புதிய கதையில் பழைய வடிவத்தை உபயோகப்படுத்துவதோ நாடக இயக்கம் எங்கும் நடந்து வரும் பரிதாபமான செயலே ஆகும். பாரம்பரிய கலை வடிவம் ஒவ்வொன்றும் ஒரு சமூக, இன மக்களின் வாழ்க்கையோடு, அவர்களின் நிலைப்பாட்டோடு தொடர்புடைய வடிவமாகவே வெளியாகி உள்ளது.
பாரம்பரிய கலைகளை, வெறும் ‘வடிவம் ‘ என்ற அளவில் புரிந்து கொள்ளும் போக்குதான் தமிழ் சூழலில் பரவலாகி வருகிறது இந்த வடிவங்கள் எந்தக் கதையை தேர்ந்தெடுத்துள்ளன, இதன் காரணம் எதோடு தொடர்புடையது என்ற விஷயங்களை நீக்கி, வெறும் வடிவமாக அதைப் பார்க்க இயலாது. கர்ண மோட்ச கூத்தில் கர்ணன் சாதீய அடையாளத்துடன் பொருந்துகிறான். பிரகலாதன் கூத்தாடுபவர்களின் பாரம்பரிய கடவுள் பெருமாள் அல்ல. அவர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வேறு ஒரு அடையாளத்தை முன் வைத்தே கூத்தை நிகழ்த்துகின்றார்கள். (உ.ம். நார்தேவன் குடிகாடு கூத்து) நவீனம் என்ற விஷயம் வரையறுக்க முடியாத ஒன்று என்ற போதும், நவீனம் என்பது பல்வேறு போக்குகள் (diversity) என்ற அடிப்படை சாராம்சத்திலேயிருந்தே எழுகின்றது. நவீன நாடகங்கள் பாரம்பரிய கலையை உபயோகப்படுத்துவது தவறல்ல. அதை ஒரு பாட்டு காட்சி போலவோ, தப்பு அடித்து தொடங்குவதன் மூலமோ நவீனமாக்கிவிட முடியாது.
பாரம்பரிய வடிவங்களின் சிதைவு என்பது வெறும் கலை வெளிப்பாட்டின் சிதைவல்ல. சமூக மாற்றங்களோடு சம்பந்தமுடையது. ஒரு புராதன வடிவத்தை புரிந்து கொள்ள, அதன் நுட்பம் தெரிய ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அதன் ஊடாக செலவழிப்பது அவசியம். மேலும் பாரம்பரிய கலை, கலைஞர் இருவரும் வாழ்விலிருந்து பிறக்கின்றார்கள். கூத்தை நிகழ்த்துபவர்கள் மக்களின் ஊடே இருக்கிறார்கள். அவர்களின் மாற்றத்தை உடனடியாக உணர்ந்து கொள்ளுகிறார்கள். மக்கள் கூடும் விழாவில் அவர்களின் நிகழ்ச்சி நடக்கிறது. நவீன நாடகங்களில் நடிகர்கள் சமூக வாழ்விலிருந்து அப்பாற்பட்டவர்கள், அவர்கள் நிகழ்த்தும் இடமும், நிகழ்த்தும் முறையும் எல்லோரிடமிருந்தும் விலகியவை. கூத்தை இவர்கள் உபயோகப்படுத்தினாலும் இந்த அந்நியமான நிலை போக மறுக்கின்றது.
அழிந்து வரும் கிராமியக் கலைகள், இன்று பல்வேறு விதங்களிலும் தவறாக முன்னிறுத்தப்படுகின்றன. டி.வி.யில் வரும் கிராமிய பாடல்களும், புதிய தன்னானே பாடல்களும், கறுப்பு மலர்கள், குயில்கள் பாடல்களும் இந்த வடிவத்தைச் சிதைக்கவே செய்கின்றன. கேரளாவில் ‘மாப்ளா ‘ பாட்டில் பீடி விளம்பரம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் பெயர் நவீனம் என்றால், தமிழ் நாடகங்களிலும் இந்த நவீனமே உள்ளது. நாம் பாரம்பரிய நாடகம், மரபு என்று பேசும்போதெல்லாம், அந்த வடிவத்தை மட்டுமே பேசுகிறோம். இன்றைய நவீன நாடககாரர் ஒவ்வொருவரும் ‘வெளியீட்டு வடிவம் ‘ பற்றிய பிரச்சனைகளிலேயே உழல வேண்டியுள்ளது. பாரம்பரிய கலை வடிவங்களின் ஆவி நாடகக்காரர்களைச் சுற்றி வந்து கொண்டேயிருக்கிறது. இதற்காக சாக்கியர் கூத்தை தமிழில் நாடகமாக்கி ஆடுவதோ, செநை அடித்தபடி நாடகம் தொடங்குவதோ, பாரம்பரியமாகிவிடாது.
ப்ரக்டின் அந்நியபடுத்துதல் டெக்னிக் என்ற பெயரில் வேல் குத்தி சட்டி எடுப்பது, மாரியம்மன் தீமிதி, காவடி அறுவா வீச்சு ஆட்டம், குதியாட்டங்கள் நடைபெறுகின்றன. ப்ரக்டை தவறாக புரிந்து கொண்டதோடு, மரபையும் தவறாக புரிந்து கொண்டதன் விளைவே இது. கூத்து பல்வேறு அர்த்தங்கள் கொண்டு இயங்குகின்றது. (கோயில், விழா, மதம், சமூகநிலை, இனக்குழுவின் பிரச்சனை, தனிநபர் வெளிப்பாடு… இப்படியாக) சீதையின் மறுபக்கம், அர்ச்சுனின் அந்தரங்கம், குந்தியின் முதல் இரவு என பழைய கதையின் புதிய அணுகுமுறைகள் பற்றிய நவீன நாடகங்கள் சவக்குழிக்கு வைக்கும் பழம் கப்பிமண்டிகளேயாகும். மரபை உபயோகப்படுத்தி நடத்தப்படும் நவீன நாடகம் எந்தத் தளத்தில் இயங்குகின்றது, இதற்கு என்ன சூழல் அக்கறை உள்ளது என்பது தெரியவில்லை. டொங்கர கொட்டுகள், குதியாட்டம், அருள்வந்து ஆடுவது எல்லாம் நவீன நாடக அந்தர்பல்டி அன்றி வேறு எதுமில்லை.
‘இரண்டாவது ஆட்டம் ‘ பற்றிய பரபரப்பு, மலையாளப்பட ஆபாச பிட் போடும் தியேட்டருக்குமுன் சிலர் போராடி, மலையாளப்பட பிட்டை நிறுத்துங்கள் என சண்டையிட்டு, நிறுத்தப்பட்டதற்கு சமமானதே. ஆபாசம் எது என்ற விவாதத்தை விடுத்தால், இந்நாடகம் நிகழ்த்தப்பட்ட விதத்திலும், நிறுத்தப்பட்ட விதத்திலும் எவருக்கும் ஒப்புதல் இல்லை. ‘இரண்டாவது ஆட்டம் ‘ அதன் கருத்தை வெளிப்படுத்தக் கூடிய வடிவத்தை தேர்ந்தெடுக்கவில்லை. நிகழ்த்தப்பட்ட விதத்தில் இது தமிழ்ப்படத்தை ஞாபகமூட்டக் கூடிய ஒன்றுதான். நிறுத்தப்பட்டதும் தமிழ் சினிமாத்தனமே. ஜெனேயின் நாடகங்களில் வரும் பாலியல் பிரச்சனைகளோ, கோதாரின் படங்களில் வரும் நிர்வாண காட்சிகளோ, ரெனேரின் ‘குளிக்கும் பெண் ‘ ஓவியமோ எந்தவித பாலியல் கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தவில்லை. இவற்றில் பாலியல் பற்றிய பிரச்சினைகள் பார்வைகள் கலாப்பூர்வமாக வெளியாகி உள்ளன. அவற்றோடு இந்த நாடகத்தை இணைத்தே நாம் பேச இயலாது. எதிர் கலாச்சார குரலாயிருந்தாலும் அது அதற்கான சரியான வடிவம், வெளியூட்டுமுறை மூலமே வெளிப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
பொது இடங்களிலும் நடைபெறும் ராமாயண சொற்பொழிவுகள், வாலி குற்றவாளியா பட்டிமன்றம், வள்ளுவர் திருவல்லிகேணியில் குடியிருந்தாரா இல்லையா என்னும் வழக்காடு மன்றங்கள், தமிழ் சினிமா பாட்டில் வரும் உடுக்கு சப்தம் போன்றவை தமிழ்ச் சூழலில் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் பராம்பரிய வடிவம் உபயோகப்படுத்தி செய்யும் நவீனக் கூத்து நாடகங்களும் செய்கின்றன.
கூச்சல் எதிர்க்கூச்சல் தவிர்த்து பார்த்தால் பேசப்படக்கூடிய விஷயங்கள் தமிழில் மிகக் குறைவாகவே பேசப்பட்டுள்ளன என்பதே தெரிய வருகின்றது.