மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

மொழியாக்கம்: ஜடாயு


மதர் தெரசா நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் பெரும் தலைவராக (சுபீரியர் ஜெனரல்) புதிதாக பொறுப்பேற்றுள்ள சகோதரி பிரேமா (இவர் பிறப்பால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்) இரண்டு விஷயங்களை பிரகடனம் செய்துள்ளார் – ”மதமாற்றம் என்பது கடவுளின் பணி” என்று ஒன்று. ”எனக்கு தேவ ஆணை கிடைத்தால் நான் கந்தமால் (ஒரிஸ்ஸா) செல்வேன்” என்று இன்னொன்று.
மதமாற்றம் செய்வதிலேயே ஊறித்திளைப்பவர்கள் அதனைக் கடவுளின் பணி என்று வர்ணிப்பது வழக்கமான ஜல்லி தான். இஸ்லாத்திற்கு ஜிகாத் எப்படியோ, அப்படி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம்.

சகோதரி பிரேமா மேலும் சொல்கிறார் – “ஒவ்வொரு மனித உயிருக்கும் தன் நம்பிக்கைகளுடன் வாழ உரிமை உள்ளது, ஒவ்வொரு மனிதனும் சுயகௌரவத்துடன் தான் பிறக்கின்றான். மதமாற்றம் கடவுளின் பணி”. நல்லது. ஆனால், இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் தான் பிரம்மாண்டமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தன் நம்பிக்கைகளுடன் வாழ உரிமை உள்ளதென்றால், அந்த மனிதரை அவருக்கு பிறப்பிலிருந்தே இயல்பாக இல்லாத, புதிய வினோதமான இன்னொரு நம்பிக்கையில் வலிந்து நுழைக்க தேவை தான் என்ன? இயற்கையாக வாய்த்த கடவுளை பேயோட்டுவது போல் துரத்திவிட்டு அந்த இடத்தில் இன்னொரு கடவுளை உட்கார வைப்பது தான், அந்த மனிதருக்கு பிறப்புரிமையாக வரும் சுயகௌரவத்தை உயர்த்துவதா? மதமாற்றம் என்பது முழுக்க முழுக்க இதைத் தானே செய்கிறது சகோதரி?
சுயத்துடன் வாழும் ஒரு ஆணையோ, பெண்ணையோ ஏன் இப்படி ரணப்படுத்த வேண்டும்? சகோதரி என்ன சொல்லவருகிறார் என்றால் – ஒவ்வொரு மனிதரையும் மதம்மாற்ற அவருக்கு உரிமை உள்ளது; ஆனால் அந்த மனிதர் தமது நம்பிக்கைகளுடன் வாழும் உரிமை என்பது சகோதரி பிரேமாவும் அவரது திருச்சபையும் நம்பும் குறிப்பிட்ட கடவுளை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதைப் பொறுத்துத் தான் தீர்மானிக்கப் படும்! உண்மையில் அவர் கூறுவது இதைத் தான். 2000 வருட வயதே கொண்ட இந்தக் குறிப்பிட்ட கடவுள் ஏன் எப்போதும் மற்றவர்களின் பூமி மீது படையெடுப்பவர்களின் உடனுறைபவராகவே இருக்கிறார் என்ற பரிமாணம் ஒரு தனிக்கதையாக சொல்லவேண்டிய விரிவான விஷயம்.
மதமாற்றம் கடவுளின் பணி என்றால் மறுமதமாற்றம் (அதாவது தாய்மதத்திற்குத் திரும்ப அழைத்து வருவது) யாருடைய பணியாம்? சகோதரி பிரேமாவும் சரி, இந்த கிறிஸ்தவ மிஷனரி சைன்யங்களும் சரி, அவர்களது கடவுளைப் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார்கள்; கடவுளும் அவர்களை செமத்தியாக ஏமாற்றியிருக்கிறார். அதையும் சொல்லவேண்டும் இல்லையா? மதமாற்றம் உண்மையிலேயே ”தேவனுடைய பணி” என்றால் தேவன் மகா சோம்பேறியாகவும், திறமையில்லாதவராகவும் இருந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டி வருகிறது.
கத்தோலிக்க திருச்சபை மிகப் பெரிய கன்யாஸ்திரீகள் மற்றும் பாதிரிகளின் படையை வைத்திருக்கிறது. கிறிஸ்தவ எவேஞ்சலிகல் சர்ச்சுக்களோ அவர்களுக்கே உரித்தான மதப் பிரசாரகர்களை வைத்திருக்கிறார்கள் ; வட இந்தியாவில் மட்டுமே சதர்ன் பாப்டிஸ்டுகள் சுமார் ஒரு லட்சம் பணியாளர்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் சம்பளம் வாங்கி வேலை செய்யும் உண்மையான தேவ “ஊழியர்கள்”. இருப்பினும் தேவனுக்கு பெரிதாக மகிமை ஒன்றும் உண்டானாற்போலத் தெரியவில்லை.
மேலும், இந்த தேவன் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி போன்றும் தெரிகிறது. அவர் ஏன் இஸ்லாமிய நாடுகள் பக்கம் திரும்பவே மாட்டேனென்கிறார்? தீவிரவாதிகளுக்கு பயப்படுகிறாரோ? வறுமையில் வாடும் வனவாசிகளும், அமைதி விரும்பிகளான சாது இந்துக்களும் தான் இந்த தேவனுக்கும் அவரது ஊழியர்களுக்கும் இலக்கு போலும்! இவ்வளவு பணபலம், படைபலம் இருந்தும், இந்த தேவன் தன் ராஜ்ஜிய விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த ஒரு ஏழைத் துறவியைப் படுகொலை செய்ய ஒரு கிறிஸ்தவ நிறுவனத்திற்கு* தனது தேவ ஆசிர்வாதத்தை வேறு வழங்க வேண்டி வருகிறது!
(* : ஒரிஸ்ஸா கந்தமால் பகுதியில் சுவாமி லட்சுமணான்ந்தா படுகொலை தொடர்பாக, வேர்ல்டுவிஷன் என்ற உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பின் பணியாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்)
சகோதரி பிரேமா தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் தலைவர்களின் உளறல்களை அம்பலப் படுத்தி விட்டார். இங்கு மதமாற்றம் நடப்பதே இல்லை என்று ஊடகங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. ஆனால் மதமாற்றம் உலக அளவில் பல வடிவங்களை எடுக்கிறது என்பது தெரிந்த ரகசியம். சேவை, வறுமை ஒழிப்பு என்ற எந்தப் போர்வையில் வந்தாலும் அடிப்படையில் அது ஒரு வன்முறையே. ஆம், ஒரு மனிதரின் பிறப்புரிமை என்று சகோதரி பிரேமா குறிப்பிடும் அந்த “சுய கௌரவத்தை” அவரிடமிருந்து பிரித்து, அவரது மதப் பாரம்பரியத்திலிருந்து அவரை வெட்டி எறிந்து, தன் சமூகத்திலேயே வேற்று மனிதராக்குவது உளவியல் ரீதியாக சித்திரவதை செய்து கொல்வது போன்ற வன்முறையே ஆகும்.
கிறிஸ்தவம், மதமாற்றம் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதே உண்மை. கிறிஸ்தவம் சென்ற இடங்கள் அனைத்திலும் ரத்த ஆறு தானே ஓடியது? அழிவு, அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் மறைமுகத் திட்டம், செல்வக் குவிப்பு, அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை ஓட்டாண்டியாக்குதல் இதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்த்து? கென்ய விடுதலை வீரர் எவ்வளவு நிதர்சனமாகச் சொன்னார் – “மிஷநரிகள் இங்கே வரும்போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது, எங்கள் கையில் பூமி. வந்திறங்கியதும், “கண்களை மூடிப் பிரார்த்தனை செய்வோம்” என்றார்கள். செய்தோம். நாங்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, எங்கள் பூமி முழுவதும் அவர்களிடம், எங்கள் கைகளில் வெறும் பைபிள் மட்டும்”.
இது ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் நடந்தது. வாத்திகனின் இரும்புப் பிடியிலிருந்து தங்களை உடைத்துக் கொண்ட கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற தேசங்கள் முன்னேற்றம் அடைந்தன. கத்தோலிக்க அதிகார பீடங்களின் கையில் இருக்கும் ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ, அர்ஜெண்டினா, கியூபா, இத்தாலி ஆகிய தேசங்கள் ராணுவ சர்வாதிகாரத்திலும், சர்ச் கொடுங்கோன்மையிலும் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவம் இன்று அமைதி விழையும், சகோதரத்துவம் வளர்க்கும், கருணை மதமாக பார்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறது, ஆனால் இந்த விஷயங்களிலிருந்து அது வெகுதூரத்தில் இருக்கிறது. ரத்தத்தில் பிறந்து, ரத்தக் களரியில் தான் கிறிஸ்தவம் வளர்ந்தது என்பது நினைவிருக்கட்டும்.
பல கன்யாஸ்திரீகள், பாதிரியார்கள் போன்று சகோதரி பிரேமாவும் திருச்சபையின் வரலாறு பற்றி அறியாத வெள்ளந்தியாக இருக்கிறார் போலும். இவர்கள் அன்பு, கருணை, சேவை போன்றவற்றைக் காட்டி மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள். குறிப்பாக இந்தியாவில் இதில் மாட்டிக் கொண்டு பின்னர் மீளமுடியாமல் தவிப்பவர்களே அதிகம். திருச்சபைக்கு இருக்கும் அத்துமீறிய அதிகாரம் பற்றியும், மனச்சாட்சியுள்ள சாதாரணர்களால் அதனுடன் போரிடவே முடியாது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களது குரல் காட்டில் எழும் எதிரொலி போல அங்கேயே அமுங்கி விடுகிறது.

தேவ ஆணை கிடைத்தால் கந்தமால் (ஒரிஸ்ஸா) செல்வேன் என்று பிரேமா சொல்கிறார். அவர் முன் ஒரு தேவ விசுவாசம் மிகுந்த பிரார்த்தனையை வைக்கிறேன். கந்தமாலுக்கு பதிலாக, கேரளா சென்று அங்கு முன்னாள் கன்யாஸ்திரீ சிஸ்டர் ஜெஸ்மியைப் போய்ப் பார்த்து, சர்ச் கான்வெண்டிற்குள் அவருக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களைப் பற்றி விசாரிப்பது தான் உண்மையான, விசுவாசமிக்க செயலாக இருக்கும். அவரது உடனிருக்கும் ஊழியர்களாலேயே நம்பிக்கை துரோகம் இழைக்கப் பட்டு, கூட இருந்த பாதிரியார்களின் பாலியல் வக்கிரங்களுக்கு உடன்படும்படி கட்டாயப்படுத்தப் பட்டு, நிர்வாணமாக்கப் படுவது உட்பட பல சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார் அவர். இத்தனைக்கும் சர்ச் வட்டாரங்களில் இது ஒரு புதிய விஷயமோ, அபூர்வமாக நடந்த ஒரு சமாசரமோ இல்லை. கான்வெண்டுகள் மற்றும் சர்ச்களின் மதிள் சுவர்களுக்குள் கற்பழிப்புகளும், கொலைகளும் காலம்காலமாக நடந்து வருவது தான். ஆனால் சர்ச்சுக்கு வெளியில் “கன்யாஸ்திரீ கற்பழிப்பு” என்பது மட்டும் தான் இங்கே பற்றி எரியும் செய்தியாகிறது.
சகோதரி பிரேமா சிஸ்டர் ஜெஸ்மி மற்றும் அவர் போன்று வருந்தும் மற்ற கன்யாஸ்திரீகளின் துயர்துடைப்பதற்காக சர்ச் அதிகார அமைப்பில் தலையிடுவதில் ஏன் தன் “தேவ ஆணையை” செலுத்தக் கூடாது? கன்யாஸ்திரீகள் கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பது, பிஷப்கள் மற்றும் பாதிரிகளின் குழந்தைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்கும் ஆளாவது, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதற்காக அமெரிக்காவில் சர்ச்சுகள் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப் படுவது – இதெல்லாம் மிஷனரீஸ் ஆஃப் சாரிடி போன்ற ஒரு புகழ்பெற்ற திருச்சபை அமைப்பின் தலைவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் அல்லவா?

அமெரிக்காவில் ஒரு ஏசுசபை குழுமம் தான் திவாலாகி விட்ட்தாக அறிவித்திருக்கிறது – அதன் பாதிரிகளின் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் அளவுக்கு போதிய பணம் இல்லை என்பதால். ஆனால், சகோதரி பிரேமா போன்ற விசுவாசி கிறிஸ்தவர்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை – ஒரிஸ்ஸாவில் நடப்பது தான் அவர்களது பார்வையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. சரி, அப்படியே இருக்கட்டும். முதலில் படுகொலை செய்யப்பட்ட சுவாமி லட்சுமணானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்று அந்த சம்பவத்தின் பயங்கரத்தால் மிரண்டு போயிருக்கும் அங்கிருக்கும் குழந்தைகளை சகோதரி அன்புவார்த்தைகளால் தேற்றலாமே! இதில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்க கருணை மிகு சகோதரி நடவடிக்கை எடுப்பாரா?
கடைசியாக ஒரு வேண்டுகோள் – சகோதரி பிரேமா சொல்வது போல, அவரது நிறுவனம் ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறது என்றால், இந்த நாட்டின் ஏழைகளுக்காக வந்த பணம், ஏன் ரோம் நகரின் (வத்திக்கான்) பணக்கருவூலங்களுக்குப் போகவேண்டும்? மிஷநரிஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப் படுகின்றனவா? சர்ச் நிலங்களும், சொத்துக்களும் ஏன் தணிக்கை செய்யப் படுவதில்லை? ஏன் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்? இது ஒரு தேசவிரோத செயல் இல்லையா? ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கையில் இருப்பதால் பணத்தின் மதிப்பு மாறிவிடுமா? அந்தப் பணம் தேசப் பொருளாதாரத்தின் கணக்கில் வரவேண்டும் அல்லவா?
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அரசு ஊதியம் பெறுகிறார்கள், வருமான வரியும் செலுத்துகிறார்கள். ஆனால் அதே நிறுவனங்களில் பணியாற்றி, அதே ஊதியம் பெறும் பாதிரியார்களுக்கும், கன்யாஸ்திரீகளுக்கும் வருமான வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இவர்களுக்கு ஊதியம், பென்ஷன் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் மற்ற இந்தியமக்கள் செலுத்தும் வரியை மட்டும் இவர்கள் செலுத்தமாட்டார்கள்! இது எந்த வகை நியாயம்? சகோதரி பிரேமாவின் அமைப்பும், அது போன்ற மற்ற மிஷன்களும் நடத்தும் “ஏழைகளுக்கான சேவை அமைப்புகள்” மிகப் பெரிய அளவில் பணம் புழங்கும் வர்த்தகங்கள் என்பதே உண்மை.

இந்த கிறிஸ்தவ மொழியைப் புரிந்து கொள்ள ஒரு தனி சிறப்பு அகராதியே உருவாக்க வேண்டும். அதிகாரம் என்பது சர்க்கரை தடவி “சேவை” என்று சொல்லப் படும். தங்களை எப்போதாவது காயப் படுத்துபவர்களுக்கு இயல்பாக “பாவமன்னிப்பு” வழங்குவார்கள், இரக்க குணத்தைக் காண்பிப்பதற்காக. ஆனால் மற்றவர்களைக் காயப் படுத்துவதை மட்டும் நிறுத்தவே மாட்டார்கள். வனவாசிகளையும், ஏழைகளையும் மனிதத் தன்மையற்றவர்களாக சித்தரிப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.
இவர்கள் ஏன் ஏழைகளை நிம்மதியாக இருக்கவிடக் கூடாது? இந்த அளவுக்குப் பெரும்பணம் வெளிநாடுகளில் இருந்து இந்திய மிஷநரிகளுக்காக வந்து குவிந்திருக்கிறது, வந்துகொண்டேயிருக்கிறது. அரசும் தன் பங்குக்கு பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறது. சர்வ மகிமை பொருந்திய தேவன் வேறு கூட இருக்கிறார். இருந்தும், வறுமையையும், பசியையும், பற்றாக்குறையையும் சிறிய அளவில் கூடக் குறைப்பதற்கு மிஷநரி முயற்சிகளால் முடியவில்லையே. கொஞ்சம் நின்று நிதானித்து, அடிப்படையில் என்ன தவறு என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? யார் யாரைச் சுரண்டுகிறார்கள்? ஏழைகளை ஏழ்மையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பது தான் தேவ ஆசிர்வாதமா? பிற்போக்குத் தனம் அப்படியே இருக்கவேண்டும் அல்லது வளர வேண்டும் என்பது தான் பிரார்த்தனையா? ஒருவேளை சகோதரி பிரேமா மற்றும் அவர் போன்றவர்கள் அடிப்படை பொதுப் புத்தியுடன் சிந்திப்பதற்குக் கூட “தேவ ஆணை” வரவேண்டும் என்று நாம் காத்திருக்கவேண்டுமோ?
[1] http://vivekajyoti.blogspot.com/2009/03/selling-poverty-abroad-is-most.html

ஆசிரியர் குறிப்பு:
டாக்டர் திருமதி திருமதி ஹில்டா ராஜா இந்திய தேசியம், இந்திய கலாசாரம் மற்றும் இந்திய சமய மரபுகள் மீது மதிப்பும், பெருமிதமும் கொண்ட ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கத்தோலிக்க கல்வி அமைப்புகள், அரசு வளர்ச்சித் திட்டக் குழுக்கள் ஆகியவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். மதமாற்றங்கள் உருவாக்கும் சமூக மோதல்கள் பற்றி கூரிய பார்வையுடன் ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருபவர்.

http://jataayu.blogspot.com/

Series Navigation

ஜடாயு

ஜடாயு