மண்ணெண்ணெய்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

அருண் கொலட்கர் – ( மொழியாக்கம் : இரா.முருகன் )


—-

ஆலமரப் பெரிசுக்கு
அவள் எப்பவுமே
செல்லப் பெண்.

மரம் ஒரே நாளில்
திரும்பத் துளிர்த்து
இளசாக முயன்றாலும்,
முடிவு என்னமோ
நிறைவாக இல்லை.

கோடாலி பிடித்த
நகராட்சி அலுவலகர்கள்
குஷியாக அவ்வப்போது
கிளம்பி வருகிறார்கள்.

நேற்று வந்து
மரத்தின் குருசாமித்
தாடி விழுதையும்
பரட்டைச் சடாமுடியையும்
வெட்டி வீழ்த்தினார்கள்;
அபச்சாரம்.

ஆகக் குறைந்து போனாலும்
அப்பா போல் பாசமாகக்
குடைவிரிக்கும் மரநிழலில்
குந்தியிருக்கிறாள் அவள்.

சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாள்.
கூட இருப்பவர்கள்
அக்கா தங்கையோ, தோழிகளோ.
ராணியின் பாதுகாப்புப் பெண்கள் அவர்கள்.
அப்படித்தான் தெரிகிறது.

விளையாடியபடிக்கே
தனக்குப் பிடித்த திரைப்பட நடிகர்கள் பற்றி,
எய்ட்ஸ் பற்றி,
புது கான்ஸ்டபிளுக்கு எவ்வளவு
மாமூல் வெட்ட வேண்டிப் போனது
என்பது பற்றியெல்லாம்
கதைத்துக் கொண்டிருக்கிறாள்.

2

ஒரு சீட்டை உருவுகிறாள்.
போடு சக்கை
ஆடுதன் ராணி.

ஜாக்கிக்கும் ராஜாவுக்கும்
நடுவே ராணியம்மா.
டைமன் ஏசை இறக்கவா
இல்லை ஆடுதன் ஜாக்கியையா ?
யோசிக்கிறாள்.

முடிவுக்கு வர முடியாமல்,
யோசனை ஏதும் கிடைக்குமா என்று
கையில் பிடித்த சீட்டுகளைக் கடந்து
பின்னால் விரியும்
தெருவைப் பார்க்கிறாள்.

நகர்ந்து போகும்
மண்ணெண்ணெய் வண்டியில்
சடாரென்று பார்வை நிலைக்கிறது.

3

காகித விசிறியை மூடுவது போல்
சீட்டுகளை மடக்கிப்
பக்கத்தில் வைக்கிறாள்
தரைமேல்.

குவியலாக
அட்டைப் பெட்டி, பானை சட்டி,
இருப்புச் சட்டி, துணி மூட்டை,
தலையில்லாத பொம்மை,
குட்டி டிரான்ஸிஸ்டர்,
ஸ்டவ், அதன் மேல்
ரப்பர் பந்து.

ஆலமரத்தைச் சுற்றியும்
அதன் கிளைகளில் முளைத்தும்
கிடக்கும் அவள் உடமைகள்.

ஒரு நொடியில் ஓடிப்போய்
காலி பிளாஸ்டிக் குப்பியைப்
பாய்ந்து எடுக்கிறாள்.

ஒரே ஓட்டமாக ஓடுகிறாள்
பிள்ளைத் தாச்சி.
கிட்டத்தட்ட நிறைசூலி.

பதினாறு வயதுதான் இருக்கும்.
கருவுற்ற சீட்டுக்கட்டு ராணி.
ஆனால் என்ன,
நினைத்தபோது மான்போல்
துள்ளியோட அவளுக்கு முடியும்.

4

முழங்கால் மின்னி மினுங்க,
சேலையை உயர்த்திச் செருகியபடி
கையில் காலிக் குப்பியோடு

மான் போல், அதாவது
முடமான ஒரு கலைமானாக
ஓடுகிறாள். எப்படி இருந்தாலும்
மான் மான் தானே ?

எதிரே வந்த ஸ்கூட்டர்காரன்
வளைத்து ஓட்டிப் போகிறான்.
கப்பல் போல் பெரிசாக
விரைந்து வரும் வெள்ளைக் கார்
அவள் கடந்து போக வழிவிட்டுக்
காத்து நிற்கிறது.

அதெல்லாம் கிடக்கட்டும்.
மண்ணெண்ணெய் வண்டி
தெருக்கோடியில் மறைவதற்குள்
பிடித்துவிட வேண்டும்.

5

வண்டியை இழுத்து வரும்
சட்டை யில்லாத
அசட்டுப் பயலுக்கு
அவளைத் தெரியும்போல.

கால்சராயை முழங்காலுக்குச்
சுருட்டி மடக்கி,
கருத்த முதுகில்
வியர்வை மின்ன
வண்டிச் சட்டங்களிடையே
குதித்து வரும்
ஓட்டக்காரன்.

அவளைப் பார்த்ததும்
வண்டியை நிறுத்தி
ஏதோ சொல்கிறான்.
அவள் சிரிக்கிறாள்.

இழுப்புச் சட்டங்களின்
முன்முனை தரையில்படக்
குனிந்து வைக்க
வண்டியும் முன்னால்
சரிகிறது.

கோமாளித் தனமாக
கால் கட்டைவிரல் ஊன்றி
ஒரு சுற்று சுற்றித் திரும்பி
மரச் சட்டத்தில் கால்வைக்கிறான்.

அகல விரித்த கையோடு
அவளை வணங்கிச் சொல்கிறான் –
என்னோடு நீயும்
வண்டிக்குப் பின்புறம் வா.

6

வண்டிச் சக்கரம்
வலுவான ஆரங்களோடு
பற்றி ஏறத் தோதாகக்
காத்திருக்கிறது.

வேண்டாம் அதெல்லாம்.
திடமான அச்சாணிகூடத்
தேவையில்லை என்று ஒதுக்கி

எம்பி அவன் மேலேறிப்
பின்னால் தாங்கு கட்டைகளில்
கால் வைத்து
இணைசேரத் துடிக்கும் குரங்குபோல்
மேலும் கீழுமாகக் குதிக்கிறான்.

அச்சாணியில் தடுமாறி
ஆடி அதிர்ந்து
பின்னே வைத்த குழாய்
சமநிலைக்கு வர
வண்டி மல்லாந்து நிற்கிறது.

7
மண்ணெண்ணெய் முழுக்க
விற்றுத் தீர்க்க அவன்
மறுபடி ஓடுகிறான்.

நிரம்பி வழியும் குப்பியை
நிழலில் வைத்து,
எந்தச் சீட்டை இறக்கலாம் எனத்
தீர்மானம் செய்து அவள்
திரும்ப உட்கார்கிறாள்.

தெருவில் சின்னதாகத் தேங்கிய
மண்ணெண்ணெய்க் குட்டை விளிம்பில்
வந்தமர்கிறது கிழட்டுக் காக்கையொன்று.

காக்கை குடிக்குமா இந்த இழவை ?
மெல்லத் தலைசாய்த்து வெறுப்போடு
மீண்டும் எவ்விப் பறக்கிறது.

மாதாகோவில் கோபுர
மாடத்திலிருந்து அது நோக்க
பார்க்கப் பார்க்கத் திகட்டாத
பகல் காட்சி.

சைக்கிள் பின்வசம்
கட்டி வைத்த ஆட்டு மாமிசத்தோடு
பண்டகசாலை உணவு விடுதிக்குக்
கசாப்புக் கடைக்காரன்
வந்து கொண்டிருக்கிறான்.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – கெரசின் –
மொழியாக்கம் – இரா.முருகன் – டிசம்பர் ’04.

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்