மடியில் நெருப்பு – 22

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

ஜோதிர்லதா கிரிஜா


22.

வீட்டுக்குத் திரும்பிய சூர்யாவுக்கு மனசே சரியாயில்லை. அதிகம் பழகாவிட்டாலும்- தினமும் புன்னகையைப் பரிமாறிக்கொண்டு காலை வணக்கமும் சொல்லிக்கொண்டிருந்த அளவுக்கு மட்டுமே ஆன அறிமுகம் த்ஹன் என்றாலும்- அவள் இன்று உயிருடன் இல்லை என்னும் உண்மையைச் செரிக்க முடியாமல் செய்து அவளை அது அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

கமலாவுக்குச் சிரித்த முகம். நிதான உயரம். அளவான பருமன். விழிகளின் பாலை யத்த தூய வெண்பரப்பு ஒரு குழந்தையுடைய கண்களை ஞாபகப்படுத்தும். குட்டையான சுருட்டை முடி. கொத்துமல்லிக் கட்டு மாதிர் பின் கழுத்தில் புரளும் அதை ஒரு நாடாவல் கட்டியிருப்பாள். தங்க முலாம் பூசினாற்போன்ற நிறம். அவள் இடையை ஆட்டி ஆட்டி நடப்பதே ஒரு தனி அழகு. அந்த நடை செயற்கைத்தனம் அற்றது.

யாரைப் பற்றியும் அவதூறாய்ப் பேசுகிற இயல்பு பவானிக்குக் கிடையாது. இன்றுவரை பவானி கமலாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒரு வார்த்தை கூடத் தன்னிடம் வம்புத்தனமாய்ப் பேசியதில்லை என்பதை நினைவு கூர்ந்த சூர்யாவுக்கு அவளைப்பற்றி மேலும் பவானியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆவல் கிளர்ந்தது.

“என்னக்கா, ஒருமாதிரி இருக்கே?” என்று முகம் கழுவிக்கொண்டு வந்த அவளிடம் சுகன்யா கேட்டாள்.

சூர்யா சேதியைச் சொன்னாள். சொல்லிவிட்டு, “நாளை காலையில கொஞ்சம் சீக்கிரமா என்னை எழுப்புடி, சுகன்யா. மறக்காதே. என்ன?” என்றாள்.

அப்போது காப்பியுடன் மகளை நெருங்கிய அனந்தநாயகி, “ஆறு மணிக்கு எங்கே போகணும்?” என்று விசாரித்தாள்.

சூர்யா, காப்பியை வாங்கிப் பருகிய வண்ணம், “ஒரு சாவுக்கும்மா. கமலான்னு ஒரு பொண்ணூ. எங்க ஆ·பீஸ்தான். திடீர்னு செத்திடிச்சு. தூக்குப் போட்டுக்கிட்டு செத்துடிச்சாம்,” என்றாள்

“என்ன! தூக்குப் போட்டுக்கிட்டு செத்திரிச்சா! அப்ப, ஏதாச்சும் தப்புக் காரியம் பண்ணியிருக்கும்!”

சூர்யாவுக்கு எரிச்சல் வந்தது. அம்மாவிடம் அந்த அதிகப்படியான தகவலைச் சொல்லியிருந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

“முன்னே பின்னே தெரியாதவங்களைப் பத்தி அப்படியெல்லாம் அவதூறாப் பேசக்கூடதும்மா. நம்ம வீட்டில அக்கா கூடத்தான் ஓடிப்போச்சு. அதை மறந்துட்டு மத்தவங்களைப்பத்திப் பேசறியே!” என்று சூர்யா சுள்ளென்று வெடித்ததும், அனந்தநாயகியின் வாய் உடனே மூடிக்கொண்டது.

சில கணங்களுக்கு மவுனமாக இருந்த பின், “எதுக்குத் தூக்கு மாட்டிக்கிச்சாம்? தெரியுமா?” என்று விசாரித்தாள்.

“தெரியல்லேம்மா.”

“கல்யாணம் ஆயிறுச்சா?”

“இல்லே.”

“எம்புட்டு வயசு இருக்கும்?”

“முப்பது. அம்மா-அப்பா கிடையாது.”

“நல்ல காலம்! அவங்கம்மா உசிரோட இருந்திருந்தா, அந்தப் பெத்த வயிறு துடியாத் துடிச்சிருக்கும். கூடப் பொறந்தவங்க இருக்காங்களா?”

“ஒரே ஒரு தம்பி. காலேஜ்ல படிச்சிட்டிருக்கானாம்.”

“அட, பாவமே! அவனுக்காக வேண்டியாவது அந்தப் பொண்ணு உசிரோட இருந்திருக்கக் கூடாதோ!! என்ன பொண்ணுங்களோடி யம்மா! பொண்ணாப் பொறந்தாலே பிரச்சனைதான். ஆம்பளைக்கு என்ன? தப்பையும் பண்ணிட்டுத் துண்டை உதறித் தோள்லே போட்டுக்கிட்டு அவன் பாட்டுக்குப் போயிறுவான். பொம்பளைங்க – நாமதான் சாக்கிரதையா யிருக்கணும். வயசுப் பொண்ணுங்களை ஒருத்தன் கையிலே பிடிச்சுக் குடுக்கிற வரையிலே, அவங்கல்லாம் தாயார்க்காரிங்க மடியில நெருப்புத்தான். வீடு விட்டா ஆ·பீசு, ஆ·பீசு விட்டா வீடுன்னு இருந்தா எந்த வம்பும் இல்லே. .. ..முறைக்காதேடி! பெத்த தாயி நல்லதுக்குத்தான் சொல்லுவா. இப்ப கசப்பாத்தான் இருக்கும். பின்னாடி தெரிஞ்சுக்குவீங்கடி. உங்க அக்காக்காரியைத் திட்டுறேனே ஒழிய, அவ நெனப்பு வர்றப்பெல்லாம் எம் பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுதுடி! பாவி மக! எங்கிட்டு அல்லாடுறாளோ! கடங்காரி.. .. ..” – பொங்கிப் புறப்பட்ட கண்ணீரை அனந்தநாயகி துடைத்துக்கொண்டாள்.

காப்பி தம்ப்ளரை வாங்கிக்கொண்டு அவள் அப்பால் நகர்ந்ததும், “ஏண்டி, சுகன்யா! இந்த அம்மா என்ன ரெண்டு நாளா வீடு விட்டா ஆ·பீசு, ஆ·பீசு விட்டா வீடுன்னு வய்க்கு வாய் பொலம்பிட்டிருக்கு! அம்மாவுக்கு ஏதாச்சும் தெரியுமா?” என்று சூர்யா சுகன்யாவிடம் கேட்டாள்.

“சத்தியமா நான் எதுவும் சொல்லல்லேக்கா. அம்மா எப்பவுமே சொல்ற வார்த்தைங்கதான். எனக்குக் கூடத்தான், வீடு விட்டா காலேஜ், காலேஜ் விட்டா வீடுன்னு அடிக்கடி புத்திமதி சொல்றாங்க.. .. .. உனக்கு அப்படித் தோணுது! குத்தமுள்ள நெஞ்சில்ல! அதான் குறுகுறுன்னுது!”

சுகன்யாவின் குறும்புச் சிரிப்பு சூர்யாவின் முகத்தில் சிவப்பேற்றியது.

“அது சரி, அந்தக் கமலா எதுக்குத் தூக்கு மாட்டிக்கிச்சாம்? உனக்குத் தெரியாதாக்கா?”

“அம்மா ஊகிச்ச மாதிரிதான் நடந்திருக்கணும். ஏன்னா, அது கல்யாணம் கட்டல்லையே தவிர, எவனோ தண்டபாணின்ற பொறுக்கியோட சகவாசம் வெச்சிட்டிருந்திச்சாம். எனக்கு பவானி சொல்லிச்சு.. .. ஒருக்கா ந¨ளைக்கு முழு விவரமும் தெரியலாம்.”

“அப்புறம்? உன் சங்கதி என்னக்கா?”

“அவரு அவங்க கம்பெனி விஷயமா பம்பாய்க்குப் போயிருக்காரு. வர்றதுக்கு ஒரு வாரம் போல ஆகும்.”

“அப்ப இன்னும் ஒரு வாரத்துக்கு உனக்கு ஆ·பீஸ்ல வேலை ஜாஸ்தியா இருக்காது. வழக்கம் போல கரெக்ட் டயத்துக்கு வீட்டுக்கு வந்துடுவே!”

“சரிதாண்டி, வாயாடி!”

.. .. ..ஏற்கெனவே பேசிவைத்துக்கொண்டபடி மறு நாள் காலை அலுவலக வாயிலில் சந்தித்துக்கொண்ட சூர்யாவும் பவானியும் ஓர் ஆட்டோ பிடித்துக் கமலாவின் வீட்டுக்கு ஒன்பதேகால் மணிக்கு வந்து சேர்ந்தார்கள். கமலாவின் தம்பி ஒரு பெண்ணைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுதது அங்கே கூடி இருந்த ஆண்களின் கண்களைக் கூடக் கலங்கச் செய்தது. தூரத்து உறவினர்களின் கூட்டம் கொஞ்சம் இருந்தது. ஒரு காவல் துறை ஆய்வாளரும் இரண்டு காவலர்களும் இருந்தார்கள்.

பவானி, ஆய்வாளரை நெருங்கி, “எக்ஸ்க்யூஸ் மி.. .. நாங்க ரெண்டு பேரும் கமலாவுடைய ஆ·பீஸ்ல வேலை பண்றவங்க. .. .. தற்கொலைதானா, சார்?” என்று விசாரித்தாள்.

“பவானின்றவங்க வந்திருக்காங்களாம்மா?”

“நான் தான் சார், பவானி.”

“நீங்கதான் அவங்களுக்குக் கொஞ்சம் நெருக்கமானவங்கன்னு கேள்விப்பட்டோம். உங்க் கிட்ட கொஞ்சம் பேசணும்மா. வாங்க. அப்படி ஒதுக்கமாப் போயிறலாம். .. .. நீங்களும் வாங்கம்மா.. .. “

ஆய்வாளர் இருவரையும் சற்று ஒதுக்கமான இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

“கமலாவுடைய பெர்சானல் லை·ப் பத்தி ஏதாச்சும் விவரங்கள் இருந்தா சொல்லுங்க, மிஸ்ஸஸ் பவானி.”

“கமலாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே. ஆனா, தண்டபாணின்னு ஒரு ஆளோட பழகிட்டிருந்தா.”

“எல்லை மீறின பழக்கமா, இல்லே.. .. ..”

“தெரியாது.”

“சரி. அந்த ஆளைப் பாத்தீங்கன்னா அவனை உங்களால அடையாளம் காட்ட முடியுமா?”

“முடியும்.. .. ஏன், சார்? ஏதாச்சும் சந்தேகமா ?”

“இப்ப நாங்க எதுவும் சொல்லக்கூடாதும்மா. ஆனா எங்களுக்குச் சந்தேகம் இருக்கு. இப்போதைக்கி அதைப் பத்தி மூச்சுக்கூட விடாதீங்க. அவங்க தம்பியை நாங்க இன்னும் எதுவும் கேக்கல்லே. அப்பால விசாரிப்போம்.”

“கமலா லெட்டர் ஏதும் எழுதி வைக்கல்லையா, சார்?”

“தேடிப் பார்த்துட்டோம். இது வரையிலே எதுவும் கிடைக்கல்லே. ,, அப்புறம் இன்னொரு விஷயம். தேவைப்பட்டா உங்ககிட்ட மறுபடியும் விசாரிப்போம். ஆ·பீசுக்கு வரலாமில்ல?”

“தாராளமா!”

கமலாவின் உடலைக் கழுத்து வரையில் போர்த்தி வைத்திருந்தார்கள். அக்காவின் உடலுக்கு அருகில் அமர்ந்து குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்த இளைஞனின் தோளில் தொட்டு, “அழாதேப்பா. என்ன செய்யிறது? அவளுக்கு என்ன கஷ்டமோ! போயிட்டா. இனிமே நீ ஆக வேண்டியதைப் பாரு. . . தைரியமா யிருப்பா. ஏதாச்சும் உதவி வேணும்னா கேளு,” என்று கூறிய பவானி பார்வையாலேயே அவனிடமிருந்து விடை பெற்றாள். அவளுடன் சூர்யாவும் கிளம்பினாள்.

. . .குளித்துவிட்டு அலவலகம் செல்லும் பொருட்டு இருவரும் தத்தம் வீடு நோக்கிக் கிளம்பினார்கள்.

. . . பன்னிரண்டு மணிக்குத் தொலைபேசி மணியடிக்க, எடுத்துப் பேசிய தலைமை எழுத்தர், “ அம்மா, சூர்யா! உங்களுக்கு ·போன்,” என்றார்.

சூர்யா வியப்புடன் எழுந்து சென்று, ஒலிவாங்கிக்குள், “ ஹல்லோ!” என்றாள். ராஜாதிராஜன் ஊருக்குப் போகவில்லை போலும் என்று எண்ணிக்கொண்டாள். அல்லது அவளுடைய அம்மாவுக்கு மறுபடியும் உடல் நலமில்லாமல் போயிருக்கலாம். அன்று போல் எதிர்வீட்டுப் பையனை விட்டுப் பேசச் சொல்லியிருக்கலாம். தொலைபேசியில் தன்னை யழைத்திருப்பவரின் குரலைக் கேட்பதற்கு முன்னால், சூர்யா இப்படி யெல்லாம் யோசித்தாள்.

“நீ சூர்யாதானே?”

கேட்ட ஆண் குரல் அவளுக்குப் பழக்கமானதாக இல்லாததால், “. . .ஆ. . .மா. . . ஆனா நீங்க யாருங்க?” என்றாள். ‘நீ’ என்று தான் ஒருமையில் அழைக்கப்பட்டதில் அவளுள் விளைந்த எரிச்சல் அவளது கேள்வியில் ததும்பியது.

“என் பேரு விநாயகம். உன்னைத் தனியாப் பாத்துப் பேசணுமே! எங்கே பாகாலாம்? நீ சொல்ற இடத்துக்கு நான் வர்றேன்!”

“போடா, பொறுக்கி!” என்று கூறிவிட்டுத் தொலைபேசித் தொடர்பை அவள் துண்டித்தாள். முகம் சிவந்துவிட்டது.

“யாரும்மா?” என்று தலைமை எழுத்தர் கவலையுடன் விசாரித்தார்.

“தெரியல்லே, சார். எவனோ வேலைவெட்டியில்லாத சோம்பேறி! என்னைத் தனியாப் பாத்துப் பேசணுமாம்!” என்று கூறிவிட்டு அவள் எரிச்சலுடன் நடந்து தன்னிருக்கைக்குப் போனாள்.

தொலைபேசி மறுபடியும் ஒலித்தது. தலைமை எழுத்தர், “ அந்தப் பொறுக்கியாத்தான் இருக்கும்!” என்று முனகியபின் ஒலிவாங்கியை எடுத்து, “ஹலோ!” என்றார்.
– தொடரும்


jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா