ஜோதிர்லதா கிரிஜா
தன் அப்பாவைப் பற்றிய வியப்பில் அவள் விழிகள் விரிந்திருந்ததை ராஜாதிராஜன் கவனித்தான்: “ஆமா. அவரேதான் சொன்னாரு. அது வரைக்கும் அரசல் புரசலாக்கூட விஷயம் என் காதுக்கு எட்டினதில்லே. எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டு, ‘என்னை வெறுக்க மாட்டியே, ராஜா?’ அப்படின்னு கேட்டுட்டுக் கண் கலங்கினாரு… நான் அவர் கண்ணீரைத் துடைச்சுவிட்டேன்…” – பேசுவதை நிறுத்திவிட்டு அவன் பெருமூச்செறிந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.
“தான் ஒருத்தியோட வாழ்ந்துக் கிட்டிருக்கிறதைப் பத்தி அவரே உங்ககிட்ட சொன்னாரு ங்கிறதை என்னால் நம்பவே முடியல்லீங்க!”
“அவரு மனசு விட்டு எங்கிட்ட அது பத்திப் பேசினப்போ எனக்கும் ஒரே அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும்தான் இருந்திச்சு. ஆனா கோவமோ அருவருப்போ அவர் மேல ஏற்படல்லே. ஏன்னா அவரு ஒரு அன்பான அப்பா. முறையாக் கல்யாணம் கட்டிக்கிட்டு வீட்டில அவங்களைக் கூட்டிட்டு வந்து குடித்தனம் பண்ணாததே எனக்காகத்தானே! .. எங்க அப்பா வித்தியாசமானவரு. என்னை எப்பவுமே ஒரு சிநேகிதன் மாதிரிதான் நடத்துவாரு.. மத்த தகப்பன்மாருங்க மாதிரி அவரு என்னை அதிகாரம் பண்ணினதே கிடையாது… ஒருவேளை சின்ன வயசிலேயே நான் தாயில்லாப் பிள்ளை யாயிட்டது அதுக்குக் காரணமாயிருக்கலாம்.”
“… ‘இருக்கலாம்’ என்ன? அதேதான்!”
“நான் பி.எஸ்ஸி. பரீட்சை எழுதிமுடிச்ச அன்னைக்குத்தான் அவரு தன்னோட அந்த ரகசிய வாழ்க்கையைப் பத்திச் சொன்னாரு…. எனக்கு நல்லா நெனப்பு இருக்கு. அன்னைக்கு ராத்திரி, ‘ உன்னோட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. என் ரூமுக்கு வா ‘ ன்னு சொல்லிட்டு அவரோட ரூமுக்குப் போயிட்டாரு. எனக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா, அப்பா கிட்ட ஒளிவு மறைவுங்கிறதே கிடையாது. எதுவா யிருந்தாலும் வேலைக்காரங்க முன்னாடியே பேசுவாரு. அதானால் என்னமோ ஏதோங்கிற கலவரத்தோட நான் அவர் ரூமுக்குப் போனேன். நான் நுழைஞ்சதும் கதவைச் சாத்திட்டு என்னை உக்காரச் சொன்னாரு. ‘ராஜா! இப்ப நான் ஒரு விஷயம் சொல்லப்போறேன். அதைக் கேட்டுட்டு நீ என்னை வெறுக்கக்கூடாது..’ அப்படின்னு எடுத்த எடுப்பிலயே சொல்லிட்டாரு. ‘எதுவானாலும் சொல்லுங்கப்பா. என்னால உங்களை வெறுக்க முடிய்மாப்பா?’ அப்படின்னேன்.”
“அது… பொம்பளை விஷயமா இருக்கும்னு உங்களக்குத் தோணல்லீங்களா?”
“ஓ. தோணிச்சு… ஆனா நான் எதுவும் கேக்கல்லே… கொஞ்ச நேரம் தலையைக் குனிஞ்சுக்கிட்டு உக்காந்திருந்தாரு. அப்பால, ‘ராஜா! உங்க அம்மா செத்துப் போனதுக்குப் பெறகு நான் மறு கல்யாணம் கட்டல்லியே தவிர…என்னோட ஸ்டெனோ இருக்காங்கல்லே, லில்லின்னு, அவங்களோட நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ஒருக்கா, காத்து வாக்கிலே உன் காதை அந்த விஷயம் எட்டியிருக்கலாம்..’ அப்படின்னாரு. ‘இல்லேப்பா, எனக்குத் தெரியாது. இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்…அதனால என்னப்பா? அதுக்காக நான் ஏன் உங்களை வெறுக்கணும்? எந்த நிலையிலேயும் உங்க மேல எனக்குள்ள பிரியம் மாறாதுப்பா’ அப்படின்னேன். ‘தேங்க்யூ!…அவளை நான் வேலையைவிட்டு நிறுத்திட்டேன். அவ செலவுகளையெல்லாம் நான் ஏத்துக்கிட்டிருக்கேன். அவ பேர்ல ஒரு பெரிய தொகையை பாங்க்ல போட்டு வெச்சிருக்கேன். ஒரு பெரிய வீட்டை வாங்கி அதையும் அவ பேர்ல வெச்சுட்டேன்..’ அப்படின்னாரு…”.
“உங்கப்பா நியாயமானவராத் தெரியறாரு. நம்ம விஷயத்துல மட்டும் நியாயமா நடக்கமாட்டாருன்றீங்க. ”
“என்ன செய்யிறது? பணக்காரங்களுக்கே உள்ள அல்ப புத்தி! பணக்காரச் சம்பந்தத்தைத்தான் நாடுவாங்க…”
அவன் சில நொடிகளுக்கு ஒன்றும் பேசாதிருந்தான். பின்னர், சட்டென்று தலையை உசுப்பிக்கொண்ட அவன், ” சாப்பிடலாம், சூர்யா. நான் உன்னைக் கஷ்டப்படுத்தாறேனோ, என் கதையைச் சொல்லி?” என்றான்.
“அதெல்லாம் இல்லீங்க.. .”
“எங்க அப்பா நிறைய நல்ல குணங்கள் உள்ளவரு. ஆனா சம்பந்தம்னு வர்றப்போ பெரிய இடத்துச் சம்பந்தத்தைத்தான் விரும்புவாரு. நம்ம விஷயத்துலே அவரை மசியவைக்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். நான் பழகுற நண்பர்கள் கூடப் பெரிய இடத்துப் பிள்ளைகளாத்தான் இருக்கணும்னு சின்ன வயசுலேர்ந்தே என்னைக் கட்டாயப் படுத்தினவரு. அதை நெனைச்சாத்தான் கொஞ்சம் பயமாயிருக்கு. .. ஏன், உடனே முகத்தை ஒரு மாதிரி வெச்சுக்கறே? அதெல்லாம் நான் சமாளிச்சுடுவேன். நீ கவலையே படாதே, சூர்யா. என்ன, சொத்துலே ஒரு பைசா கூட உனக்குக் கிடைக்காதுன்னு காச் மூச்னு கத்துவாருதான். அதைச் சட்டை பண்ணாம நாம கல்யாணம் பண்னிக்கணும்… அப்பாலே என்ன? வழக்கமா இது மாதிரிக் குடும்பங்கள்ளே நடக்கிறதுதான்!…அப்பா சமாதானமாயிடுவாரு. அதாவது….என்னன்னா ..நீ தான் யோசிச்சுச் சொல்லேன், பார்ப்போம்!”
அவன் குறும்பாய்ச் சிரித்துக்கொண்டே இவ்வாறு கேட்டபோது பணியாள் காப்பியும் ஐஸ்கிரீமும் எடுத்துவந்து வைத்துச் சென்றார். அவனது கேள்வியின் உட்கிடை அவளுக்குப் புரிந்தாலும், தலையைத் தூக்கி அவனைப் பார்க்க முடியாத கூச்சத்தில் அவள் மவுனமாய்ப் புன்னகையுடன் காப்பியைக் கையில் எடுத்துக்கொண்டாள்.
“என்ன, பதிலைக் காணோம்?” – அவன் மெதுவாய் அவள் தொடையில் தன் கையால் செல்லமாய்த் தட்டினான். அவள் தன் காலை நகர்த்திக்கொண்டு அப்போதும் மவுனமாக இருந்தாள்.
“சரி. அப்ப, நானே சொல்லிடறேன். ஒரு குட்டி சூர்யாவோ, இல்லாட்டி சின்ன ராஜாதிராஜனோ பொறந்துட்டா, அதுக்குப் பெறகு எங்க அப்பாவுக்கு என்னை மன்னிக்கிறதைத் தவிர வேற வழியே கிடையாது. அதுக்கு அப்பாலே? ஜாலிதான்! நான் என் அப்பாவை அது வரையிலே பகைச்சுக்கிட்டுத்தான் தீரணும். என் சூர்யாவுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்!” – அவன் இவ்வாறு சொல்லிவிட்டு அவள் சற்றே அயர்ந்திருந்த நேரத்தில் சட்டென்று அவளை இழுத்துத் தோளோடு தோளாக அணைத்துக்கொண்டுவிட்டான்.
“என்னங்க, இது! வேணாங்க!” என்று பதறிய அவள் கூச்சத்துடன் விழிகளைச் சுழற்றிய கணத்தில் பணியாள் விலைச் சீட்டுடன் அங்கு வந்தார். அவரது பார்வையில் தங்கள் நெருக்கம் பட்டுவிட்டதில் அவளது சங்கடம் அதிகரித்தது. அவன் தன் கையை விலக்கிக்கொண்டான்.
… சாப்பிட்டு முடித்து இருவரும் புறப்பட்ட கணத்தில் பணியாள் பணத்தைப் பெற வந்தார். அந்தப் பெரிய அறையைவிட்டு வெளியே வந்ததும் சூர்யா திரும்பிப் பார்த்தாள். அந்தப் பணியாள் தங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு வியப்படைந்தாள். அவரது பார்வையில் வித்தியாசமாக எதையோ உணர்ந்தாள். அந்தப் பார்வை பொறுக்கித்தனமாக இல்லை என்பதையும் கவனித்தாள். ‘இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்?’ என்று யோசித்தவாறு நடந்தாள்.
காரை யடைந்ததும், அவள் அதன் பின்னிருக்கையில் அமர்ந்தாள். அவன் காரைக் கிளப்பியபடி, ” இப்ப பீச்சுக்குப் போறோம். சரியா?” என்றான்.
“உம்…”
” பீச்லே, காருக்குள்ளேயே உக்காந்துதான் பேசப் போறோம்…அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க பார்வையிலே இப்போதைக்குப் பட வேணாம்னுதான். வீண் வம்பு வந்து சேரும்.”
“இப்ப ஓட்டலுக்குப் போனோமே? அது?”
“அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு.”
“என்ன வித்தியாசம்? எனக்குப் புரியல்லே.”
” …. சரி, விடு..”
“என்னைக்காவது உங்கப்பா கிட்ட சொல்லித்தானே ஆகணும் நீங்க?”
கார் விரைவெடுத்தது. “சொல்லித்தான் ஆகணும். ஆனா நானே சொல்லித்தான் அவரு தெரிஞ்சுக்கணுமே ஒழிய, மத்தவங்க சொல்லி இல்லே!…”
“பீச்லே கூட உங்க மாருதி கார் நம்பரை வெச்சு உங்கப்பாவுக்குத் தெரிஞ்சவங்க அடையாளம் கண்டுக்க முடியுமே?”
அவன் வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தான்: “அதான் இல்லே. இது என் சிநேகிதன் ஒருத்தனோட கார். என் காரை செர்வீசுக்கும் பெய்ன்டிங்குக்கும் ஒரு மெக்கானிக் ஷாப்லே விட்டிருக்கேன்.”
“அப்புறம் இன்னொரு விஷயம்…”
“சொல்லு…”
“உங்க அப்பா பெரிய இடத்து சம்பந்தத்துக்குத்தான் ஒத்துக்குவார்னு சொன்னீங்களே, அப்ப எப்படி நம்ம காரியத்தைச் சாதிப்பீங்க?”
“அதான் சொன்னேனே? எதிர்த்து நின்னுதான். உங்க சொத்தும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு சொல்லிட்டுப் பிரிஞ்சுதான் போகணும்… வேற வழியே இல்லே.”
“என்னால உங்களுக்குக் கஷ்டம்.”
‘பின்னே? காதல்னா சும்மாவா? அது சரி, உன்னைப் பத்தியும் எதாச்சும் சொல்லு…”
“அதான் நிறையவே தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே… இன்னும் எதாச்சும் தெரியணும்னா, நீங்களே கேளுங்க, சொல்றேன்.”
“உன்னோட தங்கச்சி எப்படி?”
“எதுலே?”
“அழகிலே! உன்னாட்டமே அவளும் இருப்பாளா, இல்லாட்டி உன்னை விடவும் அழகா?”
“ஏன்? என்னை விட அவ அழகாயிருந்தா அவளை வளைச்சுப் போடலாம்னா?”
“சீச்சீ! என்ன அசிங்கப் பேச்சு இது? மச்சினிப் பொண்ணு தங்கச்சிக்குச் சமம்…சரி, சொல்லு. அவ எப்படி இருப்பா?”
“அவளும் அழகுதான். ஆனா என்னளவுக்கு இல்லேன்னு அம்மா சொல்லுவாங்க…”
“அம்மா மேல் பழி போட்றியா?”
“இல்லேல்லே. நெஜமாத்தான். நெறமும் கொஞ்சம் கம்மிதான். எதுக்கு அவளைப்பத்தி விசாரிக்கிறீங்க?”
“என் சிநேகிதன் ஒருத்தன் இருக்கான். என்னை விட ரெண்டு மூணு வயசு சின்னவன், அவனுக்குப் பார்க்கலாமேன்னுதான். இப்பவே அவனை வளைச்சுப் போட்டுட்டா, உன் தங்கச்சி பிரச்னையும் தீர்ந்துடுமில்லே?”
சூர்யா சிரித்தாள். ” என் கல்யாணப் பேச்சையே இன்னும் எங்க வீட்டிலே எடுக்கல்லே. நீங்க என்னடான்னா என் தங்கச்சி கல்யாணத்துக்குப் போயிட்டீங்களே!”
அவன் மவுனமானான். தனது எதிர்க் கேள்வி அவனை யோசிக்கவைத்து விட்டது என்பதை சூர்யா புரிந்துகொண்டாள்.
“என்ன, மவுனமாயிட்டீங்க?”
“இல்லே, உங்க வீட்டுப் பிர்ச்னையை எப்படித் தீர்க்கலாம்னு யோசிக்கிறேன். அப்பதானே நமக்கும் வசதியாயிருக்கும்?”?
“என் தங்கச்சி படிப்பை முடிச்சு ஒரு வேலைக்கு வர்ற வரையிலே என் கல்யாணப் பேச்சை எங்க வீட்டிலே எடுக்கப் போறதில்லே. அதனால, அது வரையிலே நாம காத்துக்கிட்டுத்தான் இருந்தாகணும். வேற வழியே இல்லே.”
“இல்லே, சூர்யா. எனக்கு ஒரு வழி தோணுது.” என்ற அவன் புன்னகை செய்தான்.
jothigirija@vsnl.net
தொடரும்
- பிடெல் காஸ்ட்ரோ 80′!
- அறிமுகம்
- உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323)
- கீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா!
- அட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்
- பேசும் செய்தி
- யஸ¤குனி ஆலயம் – பாகம் 1
- இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை?
- அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)
- கடிதம்
- கடித இலக்கியம் – 24
- மறைக்கப்பட்ட உலகம்
- சற்றே மாறுபட்ட தடத்தில் போய்ச் சிந்தித்தால் என்ன?
- முகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை
- நிழல் சண்டை
- கடிதம்
- ஓசைகளின் நிறமாலை – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 4
- மரணக் கட்டைகள்!
- பெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- தாஜ் கவிதைகள்
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)
- மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்
- என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?
- திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை
- இரவில் கனவில் வானவில் – (3 & 4)
- ராஜா வீடும்…கன்றுக்குட்டியும்!
- தெளி
- பெண்ணுரிமை
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4)
- மடியில் நெருப்பு – 5