ஜோதிர்லதா கிரிஜா
13.
அப்பா முதலில் பேசட்டும் என்பது போல் ராஜாதிராஜன் ஒரு புன்னகை மட்டும் காட்டிவிட்டு ஒன்றும் பேசாமலே இருந்தான்.
மறுமுனையில், தண்டபாணி, “அது உன்னோட சொந்தக் கவலை. அதுக்கும் எனக்கும் என்னப்பா சம்பந்தம்?” என்றான்.
“சரி, தண்டபானி. அப்புறம் பார்ப்போம்,” என்று பேச்சு முடிந்துவிட்டது என்பது போன்ற தொனியில் அவன் சொல்லவும், “ஏம்ப்பா? அங்க ஏதாச்சும் இடைஞ்சலா? அப்பா திரும்பிட்டாரு போல!” என்று அவன் இடக்காய்க் கேள்வி கேட்டுச் சிரித்தான்.
“ஆமா!” எனும் ஒற்றைச்சொல்லில் பதிலிறுத்திவிட்டு ஒலிவாங்கியை வைத்த பின், ஜகந்நாதனை நோக்கி ஒர் அசட்டுப் புன்சிரிப்பை உதிர்த்தவண்ணம், ராஜாதிராஜன், “குட் மார்னிங், அப்பா!” என்றான்.
“என்ன, ராஜா! அந்த தண்டபாணியோட ·ப்ரண்ட்ஷிப்பை நீ இன்னும் விட்டபாடில்லையா?” என்று ஜகந்நாதன் குரலில் ஆட்சேபம் காட்டிக் கேட்டார்.
அவன் சற்றே தலையைக் குனிந்துகொண்டான்.
“காலேஜ் படிப்பு முடிஞ்சதுமே அவனை ‘கட்’ பண்ணிடுன்னு சொன்னேன். எத்தனை வருஷமாச்சு! இன்னுமா அவனைக் கட்டிக்கிட்டு அழுதிட்டிருக்கே? நல்லால்லே. அவனோட மூஞ்சியும் மொகரையும்! ரவுடின்னு எழுதி ஒட்டாத குறைதான்…”
“அவனை ‘கட்’ பண்றதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணினேன்ம்ப்பா, ஒண்ணும் நடக்கல்லே. அவன் என்னோட பழகுறதை விட்டாத்தானேப்பா? கழுத்தைப் பிடிச்சா தள்ள முடியும்? நானும் ஏனோ தானோன்னு இருந்து பார்த்துட்டேன். விடமாட்டேங்குறான்ம்பா… ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி அவன் ஒண்ணும் ரவுடி யில்லேப்பா…பார்க்கிறதுக்குத்தான் அப்படித் தெரியறான்.”
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்கிறதுக்கு அவன் ஒரு சரியான எடுத்துக்காட்டு, ராஜா! அவனோட சகவாசத்தை விட்டுடு…”
ராஜாதிராஜனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாமே! என் முகத்திலே என் உண்மையான ‘அழகு’ தெரியவா செய்கிறது? பசுத்தோல் போர்த்தின புலி என்பார்களே, அதுவன்றோ எனக்குப் பொருத்தம்!’
“சரிப்பா! முயற்சி பண்றேன்…” – அவன் அவரைத் தாண்டிக்கொண்டு பல்விளக்கப் போனான். ஜகந்நாதன் தமது அறைக்குச் சென்றார்.
‘நல்லகாலம். அப்பா நான் தண்டபாணியோட பேசினது முழுக்கவும் கேக்கல்லே! அப்பதான் வந்திருக்காருன்னு தோணுது…’
பல் துலக்கிக்கொண்டே ராஜாதிராஜன் சூர்யாவைப் பற்றி யோசிக்கலானான். ‘கூப்பிட்டதும் கார்ல ஏறிட்டாளே! கொஞ்சம் முட்டாள்தனமான பொண்ணோ?…இருக்காது, இருக்காது. அதான் சொல்லிட்டாளே – என்மேலே ஏற்பட்ட நம்பிக்கையாலதான் கார்ல ஏறினதா!.. முன்னே பின்னே தெரியாதவனை நம்புறதும் முட்டாள்தனம்தானே!… ஆனா, கண்டிப்பான பொண்ணாத்தான் இருக்கா. பார்வையால கூட ரொம்பவும் கண்ணியமா நடந்துதான் அவளை வளைச்சுப் போடணும்!…என்னைப் பத்தின உயர்வான மதிப்பை அவ மனசிலே முதல்ல ஏற்படுத்தணும்!..ஏற்படுத்தின பிற்பாடு வளைச்சுப் போடணும். ஆனா கல்யாணம்னு பண்ணிக்கிறதுக்கு முன்னாடி வளைஞ்சு குடுக்கிறவ மாதிரி தெரியல்லே… அப்படி யிருந்தா, பேருக்குக் கல்யாணம்னு ஒண்ணைப் பண்ணிக்கிட்டு, அப்பாவுக்குத் தெரியாம எங்கேயாவது வீடு பிடிச்சு செட்-அப் பண்ணவேண்டியதுதான். வேற வழியே இல்லே….’
அவன் பல் விளக்கியபின் முகத்தைத் துடைத்தவாறே கூடத்தை யடைந்தான். ஜகந்நாதன் அவனோடு சேர்ந்து காப்பி குடிப்பதற்காகச் சாப்பட்டு மேசையருகே காத்துக்கொண்டிருந்தார். அவன் அவரெதிரில் அமர்ந்து ஒரு காப்பியைத் தானும் கையில் எடுத்துக்கொண்டான்.
“என்னோட ஜாக்கிங் வான்னாலும் வரமாட்டேன்றே! இப்ப தெரியாது, ராஜா. ஆரோக்கியத்தை இழந்த பிற்பாடுதான் அதனோட அருமை பெருமை யெல்லாம் மனுஷனுக்குத் தெரியும். நீ மட்டும் விதிவிலக்கா யிருப்பியா என்ன?”
“ஏம்ப்பா! அதான் நீங்க இருக்கீங்களே, விதிவிலக்கா!” – மகனின் புகழ்ச்சியும் புன்னகையும் அவருக்குப் பெருமையைத் தருவதற்குப் பதில் அவரை அவன் பால் எரிச்சலுறச் செய்தன.
“உடம்பைப் பார்த்துக்கணும்ப்பா. கண்ணுக்குக் கீழே ஏம்ப்பா பள்ளம்? ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்றே இப்பல்லாம்? எங்கே போறே, என்ன சேய்யறே? உம்?”
‘ஏதோ தெரிந்துகொண்டுதான் இப்படிக் கேட்கிறாரோ? தண்டபாணியைப் பற்றி இவர் விமர்சித்ததற்கும் இப்போது இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கும் நெருக்கமான சம்பந்தம் இருக்குமோ?’
“அடையாறு ரம்மி க்ளப்புக்குத்தாம்ப்பா போறேன் ரம்மி ஆடாம இருக்கவே முடியல்லே”
“காசு வெச்சுத்தானே?”
“பின்னே?”
“தினமும் தோத்தாலும் நம்ம செல்வம் குறையாதுதான். ஆனாலும் காசு வெச்சு ஆட்றது நல்ல வழக்கத்தோட சேர்த்தி இல்லே. விட்டுடு… வேணாம்.:”
“சரிப்பா.”
தான் தனிப்பட்ட முறையில் தண்டபாணியுடன் சேர்ந்து செய்துவரும் ‘தொழில்’ பற்றியோ அதன் வாயிலாக ஆயிரக் கணக்கில் தான் பணம் சேர்த்துவருவதோ அவருக்குத் தெரிய நியாயமில்லை என்றெண்ணி அவன் சிரித்துக்கொண்டான்.
“காசு வைக்காம ஆடேன்.”
“அதுக்குக் கம்பெனி கிடைக்கணும் இல்லியாப்பா?”
“உண்மைதான்.”
இருவரும் காப்பியைக் குடித்து முடித்ததும் அங்கே சிறிது நேரத்துக்கு அமைதி நிலவிற்று. சுவர் மின் கெடியாரத்தின் விநாடி முட்கள் நகர்ந்துகொண்டிருந்த ஓசை துல்லியமாய்க் கேட்டது.
“நல்ல புத்தகங்களைப் படிச்சாக்கூட பொழுது நல்லாப் போகும்.”
“போகும்தான். ஆனா, இப்பல்லாம் எனக்குப் படிக்கிறதுலே நாட்டமே இல்லேப்பா. ஏன்னே தெரியல்லே. முன்னே யெல்லாம் நிறைய நாவல் படிப்பேன். இப்ப என்னவோ அந்த ருசி விட்டுப் போச்சு.”
“ஒரே ருசியோட ஆயுசு முழுக்க இருக்கிறவங்க சிலர்தான். பொதுவா மனுசங்களுக்கு ருசி மாறிக்கிட்டே இருக்கணும். குறிப்பா, ஆம்பளைங்களுக்கு.”
அவன் திடுக்கிட்டு அவரைப் பார்த்தான். அவர் சிரிப்புடன், “என்ன அப்படிப் பார்க்கிறே? ஒரு விதத்திலே நீ சொல்றதும் சரிதான். வாழ்க்கையிலே வெரைட்டி இருக்கணும்தான். ஆனா எந்தப் பொழுது போக்கிலேயும் நாம பணத்தையோ ஆரோக்கியத்தையோ இழக்கக்கூடாதுங்கிறது முக்கியம்.”
தன்னைத் தாக்கிய திடுக்கீடு கொஞ்சமும் குறையாதவண்னம் அவன் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
“என்ன ராஜா, பார்த்துக்கிட்டே இருக்கே? இந்த அப்பா இன்னக்கு என்ன, இப்படிக் காலங்கார்த்தாலே புத்திமதி சொல்றதுலே இறங்கிட்டாரேன்னா?…சரி, அந்த பவானி டெண்டெர் என்னாச்சு?”
பேச்சு மாறியதும் அவனுக்கு அப்பாடா என்றிருந்தது. “நேத்தே அனுப்பிட்டேம்ப்பா.”
அதுவரை அவர் தன்னோடு பேசியவை யாவும் பொடி வைத்துப் பேசியவை அல்ல என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. அல்லது, மறைமுகமாய்ப் பேசித் தன்னை அப்போதைக்கு ஒரு கலக்குக் கலக்கிவிட்டுப் பின்னர் ஒரு நாள் சாவகாசமாய் விலாவாரியாய்ப் பேசி மடக்குவாரோ என்னும் அச்சமும் அவன் மனத்தில் எழவே செய்தது. அவர் ஓர் ஆழ் கடல். அவரைப் பற்றி ஊகிக்கவே முடியாது.
“பத்துப் பன்னண்டு வருஷாமாத்தான் நம்ம கம்பெனி ரொம்பப் பிரபலமாயிருக்கு. என்னோட பேரும் இண்டர்னேஷனல் லெவெல்லே அடிபட ஆரம்பிச்சிருக்கு. என் காலத்துக்குப் பிற்பாடும் நீ இதே மாதிரி நம்ம கம்பெனியைக் கட்டிக் காக்கணும்.”
அவன் மறுபடியும் திடுக்கிட்டு அவரைப் பார்த்தான். “இப்ப எதுக்குப்பா இந்தப் பேச்சு?”
“எனக்கு ஹார்ட் ட்ரபிள் இருக்கு, ராஜா.”
“எத்தனை நாளாப்பா? சாவகாசமாச் சொல்றீங்களே?”
“ரெண்டு மாசத்துக்கு முந்தித்தாம்ப்பா… ஒரு நாள் லேசா இடது பக்கம் வலிச்சுது. டாக்டர் கதிரேசன் கிட்ட காட்டினேன். ருமேட்டிக் ஹார்ட்னு சொல்லி மாத்திரைகள் எழுதிக் குடுத்தாரு. தினமும் சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்.”
“இவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாவகாசமாச் சொல்றீங்கப்பா! அதுலேயும் பெத்த மகன் கிட்ட! என்னப்பா இது? உங்களுக்கே நால்லாருக்காப்பா?” -இவ்வாறு அவனது வாய் கேட்டுக்கொண்டிருக்க, அவன் மனத்தில் ஒரு திட்டம் உருவாகிக்கொண்டிருந்தது. சூர்யாவைத் தனி வீட்டில் வைத்து அவளுடன் வாழ்வதற்கான திட்டம். அவரது இதய நோய் தன் காட்டில் மழையைப் பொழிவிக்கப் போகிறது என்பதை என்ணி அவன் உள்ளூற மகிழ்ச்சியுற்றான்.
“நான் நாளைக்கே போய் டாக்டர் கதிரேசனைப் பார்த்துப் பேசறேன்.”
“உன்னோட திருப்திக்காக வேணும்னா போய்ப் பேசு. பயப்பட்றதுக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லியிருக்காரு. மாத்திரைகளை ஒழுங்காச் சாப்பிட்டுக்கிட்டிருந்தா, கவலைப் பட்றதுக்கு ஒண்ணுமில்லேன்னிருக்காரு. மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி வரச்சொல்லியிருக்காரு.”
“அப்ப ஏம்ப்பா ஜாக்கிங் போறீங்க? அது நல்லதில்லேப்ப. வாக்கிங் வேணாப் போங்க. அது போதும். ஜாக்கிங் போலாமான்னு டாக்டரைக் கேட்டீங்களாப்பா?”
“தோணல்லே.”
“முதல்ல அதைக் கேட்டுடுங்கப்பா. இல்லாட்டி, நான் கேக்கறேன்.”
“இன்னைக்குப் போகணும் நானே அவர் கிட்ட கேட்டுக்கிறேன்…. அது சரி, கல்பனா கிட்டேருந்து லெட்டர் வந்திச்சா?”
கல்பனாவைப் பற்றி அவர் கேட்டது அவன் இன்பக் கற்பனையில் பானகத் துரும்பாய் நெருடியது. நெஞ்சு முழுவதும் ஒரு கசப்புப் பரவியது.
“போன வாரம் வந்திச்சுப்பா.”
“எப்ப டைம்?”
“இன்னும் ஒரு வாரத்துலே ஆயிடும்னு எழுதி யிருக்காப்பா.”
ஜகந்நாதனுக்கு முகத்தில் இளநகை தோன்றியது.
“கூடிய சீக்கிரம் நீயும் என்னை மாதிரி ஒரு அப்பா வாகப் போறே, இல்லே? அதுக்கு அப்பாலே தெரியும் ஒரு அப்பனோட கவலை, கரிசனம் இதையெல்லாம் பத்தி. இப்ப தெரியாது!.”
அவன் பார்வை தாழ்ந்தது.
கல்பனாவைப் பற்றிய பேச்சைத் தாம் எடுத்தது ராஜாதிராஜனுக்குக் கசப்பாக இருக்கும் என்பதைச் சற்றும் அறியாத ஜகந்நாதன் அவன் ஒரு கூச்சத்தில் தரையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததாக எண்ணிக்கொண்டார். ‘உனக்குப் பெண்குழந்தை வேணுமா, ஆண் குழந்தை வேணூமா?”
அவரது குரலில் வழிந்த சிரிப்பு அவனைத் தொற்றிக்கொள்ளவில்லை. அவன் தலையை உயர்த்தாமாலேயே, “ஏதொ ஒண்ணுப்பா. எதுவா யிருந்தா என்ன? எனக்கு ரெண்டுமே ஒண்ணு தாம்ப்பா! பெண் குழந்தை மட்டம்னு நான் நினைச்சதே இல்லே!” என்றான்.
jothigirija@vsnl.net
தொடரும்
- இலை போட்டாச்சு 3. எரிசேரி
- கடித இலக்கியம் – 33
- இரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 12
- பொன்னாடையும் பெண்களும்
- வல்லிக்கண்ணன் நினைவாக
- எனது பார்வையில் அண்ணா
- கலைஞன் ! காதலன் ! கணவன் !
- நடைபாதை செருப்பு
- கீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை
- கொக்கரக்கோ கொக்கரக்கோ
- இனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்
- ஏ ஜே கனகரட்னாவின் நினைவுகளோடு விம்பம் குறும்பட விழா
- கவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’
- இடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்
- புதிய மாதவியின் “நிழல்களைத் தேடி!!!”
- அன்பைத் தேடி
- திருக்குரானில் மனுதர்மமா…
- “தமிழுக்கும் தமிழென்று பேர்.”
- பெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தெய்வம்
- இப்படியுமா
- எங்கும் அழகே!
- எல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி!
- ஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்
- திசை அணங்கு
- மடியில் நெருப்பு – 13
- வட்டங்கள் சதுரங்கள்
- கருதி நின் சேவடி…