போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உள்ளத்தைக் கவிதைக்கும், உடலைக் கூடாவொழுக்கத்திற்கும் தாரை வார்த்த போக்கிரி கவிஞன். ‘வார்த்தைகள் தவிர்த்த காதல் (Romances sans paroles) ‘ என்கிற தமது கவிதைத் தொகுப்பு 1874ம் ஆண்டு -பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டு, அதன் முதல்பிரதியினை, கவிஞர் ‘போல் வெர்லென் ‘ சிறை முகவரியில் பெற நேர்ந்தது துர்பாக்கியம். அதற்கும் சிலமாதங்களுக்கு முன்பு குடிபோதையில் தமது ஆத்ம மற்றும் அந்தரங்க நண்பரைத் துபாக்கியாற் சுட்ட குற்றத்திற்காகத் தண்டிக்கபட்டுப் பெல்ஜிய நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலமது. தாக்குதலுக்கு உள்ளான நண்பர் வேறுயாருமல்ல இளம்வயதிலேயே பிரெஞ்சு கவிதா மண்டலத்தை அலங்கரித்துப் புகழ்பெற்ற ‘அர்த்துய்ர் ரெம்பொ (Arthur Rimbaud).

போல் வெர்லென் பிரான்சு நாட்டில் வடகிழக்கில் உள்ள ‘மெட்ஸ் ‘ நகரில் 1844ம் ஆண்டு பிறந்தவர். தந்தை ராணுவத்தில் பணிபுரிய, அன்னையும் நிலம்நீச்சென்று வாழ்ந்த வசதிமிக்க பண்ணைக் குடும்பத்தைச் சார்ந்தவள். தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை என்கிற காரணத்தால், தாயின் அரவணைப்பு சற்றுக் கூடுதலாகவே உண்டென்று சொல்லவேண்டும். 1851ம் ஆண்டுவரை ‘மெட்ஸ் ‘ நகரில் இருந்தபோதும், கொஞ்சகாலம் ‘மோம்ப்பெலியே ‘(Montpellier) நகரில் வாசம் செய்ய நேர்ந்தது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘தெற்கென்றால் ஏதோ சூரிய கடாட்ஷம் பெற்ற பிரதேசம் ‘ என்கிற பிரெஞ்சு மக்களின் நினைப்பினை இவரது நெஞ்சப் பதிவுகள் புரட்டிப் போட்டன. நமது கவிஞனுக்கு பிரான்சின் தெற்குப்பிரதேசம் மதப்பிசாசுகளின் ஊர்வல பூமி: சோகையானது, வெளுத்துப்போனது, பேச்சற்றது.

‘இரவு என்னை ஈர்த்தது….சாம்பல் வண்ணமா, வெண்மையா அல்லது இரண்டுமேவா ? எதுவாக இருக்கும், இன்னதென்று அறியாமலேயே தேடினேன்.(La nuit m ‘attirait (….) je cherchais je ne sais quoi, du gris, du blanc, des nuances..) ‘

கல்விகற்க பாரீஸுக்கு வருகிறார். படிப்பில் மந்தம் என்கிறபோதிலும், மொழியில் ஆழ்ந்த அறிவினை வளர்த்துக்கொண்டவர், குறிப்பாக பிரெஞ்சு மொழி வேர்ச் சொற்கைளை அறிய அதிக முனைப்பு. ஒருவழியாக பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றுவிடுகிறார். பாரீஸ்நகரத்தின்பால் ஏற்பட்ட எதிரிடையான உணர்வுகளே, அந்நகரத்தின் அரவணைப்பிலிருந்து அவரை மீளமுடியாமற் கட்டிப்போட்டுவிடுகிறது.

நிறைய வாசிப்பவர், எங்கேயும் எப்படியும். தியோடர் டெ பாம்வீல், விக்தொர் யுகோ, ஷார்ல் பொதுலேர் போன்றவர்களின் பிரசித்திபெற்ற, ஒரு சில தடை செய்யப்பட்ட படைப்புகள், இவரது வாசிப்புக்கு உகந்தனவாக இருந்தன. இயல்பாகவே கவிதைகளில் நாட்டம், எழுதத் தொடங்குகிறார். அவற்றுள் ஒன்றை விக்தொர் யுகோவுக்கு அனுப்பிவைத்ததும், அவர் அதனைப் பாராட்டி மகிழ்ந்ததும் இவரது கவியுணர்வுக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது.

இளமைக்காலத்தில் ‘பெத்தி கஃபே ‘* ரெஸ்ட்டொரண்டுகளுக்கு செல்ல ஆரம்பித்ததில் குடிபழக்கத்துக்கு அடிமையாகிறார், ‘ரியாலிஸம், நேச்சுரலிஸம், இம்ப்ரெஷனிசம் ‘ இயக்கங்களில் கவனம் திரும்புகிறது. சட்டம் பயில ஆர்வமுற்று பாரீஸ் பல்கலைகழகத்தில் சேர்ந்தபொழுதும் வழக்கம்போல ஏட்டுக்கல்வியில் ஆர்வம் தளர்ந்து, நகராட்சி ஊழியராக வேலைபார்க்கிறார். எழுத்தில் ஆர்வம் கொண்ட சக ஊழியர்களுடன் சேர்ந்துகொண்டு மீண்டும் மதுச்சாலைகளைச் சுற்றிவருகிறார். இவர் எழுத ஆரம்பிக்காத நிலையிலும், இலக்கியங்குறித்த விவாதங்களில் ஆர்வத்தோடு பங்கேற்கிறார். இவரது முதல் கவிதை, ‘திருவாளர் பஞ்சாயத்து ‘(Monsieur Prudhomme)1863ம் ஆண்டு சிற்றிதழொன்றில் வெளிவருகிறது. தொடர்ந்து இலக்கியவாதிகளான லெக்கோந்த் தெ லில், பான்வீல், மல்லார்மே போன்ற கவிஞர்களுடனான நெருக்கம்.

1866ம் ஆண்டுவாக்கில் இவருடன் தொடர்புடைய படைப்புலக நண்பர்கள், ‘பர்னாஸ் (Le Panasse) ‘ இயக்கத்தினைத் தொடங்கி ‘கலை கலைக்காக ‘வென்றும் ‘, ‘நான் ‘(moi)பயன்பாட்டினை நிராகரிப்பது அவசியமென்றும் வற்புறுத்தி ரோமாண்டிஸத்தின் அடையாளங்களை நிராகரித்தபோது வெளியான இக்கவிஞரது முதல் தொகுப்பு அதற்கான முழுமையான உதாரணமென்று சொல்லலாம். ‘விசாரக் கவிதைகள் ‘(Les Poems Saturniens) என்கிற அம்முதற் தொகுப்பு ‘எலிஸா ‘- என்கிற அவரது சகோதரர் மகள் நிதி உதவியில் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்த ஒரு சில மாதங்களிலேயே அப்பெண்மணி இறக்க, அக்கவிதைத் தொகுப்பின் பெயர் தேர்வும், அதன் பொருண்மையும் இலக்கிய உலகினை அதிர்ச்சிக்குள்ளாகியது. வாழ்வியல் நெருக்கடிகளும், கடுந்துயர்களும் படப்பாளிகளை மகோன்னத நிலைக்கு உயர்த்திவிடுகிறதென்பது, இவரிலும் நிரூபணமாகிறது.

‘நமது மூதாதையர்கள் விட்டுச்சென்ற படைப்பின் பல்வேறு பரிமானங்களென்கிற அணிகலனுக்குப் புதிய வடிவம் கொடுக்கிறேனென்று செதுக்கி, அவற்றை அழித்துவிடாமல் அதனை உருக்கித் தட்டி அவ்வுலோகத்தின் குணங்கெடாமல் உனக்கான நல்ல வாளாய் உருவாக்கியன் நீ ‘ -1896ம் ஆண்டு இவரது மரணத்தின் மீது மல்லார்மே(Stephane Mallarme) நிகழ்த்திய அஞ்சலி உரையின் வாசகங்கள்: போல் வெர்லேன் ‘ குறித்த நேரான பார்வை.

1869ம் ஆண்டு வெளிவந்த கவிஞரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘திருவிழாக்கள் ‘(Fetes galantes) ‘ பிரபல ஓவியர் ‘வாட்டோ ‘(Watteau)வுடைய படைப்புகளிலுள்ள ‘காடுகரம்பைகளும், கனவுலகச் சீமான்களும் ‘ ஏற்படுத்திய தாக்கம்.

பாரீஸில் ‘போக்கிரிகளின் மடம் ‘(Les diners des Vilains Bonshommes) என்று மற்றவர்களால் வருணிக்கபட்ட ஜாகையொன்றில் ‘பர்னாஸ் ‘ இயக்க நண்பர்கள் கூடி கலை, இலக்கியம் குறித்து விவாதிப்பதையும், தங்கள் புதிய ஆக்கங்களை வாசித்து அதன்மீதான சிந்தனைகளை பகிர்வுசெய்துகொள்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். கவிஞரும் அடிக்கடி அங்கெ சென்றுவர ஆரம்பித்தார். குடிக்கு முற்றாக அடிமையான காலம். தமது தாயாரை குடித்துவிட்டு ஒருநாள் மிகவும் மோசமாக அடித்துக் காயப்படுத்தியற்காக குறுகிய கால சிறைவாசம். பின்னர் ‘மத்தில்து மோத் ‘(Mathilde Maute) என்கிற பெண்ணை மணந்தபோதும், அவளால் இவரது நடத்தையை அங்கீகரிப்பது கடினமாக இருந்தது. தம்பதிகளுக்குள் ஒவ்வொருநாளும் சண்டையும் சச்சரவும் எனினும் இவரது இலக்கிய நாட்டமென்னவோ எப்போதும்போல குறையாமலேயே இருக்கிறது.

கவிஞர் போல் வெர்லேன், கவிஞர் அர்த்துய்ர் ரெம்பொவுக்குமான(Arthur Rimbaud) நெருக்கமான நட்பு கவனத்திற்குட்பட்டது. இருவரும் உடன் பிறவா சகோதரர்கள். முதன் முதலாக ‘வெர்லென் ‘ சந்தித்த ‘ரெம்போ ‘ நடையிலும் உடையிலும் மற்றவர்களை முகங்சுளிக்க வைக்கிற பதினேழு வயது இளைஞர். ஆனாலும் ரெம்போவுடைய கவிதை ஆற்றலில் மனதைப் பறிக்கொடுத்தார். பிரான்சின் வடபகுதி பிரதேசங்களின் மீதான கவர்ச்சி, ஊர் சுற்றும் குணம், மதுப் பழக்கம், கவிதை அம்சங்களில் இருவருக்குமிருந்த பரஸ்பர இணக்கம் அவர்களின் இணைபிரியாத நட்பிற்குக் காரணமாயிற்று. வெர்லென் நாகராட்சி வேலையை உதறிவிட்டு, ‘பர்னாஸ் ‘ இயக்க நண்பர்களின் ஆதரவில் வாழ ஆரம்பித்தபோது எழுதிய கவிதை ‘நாடுகடத்தப்பட்ட தேவதை ‘(L ‘ange en exil). கவிஞர்கள் இருவரும் ‘Cercle Zoutique ‘ என்கிற கிளப் ஒன்றிற்கு விஜயம் செய்து, கூச்சலுக்கும், மதுநாற்றத்திற்குமிடையிலும் கேலிசித்திரங்கள் தீட்டுவது, கொச்சை மொழிகளின் கவிதைகள் எழுதுவதென பொழுதைக் கழிக்கிறார்கள். பெரும்பாலான கவிதைவரிகள், இருவருக்குமிடையேயிருந்த காதலைச் சொல்பவை.1871ம் ஆண்டு ‘போக்கிரிகளின் மடத்தில் ‘ ரெம்பொ வாசித்த ‘போதை தெளியா தோணி ‘ (Le bateau ivre) அவரது அசாதாரண படைப்புத் திறனை உலகிற்கு அறிவித்தது. என்ன நேர்ந்ததோ, இருவருக்கிடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டது. ரெம்போ என்கிற மாபெரும் கவிஞன், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உகந்தவனாக நடந்துகொள்ளவில்லை. பொதுவிடங்களில் ஆபாசமாக அவன் நடத்தையும், அவதூறான வார்த்தைப்பிரயோகமும் பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது, ரெம்போ ஒருவருக்குமே வேண்டாதக் கவிஞன் என்ற பெயரெடுத்தான். வெர்லென் மனைவியும் ‘ரெம்போ ‘வை வீட்டிற்குள் வரக்கூடாதென்று ‘ சத்தமிட்டாள். வெர்லென் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்திருந்த நேரம். எனினும் ‘வெர்லென் ‘ ‘ரெம்போ ‘வுடனான சேய்மையை நிறுத்திக்கொள்ளவில்லை. வெளியுலகம் இரு கவிஞர்களின் உறவைக் கண்டு அருவருத்தது. படைப்புலக நண்பர்கள்கூட அதனை விமர்சித்தனர். கவிஞர் வெர்லென் மனைவி தமது கணவரிடமிருந்து விலகப்போவதாக அச்சுறுத்தினாள். கோபமுற்ற ‘ரெம்போ ‘ கவிஞர் வெர்லெனை விட்டுப் பிரிந்து ஷார்ல்வீல் என்கிற நகரத்திற்குப் போய்விடுகிறார். வெர்லென் கையில் பணமில்லாமல் இருந்த நேரம். ரெம்போ, ஃபவார்(Favart) எழுதிய ‘மறக்கபட்ட இசைவரிகள் ‘(L ‘Ariette oubliee- பின்னர் இதே தலைப்பில் ரெம்போவைக் குறித்து வெர்லென் கவிதைகள் எழுதியிருக்கிறார்)என்ற கவிதை நூலை கவிஞருக்கு அனுப்பிவைத்து உடனே தம்மிடம் வந்து சேரவேண்டுமென நிர்ப்பந்திக்கிறான். ‘வெர்லென் ‘ ‘ரெம்போ ‘வோடு ‘உடன்போக்கு ‘ மேற்கொள்ளுகிறார். பிரான்சைவிட்டு நண்பர்கள் இருவரும் வெளியேறி பெல்ஜியத்துக்கு வருகின்றனர். பெல்ஜியத்தில் காடுமேடென்று இவர்கள் அலைந்து பெற்ற அனுபவம் ‘வார்த்தைகளற்ற காதலில் ‘ வெளிப்படுகிறது. ‘வெர்லென் ‘ துணைவியார் தம் கணவனை ‘ரெம்போ ‘விடமெருந்து மீட்கத் தீர்மானித்து தமது தாயாருடன் பெல்ஜியத்திற்கு வந்தவர் கணவரிடம், அவர் தமது குடும்பத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்துகிறார். மனைவி தரப்பு நியாயத்தை உணர்ந்த ‘வெர்லென் ‘ பிரான்சு நாட்டு எல்லைவரை வந்தவர், அவளை ஏமாற்றிவிட்டுத் திரும்பவும் ‘ரெம்போ ‘வுடன் சேர்ந்துகொள்கிறார். வெறுப்புற்ற வெர்லென் மனைவி கணவனிடமிருந்து பிரிவதென்று தீர்மானித்துக் நீதிமன்றத்திற்குச் செல்கிறாள்.பெல்ஜிய நாட்டில் சுற்றித் திரிந்துவிட்டு, காதலர் இருவரும் இங்கிலாந்துக்கு வந்து சேருகின்றனர். அங்கே. வேலைதேடி அலைந்த நேரத்திலும் ஒவ்வொரு கவிதையாக எழுதிச் சேர்த்து ‘வார்த்தைகளற்ற காதலை ‘ முடிக்கிறார். இந்த சமயத்தில் ரெம்போ தமது தாயாரின் வற்புறுத்தல் காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பவேண்டியிருக்கிறது. வெர்லெனை தனிமை வாட்டுகிறது. மனவியிடம் சமாதானம் பேசச்சென்ற வெர்லென் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடுகிறது. ரெம்போவுடன் வெர்லென் திரும்பவும் இலண்டனுக்கு வருகிறார், தாயார்மூலம் கிடைத்த பணமும், பிரெஞ்சு மொழி கற்பித்தலும் இலண்டன் வாழ்க்கையை அதிக பிரச்சினைகளின்றி தள்ள காதலர்களுக்கு உதவுகிறது. மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்கும் துயரம், கவிதைத் தொகுப்பை வெளியிடவும் வேண்டும், ஆக இலண்டனிலிலிருந்து கவிஞர் புறப்படத் தீர்மானித்தார். பெல்ஜியத்திற்கு வருகிறார். அங்கே ஒரு நாள் ரெம்போ வெர்லெனிடமிருந்து முழுவதுமாக விலகப்போவதாகச் சொல்ல அச்சம்பவம் அசம்பாவிதத்தில் முடிகிறது. வெர்லென் துப்பாக்கியாற்சுட்டுக் ரெம்பொவைக் காயப்படுத்திவிட்டுச் சிறைக்குச் சென்றதை ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பத்திற் பார்த்தோம்.. தமது காயத்திற்கு மருந்திட்டுக்கொண்டு பிரான்சுக்கு திரும்பவிருந்த ரெம்போவை வெர்லென் தடுக்க, பெல்ஜிய நாட்டு போலீஸ் ஓரினச்சேர்க்கைக்காக கவிஞர் வெர்லெனை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்குகிறது. ‘ரெம்போ ‘ வெர்லெனுக்கு எதிராக பெல்ஜிய போலிஸில் முறையிட்ட குற்றத்தைப் பின்னர் திரும்பப்பெற்றபோதிலும், இவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கபடுகிறது. இதற்கிடையில் இவரது மனைவி தொடுத்த விவாகரத்து வழக்கு அவளுக்குச் சாதகமாகமுடிய அவளுக்கும் உதவித்தொகைச் செலுத்தவேண்டிய கட்டாயம். சிறையிலிருந்தபோது கத்தோலிக்கராக மாறினார். சிறையில் எழுதிய சிலகவிதைகள் பின்னர் அவரது ‘ஞானம் (Sagesse) ‘ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றன. சிறையிலிருந்து நன்னடத்தைக் காரணமாக விடுதலைச் செய்யப்படுகிறார். மனைவியுடன் சேர்ந்துவாழ மறுபடியும் முயற்சிக்கிறார். அவள் நிராகரிக்க, ஜெர்மனியில் ரெம்போவை மீண்டும் சந்தித்ததே அவர்களுக்கிடையேயான கடைசி சந்திப்பு எனலாம். மீண்டும் இலண்டன் பயணம் அங்கே லத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம், ஓவியம் ஆகியவற்றை பயிற்றுவித்து சம்பாதிக்கிறார். இச்சமயத்தில் இவர் எழுதி பிரசுரத்திற்கு அனுப்பிய கவிதைகள் மறுக்கபடுகின்றன. இறுதியாக தமது நண்பர் ரெம்போவுக்கு எழுதிய கடிதத்திற்குப் பதிலில்லை. இரண்டாண்டுகள் இங்கிலாந்தில் இருந்துவிட்டு மீண்டும் பிரான்சுக்குத் திரும்பி ‘ரெத்தெல் ‘(Rethel) நகரில் ஆசிரியர் உத்தியோகம். அங்கே அவரது மாணவனாக இருந்த பதினெட்டு வயது லுசியன் லெத்தினுவா(Lucien Letinois) உடனான கவிஞர் வெர்லென் சினேகம் சந்தேகத்திற்கிடமானது. 1881ம் ஆண்டு ‘ஞானம் ‘ கவிதைத் தொகுப்பு வெளியிடபட்டது. ஆனால் ‘ஒரு பிரெஞ்சுக்காரனின் பிரான்சுப் பயணம் ‘( Voyage en France par un Francais) என்ற படைப்பினை பிரசுரிக்க ‘La Revue de Monde Catholique ‘ இதழ் மறுத்துவிட்டது. 1883ம் ஆண்டு லுசியன் விஷக்காய்ச்சசலில் இறக்கிறான். அவன் நினைவாக எழுதபட்டதே, ‘சுவீகாரப் பிள்ளை ‘(Fils adoptif) கவிதைகள். 1884ம் ஆண்டு ‘சபிக்கப்பட்ட கவிஞர்கள் ‘(Les Poetes maudits) பதிப்பிக்கபடுகிறது.1885ல் ‘சற்றுமுன்பும், நேற்றும் (Jadis et Naguere) வெளிவந்தது. வழக்கம்போல குடிபோதையில் தமது தாயார் கழுத்தை நெரிக்க முயன்ற குற்றத்திற்காக, ஒருவருடம் சிறை தண்டனை. பின்னர் அவரது தாயாருடைய தலையீட்டின் பேரிலேயே விடுதலை செய்யப்படுகிறார். தாயாருடன் பாரீஸுக்கு மீண்டும் திரும்பியவர் அங்கே ‘மரி காம்பியே ‘(Marie Gambier)என்ற வேசிப்பெண்மணியை சந்திக்கிறார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியை நிரப்பிய மூன்று ஆசைநாயகிகளில் இவள் முதலாமவள்.

கவிஞரதுவாழ்க்கை 1886ம் ஆண்டிலிருந்து சரிவுகளைச் சந்திக்கிறது. இவரிடம் மிகப்பிரியமாக இருந்த அன்னை காலமானதும் அவரது இறுதிச் சடங்கிற்குக்கூடக் கலந்துகொள்ளமுடியாமற் கால்களில் ஏற்பட்ட உபாதையால் படுக்கையில் கிடக்க நேரிட்டது. இறந்த அன்னை தலையணையில் வைத்திருந்த இருபதாயிரம் பிராங்கையும், மனைவிக்குச் செலுத்தாமல் வைத்திருந்த உதவித் தொகைக்கு நேர் செய்துவிட்டு, வீதிக்கு வரவேண்டிய மோசமான சூழ்நிலை. 1887ம் ஆண்டு முழுவதும் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. 1988ம் ஆண்டில் ‘நேசம் ‘(L ‘Amour) கவிதைகள் தொகுப்பு பிரசுரமாகிறது. இவ்வாண்டில் இவர் தொடங்கிய ‘புதன்கிழமைகள் இலக்கிய மையம் ‘, பிரசித்தமானது. 1989ம் ஆண்டில் ‘ஒத்த அளவில் ‘(Parallelement)கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் குறிப்பிடப்படும் ‘ருக்கீன் இளவரசி ‘(Princesse Roukhine) வேறு யாருமல்ல, வேசி ‘மரி காம்பியே ‘ அவள். இதே ஆண்டில் கவிஞர் வாழ்க்கையில் குறுக்கிட்ட இரண்டாவது வேசி ‘ஓழெனி கிராண்ட்ஸ் ‘. இவளிடத்திற் கொண்ட பிரியத்தின் காரணமாக இருபத்தைந்து பாடல்களை எழுதியிருக்கிறார். 1890ம் ஆண்டு இவரது வாழ்க்கையில் குறிப்பிடுபவள் வேசி பிலோமினா. இவளுக்காகவும் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். இவ்வாண்டே ‘அர்ப்பணம் ‘(Dedicaces) என்ற பேரில் நண்பர்களுக்கென்று (Lepelletier, Rimbaud, Nouveau, Huysmans, Mallarme, Cazals, Gustave…)கவிதைத் தொகுப்பொன்றை சமர்ப்பிக்கிறார்.

கவிஞர்களுக்கெனவே அமையும் சாபக்கேடான வாழ்க்கை இறுதிக்காலத்தில் இவருக்கும் வந்து சேருகிறது. அரசாங்கத்தின் உதவிப்பணமும், படைப்புலக நண்பர்களின் உதவியும் இருந்தபோதிலும், மிக மோசமான வறுமையால் துன்புற்றார். காசநோய், பால்வினை நோய் என உடலளவில் அவதிப்பட, கூடுதலாக இவரது காதலர் கவிஞர் ரெம்போ (37 வயது) மற்றும் சொந்த மகனுடைய (24 வயது) அகால மரணங்கள் மனதை பாதித்தன. 1896ம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாந்தேதி கவிஞர் போல் வெர்லென் இறந்தபோது அவருக்கு வயது ஐம்பத்து மூன்று.

கவிஞர் போல் வெர்லெனுடைய இதர முக்கிய படைப்புகள்:

POEMES SATURNIENS, 1866

FETES GALANTES, 1869

LA BONNE CHANSON, 1870

ROMANCES SANS PAROLES, 1874 – Songs Without Words

SAGESSE, 1881 -Wisdom

JADIS ET NAGUERE, 1884 – Yesteryear and Yesterday

LES POETES MAUDITS, 1884 – The Accursed Poets

AMOUR, 1888

PARALLEMENT, 1889

FEMMES, 1890

DEDICACES, 1890

BONHEUR, 1891

LES UNS ET LES AUTRES, 1891

MES HOPITAUX, 1891

CHANSONS POUR ELLE, 1892

LITURGIES INTIMES, 1892

MES PRISONS, 1893

QUINZE JOURS EN HOLLANDE, 1893

CONFESSIONS, 1894 – Confessions of a Poet

CHAIR, 1896

INVECTIVES, 1896

VOYAGE EN FRANCE, 1907

CORRESPONDANCE, 1926-41

Poems, 1961

—-

*Petit cafes – (Cosy Restaurants) ‘Bistro ‘ என பிரெஞ்சு மக்களால் கொச்சையாகச் சொல்லப்படும், இவ்வகையான சாலை ஓர ரெஸ்டொரண்டுகளில், மக்கள் உரத்து பேசியபடி மதுவோ, காப்பியோ, வேறு பானங்களோ அருந்துமிடம்.

போல் வெர்லென் கவிதைகள்

வெளி நிறைத்து காற்று

அந்தரத்தில் அதன் சுவாசம்

– ஃபவார் (Favart)

பரவசத்தினால் நேர்ந்த சோர்வு

காதல்செய்த அயர்ச்சி

கானகத்துமரங்களின் சிலிர்ப்பு

தென்றலின் அணைப்பில்

சாம்பல்வண்ணக்கிளைகளின் அசைவில்

ஒலிக்கும் சின்னக்குரல்

காற்றில் நெளியும் புற்களின் மூச்சொத்த

சன்னக்குரல்:

புதிய ஆனால் பலவீனமான முனகல்

பறவைகளெழுப்பும் கீச்கீச்செனும் ஓசை.

வளைந்தோடும் நீருக்கடியில், ‘நடப்பது

சரளைக்கற்களின் ஊமை நடனமென்று ‘

நீ நம்பக்கூடும்

கேட்பாரற்ற முறைப்பாடு

ஆத்மாவன்றி புலம்புவது வேறுயார் ?

சொல்லப்போனால் நமது ஆத்மா, சரியா ?

அதாவது உனதும் எனதும்

இதமான இரவில் அடக்கமாய்

தெய்வீகப் பாடல் அதனிடம்

திரும்பவும் ஒலிக்கும்

நகரத்தில் பெய்யும் தூறல் மழை

-அர்த்துய்ர் ரெம்பொ(Arthur Rimbaud)

என்னிதயத்திலும் பெய்யும்

நகரத்து மழை

நெஞ்சில் இறங்குமோ

கனத்த சோகமாய் ?

அழுகிற மனதுக்குத்

தாலாட்டென

தரை, கூரைகளின் முதுகில்

மெள்ளத்தட்டும் தூறல்கள்

வாட்டுமென் நெஞ்சை நிரப்பும்

கண்ணீர் மழைக்கான காரணத்தை

யாரே அறிவர் ?

கபடக் காதலனின் கள்ள வார்த்தையோ ?

அறியேன்-ஆனாலும் நிஜம்

துக்கம் கொண்டாடுமென் இதயம்.

இப்படியான வலி

முன்னெப்போதுமில்லை

ஆற்றாமையில்

தொண்டை அடைக்கும்

காதலா ஊடலா

காரணம் தெரியேன்

– ‘Romances sans paroles(1874).

நிலவொளி

உனது ஆத்மாவின் கற்பனைவெளி -அங்கே

லுத்* மீட்டி, நடனமிடும்

வசீகர பொய்முகங்களும்

பெர்காபொய்முகங்களும்

துயரம் மறைத்து.

தங்கள் அதிர்ஷ்ட்டத்தில் நம்பிக்கை

தொலைத்த மனிதர்களின் பாடல்களில்

‘அதிர்ஷ்ட்டமும், ஜெயித்த காதலும் ‘

அவரோகணமாய்

நிலவொளியில் கலக்கின்றன

அழகும் சோகமும் வழியும் நிலவொளி

மரத்துப் பறவைகளை கனவிலாழ்த்தும்

நீரூற்றுப் பீறிட்டுப்பாயும்,

ஊற்றுப் பொங்கிவழியும்

பளிங்குக் கற்களுக்கிடையே

-Fetes Galantes(1869)

*Lute – 14-17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளின் உபயோகத்திலிருந்த

நரம்புகள்கட்டப்பட்ட இசைக்கருவி, யாழ், வீணையென்று மொழிபெயர்ப்பது முறையான தேர்வாகாது.

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா