பிச்சினிக்காடு இளங்கோ
சிலர் எதையும் கவிதையாக்குவார்கள்..
சிலர்
சில வேளைகளில் மட்டும் கவிதை எழுதுவார்கள்
கவிதையே எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு முகமூடிகளை மாற்றிக் கொள்ளும்
எண்ணம்
எழும்.
எதையும் கவிதையாக்கத் தெரிந்ததால் எந்த முகமூடியும் அவர்களுக்கு எளிதாகி
விடும்.
இவர்களை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவது கடினம்.
இவர்களின் தோட்டத்தில் எல்லா வகையான மலர்களும் மணம் கமழும்.
எல்லாவற்றிற்குமான எடுத்துக்காட்டுக்கள் இவர்களிடம் விரவிக் கிடக்கும்;
வேண்டுவன கிடைக்கும்.
எப்படி இவர்களை அடையாளப்படுத்துவது என்ற சிரமமும் ஏற்படும்.
இவர்களை அடையாளப்படுத்த இவர்களே தவறிவிடுவார்கள்.
இவர்களிடம் கவிதைகள் செழிக்கும், சிரிக்கும்.
கவிதை எழுதும் உத்தி இவர்களுக்கு கைவந்ததால் வந்த விளைவு இது!
இவர்கள் தம்மை ஒருமுகப்படுத்தாதது கூட ஒரு காரணம் என்று கொள்ளலாம்.
ஒரு தூரப்பார்வையோ!
ஒரு நெடுங்கனவோ!
ஒரு அர்ப்பணிப்போ! இலக்கோ! தென்படாத வாழ்க்கையை இவர்கள் எளிதாக
வாழ்ந்துவிடுவார்கள். அதை எழுத்திலும் காட்டிவிடுவார்கள்.
கவிதையாக்கும் திறனிருந்தும் சிலவற்றைக்கண்டுகொள்ள; கண்டு கொதிக்க;
தவறிவிடுவார்கள்
ரசனைக்கும் அழகுக்கும் எடுத்துக்காட்டாகத்திகழும் இவர்களுடைய கவிதைகள்
ஆவேசத்தின் அடையாளமாகத் தெரிவதில்லை; ஆவேசத்தை அள்ளித்
தெளிப்பதில்லை.
முடியும் எனத்தெரிந்தும் இவர்கள் மூச்சுவிட்டது குறைவு.
மூச்சுவிடுதல் என்பது இயல்பானது.
அப்படி இருந்தும் இவர்கள் விட்டது குறைவு.
இதுவே இவர்களை யார் என்று யாரும் அடையாளப்படுத்தவில்லை.
திரை உலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் ஒரே மாதிரியாக;
ஒரே உணர்வில் பாடல்களை எழுதியும் கூட பட்டுக்கோட்டையைத்தான் ‘மக்கள்
கவிஞர்’
என்று அடையாளப் படுத்தினார்கள்.
மருதகாசி பட்டுக்கோட்டையை விட எள்ளளவும் குறைந்தவரல்ல.
அதே வேளையில் தகிக்கும் குணங்களோடு வாழ்க்கையைத் தரிசிக்கிறவர்கள்
இருக்கிறார்கள்.
தவிக்கும் தன்மையில் வாழ்க்கை இருப்பதைப் பார்க்கிறார்கள்.
எந்தக் கணத்திலும் இவர்களுடைய பார்வை; அக்கறை மக்கள் மீதே படிந்திருக்கும்.
இவர்களின் முதல் கவனம் மக்கள் பிரச்சனையின் மீதுதான் இருக்கும்.
சமரசமோ – சமாதானமோ ஆகாதா உணர்வுகளின் தொகுப்பாக இவர்கள்
விளங்குவார்கள். அப்படியே இவர்களின் வாழ்கையும் விளங்கும்.
மக்கள் சார்ந்த, இனம் சார்ந்த, மொழிசார்ந்த அக்கறை தூக்கலாக இருப்பதின்
காரணமாகவே இவர்களுடைய கவிதைகள் அழகம்சம் குறைந்தது; பிரச்சாரம்
நிறைந்தது என்று ஒதுக்கிட முடியாது.
வாழ்க்கை சமூகம் சார்ந்ததாக; சுற்றுச்சூழல் சார்ந்ததாக இருக்கும்போது எப்படி
அவற்றைப் புறந்தள்ள முடியும்?
எப்படியும் ஒரு மாற்றம் காணவேண்டும் என்ற துடிப்பாலும் கனவு மெய்ப்பட
வேண்டும் என்பதாலும் இவர்களுடைய எழுத்தும் பேச்சும் ஒரே கதியில் அதாவது
ஒரே வேகத்தில் தொடரும்.
இலக்கிய உலகம் இந்த இருவேறு நிலைகளில் இயங்குகின்றது.
ஒன்று அழகியல் சார்ந்தது. மற்றொன்று சமூகம் சார்ந்தது. அழகியல் சார்ந்து
எழுதுகிறவர்களிடம் சமூகப்பார்வை உண்டு.
சமூகம் சார்ந்து எழுதுகிறவர்களிடம் அழகியலும் உண்டு.
ஆனால்,
அழகியல் சார்ந்து எழுதுகிறவர்கள் எந்த ஆபத்தும் இப்போது இல்லை என்ற
மனநிலையில் எழுத்தில் கவனம் இழக்கிறவர்கள்.
சமூகம் சார்ந்து எழுதுகிறவர்கள் ஏதோ தீப்பிடித்து விட்டது போல் பதற்ற
மனநிலையில் எழுதுகிறவர்கள்.
இந்த இரண்டாம் நிலையைச் சேர்ந்தவராக கவிஞர் புதிய மாதவி முகம் காட்டுகிறார்.
அதுவே அவருடைய முகவரியாகவும் தெரிகிறது.
எந்தக் கவிதையிலும் இவரின் ஆவேசம் தெரிகின்றன.
இவரின் கவிதையில் தூக்கலாகத் தென்படுவது நிகழ்வாழ்வின் கோரக் கொடுமைகளே!
தீரா சமூக ஏற்றத் தாழ்வுகளே.
மூடி மறைக்காமல் எழுதுகிறார் என்பதைவிட மூடி மறைக்காமல் வாழ்கிறார் என்று
(சிங்கப்பூரிலிருக்கும் நான்), தமிழகத்தில் பிச்சினிக்காட்டில்
என் வீட்டின் பலாமரத்தடியின் கீழ் இருந்து கொண்டு முடிவு பண்ண வேண்டியிருக்கிறது.
அந்த உண்மையைப் பதிவு செய்யும் புதிய மாதவியின் வரிகள் இதோ:
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும்
எதிர் முகங்கள் கண்டு – நான்
எழுதுவதை நிறுத்திவிட
எண்ணியதும் உண்டு – நான்
தீயென்று எழுதும் போது
சுட வேண்டும் – அதைத்
தீண்டுகிற நாக்கில்
சூடு பட வேண்டும்” (ஹே…ராம்..)
இவருடைய இரண்டு கவிதைத் தொகுப்புகள்:
ஹே…ராம்.., நிழல்களைத் தேடி… இரண்டும் என் கைகளுக்கு கிடைத்தன.
முதல் வாசிப்பில் நான் உணர்ந்ததைத்தான் எழுதுகிறேன்.
வரிக்குவரி மீண்டும் மீண்டும் போய்த் திரும்பிவந்து எழுதுவது என்பது வாய்க்காத
சூழ்நிலையில் இதை அப்படியே பதிவு செய்கிறேன்.
இவருடைய கவிதைகளைப் படித்ததும் என்னுடைய கவிதைகள் நினைவுக்கு வந்தன.
பிறருடைய கவிதைகளும் நினைவுக்கு வந்தன.
இது இவர் கவிதைகளின் பலம் என்று சொல்லலாம்.
சில சிந்தனைகள் என்னைப் புதிதாகச் சிந்திக்க வைத்தன.
இதுவும் இவருடைய கவிதையின் சமூக வீச்சுக்கு அடையாளம்.
“எழுத்துக்கும் வாழ்க்கைக்கும்
எதிர் முகங்கள் கண்டு” என்ற வரிகளை வாசித்த உடனே
“வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும்
வானளாவிய தூரம்” என்று ஒரு முறை பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டையாரின்
கவியரங்கில் பாடியது நினைவில் வந்து நின்றன.
“ஹே…ராம்
குரங்குகளின்
இதயத்தில் கூட
குடியிருக்கும் நீ
மனிதர்களின் இதயத்தில்
வாடகைக்குக் கூட
ஏன் வர மறுக்கிறாய்? (ஹே…ராம்) என்கிற கேள்வி நேர்மையான கேள்வி அல்லவா?
கொதிக்கிற நெஞ்சம் இப்படிக் கேட்காமல் பின் எப்படிக் கேட்கும்?
பிரச்சாரம் என்று பேசாமல் இருந்துவிட முடியுமா?
இதன் தொடர்ச்சியாக ………………..
“மனித உயிர்களின் விலை
உன் பட்டியலிலிருந்து
எப்போது விடுபட்டது?
எப்படி விடுபட்டது” (ஹே…ராம்)
“உன்
வார்த்தைகள் அழியவில்லை
ஆனால்
அதன் அர்த்தங்கள்தான்
சிலுவையில்” (ஹே…ராம்)
இப்படி அடுக்கடுக்காகக் கேட்கிற நியாயத்தை மறைத்துக் கொண்டு எப்படி நீருக்குள்
உதைத்துக் கொண்டு நீருக்குவெளியே முகம்காட்டும் வித்தையை கடைபிடிக்க
முடியும்?
அதனால்தான்
“உன்
கடைசி அவதாரமாவது
எங்கள் சேரியில்
நடக்கட்டும்” (ஹே…ராம்) என்று ஏங்கவும், கட்டளையிடவும் முடிகிறது.
கண்ணகியின் சிலம்பை
“பாண்டியனைப் பதம்பார்த்த
பத்தினியின் நெருப்பு” என்று படிமப்படுத்த முடிகிறது. அல்லது அழகாக
உருவகப்படுத்த முடிகிறது. அது மட்டுமல்ல
“அவள் விழியில்
நீரும் நெருப்பும்
சேர்ந்தே இருக்கும்” (ஹே…ராம்) என்று அடையாலப்படுத்தி எச்சரிக்கவும் முடிகிறது.
அரசியலை ஒரு வீட்டுப் பெண்மணியாக இருந்து பார்க்க விரும்பாததால் தான்
“தேர்தலுக்கு தேர்தல் மாறுவது
கூட்டணி மட்டுமல்ல
கூட்டணி அர்த்தங்களும்தான்” (ஹே…ராம்) என்று புரிந்துகொள்ள முடிகிறது.
“அர்த்தங்கள் அற்றதுதான்
கூட்டணியின் அர்த்தம்” என்று நெத்தியடியாக அடிக்க முடிகிரது.
இந்தியக் குடிமகனாக
இருப்பது எத்துணைச் சிரமம் தெரியுமா?
இதில் என்ன சிரமம் இருக்கிறது? என்று எளிதாக எண்ணிவிட முடியும்.
மதமும் சாதியும் இல்லாத மனிதனுக்கு எதிர்காலமே இல்லை என்பதை
“எங்களிடம் சாதிகள் இல்லை
மதங்கள் இல்லை
அதனால்
உங்கள் தொகுதிகளில்
வேட்பாளராகும் தகுதியில்லை” (ஹே…ராம்) என்ற வரிகளைப் படிக்கிற போதுதான்
எத்துணை இருட்டான எதிர்காலம் நோக்கி பயணம் செய்கிறோம் என்ற பயம்
நெருப்பாகச் சுடுவதை உணரமுடிகிறது. இதே சாயல் என்னுடைய நீள்கிறது கவலை
என்ற கவிதையிலும் இருக்கிறது.
எள்ளலும் உண்மையும் கலந்த μர் இடம்தான் தந்தை பெரியாரைப் பற்றி எழுதும் இடம்.
“திராவிடத்தந்தையே
உன் வெண்தாடியின் முன்னால்
தேசப்பிதாவின்
ஊன்றுகோல் கூட
வளைந்து போனது” (ஹே…ராம்)
வைக்கம் போரின் வரலாற்றைப் புரட்டுகிற போதெல்லாம்,
நேதாஜி அவர்களை நினைக்கிற போதெல்லாம்,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகளை வாசிக்கிற
போதெல்லாம் தேசப்பிதாவின் சத்திய ஊன்று கோல் வளைந்த காட்சி நம் கண்முன்னே
வருகிறது.
குருதட்சணை படித்தபோது துரோணர் அல்ல துரோகர் என்று நான் எழுதியவை
நினைவுக்குவராமலில்லை.
பெண்மையின் பெருமையைப் பெண்மையே பேசும் இடம் இதுதான்;
“அவள் உங்களுக்காகச் சுமப்பது
வெறும் நீர்க்குடமல்ல
வாழ்க்கையின் உயிர்க்குடம்” (ஹே…ராம்)
ஆண்களே அலட்சியப்படுத்தாதீர்கள் என்பதன் மறுவடிவம்தான் இந்த வரிகள்.
எளிதாகப்படித்துவிட்டு அடுத்த வரிக்கு அடியெடுத்து வைக்க முடியாத நிலையை இந்த
வரிகளின் ஆழம் தருகிறது: உணர்த்துகிறது.
இதுநாள் வரை நிலவைப் பெண்ணாகவே பார்த்துச்சலித்த கவிஞர்களின் நடுவில் நிலவு
பெண்ணில்லை என்று சொல்லும் பெண்ணின் தைரியம் யாருக்கு வந்தது?
“நிலவு ஒரு பெண்ணாகி
நீந்துகின்ற அழகோ” என்றார் வாலி
“ஆயிரம் நிலவே வா” என்றார் புலமைப்பித்தன்
“நிலவே என்னிடம் நெருங்காதே
நீ
நினைக்கும் இடத்தில் நானில்லை” என்றார் கண்ணதாசன்
“என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா? மூத்தவளா?” என்றார் பட்டுக்கோட்டை
ஆனால்
“நிலா பெண்ணல்ல
எனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று கண்ணகி எழுதியிருக்கிறார்.
ஆம்! கண்ணகியாக புதிய மாதவி எழுதியிருக்கிறார்.
இந்த தைரியமும், நேர்மையும் இருந்தால்தான் கண்ணகிபற்றி பேசமுடியும்,
எழுதமுடியும் என நிறுவியவர் புதிய மாதவி
“நாட்டுக்குத் தேவை
கோவில்கள் அல்ல
கல்விக் கூடங்கள்
மனிதனுக்குத் தேவை
மதங்கள் அல்ல
மருத்துவ மனைகள்” (ஹே…ராம்)
என்று இவர் எழுதியதில் பிரச்சார நெடி அதிகம். அழகியல் குறைவு. ஆனால்
உண்ம¨யும் தேவையும் முழுமையாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
“ஆதி-திராவிடன்
தாழ்ந்தவன் என்றால்
மீதி-திராவிடன்
உயர்ந்தவனா?” (ஹே…ராம்)
இதுவும் பிரச்சாரத்தின் வகைதான். அதனால் என்ன? பிரச்சாரம் இல்லாமல்
குடும்பக்கட்டுப்பாடு உணர்த்தப்படவில்லையே; உணரப்படவில்லையே!
மக்களைப் போய் சேர வேண்டிய செய்தி பிராச்சாரத்தின் மூலம்தான் வேகமாய்ப்
போய்ச் சேர்கிறது. செய்தி சேர்தலே சமூகவாதிக்கு முக்கியம். செய்தி செல்லும்;
செய்தியைச் சொல்லும் முறையல்ல.
‘தம்பி’ பட இயக்குனர் சீமான் அண்மையில் அளித்த நேர்காணலில் மக்களுக்குத்
தேவை கோவில்கள் அல்ல கழிவறைகள் என்று சொன்னதையும் பொருத்திப்
பார்க்கிறேன்.
பொருத்தம் அறிந்து மகிழ்கிறேன்.
தேவையானவை மருத்தவமனைகளும் கல்விக்கூடங்களும் கழிவறைகளுமாகும்.
தேவையில்லாதவை கோவில்கள் என்பதை வலியின்றி உணரமுடிகிறது. இதோ
கொடும¨யான வலியைத்தருகிற வரிகள்:
“பசியை
அவள் சாப்பிட்டாள்
பசியின் உடலை
அவன்
பசி சாப்பிட்டது” (ஹே…ராம்)
நாற்றமெடுக்கும் வாழ்க்கை, நாசியைப்பொத்த முடியாத உறவு, பழக்கப்பட்ட வறுமை
இவைகளின் ஊடாக அவள் பொறுமையின் நிலமாக இருப்பதை, அவலமான விடியல்
பிறந்ததை இப்படிக் கோபத்தோடு கொப்பளித்த பெண்ணியக் கவிஞர்கள்
இருக்கிறார்களா? எனக் கேட்கத் தோன்றுகிறது.
பெண்ணியம் எத்தகைய பொதுநலமானது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. பிறர்பேசும்
பெண்ணியம் சுய நலம் கலந்த உடல் சார்ந்த ஒன்றாகத்தான் தொனிக்கிறது? பொது
விடுதலையில் இந்த விடுதலையும் இயல்பாகிவிடுகிறது. ஒரு பொதுநலம் சார்ந்த
பார்வையே மேலோங்கியிருக்கும் கவிதைத்தொகுப்பு …ஹே…ராம்…
இனம், மொழி, மதம், சாதி இவைகளைச் சாடி காலந்தோறும் பாடிக்கொண்டிருக்கலாம்
என்பதை மாற்றி அவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் பார்வை, அக்கறை புதிய
மாதவிக்கு உண்டு. எல்லாக் காலத்திலும் ஒரு பொருள் பற்றியே பாடும் அவலம்
அகற்றி, சமூகத்தைப் புரட்டிப் போடும் ஆர்வமும் ஆவேசமும் தாகமும் புதிய
மாதவியின் இதயத்துடிப்பாகும்.
அடுத்து, வாசித்தலின் நகர்தல் நிழல்களைத் தேடி என்ற கவிதைத் தொகுப்பைத்
தேடியாகும்.
அச்சிடும் தொழிலில் சென்னை முன்னே நிற்கிறது என்பதற்கு இதுவும் சான்று.
தாள், வடிவமைப்பு, கனம் எல்லாம் நமக்கு μர் இலகுத் தன்மையைத்தருகிறது.
வேகமாகப் படிக்கவும் தூண்டுகிறது.
இறைவனிடம் ஒரு விசாரணையை வைத்த கவிதை ஜெர்மன் பரிசுபெற்றதில்
வியப்பில்லை.
“நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக” என்று நா. காமராசன் கூறிய உண்மைக்கு அடுத்த நிலையில்
இறைவனின் கைக்கு ஏன் μர வஞ்சனை? என்பதை இடித்துரைக்கும் வகையில்
“பாஞ்சாலிக்குப் பட்டுச்சேலை
கொடுத்த உன் கரங்கள்
எங்கள் மணிப்பூரின் மங்கைக்கு
ஏன் நிர்வாணத்தையே ஆடையாக்கியது?” என்று இறைவனை நெருங்கி; நெருக்கி
விசாரிக்கிறார்.
இன்றைய தகவல் யுகத்தைப் படம் பிடிக்கும் வரிகள்தாம்:
“பகலெல்லாம் தூங்குகிறது
அவள் வீட்டுச்சூரியன்”
μர் அழகிய கவிதையாக பதிவாகியிருக்கிறது மணிப்பூரின் போர்க்கோலம்.
ஆம்
“முலைகளே ஆயுதமான
போர்ப்படை
புறப்பட்டுவிட்டது
வலிகளின் வரிசையுடன்”
இரத்த உறவுகள் என்கிற கவிதை எனக்கு ரணமான புதிய
சிந்தனையைத்தந்தது.
எப்படி?
“வன்புணர்ச்சி ஏன் தெரியுமா?
நமக்கிடையே
இரத்த உறவு வேண்டாமா?”
“ஆகாயத்துப் பறவையை
அடைத்துவைக்க முடியாது? என்ற பிரகடனம்,
“வலியுடன் பறப்பதே
என் வலிமையின் ஆயுதம்” என்ற பெருமிதம் ஒரு பிரமிப்பைத்தருகிறது.
‘ராஜ்பவன் கனவுகள்’
‘எரியும் தமிழகம்’
‘யாருக்கு விடுதலை’
‘காங்கீரிட் காடுகளில்’
‘உன் குற்றம்’
‘நீ சொல்லலாம் …… நான்?’
‘எம காதகா …… காதலா’
‘எரியும் மழைத்துளிகள்’
‘ஆகாயக் கோட்டை’
‘உயிரின் தேடல்’ …… எல்லாம் நல்ல கவிதைகள்
எத்தனையோ கவிதை நூல்கள் வந்த வண்ணமிருக்கின்றன.
எத்தனை கவிஞர்கள்? எத்தனை கவிதைகள்?
நாற்றத்தோடு நாள்களைக் கழிக்கும் துப்புரவுத் தொழிலாளியைப் பற்றி……..?
நிழல்களைத்தேடி தொகுப்பில் நிறைய உள்ளன.
“கிளைகளை வெட்டிவிடலாம் என்று
கனவு காணாதீர்கள்
எங்கள் வேர்கள் உங்கள் எல்லைகளைக்
கடந்துவிட்டன? என்ற வரிகள் கவிக்கோ அப்துல் ரகுமானின் சாயல் என சொல்லத்
தோன்றுகிறது. ஒருவேளை புதிய மாதவி அதைப்படிக்காமல் கூட இருந்திருக்கலாம்
அல்லவா?
கழிவறை இல்லாமல் காலந்தள்ளும் நம்மக்கள் இரவில் போகுவரத்து வெளிச்சத்தில்
எப்படி அவஸ்த்தைக்கு ஆளாகிறார்கள் என்பதை அடுக்குமாடியில் வாழும் கவிஞரின்
இதயம் இரயில் தண்டவாளங்கள் அருகில் சென்றது, நான்கு தலைமுறையாய் தமிழ்
மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபடும் அடையாளத்தின் நதிமூலமாகும்.
எத்தனை எத்தனை கோடிகளை ஒதுக்கியும் இன்னும் ஒரு கழிவறை கிடைக்க
வில்லையே எம்மக்களுக்கு என்ற பெருமூச்சு கவிஞருடையது. பாரதியைப் போல
துப்புரவுத் தொழிலாளிக்கும் விடுதலை கேட்டவர் புதிய மாதவி.
அதனால்தான் இத்துணைக் கட்சிதமாக:
“இரண்டு நிமிடத்திற்கு
ஒரு ரயில்
அறிவித்தார் அமைச்சர்
அச்சப்பட்டார்கள்
அம்மாக்கள்
அடிக்கடி எழுந்து நிற்கும்
அவஸ்தையை நினைத்து”
இப்படி மானுடத்தின் வலியோடும் ரணத்தோடும் நாற்றத்தோடும் தன்னைக் கரைத்துக்
கொண்ட புதிய மாதவியின் கவிதைகள் எல்லாம் இருட்டை விரட்டும் வெளிச்சங்கள்.
அவலத்தைச் சுட்டிக்காட்டும் கைகாட்டிகள்.
கருக்கலைப்பு இன்றைக்கு சர்வசாதரணமாக நடக்கின்றது. அதுவும் பெண் என்றால்
உடனே அழிக்கப்படுகின்றது. கரு பேசுவதாக எனக்கு தெரிந்து எந்தப் பெண்கவியும்
எழுதியதாகப்படவில்லை.
ஆனால், இங்கே, அழியும் கருவே முகம் திருப்பி கேட்கிற அவலத்தைப் படிக்க
முடிகிறது. அவலத்தைப் பாடும் இந்தத் தொகுப்பில் அவலம் அழகியலோடு வெளி
வந்திருக்கும் கவிதைகள் அதிகம் என்று கூற முடியும்.
மேடையில் பேச, கட்டுரையில் காட்ட, அவலத்தை வெளிச்சமிட புதிய மாதவியின்
கவிதைகள் கைகொடுக்கும். ஆனால் புதிய மாதவியின் நோக்கம் அதுவல்ல.
வாழ்ந்து, பார்த்துச் சலித்துப்போன இந்தச் சமூகத்தின் அசிங்கத்தை மாற்ற பயன்படுமா
என்பதே.
அதனால்தான் அவர்தம் முன்னுரையில் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்.
“எரிமலைப் பிரதேசங்கள்
கடலடியில் இருந்தாலும்
குளிர்வதில்லை
அப்படித்தான் இந்த வெளிச்சங்களுக்கு நடுவில்
இலக்கிய பூமியில் நானும் என் கவிதைகளும்” என்று
இவ்வளவுக் கரிசனமும் சிரத்தையும், கவலையும் ஒரே இடத்தில்
குடிகொண்டிராவிட்டால் எப்படி இந்நூலை
“மும்பை நகர்மன்ற பள்ளிகளில் கல்வி பயிலும்
என் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு”
அர்ப்பணித்திருக்க முடியும்?
வாழ்வது மாடியில். பார்வை சாக்கடையில். இப்படி நேர் எதிர் எதிர் பார்வையைச்
சுமந்து எழுதும் புதிய மாதவியின் எழுத்தைக் கையில் அல்லது பையில் சுமப்பது
அடிக்கடி நமக்கு நிஜங்களை நினைவுபடுத்தும்.
நிழல்களோடு வாழ்கிற வாழ்க்கை நிஜமானதல்ல என்பதை சுட்டிக்காட்டும்.
ஏனெனில்
“நிழல்தேடி நடக்கலாம்
நிழல்கூடவே நடக்கலாமா?”
என்பதும் அவருடைய வாக்குமூலம் தான்
புதிய மாதவியின் இந்த இரு நூல்களையும் படிக்கிற நமக்கு, கவிதையை முழுக்க
முழுக்க ரணத்தை பாடவே பயன்படுத்துகிறார் என்பது தெளிவு. இம்மியளவும் கூட
அதில் பொழுது போக்கிற்கு இடமே இல்லை.
திரை உலகக் கவிஞர்கள் சொல்வதுபோல “கவிதையில் என்னைப் பாருங்கள்.
பாடலில் என்னைத் தேடாதீர்கள்” என்று கூனிக்குறுகாமல் எத்துணை நேர்மையோடு
“என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி”
என்று பிரகடனப்படுத்த முடிகிறது.
“எழுத்தும் தெய்வம்
இந்த
எழுதுகோலும் தெய்வம்” என்று பாரதி பாடியதைப்போல இவருக்கு
எழுத்தும் ஆயுதம் – இந்த
எழுதுகோலும் ஆயுதம் என்பதால் இவருடைய இலக்கிய பயணம் என்பது ஒரு
மானுடப் போராளியின் பயணம் என்பதில் எனக்கு ஐயமில்லை.
புதிய மாதவியே
உங்கள் ஆத்திரத்தை வணங்குகிறேன்:
வரவேற்கிறேன்.
நன்புடன்
பிச்சினிக்காடு இளங்கோ
28.08.2006
pichinikkaduelango@yahoo.com
- கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!
- மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?
- உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”
- சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)
- போராளியின் பயணம்
- கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- ‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!
- பெண் மொழி ≠ ஆண் மொழி
- சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை
- கீதாரிகள் உலகம்
- இதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே
- தோளைத் தொட்ட கைகள்
- நான் தான் நரகாசூரன் பேசறேன்….
- கணக்கு !
- இராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006
- தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்
- அறிவிப்பு:
- நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:
- பேசும் செய்தி – 3
- சாமிச்சண்ட
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6
- பெண்/பெண்
- மடியில் நெருப்பு – 7
- இரவில் கனவில் வானவில் 6
- திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…
- வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.
- பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம
- “கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”
- அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்
- திரிசங்கு
- கயிற்றரவு
- தாஜ் கவிதைகள்
- நான் ?
- நன்றி. மீண்டும் வராதீர்கள்.
- பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி