பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

வெங்கட் சாமிநாதன்



கடந்த இரண்டு மூன்று வாரங்களாக, திண்ணையில் நடந்து வரும் வாதப் பிரதி வாதங்களைப் பார்த்து வந்தால், ஒரு தரப்பு புதிய பிரச்சினைகளை, கேள்விகளை எழுப்புவதும் எதிர் தரப்பு அவற்றை எதிர்கொள்ளாது அவதூறு என்று சொல்லிவிட்டு நகர்ந்து இறுமாப்புடன் மார்தட்டி வெற்றிப் புன்னகை வீசுவதும் முன்னர் கடந்த சில வருஷங்களாக, இதுமாதிரி சந்தர்ப்பங்களில் இரு தரப்பும் நடந்து கொண்டது மாதிரியே இப்போதும் நிகழ்வது இனி எப்போதுமே இரு தரப்புகளும் இப்படித்தான் ஒரே நாடகத்தை திரும்பத் திரும்ப மேடையேற்றுமோ என்று சலிப்பு ஏற்படுகிறது. நேசகுமார் ஒவ்வொரு முறையும் தன் தரப்பு வாதங்களை ஆதாரங்களோடு முன் வைக்கும் போதும், அவற்றிற்கு எதிர் தரப்பிலிருந்து பதில் ஏதும், அல்லது, வேறு விளக்கங்கள் ஏதும் முன் வைப்பதில்லை. “அவதூறு” என்று சொல்லி நேசகுமாரை முறியடித்து விட முடிந்துள்ளது.

இவ்வளவுக்கும் நேசகுமாரை எதிர்கொள்பவர் மிகவும் வல்லமை கொண்டவர் என்று தெரிகிறது. ஒரு பேராசிரியர். தன் பெயரை, 300 கோடியோ என்னமோ மக்கள் தொகை கொண்ட இப்பரந்த உலகத்தின் முன், நான் தான் பேராசிரியர் ஏ.எஸ் முகம்மது ர·பி, ஆங்கில இலக்கீயம், இத்யாதி, இத்யாதி என்று மார் தட்டிக் கொண்டே தன் ஊர் இருப்பிடம், டோர் நம்பர், தெரு, வார்ட் நம்பர், தாலுகா, ஜில்லா, பின் கோடு எல்லாம் தந்து ஒரு பெரும்படையின் முன் தன் மார்புக் கவசத்தைக் கழட்டி முன் நின்று ‘ சுடடா, சுடு, உன்னால் முடிந்தால்,.” என்று வீரவசனம் பேசும் வல்லமை வேறு யாருக்கு வந்திருக்கிறது, நாமறிந்த சரித்திரத்தில்? முக்கியமாக நேசகுமாருக்கு இல்லை. சே குவேரா, ஹோசி மின்ஹ் போன்றோருக்கும் இருந்ததில்லை. லெனினும் எங்கோ போய் ஒளிந்து கொண்டார். சுபாஷ் சந்திர போசும் இரவோடு இரவாக ஹஜாரி பாக் சிறையிலிருந்து தப்பி ஓடினார். சரித்திரத்தில் எந்த வீர புருஷன் இரவில் தப்பி ஓடியிருக்கிறான்? இவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்து வாழ்ந்தவர்கள். வ.வே.சு அய்யர் கூட சர்தார்ஜி போல வேடம் தரித்துக்கொண்டு தான் பயணம் செய்தார். தான் தான் வ.வே.சு அய்யர், தன் இருப்பிடம் லண்டனில் இந்தியா ஹவுஸ், வீர சவர்க்கரின் சகா என்று சொல்லும் தைரியம் அவருக்கு இருந்ததில்லை. இவர்கள் யாருக்கும் பேராசிரியர் ஏ.எஸ் முகம்மது ர·பி போல தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் தைரியம் இருந்ததில்லை. மேடம் தஸ்ஸாத் காட்சியகத்தில் நம் பேராசிரியருக்கு ஒரு இடம் முன் பதிவு செய்யப்படவேண்டும்.

நேசகுமார் ஒரு மாதிரியாக ஒளிந்து கொள்கிறார் என்றால், பேராசிரியர் ஏ.எஸ்.முகம்மது ர·பி வேறு மாதிரியாக. “அவதூறு” என்ற ஒற்றைக்கணை அவருக்கு எந்த வாதத்தையும் எதிர்கொள்ள போதுமானதாக இருந்து வருகிறது. அவருடைய நண்பர்களும் எத்தகைய தளபதியின் தலைமையில் தாம் போர்க்களத்தில் இருக்கிறோம் என்று கர்வம் கொள்கின்றனர்.

ஆங்கிலம் போதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர் தம்மை பேராசிரியர் என்று சொல்லி மட்டும் நிறுத்திக் கொண்டுள்ளார். அவர் எழுதியுள்ள, “இஸ்லாம், ஒரு எளிய அறிமுகம்” என்னும் ஒரு மொத்தையான புத்தகம், விற்பனையில் சுஜாதா, பாலகுமாருக்கு போட்டியாக வெற்றி வாகை சூடிய புத்தகம் பற்றி அவர் ஏதும் சொல்ல வில்லை. அது ஒரு அடக்கம். ஒரு “எளிய அறிமுகம்” என்று சொல்லிக்கொண்டது இன்னும் அதற்கு மேற்செல்லும் அடக்கம். தமிழில் முதல் முறையாக இஸ்லாமை அறிமுகம் செய்துள்ள முன்னோடி அவர். வேறு யாரும் இந்த பாதையில் கால் பதித்ததில்லை, என்னத்துக்கு வம்பு என்று. இப்போது “சூ·பியிஸம், ஒரு எளிய அறிமுகம்” என்று இன்னும் ஒரு மொத்தையான புத்தகமும் எழுதியிருக்கிறார். பேராசிரியர் தன் அறிவின் சுமை அத்தனையையும் வாசகன் மேல் இறக்கி வைக்கும் மமதை அவரிடமில்லை. மாறாக எதையும் எளிமையாக்கித் தருபவர்.

அதற்காக அவரை இரண்டாம் க்ளாஸ் வாத்தியார் என்று எண்ணக்கூடாது. “சொல்லிக் கொடுத்ததை நெட்டுருப் பண்ணுங்கடா போதும்” என்று சொல்லமாட்டார். பேராசிரியர் அவர். அவரிடம் கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொண்டு விளக்கமாக கேள்வி எழும் பிரச்சினையின் முழுமையை புரிய வைக்கும் வகையில் விவரமாக, அதேசமயம் எளிமையாகவும் பதில் சொல்வார் என்று பொருள்.

இதற்கு முன் பல புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்து தம் நண்பர்களின் புருவம் தூக்கலை எதிர்கொண்டவர். அதுவும் எத்தைகைய கருத்துக்கள். கி.பி.2009-ல் பகுத்தறிவு இயக்கம் வெற்றி கொண்ட தமிழ் சமூகத்தில். கா·பிர்கள் பெரும்பான்மையாக உள்ள தமிழ் சமூகத்தில். “இசை இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல” என்பதும், “கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனை காட்டுமிராண்டித் தனமானது” என்பன போன்ற புரட்சிகரமான கருத்துக்களைக் கூறி அவரது நண்பர்களிடையே மனஸ்தாபத்தைச் சம்பாதித்துள்ளார்.

இம்மாதிரியான “தம் கருத்துக்கள் தவறானவை என்று நிரூபித்தால் அந்தக் கணமே மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதாக” வாக்கு மூலம் தந்திருக்கிறார்”. ரொம்பவும் நியாயமான நிபந்தனைதான். ஆனால், பேராசிரியர் அவர்களே, இசை இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல, கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனை காட்டுமிராண்டித்தனமானது” என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு ஒருவர் நண்பர்களிடையேகூட சினேகம் கெடுமென்றால், அது எத்தகைய சமூகம்? இந்த சமூகம் நுண்ணிய கலையுணர்வுகளோ, மனிதாபிமானமோ, சக மனித உணர்வுகளோ அற்ற சமூகம் என்றல்லவா ஆகிறது? இந்த சாதாரண கருத்துக்களுக்கே ஒருவர் போராட வேண்டியிருக்கிறதென்றால், “நான் சொல்வது தவறு என்று நிரூபி” என்று வீரவசனம் பேசவேண்டியிருக்கிறதென்றால், எத்தகைய சமூகத்துடன் நீங்கள் போராடுகிறீர்கள், பேராசிரியர் அவர்களே?” எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பின் தங்கிய காட்டுமிராண்டி சமூகம் அது? அத்தகைய சமூகத்தில் எப்படி நீங்கள் எப்படி காலம் தள்ளுகிறீர்கள்? எனக்கு உங்கள் அவஸ்தைகளைக் கண்டு இரக்கம் தான் தோன்றுகிறது. என் மனப் பூர்வமான அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க,

நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் பற்றியும் நிறைய படித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தன் ஒவ்வொரு கருத்துக்கும் ஆதாரங்களை, குரானிலிருந்தும், ஹதீதுகளிலிருந்தும் இன்னும் வரலாற்றிலிருந்தும் கொடுக்கிறார். ஒரு உதாரணம்:

பெண்கள் போகப் பொருளாகத்தான் கருதப்பட்டார்கள். முகம்மது நபிக்கு முன்னும், அவர் காலத்தும், அதற்குப் பின்னும். (தன்னை முற்றும் மறைத்துக்கொள்ளாத பெண், திறந்து கிடக்கும் இறைச்சி என்று ஒரு வணக்கத்திற்குரிய முல்லா சொன்னாராமே, ஆஸ்திரேலியாவில். போகட்டும். கைது செய்யப்பட்ட பெண் ஏலத்திற்கு விடப்படலாம், பெண்டாடப்படலாம் அதை குரானே அனுமதிகிறது என்று நேசகுமார் சொல்கிறார். சு.ரா. 23.06 என்று ஆதாரமும் காட்டுகிறார். இதை எப்படி அவதூறு என்று ஒரு இஸ்லாத்துக்கு ஒரு எளிய அறிமுகம் எழுதிய பேராசிரியர் சொல்லமுடியும்? இப்படி நிறைய சமாச்சாரங்கள்; காபாவில் இருப்பது, முகம்மது ந்பிக்கு முந்திய கால அராபியர்கள் பெண் தெய்வங்களாக வணங்கிய கல்தூண்கள், பின் ஹஜ்ரூல் அஸ்வத் – என்னும் லிங்கள். அதன் புகைப்பட ஆதாரத்தையும் அவர் தந்துள்ளார். இது தவறு பொய், இந்த புகைப்படமும் பொய்யாக உருவாக்கப்பட்டது, தன் சுடப்பட்டுக் கிடப்பதாகச் சொல்லப்படும் தன் உடலை கண்டு பிரபாகரன் சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று நக்கீரனில் வெளிவந்ததே, அந்த மாதிரி சமாச்சாரம் தான் நேசகுமார் தந்துள்ளது, உண்மையான காபா இதோ, என்று சொல்லுங்கள்.

வேலை தேடி, பாதுகாப்பு தேடி, வறுமையிலிருந்து தப்பி வளம் கொண்ட நாடு தேடிச் செல்லும் மக்கள் இடம்பெயர்ந்தும், கருத்தடை எங்கள் மதத்திற்கு எதிரானது என்று கூச்சல் போட்டு கட்டுப்பாடின்றி குடும்பத்தைப் பெருக்கி, இப்படியெல்லாம் பெருகும் முஸ்லீம் மக்கள் தொகையைக் காட்டி, இது மற்ற மதத்தினர் இஸ்லாத்தால் கவரப்பட்டு பெருகிய வெள்ளப் பெருக்கு என்று நீங்கள் அடையும் புள்காங்கிதம் எவ்வளவு அர்த்தமற்றது என்பதை இங்கேயே இன்னொரு அன்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்கள் பேராசிரியர். இஸ்லாத்தைப் பற்றி எங்களுக்கு பிரசாரமாக அல்ல, ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டி, நேசகுமார் சொல்வதெல்லாம் ஆதாரமற்றது என்று விளக்கம் தரவேண்டியவர். நேசகுமாரிடமிருந்து ஆதாரங்களும், உங்களைப் போன்ற பேராசிரியரிடமிருந்து “அவதூறு” என்பது போன்ற வெற்றுச் சொல்லாடல்களுமே வந்தால், அது உங்கள் இஸ்லாத்தைப் பற்றிய அறிவுக்கு அழகல்ல.

முதலில் காபாவில் இருப்பது, மறைந்திருப்பது என்ன, சு.ரா.23.06 சொல்வது என்ன என்று சொல்ல ஆரம்பியுங்களேன்.

எதிலும், எதற்குள்ளும், கேள்விகள், விசாரணைகள், சுய விமர்சனங்கள், மனித ஜீவனின் அடிப்படைகளை மறக்காத காலத்திற்கேற்ற மாற்றங்கள், எதையும் ஒரு மீள் பார்வைக்கு உட்படுத்துதல் எல்லாம் தேவை. உலகம் கி.பி. 637 -ஓடு உறைந்து விடவில்லை.

வெங்கட் சாமிநாதன்/28.5.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்