பேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ஸ்ரீமங்கை


—-

பேராசிரியர் இராமானுஜம் அவர்களுக்கு 2003ம் ஆண்டின் புதுமைப்பித்தன் இலக்கிய விருதினை விளக்கு அமைப்பு வழங்கியிருப்பது குறித்து

திரு கோபால்சாமி அவர்களின் கட்டுரை படித்தேன்.

திரு.கோபால்சாமி , பேராசிரியர்.ராமானுஜத்தின் நாடகப்படைப்புகளைக் குறிப்பிடும் போது, வெறியாட்டம், கருத்த தெய்வத்தைத் தேடி, பிணம் தின்னும் சாத்திரங்கள், செம்பவளக்காளி,மெளனக்குறம் போன்ற படைப்புகளைக் குறிப்பிடுகிறார்.

பேராசிரியரின் ஒரு முக்கிய பங்களிப்பு ஏனோ பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர் தேசிய நாடகப்பள்ளியில் பயின்றது தொட்டு மிக முக்கியமாகக் கருதியது குழந்தைகளுக்கான நாடக முயற்சிகள். இன்றும் அவரது குருவான திரு. சங்கரபிள்ளை நினைவாக, திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்ஞாரமூடு என்னும் இடத்தில், திரு.கொச்சு நாராயணபிள்ளை அவர்களால் நடத்தப்படும் பள்ளிக்கு புது வருடத் தொடக்கத்தில் சென்று , குழந்தைகள் நாடகத்திற்கான பயிற்சிப்பள்ளியில் நாடகம் தொடர்பான பயிற்சியளிப்பதை தன் கடமையென செய்து வருகிறார். அவரது உரையாடல்களில் ‘ தமிழில் குழந்தைகளுக்கான நாடகங்கள் பெருமளவில் நல்ல தரத்துடன் வரவில்லை ‘ என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

நாடகமென்பது மிக அற்புதமான மீடியா. திரைப்படத் துறையிலிருப்பவர்களும் இதனை நன்கறிவார்கள். ஏனோ, தமிழ் நாடகமென்றாலே இரட்டை அர்த்த வசன ஜோக்குகள் கொண்ட நாடகங்களென ஒரு பக்கம், நவீன நாடக உத்திகள் கொண்ட நாடகங்கள் மற்றொரு பக்கம் ( இந்தப்பக்கம் பெரும்பாலும் மக்கள் தலைவைத்துப் படுப்பதில்லை. அறிவுஜீவிகளுக்கு உள்ளது என்ற பெருந்தன்மையோடு போய்விடுவார்கள்) எனப் பிரிவுபட்டு நிற்கிறது.

இதில் குழந்தைகளுக்கான நாடகங்கள் குறித்து பெரும்பாலும் எவரும் கவலைப்படுவதில்லை.

வடக்குப்பக்கம் அவ்வாறில்லை. என்னதான் குப்பைக்கூளமாக மும்பை இருந்தாலும், நல்ல நாடகங்கள் பார்ப்பதெற்கென இங்குள்ள இளையதலைமுறைகளும் செல்கிறார்கள். NCPA, Prithvi theater போன்ற அமைப்புகள் நல்ல நாடகங்களை தந்துகொண்டுதானிருக்கின்றன. உலக அளவில் குழந்தைகள் நாடகங்களை காட்டுகிறார்கள். இந்தியாவில் பலபகுதியிலிருந்தும் நாடகக்குழுக்கள் வந்து குழந்தைகளின் திறமைகளைக் காட்டுகின்றன. கேரளாவிலிருந்து சிறப்பாக வருகிறார்கள். நம்ம ஊர் குழுக்கள் ?

பேராசிரியரின் ‘ பொன்குடம், குட்டியானைக்கு கொம்பு முளைச்சது.இனி இவ்விதி செய்வோம், மாண்டதொரு சிங்கமும் – பண்டிதர் மூவரும் ‘ போன்ற நாடகங்கள் ஏனோ குறிப்பிடப்படுவதில்லை. குழந்தைகள் நாடகங்கள் என்பதால் ‘சின்னப்பிள்ளைகளுக்கானது ‘ என்று விட்டுவிட்டார்களோ ? என்றேனும் நாம் இதனை உணர்ந்து நல்ல குழந்தை நாடகங்களை ஆதரிப்போம் என நம்புவோமாக

அதுவரை நம் பிள்ளைகள் ஹாரி போர்ட்டரிலும், கார்ட்டூன் , போகோ என்று சேனல்களிலும் முழுகிக் கிடப்பதற்கு விமோசனமில்லை.

அன்புடன்

ஸ்ரீமங்கை (க.சுதாகர்) kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை