பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

முனைவர் மு.இளங்கோவன்



தமிழ்த்தேசியப் பாவலர்களுள் குறிப்பிடத்தகுந்த பெருமைக்கு உரியவர் பெருஞ்சித்திரனார் ஆவார். இவர் உரைநடை வரைவதிலும் பாட்டு வடிப்பதிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமைக்கு உரியவர். பாவேந்தருக்குப் பின் தமிழர்கள் எழுச்சிபெறத்தக்கப் பாட்டுகளைப் பல்வேறு வடிவங்களில் வழங்கியவர். இளைஞர்களும்,பெரியோர்களும்,அறிஞர்களும் விரும்பும் வகையில் பாடல் வரைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் மழலைச்செல்வங்கள் கற்றும், ஆடியும் பாடியும் மகிழத்தக்க வகையில் பல பாடல்களை வழங்கியுள்ளார்.இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் உணர்ச்சி ததும்பும் பாடல்களை வரைந்த இவர்தம் குழந்தைப் பாடல்களைப் படிக்கும் பொழுது இவர்தம் குழந்தை உள்ளம் புலப்படும். இவர் தம் படைப்புகளில் குறிப்பிட்டு ஆராயவேண்டிய பகுதிகளில் குழந்தைப்பாடல்கள் வரிசை ஒன்றாக உள்ளது.

ஏனெனில் குழந்தைப்பாடல்கள் வரைவது என்பது எளிதான செயல் அன்று.கழக நூல்களில் குழந்தைப்பேற்றின் சிறப்புப் பேசப்படுகிறது.அதுபோல் பிற்கால நூல்களிலும் பேசப்படுகிறது.பாரதியார்,கவிமணி,பாவேந்தர் மழலைப்பாடல்கள் வரைந்துள்ளனர்.எனினும் அழ.வள்ளியப்பா,பெருஞ்சித்திரனார்,தங்கப்பா, முரசு.நெடுமாறன், குழ.கதிரேசன் முதலான பாவலர்களின் பாடல்களே மழலையர் உள்ளம் உணர்ந்து எழுதப்பட்டதாக அறிஞர் உலகம் குறிப்பிடுகின்றது.

இவர்களுள்ளும் அழ.வள்ளியப்பாவின் பாடல்களும்,முரசு.நெடுமாறனின் பாடல்களும் பல்லூடகங்களின் வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மழலைப்பாட்டுத் துறையில் மிகச்சிறந்த பணியாற்றியுள்ள பாவலரேறு பெருஞ்சித்திரனார்,தங்கப்பா பாடல்களுள் ஒன்றிரண்டு பாடநூல்கள் வழியாக அறிமுகம் செய்யப்பட்டனவே தவிரத் தமிழக,தமிழ்மக்கள் நலன் விரும்பி எழுதப்பெற்ற இவர்களின் பாடல்கள் இன்னும் பரவலாக மக்களிடம் அறிமுகம் ஆகாமல் உள்ளமை அறிஞர் உலகத்தின் குறையே ஆகும்.

மாணவர்களுக்குத் தமிழ்ச்சிட்டு என்னும்இதழைத் தொடங்கி நடத்திய பெருஞ்சித்திரனார் அட்டைப் பாடல்களாகவும், பிற வகையிலும் எழுதிய பாடல்களைத் தொகுத்துப் பள்ளிப்பறவைகள் என்னும் தொகுப்பை வெளியிட்டார். இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ள (1972,1995) பள்ளிப்பறவைகள் நூலை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

பள்ளிப்பறவைகள் நூல் அறிமுகம்

பள்ளிப்பறவைகள் நூலின் பாடல்கள் மூன்று பகுதிகாளகப் பகுக்கப்பட்டுள்ளன.1.முதல்பகுதி (குஞ்சுகளுக்கு) 2.பறவைகளுக்கு 3.மணிமொழிமாலை.33+32+13=78 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.சிறுவர்கள் படித்துமகிழும் வண்ணமும்,பார்த்துமகிழும் வண்ணமும் சிறு சிறு படங்கள் வனப்புடன் வரையப்பட்டுள்ளன.

‘பள்ளிக்குப் பறக்காத குஞ்சுகளுக்கும்,பள்ளிக்குப் பறந்து செல்லும் பறவைகளுக்கும் அவ்வப்பொழுது வடித்த பாடல்கள் இவை’ என ஆசிரியர் குறிப்பிடுவது போல் இளம் மழலைக்கான பாடல்களும், ஓரளவு படிக்கத்தெரியும்,சிந்திக்கத் தெரியும் குழந்தைகளுக்குமான பாடல்கள் இந்நூலில் உள்ளன.நிறைவுப்பகுதியில் அமையும் மணிமொழிமாலை என்னும் பகுதியில் அறவியல் செய்திகள்,நற்பண்புகளைப் புகட்டும் செய்திகள் பாடல்களாக்கப்பட்டுள்ளன.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மழலைப்பாடல்களின் முற்பகுதியில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்குப் புரியும் வண்ணமும்,மனத்தில் பதிக்கும் வண்ணமும் பாடல்கள் உள்ளன.அம்மாவை அறிமுகம் செய்வது,தாய் கொஞ்சுவது,பாதையில்நடப்பது,காக்கை,இயற்கை,நாள்கடமை,நிறம்,பறவை,விலங்கு,
கோழி,பூனை,மீன்கள்,கதிரவன்,காற்று,வானூர்தி,கடிகாரம்,குடை,செருப்பு,மாட்டுவண்டி,விளையாட்டு,பாட்டி,பாப்பா முதலான அன்றாடம் நம் கண்ணில் காணும் பொருளைகளைக் குழந்தைகளுக்கு நினைவூட்டிப் பாடல்களை எழுதியுள்ளார்.

பாவலரேறு அவர்கள் எழுதியுள்ள மழலைப் பாடல்களில் பொருத்தமான யாப்பமைப்புகளைப் பயன்படுத்தி யுள்ளார்.சிறுவர்கள் விரும்பும் ஒசை அவர்தம் பாடல்களில் எங்கும் ஒலிக்கின்றன.வகையுளிகள் இல்லாமல் இருப்பது பெருஞ்சிறப்பு.கடுஞ்சொற்களைக் காண முடியவில்லை.பிள்ளைகளுக்கு அறிமுகமான சொற்களே பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.அகரவரிசையைப் பயிற்றுவிக்கும் நோக்கில்

அம்மா மிகவும் நல்லவள்!
ஆட்டித் தூங்கச் செய்தவள்!
இளைக்கக் கண்டு அழுதவள்!
ஈயை ஓட்டி நின்றவள்!
உழக்கு நெய்யைச் சோற்றிலே,
ஊற்றிப் பிசைந்து கொடுத்தவள்!
எடுத்துத் தூக்கி அணைத்தவள்!
ஏணை கட்டிப் போட்டவள்!
ஐயன் அப்பன் என்றவள்!
ஒளவைக் கதையைச் சொன்னவள்!
ஒப்பனைகள் செய்தவள்!
ஓயா தென்னைக் காப்பவள்! (பள்ளி.ப11)

என்னும் பாடலில் தாயின் பாசம் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஒரே பொருளை முதன்மைப்படுத்தி,பிற செய்திகளை நுழைக்காமல் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளமை அவர்தம் கற்பனையாற்றலையும், நினைவாற் றலையும் நுண்ணோக்குத் திறனையும் மெய்ப்பிக்கும்.அடுத்து குழந்தை என்னும் தலைப்பில் இடம்பெறும் பாடல்,

குழந்தை இங்கே வா!
கொஞ்சி முத்தம் தா!
பாலுஞ் சோறும் உண்ணு!
பத்து வரையில் எண்ணு!
அ ஆ இ ஈ என்றே
அப்பா வந்தால் சொல்லு!
பட்டுச் சட்டை தைப்பார்!
பதக்கம் வாங்கி வைப்பார்!
முத்துப் பல்லைக் காட்டு!
முன்னங் கையை நீட்டு!
சோற்றை வாயில் போடு!
சுவையாய்ப் பாடி ஆடு!

என்று அமைந்து குழந்தைகளின் செயல்களான முத்தம் தருவது,பால்சோறு உண்ணுவது,ஒன்று,இரண்டு என்னும் எண் வரிசை அறிமுகம்,அகரவரிசை அறிமுகம்,பட்டாடை அணிதல் பல்காட்டி நகைப்பது என்று இவற்றை ஒரே கோர்வைப்படத் தொடர்புப்படுத்திப் பாடியுள்ளமை அவரின் தாயுள்ளம் காட்டும்.
பெருஞ்சித்திரனார் அவர்கள் தமிழ்க்குழந்தைகள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளரவேண்டும் என்ற எண்ணம்கொண்டவர். எனவே அறிவுரை சொல்லும் போக்கில் சில பாடல்களை அமைத்துள்ளார். குழந்தைப் பாடல்களை ஆய்வுசெய்வோர் அறிவுரை கூறும் பாடல்களைக் குழந்தைப் பாடல்களாகக் கருதத் தயங்கு கின்றனர். அவ்வகையில் பள்ளிப்பறவைகள் நூலில் பள்ளிக்குப் போ,பாதையில் நடத்தல் உள்ளிட்ட சில பாடல்கள் அறிவுரை கூறும் போக்கினவாகக் காணப்படுகின்றன.

பெருஞ்சித்திரனார் திருக்குறள் நூலில் ஆழ்ந்த பற்றுடையவர்.எனவே இந்நூலை மாணவர்கள் கற்க வேண்டும் என்று அழகிய பாடல்வழி விளக்கியுள்ளார்

பெரிய வர்க்குப் பெரியநூல்!
சிறிய வர்க்கோர் அரியநூல்!
உரிய வர்க்கும் உரியநூல்1
உலகில் யார்க்கும் உயர்ந்த நூல்!(பக்.16)

என்று பாடும் பெருஞ்சித்திரனார் திருக்குறளில் கூறப்படும் நற்பண்புகளை வளர்க்க உதவும் குறட்பாக்களை நினைவுப்படுத்தும் நோக்கில் மேலும் ஒருபாடலையும் தந்துள்ளார்.கல்வி,சொல்வன்மை, பணிவு,விருந்து, பொறையுடைமை,தெரிந்துசெயல்வகை,ஒழுக்கமுடைமை என்னும் பத்து அதிகாரங்களின் செய்திகளைச்
சாறாகக் காட்டும் வகையில்,

கற்க!கற்க!கற்க!
கற்பன வற்றைக் கற்ற வழியில்
நிற்க! நிற்க! நிற்க!

சொல்க! சொல்க! சொல்க!
சொல்லுஞ் சொல்லால் மற்றவர் சொல்லை
வெல்க! வெல்க! வெல்க!(பக்.17)

என்று பாடியுள்ளமை அவர்தம் திருக்குறள் பற்றைக் காட்டும்.

பெருஞ்சித்திரனாரின் பாடல்களில் உள்ள நுட்பங்கள்(உத்தி)

பெருஞ்சித்திரனார் தம் பாடல்கள் சிறப்புடன் அமையப் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார். உவமை காட்டல்,வினாவிடை அமைப்பில் தருவது,உரையாடல் முறை,கதைசொல்லி விளக்கல்,கும்மி ,காவடிச்சிந்து அமைப்புகளைப் பயன்படுத்தல் என்ற முறைகளைப்பயன்படுத்தித் தம் மழலைப்பாடல்களைஉருவாக்கியுள்ளார்.

அன்னையின் சிறப்பை வினா விடை அமைப்பில் பாவலரேறு சிறப்பாகப் பாடியுள்ளார்.அவ்வாறு பாடும் பொழுது அழகிய உவமைகளைப் பயன்படுத்துவது அவரின் இயல்பாகும்.மேலும் வினாவிடை அமைப்பில் செய்திகளைச் சொல்லும்பொழுது குழந்தைகள் விரும்பிக்கேட்கும்.பாடல் வெற்றிபெறும்.மழலையுள்ளாம் கொண்ட,மழலையுணர்வு புரிந்த பெருஞ்சித்திரனார் இவ்வுத்தியை அன்னை என்னும் தலைப்பில் பாடியுள்ள பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

உன்னைக்கொண்டு வந்தே,இவ்
உலகில் விட்டது யார் சொல்?

அன்னை! அன்னை! அன்னை!-என்
அன்னை! அன்னை! அன்னை!

கண்ணைப்போல உன்னையே
காத்து வருவது யார்சொல்?

அன்னை! அன்னை! அன்னை! -என்
அன்னை! அன்னை! அன்னை! (பக்.19)

பெருஞ்சித்திரனார் வினாவிடை அமைப்பைப் பயன்படுத்தும்பொழுது அப்பாடல் மேலும் சிறப்புடன் விளங்க அழகிய உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார்.சிறுவர்பாடல்களில் உவமைகள் உறுத்தாமல் இருக்கவேண்டும். அவ்வுவமையும் காட்சிப்புரிதலுக்குத் துணை செய்யவேண்டும்.தம் கற்பனையைக் காட்டுவதைவிட மழலை நெஞ்சம் காட்சியைப் புரிந்துகொள்ளத்தக்க எளிய உவமைகளைப் பெருஞ்சித்திரனார் பயன்படுத்தியுள்ளார்.

‘கண்ணைப்போல உன்னையே
காத்துவருவது யார்சொல்? ‘ எனவும்

‘எண்ணெய் இட்ட விளக்குப்போல்
இரவில் காத்தது யார்சொல்? ‘ (பக்.19)

எனவும் வரும் பாடலடிகள் இதனைக் காட்டும்.

உரையாடும் அமைப்பிலும் பல பாடல்கள் பள்ளிப்பறவைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.குடையும் செருப்பும்,சிற்றெரும்பு,உடல் உறுப்புக்களின் சண்டை என்னும் தலைப்பில் வரைந்துள்ள பாடல்கள் இதற்குச் சான்றாகும்.

உரையாடல் அமைப்பில் உடல் உறுப்புகள் ஒன்றையொன்று சண்டையிட்டுக்கொள்ளுவது போன்ற பெருஞ்சித்திரனாரின் பாடல் சிறந்த பாடலாகும். உடல் உறுப்புகள் பேசமுடியுமா? என வினவிக் கேட்க முடியாதபடி குழந்தைகளின் உள்ளத்தில் மகிழ்ச்சியுண்டாகும்படி இப்பாடலை எழுதியுள்ளார்.ஒவ்வொரு உறுப்புகளும் தாமே பெரியவர் என்று வாதிடுவதாக இப்பாடல் உள்ளது.ஒவ்வொரு உறுப்புகளும் தம் பெருமையைத் தாமே எடுத்துரைப்பதாக இப்பாடல் உள்ளது.அவ்வகையில் கால்,கை,கண்,வாய்,மூக்கு,மூளை ஆகியன தாமே பெருமைகளை நிலைநாட்ட முனைந்து தொடர்ந்து குரல்கொடுத்தன என்று சுவைப்பட எழுதும் ஆசிரியர் கடைசியாகக் கற்பனையின் விளிம்பிற்கே சென்று பாட்டைப் பின்வருமாறு சுவையுடையதாக்கி யுள்ளார்.

கால் கை தளர்ந்தது! வறண்டது வாய்!
கண் இருண்டது! உயிர் திணறியது!
மூளை கலங்கும் வகையாக
மூண்டது தீப்பசி வயிற்றுள்ளே!
பசியால் வயிறு பேசியது:

‘பசி’ எனக் கேட்டால் அன்போடு
‘புசி’ என்பானே பெரியவனாம்!
‘போ’ என்பானே சிறியவனாம்! (பக்.123)

அறிவியல் செய்திகளை எளியநடையில் படிப்பவர் உள்ளம்கொள்ளும் வகையில்பாடுவதில்பெருஞ்சித்திரனார் வல்லவர்.’நிலவில் மாந்தர்’ என்னும் தலைப்பில் இவர் வரைந்த பாடல் குறிக்கத்தக்க ஒன்றாகும். பெரிய, விரிந்த செய்திகளை எளிய சொற்களைக்கொண்டு நீரோட்டமாகச் சொல்லும் போக்கைப் பின்வரும் பாடலில் காணலாம்.

மாந்தர் மூவர் பறந்தனர்;
வானம் நோக்கிச்சென்றனர்.
காந்தப் பரப்பைக் கடந்தனர்;
கவின்நிலாவில் குதித்தனர்! ……

குதித்து நடந்து சென்றனர்;
குனிந்து நிமிர்ந்து பார்த்தனர்;
புதிய தரையில் உலவினர்!
புகைப்படங்கள் பிடித்தனர்!

காற்றில் லாத பைகளில்
கல்லும் மண்ணும் நிரப்பினர்!
வேற்றோர் உலகத் தரையிலே
வெற்றிக் கொடியை நாட்டினர்!….

வானில் பறந்த மூவரும்
வந்து கடலில் குதித்தனர்!
நானும் நீயும் இருக்கிறோம்;
நாட்டுக்கென்ன செய்கிறோம்?(பக்.120,121)

நிலவில் கால் பதித்த மாந்தனின் செயல்களை அருகிருந்து பார்த்தவர்போல் எளிய நடையில் எழுதியுள்ளமை பாராட்டினுக்கு உரியது.

பள்ளி செல்லும் பருவம்கொண்ட மழலைச் செல்வங்களுக்குப் பயன்படும் வண்ணம் பள்ளிப்பறவையின் இரண்டாம் பகுதியில் அமைந்துள்ள பாடல்கள் உள்ளன்.பெருஞ்சித்திரனார் தமிழ்மொழி,இனம்,நாடு காக்கும் இளைஞர்களுக்குப் பயன்படும் வண்ணம் இப்பாடல்களைப் புனைந்துள்ளார்.பல்வேறு சூழல்களில் எழுதப் பெற்றுத் தொகுக்கப்பட்டாலும் இப்பாடல்களுக்கு இடையே ஓர் ஒற்றுமை உணர்வு ஊடு பாவாக உள்ளமை புலனாகின்றது. உணர்வற்றுத் தூங்கும் தமிழினத்தை அடித்து எழுப்பும்வண்ணம் ‘எழு தம்பி’ என்னும் பாடலைப் பாடியுள்ளார்.இப்பாடலில் இதுவரை அமைதியாக இருந்தது போதும் எனவும் தமிழ்நலம் காக்க எழுக எனவும் வேண்டுகிறார்.

அவ்வாறு தட்டியெழுப்பும் பாடலில் பழம்பெருமையைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.தமிழர்கள் உணர்வுபெற அவர்தம் பண்டைய நூல்கள் கற்கப்பட வேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் வேட்கை.இதுவரை பயன்றற வெட்டிப் பேச்சிலும் வீண் ஆரவாரச் செயல்களிலும் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் அறிவியல்,விண்ணியல் துறைகளில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் சாதி வேறுபாடுகள் கூடாது எனவும் கண்டிக்கின்றார்.

சாதிய வேறுபாடுகளால் தமிழினம் சிதைந்ததை நினைவூட்டித் தமிழ் மக்களை ஒன்றுகூட்டி-வழிகாட்டித் தமிழினத்திற்குத் தலைமை ஏற்கும்படி இளைஞர்களை வேண்டுகிறார்.(பக.53,54,55).

பள்ளிப்பறவைகள் நூலில் பெருஞ்சித்திரனாரின் புகழ்பெற்ற தமிழ்த்தாய் வழ்த்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. தமிழைப் பல்வேறு அடைமொழிகளில் விளித்துப் போற்றும் பாவலரேறு அவர்கள் பண்டைய வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைக்கிறார்.கடற்கோளுக்கு முந்தியிருந்த தமிழக நிலையினை,தமிழ் இலக்கியச் செழுமையை,

அன்னை மொழியே!
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!…

எனத்தொடங்கும் இப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாகக் கொண்டு ஒவ்வொரு மேடையிலும் போற்றிப் பாடும் பெருமைக்கு உரியதாக உள்ளது.

தமிழ்க்கும்மி என்னும் தலைப்பில் கும்மியமைப்பில் பெருஞ்சித்திரனார் தமிழ்ச் சிறப்பைப் பெண்கள் கும்மியடித்துப் பாடுவதாகப் பாடியுள்ளார்.இதில் தமிழின் தொன்மைச்சிறப்பு,இலக்கணச்சிறப்பு,அறநூல் சிறப்பு, காப்பியச்சிறப்பு இவற்றைப் பெண்கள் பாடுவதாகப் பாடப்பட்டுள்ளது.

பறவை,விலங்குகளைக் காட்டிப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மாணவர்களுக்கு நற்பண்புகளை ஊட்டும்படி பல பாடல்களை இயற்றியுள்ளார்.பறவை விலங்குகளைப் பார்(பக்.24) என்னும் தலைப்பில் எழுதிய பாடலில் ஒவ்வொரு விலங்குகள்,பறவைகளிடம் இருக்கும் நற்பண்புகளையும் தீய பண்புகளையும் நினைவூட்டிப் பாடுகிறார். நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விடுக்கவேண்டும் என்கிறார். இப்பாடலில் அழகிய கற்பனை நயமும் நுண்ணோக்கு உள்ளமும் உலகியல் அறிவும் வெளிப்பட்டு நிற்கின்றன.

தமிழ்மொழியின் சிறப்பினைப் பலபடப் புகழ்ந்து பேசும் பெருஞ்சித்திரனார் மாணவர்கள் ஆங்கில மொழியையும் கற்கவேண்டும் என்கின்றார். தமிழும் ஆங்கிலமும் தவறாது கற்பாய் எனத் தலைப்பிட்டு எழுதிய பாடலில்,

‘ஆங்கில மொழியால் அறிவியல் தேரலாம்
வீங்குநீர் உலகில் யாங்கணும் உலவலாம்’

எனப்பாடுவதால் இதனை அறியலாம்.

எந்த நூல்களைப் படிக்கவேண்டும் எவர் பேச்சைக் கேட்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்து பாடியுள்ளார். உலகில் காணப்படும் போலிகளை அடையாளம் கண்டு உண்மையின் பெருமையை இப்பாடலில் உரக்கப் பாடியுள்ளார்.

பள்ளிப் பிள்ளைகளுக்குப் பயன்படும் நூலாக இது அமைவதோடு நில்லாமல் பல்வேறு மெய்ம்மவியல் வரிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

‘தேறியோர் யாவரும் திறலோர் அல்லர்;
தோற்றோர் யாவரும் அறிவிலார் அல்லர்'(பக்.67)

‘விடியப் படித்தவன் வெற்றியைப்பெற்றான்
விடிந்தும் தூங்கியோன் தேர்வினில் விழித்தான்'(பக்.68)

‘வென்றார் யாவரும் செருக்கவும் வேண்டா
தோற்றார் யாவரும் துவளவும் வேண்டா’ (பக்.68)

தமிழ் உணர்வூட்டும் பாடல்களைப் பல்லாயிரக்கணக்கில் படைத்த பெருஞ்சித்திரனார் பள்ளிப்பிள்ளைகள் பயன்பெறும் வண்ணமும் பல்வேறு பாடல்களைப் படைத்துள்ளார்.இப் பள்ளிப்பறவைகள் நூலை அகவை வேறுபாடு மறந்து அனைவரும் கற்பதும் அனைவருக்கும் அறிமுகம் செய்வதும் இன்றைய தேவையாக உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா


மின்னஞ்சல் : muelangovan@gmail.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்