பெருங்கிழவனின் மரணம்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

துரோணா


தாத்தா தனது தோளில் கிடந்த சிமென்ட் நிற துண்டினை வலதும் இடதுமாக அசைத்தப் படியே மாடிப் படி ஏறினார். காய்ந்த மா இலைகள் படிக்கட்டுகளில் அலைந்துக் கொண்டிருந்தன.நான்,சுருட்டிய பாயினையும் தலயணையினையும் கைகளில் ஏந்திக்கொண்டு அவரைத் தொடர்ந்தேன். மொட்டை மாடியில் கைகெட்டும் தூரத்தில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. தடுப்பு சுவருக்கு குறுக்குவாட்டில் பாயை விரித்துவிட்டு தலயணையை உதறியபோது,மேலெழுந்த தூசி தெரு விளக்கின் மஞ்சள் ஒளியில் புகை போல் படர்ந்தது.தனது வெற்று மார்பினை துண்டினால் போர்த்திக் கொண்ட தாத்தா,ஏதோவோர் தீவிர சிந்தனையினால் ஆட்கொள்ளப் பட்டவராய் சிறிது நேரம் பேசாது அமர்ந்திருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் என் கண்கள் தளரத் தொடங்கின. உடலின் கணத்தை இழந்து பாயில் சரிந்தேன்.

எனது முதுகு பகுதியில் மெல்லிய வலியை உணர்ந்து நான் கண் விழித்த போது தாத்தா தன் முழு பலம் கொண்டும் என்னை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தார். கழுத்து சதையினை வலது கையினால் அழுத்திப் பிடித்தவாறு இடது கை பெருவிரலினை வாயருகே குவித்து தண்ணீர் வேண்டும் என்பது போல் சைகைக் காட்டினார். அவரது கன்னங்களில் முன்பில்லாத அளவில் சுருக்கங்கள்.ஈரம் காய்ந்த உதட்டினில் வெடிப்புகள் துடித்துக் கொண்டிருந்தன. அப்பா என்று அடிக்குரலில் அலறிவாறே என்னால் இயன்ற மட்டும் வேகம் எடுத்து படி இறங்கினேன். அடுப்பறைக்குள் புகுந்து சொம்பினில் நீர் நிரப்பி நான் திரும்பி வந்தபோது அப்பாவும் அம்மாவும் பதற்றம் கவிந்த முகங்களுடன் வாசலுக்கு வந்திருந்தார்கள்.”என்னடா?” என்று குழப்பமும் பயமும் இணைந்தக் குரலில் வினவினார் அப்பா.வியர்த்திருந்த என் உடலினுள் இத காற்றினையும் மீறிய வெப்பம் ஊடுருவியது. தாத்தா தாத்தா என்று பிதற்றினேனே ஒழிய வேறெதுவும் சொல்ல முடியவில்லை. மேலே மாடியை நோக்கி கையை உயர்த்தியவாறே, முழுதிறன் கொண்டும் எனது உடலை இழுத்து இன்னும் வேகம் பிடித்து ஓடினேன்.படி ஏறுகையில் சொம்பினில் இருந்து சிந்திய நீர்த் துளிகள் தரையில் திட்டு திட்டாக படிந்தன. அப்பாவும் அம்மாவும் எனக்கு பின்னே ஓடி வருவது தெரிந்தது.

நாங்கள் மொட்டை மாடியை அடைந்தபோது தாத்தா தன் அகல விரிந்த கண்களில் எதையோ வெறித்தபடியும் கழுத்தை இறுக பிடித்த படியும் சாய்ந்து கிடந்தார்.அப்பா நடுங்கிய விரல்களுடன் தாத்தாவை தொட்டு அசைத்து பார்த்தார்.தாத்தாவிடம் எந்த சலனமும் இல்லை. அப்பாவின் கால்கள் வலுவிழந்து தடுமாறின.கண்களை கைகளால் பொத்தியவாறே மண்டியிட்டு சிறு பிள்ளைப் போல் தேம்பி தேம்பி அழுதார்.ஒரு கணம் இதெல்லாம் கனவென நம்பிய எனது மனம் மறுகணம் உடைந்து அழுதது.அம்மா அப்பாவை தேற்ற எத்தனித்து வார்த்தைகள் வெளிக் கொணர இயலாது கேவினாள்.இருள் மடிந்து பொழுது புலர,மெல்ல தெளிந்த வானில் இன்னமும் நட்சத்திரங்கள் மறைந்திருக்கவில்லை.அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தெல்லாம் ஆட்கள் வரத் தொடங்கினார்கள். கலைமணி மாமாதான் முன்நின்று மேற்கொள்ள வேண்டிய அனைத்துக் காரியங்களையும் கவனித்துக் கொண்டார்.தாத்தாவின் சடலத்தை கீழே வீட்டின் வரவேற்பறையில் கிடத்தினார்கள்.

பிறகு நடந்தவை எதுவும் என் நினைவினில் சரியாக பதியவில்லை. அப்பாவின் முகத்தை எதிர்கொள்ள திராணியில்லாது என்னைக் கூட்ட்த்தினுள்ளே ஒளித்துக் கொண்டேன்.அப்பாவிற்கு நிச்சயம் இது தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு. தாத்தாவிற்கு மொத்தம் இரண்டு பிள்ளைகள்-அப்பாவும் உமா அத்தையும். உமா அத்தைக்கு சேதி சொல்லியிருப்பார்கள்.இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரும் வந்துவிடக் கூடும்.நல்ல சாவு என்று பேசிக் கொள்ளும் சத்தம் காதினில் விழுந்தபடியே இருந்தது.தாத்தாவை பிடிக்காதவர்கள் என்று எங்கள் குடும்பத்தில் யாருமே கிடையாது. கண்ணாடிப் பெட்டிக்குள்ளாக அவரது முகத்தை ஏறிட்டேன், நேற்றுப் பார்த்ததுப் போலவே இருந்தது.நல்ல கம்பீரமான தேகம். அடர் மயிர்களாலான மார்பு, நிச்சயம் எவருமே எழுபத்தியைந்து வயது என்று பார்த்தவுடன் சொல்லிவிட முடியாது.முதல் சங்கின் ஒலியை தொடர்ந்த எரியும் மௌனத்தில் மனம் தகித்தது.

என்னுள்ளே நினைவுகள் தன்னிச்சையாக கிளையிட்டன.நான் பிறப்பதற்கு முன்னரே பாட்டி இறந்துவிட்டார்.”இனி எதுக்கு ஊரில் தனியாக கஷ்டபட்டுக் கொண்டு,இங்கே எங்களுடன் வந்துவிடுங்கள்” என்று அப்பா எவ்வளவோ வற்புறுத்தியும்கூட தாத்தா தன்னுடைய ஊரை விட்டு வர மறுத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் தாத்தா சோகம் நிறைந்த கண்களுடனே இருப்பார் என அம்மா அடிக்கடி சொல்வாள்.பெரும்பாலும் யாரிடமும் அதிகம் பேசவேமாட்டாராம். பின்னர் நான் பிறந்தவுடன்தான் தாத்தா இங்கு வர சம்மதித்திருக்கிறார்.அதற்கு பிறகான அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.எல்லோருடனும் தாத்தா சகஜமாக சிரித்து பேசி பழகுவதை வெகு காலம் கடந்து நானே நீ பிறந்த பிறகுதான் பார்த்தேன் என்பார் அப்பா.நீயென்றால் தாத்தாவுக்கு கொள்ளை இஷ்டம் என உமா அத்தைக்கூட வீட்டுக்கு வரும் நாட்களில் எல்லாம் தவறாது கூறுவாள்.இந்த பத்தொன்பது ஆண்டுகளில் நான் என்னுடைய அப்பாவுடன் செலவிட்ட நேரத்தைக் காட்டிலும் தாத்தாவுடன் கழித்த பொழுதுகளே அதிகம்.துக்கம் தொண்டையை நிறைத்துக் கொண்டு பொங்கியது.

தாத்தா தான் வாழ்ந்தக் காலம் முழுவதும் ஒரு அவிழ்க்க முடியாத சுழற்புதிராகவே இருந்திருக்கிறார்.தாத்தாவும் பாட்டியும் வேறுவேறு மதங்களை சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே பதினெட்டு வயது வித்தியாசம் வேறு.இவர்கள் எப்படி மணம் செய்துக் கொண்டார்கள் என்பது அப்பாவுக்கேக் கூட தெரியாது.அதே போல்தான் தாத்தா கல்லூரிப் போன கதையும். நான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தாத்தா தான் கல்லூரிக்குச் சென்ற கதையை என்னிடம் விவரித்தார்.அதுவரையில் தாத்தா கல்லூரிக்குச் சென்றிருப்பார் என்பது நான் கற்பனையிலும் எண்ணியிராத விடயம். தாத்தா சொல்லவிருந்த கதை அதைவிடவும் கூடுதலான ஆச்சரியத்தை என்னுள் ஏற்படுத்தியது.

அவர் படித்தக் நாட்களில்,ஏனையக் கல்லூரிகளில் மாணவர்க் குழு அமைப்பது,அதற்கு தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் மிகவும் சாதாரணமாக நிகழும் காரியங்களாக இருந்திருக்கின்றன.ஆனால் அவர் கல்வி பயின்ற திருநெல்வேலி புனித மார்ட்டின் கல்லூரியில் மட்டும் மாணவர்கள் குழு அமைக்கக் கூடாதென்பது விதி.இதனை எதிர்த்து லூர்தன் என்பவரின் தலைமையில் மாணவர்கள் பேராட்டம் நட்த்துகிறார்கள்.கல்லூரியோ இவர்களது கோரிக்கைகளை ஏற்பதில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. இதற்கொரு முக்கிய காரணமும் உண்டு.கல்லூரியின் உயர்மட்டம் காங்கிரஸுக்கு ஆதரவானது. மாணவர் குழு எங்கே திராவிட சார்பு நிலையை எய்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அவர்கள் மாணவர்க் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்களது போராட்ட்த்தின் உச்சமாக தாமிரபரணி பாலத்தின் மேல் ஊர்வலம் செல்வது என முடிவெடுத்து மாணவர்கள் அணி திரண்டனர்.தொடர்ந்து கதையை சொன்ன போது தாத்தா தன்னுடைய இறந்தகாலத்திற்கே திரும்பி விட்டதுபோல் எனக்குத் தோன்றியது.தான் ஊர்வலத்தின் ஜன நெரிசலில் சிக்கியிருப்பது போன்ற பாவத்துடன் அவர் மேற்கொண்டு சொல்லலானார். கிட்டத்தட்ட இருநூறு நபர்கள்,மெலிந்த தாமிரபரணி பாலத்தின் மேல் நடந்துக் கொண்டிருக்கிறார்கள்.எவருமே எதிர்ப்பார்க்காத வகையில் பாலத்தின் இரு முனைகளிலும் போலீஸார்கள்.வந்த வழியிலும் செல்ல முடியாது, போலீஸார்களை மீறி பாலத்தையும் கடக்க முடியாது.எங்கிருந்து பற்றியது பொறி எனத் தெரியவில்லை.போலீஸ் ஒழிக என அதிர்ந்த குரல்கள் வானை பிளந்தன.

எல்லாம் கணநேரம் தான். போலீஸாரின் தடிகள் மாணாக்களின் சதை எலும்புகளை நொறுக்கின. வழிந்தோடிய உதிரத்தின் மேல் ஒவ்வொருவராக சாய்கின்றனர். சிலர் தப்பிக்க நினைத்து ஆற்றினுள்ளே பாய நீர் அவர்களை விழுங்குகிறது. லூர்தனின் மார்பு கூட்டினை தாக்கிய போலீஸாரின் பூட்ஸ் கால் அவனது தாடையை உடைக்க தவறவில்லை.இவை யாவற்றையும் தாத்தா தனது கண்களினால் நேரில் பார்த்திருக்கிறார்.அவருக்கு கால் முட்டியில் அடி.கடைசியில் போலீஸார் கலவரத்தை அடக்கியதாக அறிவித்த போது லூர்தனையும் சேர்த்து இருபத்தைந்துப் பேர் மரணத்தை தழுவியிருந்தனர்.இந்தக் கொடூர நிகழ்வை எதிர்த்து பிற கல்லூரி மாணவர்களெல்லாம் போராட்டம் நடத்த இறுதியில் புனித மார்ட்டின் கல்லூரியையே இழுத்து மூடிவிட்டார்கள். லூர்தனுக்கு திருநெல்வேலியில் சிலைக் கூட வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி தாத்தா கதையை முடித்த போது அவரது சொற்களில் இருந்த பெருமிதத்தையும் தாண்டி,கண்களில் வலியின் கண்ணீர்த் துளிகள் கனத்துக் கொண்டிருந்தன.

உமா அத்தை வாசற்கதவை இடித்துக் கொண்டு அழுதபடியே ஓடி வந்தார். தாளமுடியாத வேதனையில் சிவந்த அவரது கன்னங்களில் நடுக்கத்தின் ரேகைகளை காண முடிந்தது.என்னைக் கண்ட்தும் எனது கைகளை பற்றிக் கொண்டு “தாத்தா போய்ட்டாரு பாரு ராசா” என்று அத்தை அழுதபோது என்னாலும் வருத்தத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை.இரண்டாவது சங்கு ஊதும் ஒலி கேட்டதும் அத்தை திரும்பவும் பெருங்குரலெடுத்து அழுதாள்.

தாத்தாவுடன் அதிகம் சிநேகம் கொண்டவ்ர் என்றுப் பார்த்தால்,அது ராமகிருஷ்ண வாத்தியார் மட்டுந்தான்.அவரது வீடு மூன்றாவது குறுக்குத் தெருவில் புற்றுக் கோவிலுக்கு எதிரில் இருக்கிறது.ராமகிருஷ்ணன் அரசு பள்ளியில் வாத்தியாராய் இருந்து ஓய்வு பெற்றவர்.அவருக்கு அறுபது வயதிருக்கலாம் என்பது என் யூகம். அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தாத்தா நாள்தோறும் மாலையானால் ராமகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றுவிடுவார். இரவு தாத்தா வீடு திரும்ப எப்படியும் மணி பத்தாகிவிடும்.

நான் தாத்தாவுடன் இரண்டு முறை ராமகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். நல்ல பெரிய வீடு.வரவேற்பரையின் மூலையில் ஒரு நாற்காலியும் எழுத்து மேஜையும் அதன் மேல் காகிதங்களும் பேனாக்களும் ஒழுங்கில்லாது இரைந்துக் கிடந்தன. இன்னொரு மூலையில் நான்கு கண்னாடி பீரோக்கள்,அதனுள்ளே கிட்டதட்ட ஆயிரம் புத்தகங்கள்.மீதமுள்ள அறைகள் எதுவுமே புழக்கத்தில் இல்லை என்பது பார்த்தவுடனே புரிந்தது.தாத்தாவும் ராமகிருஷ்ணனும் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.ராமகிருஷ்ணனின் வார்த்தைகளில் மூச்சடைக்கும் சாராய நெடி.மேஜைக்கு கீழே இருந்த மதுப் புட்டியினை நான் அப்பொழுதுதான் பார்த்தேன்.

இன்னொரு நாள் நான் சென்ற போது இன்னும் அதிகமாக அவர் குடித்திருந்தார். அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தாத்தா உள்ளே நுழைந்தவுடன் அவர் எழ முயற்சித்து அது முடியாமல் கீழே விழப் பார்த்தார். தாத்தாவும் நானும் ஓடிச் சென்று அவரை தாங்கிக் கொண்டோம்.ஒருவாறு தன் நிலையை சமன்படுத்தி நாற்காலியில் உட்கார்ந்த அவர் வெற்று புன்னகையை இதழில் சுமந்து தாத்தாவின் கரங்களை அழுத்தமாக தடவிப் பார்த்தார்.சிறிது நேரம் அந்த அறையினுள்ளே ஒரு பொருளற்ற நிசப்தம் படர்ந்த்து.கண்களை சில நொடிகள் மூடிய ராமகிருஷ்ணன் திடீரென சத்தமாக அழத் தொடங்கி பின்னர் வாய்விட்டு சிரிக்கலானார்.அவரது செய்கைகள் எனக்கு விசித்திரமாக பட தாத்தாவோ தன் இயல்பு மாறாது அவரை முதுகில் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.யன்னல் காற்றினில் மேஜையிலிருந்த ஒரு காகிதம் தவழ்ந்து கீழே விழுந்தது. தரையினிலிருந்து நான் எடுத்த அக்காதிதத்தினில் இப்படி எழுதியிருந்தது “வெயில் ஒரு காலம் அன்று.அது தீராத் துயரத்தின் எரியும் நிழல்.”

ராமகிருஷ்ணனுக்கு தாத்தா இறந்த சேதி தெரியாது என நினைக்கிறேன். இன்றும் அவர் குடித்துவிட்டு அறையில் படுத்திருக்க கூடும்.தன்னுடைய ஒரே நண்பனும் இறந்து விட்டான் என்பதை அவர் அறிய நேரும் போது,அன்றைய தினம் அவர் இன்னும் அதிகமாக குடிக்கலாம்.

அப்பாவின் நண்பர் ரவி வந்திருந்தார். அன்றைய தினத்தின் முதல் வாக்கியத்தை அப்பா ரவியிடம்தான் கூறினார் “அவர என்னால புரிஞ்சிக்கவே முடியலடா.என்ன இதுவரைக்கும் அவர் கை நீட்டி அடிச்சதுக் கூட கிடையாது தெரியுமா.இப்ப அவர் இல்லைன்றதயே நம்ப முடியல” என்று சொன்னவர் அதற்கு மேல் எதுவும் பேசாது ரவியின் தோள்களில் சாய்ந்துக் கொண்டார்.தன்னை சுதாரித்து கொண்டு அப்பா எழுந்தபோது,நான் அவர் அருகில் நிற்பதை பார்த்தவர் தன்னோடு சேர்த்து என்னையும் அணைத்துக் கொண்டார்.அவரது உடல் வெப்பத்தில் தாத்தாவின் வாசம் மேலெழுவது போல் எனக்கு தோன்றியது.

“புள்ள,சொக்கமாருங்க,பேர பிள்ளைக வந்து வாக்கரிசி போடுங்க.சாமிகிட்ட போகப் போறாரு,கடைசியா பார்த்துக்குங்க.”

அப்பா என்னை கைபிடித்து கண்ணாடிப் பெட்டியின் அருகே அழைத்துச் சென்றார்.பெட்டி திறக்கப்பட்டதும்,தாத்தாவின் பளிங்கு முகம் பளிச்சிட்ட்து. எனக்கு அழுகை பீறிடவே நான் அப்பாவின் கரங்களை விடுவிக்க முடியா விதத்தில் அழுத்தமாக பிடித்துக் கொண்டேன்.அடுத்து,தாத்தாவின் சடலத்திற்கு சவரம் செய்து குளிப்பாட்டி புது உடை உடுத்தும் சம்பிரதாயம் நிகழ்த்தபட்டது.நான்கு வேட்டிகளால் ஒரு தற்காலிக அறை ஏற்படுத்தப்பட்டு அதனுள்ளே நாற்காலியில் தாத்தாவின் சடலத்தினை அமரச் செய்தனர்.நாவிதர் தாத்தாவின் முகத்தினை மழித்தார்.ஒரு வாளி நீர் தாத்தாவின் மேல் ஊற்றப்பட்ட்து.அதற்கு பிறகு தாத்தாவின் தலை வெள்ளை துணியால் சுற்றப் பட்டு,அவரது உடலை தென்னை ஓலையினால் பின்னப்பட்ட சவப் தூக்கியினில் படுக்க வைத்தார்கள்.

இடுகாடு வரை தப்பு சத்தம் கண்ணீருடன் சேர்ந்து எங்களை தொடர்ந்தது.மூத்த பேரனுக்கு மொட்டை அடிக்கவேண்டும் என்பது வழக்கம்.எனது தலையில் தண்ணீர் தெளித்த நாவிதர்,நான் விசும்புவதைக் கண்டு “கவலப்படாதீங்க இது கடவுள் சாவு சாமி,தாத்தா எங்கேயும் போயிடுல “என்றார்.கண்களில் கோர்த்த நீர்த் துளிகளை இமைகளால் நீக்கினேன்.

இறுதியில் தாத்தாவை வறட்டியால் மூடி எரியூட்டினார்கள்.இன்று என் தாத்தாவுடன் இன்னும் நானறியா எத்தனையோ ரகசியங்கள் தீயில் வெந்து கருகுகின்றன. நேற்றிரவு அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்திருப்பார் என இப்பொழுது யோசித்து பார்க்கிறேன். தாத்தாவுடன் சேர்ந்து இன்று எரிவது ஒரு உலகம்.ஆம்.தனி மனித மரணம் தன்னுடன் வாழ்ந்த ஒரு உலத்தையும் மரிக்கச் செய்கிறது. கடைசி சங்கின் ஒலியில் சூரியன் இருளின் பசிக்கு இரைக்கானது.

Series Navigation

துரோணா

துரோணா