பெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

பா.சத்தியமோகன்


2765.

மிக்க சிறப்புடைய பாண்டிய அரசரும்

சோழரின் மகளான மங்கையர்க்கரசியாரும்

பக்கத்தில் சென்றனர்

வணங்கி நோக்கினர்

பின்

தம் அரண்மனைக்குள் சென்றனர்

மிகுந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்க

வழிபடும் விருப்பத்தால்

அங்கிருந்து இறைவரைப் பாடுபவராகினார்.

2766.

திருநீலகண்டயாழ்ப்பாணர்க்கு

இறைவர் அருள் செய்த திறத்தைத்

“திருவியமகத் திருப்பதிகத்துள்” வைத்துத் துதித்தார்

அவரோடு அளவளாவினார்

தெளிவுடைய தொண்டர்கள் சூழ்ந்திருக்க

திருத்தொண்டின்

அழியாத உண்மை நோக்கி மகிழ்ந்தார்

இருள் கெடுமாறு மண்ணில் வந்த பிள்ளையார்

அங்கு இனிமையாய்த் தங்கியிருந்தார்.

2767.

பாண்டிய மன்னனின் மதுரையில் உள்ளவர்களும்

மதுரையின் வெளியில் பல இடங்களில் உள்ளவர்களும்

சமணத் துறவியர் தங்கியிருந்த பாழிகளையும்

அவர்தம் இறைவர் இடம் கொண்ட பள்ளிகளையும்

கீழ்நிலம் காண அகழ்ந்து போக்கினர்

ஒளி பெருகத் தூய்மை செய்தனர்

அப்பதிகள் யாவற்றிலும் சிவத்துவம் பொலியச் செய்தார்கள்.

2768.

மீனவனின் தேவியான மங்கையர்க்கரசியும்

குலச்சிறை நாயனாரும்

ஞானசம்பந்தரின் திருவடிகளை

நாள்தோறும் மிகவும் வணங்கினர் போற்றினர்

சண்பையர் தலைவரும்

திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும்

இறைவரின் பாதத்தை

ஊன் உருக ஏத்தி

உள்ளம் களித்துப் போற்றித் தங்கியிருந்த நாட்களில் —

(மீனவன் – பாண்டியன்)

2769.

முன் செய்த தவத்தால் பெற்றெடுத்த

வைதிகர்களின் சூளாமணி போன்றவரை

மாதவத்தோர்களாகிய சிவஞானிகளின் பெருவாழ்வை

நஞ்சுடைய

திருக்கண்டம் உடைய இறைவரின்

அருள்பெற்ற மெய்ப்பொருளாய் விளங்குபவரை

தாம் தங்கியிருந்த அந்த நாட்களில்

சிவபாத இருதயர் மிகவும் நினைத்தார்.

2770.

“ புகழுடைய திருநாவுக்கரசரிடம் பிழை செய்த

மானமில்லாத சமணர்களுடன்

வாதம் செய்து வெல்வதற்கும் —

மீனவரின் நாடு உய்யும் விதமாக

திருநீற்றைப் பெருக ஆக்குவதற்கும் —

சென்று அருளிய பிள்ளையாரிடம்

நிகழ்ந்தவற்றை அறிந்துகொண்டு வருவேன்” என

சிவபாத இருதயர் புறப்பட்டார்.

2771.

துடி போன்ற இடையுடைய பெரியநாயகியுடன்

திருத்தோணிபுரத்தில் வீற்றிருந்த சிவபெருமான் அடிவணங்கி

சீகாழி நகரிலிருந்து புறப்பட்டு

இம்மண்ணுலகில் மேம்பட்டு விளங்கும்

சிவபெருமான் கோவில்கள் பலவும் பணிந்தேத்தி

கூரிய நெடுவேல் ஏந்திய மீனவனின்

வளமான பாண்டியநாடு வந்தடைந்தார்.

2772.

மாமறையில் சிறந்த அந்தணரான சிவபாத இருதயர்

வளம் வாய்ந்த பாண்டிய நாட்டுப்பதிகளில் தங்கி

தேன் பொருந்திய மணம் கமழும்

பசுமையான வேப்பமாலை உடைய தென்னவனின்

செல்வமிகு மதுரை அடைந்தார்

திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும்

ஒப்பற்ற தனி முதல் தலைவரான சொக்கநாதப் பெருமானின்

பூக்கள் பொருந்திய சேவடி பணிய

மிக்க ஆர்வத்துடன் வணங்கினார்.

2773.

இறைவரைப் பணிந்து வெளியே வந்தார்

அருகில் வந்த நகர மக்களிடம் –

ஞானசம்பந்தர்

தங்குமிடம் பற்றி வினவினார்

“குருடராய் இருந்த எமது கண் திறந்த

சீகாழிப் பதியினரின்

இளம் சிங்கமான ஞானசம்பந்தர் தங்குமிடம் எதுவெனில்

திருநீற்றுத் தொண்டர் கூட்டம் சேருமிடமான

செங்கமலம் போன்ற திருமடம்தான் ”

என அவர்கள் உரைத்தனர்.

2774.

அவர்கள்

அவ்வாறு செப்பியதைக் கேட்டுத்

திருமடம் சென்று சேர்ந்தார்

அங்கு அவரைக் கண்டவர்கள்

அவர் அடி வணங்கினர்

ஒப்பிலாத புகழுடைய ஞானசம்பந்தருக்கு

அப்பர் வந்திருப்பதை கூறியதும்

“எப்போது வந்தருளியது!” என வினவியபடி

எதிரே எழுந்தருளி வர –

(அப்பர் என்பது இப்பாடலில் ஞானசம்பந்தரின் தந்தையைக்குறிக்கும் )

2775.

சிவபாத இருதயர் முதலில் தொழுதபடி வந்து சேர

தவமான நெறியில் சேர்ந்த தந்தையாரைத்

தாமும் தொழுதார்

அவரைக் கண்ட உடனேயே

திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும்

பவபாசங்களை அறுத்தருளியவரான

தோணியப்பரின் பாதங்களின் நினைவு பெற்றார்.

(திருத்தோணி- சீகாழி)

2776.

பெரிய தவத்தினரான அந்த சிவபாத இருதயர் முன்னே

மலர் போன்ற இருகைகளையும் குவித்தருளினார்

பிறகு –

“அரிய தவத்தையுடையவரே

என்னை அறியாப்பருவத்தில் எடுத்தாண்ட பெருந்தகையான

தோணியப்பர் எம் பெரிய நாயகி பெருமாட்டியுடன் எழுந்தருளியதே”

என்ற கருத்துடன் பொருந்தும் திருப்பதிகத்தை

சீகாழியின் மேல் போற்றிப்பாடினார்.

2777.

“ மண்ணில் நல்ல வண்ணம்” எனத் தொடங்கும் பதிகத்தை

மனதில் எழுந்த பெருமகிழ்ச்சியுடன்

உள்ளே நிறைந்த காதலுடன்

கண்களிலிருந்து அருவிபோல் கண்ணீர் பாய்ந்து ஒழுக

தோணியப்பர் இனிதாய் இருந்தமை பற்றி

தம் தந்தையை

குளிர்ந்த மணமுடைய அழகிய செந்தாமரை மாலை அணிந்த

தமிழ் வல்லுநரான பிள்ளையார் திருவாய் மலர்ந்தார் பாடினார்

(ஞானசம்பந்தர் இங்கு அருளியது “மண்ணில் நல்ல வண்ணம்” எனத் தொடங்கும்
பதிகம் )

2778.

அப்பதிகத்தில்

திருக்கடைக்காப்பு சாத்தினார்

சிறப்புமிகு விருப்பத்தினால்

தந்தையாருக்கு விருந்து அளித்துத் தங்கியிருந்த நாளில்

மலர்ந்த உண்மை அன்பின் மிகுதியால்

தொண்டு செய்யும் அடியார்களோடு

மலையை வில்லாகக் கொண்ட

இறைவர் வீற்றிருக்கும்

மற்ற பதிகளையும் வணங்கப் போனார்.

2779.

கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து

முனிவர் நால்வர்க்கு

அக்காலத்தில் அறம் உரைத்த நெற்றிக்கண்ணனை

தமிழ்நூல்களுள் சிறந்த

பொருள் இலக்கணம் பாடி

நூலறியும் சங்கப் புலவர்களுக்கு ஈந்த ஈசனை

உரிய காலத்தில் இனிதாக இறைஞ்சினார்

கையால் தொழுதார்

ஒழுக்கம் கொண்ட பாண்டியனும்

அவரது தேவியாரும் உடன் வர

ஞானசம்பந்தர் வெளியே வந்தார்.

2780.

தேனையுடைய மலர்கள் நிறைந்த

சோலைகள் சூழ்ந்த மதுரை மாநகரினை விட்டு

வெளியே வந்த பாண்டியரும்

பாண்டிமதேவியும்

அமைச்சர் குலச்சிறையாரும்

ஊன் நெகிழும்படி

உள்ளம் அழிந்து

கண்ணீர் இடையறாது ஒழுகி விழ

உணர்வு மங்கி விழுந்ததைக் கண்ட ஞானசம்பந்தர்

“நான் உங்களைப் பிரியாதவாறு

இந்நாட்டின் இறைவரது பதிகள் பலவும் வணங்குவீராக”

என உரைத்தார்

அவ்வாறே

அதற்கு இசைந்து

இறைவரின் திருப்பரங்குன்றம் அடைந்தனர்.

2781.

கங்கை ஆறு சூடிய சிவபெருமானை வணங்கி

அப்பதியில் போற்றினார்

அழகிய ஆப்பனூர் அடைந்தார் பணிந்து பாடினார்

திருநீறணிந்த இறைவரின் பதிகள் பலவும் சென்றார்

பொருந்திய பதிகங்கள் பலவும் பாடினார்

சேறு அணிந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரத்தில்

வந்து தோன்றிய செல்வரான பிள்ளையார்

சிவந்த கண் உடைய காளையைக்

கொடியாக உடைய

இறைவரின் திருப்புத்தூரினை இனிதாய் அடைந்தார்

வணங்கி சிலநாட்கள் தங்கியிருந்தார்.

2782.

பகைவரின் திரிபுரங்களை

மலையாகிய வில்லினால் அழித்த இறைவரின்

திருப்புத்தூர் பணிந்து சென்றார்

புற்றில் வாழும் இயல்புடைய பாம்பு அணிந்த தூயவரின்

திருப்பூவனம் எனும் தலம் சென்றார்

இறைஞ்சினார் புகழ்ந்து பாடினார்

கற்றவர்கள் வணங்கித்தொழுது துதிக்கும் “திருக்கானப்பேர்”

எனும்பதி சென்றார் கைதொழுதார்

தமிழ்ப்பதிகம் பாடிய பின் திருச்சுழியில் போற்றி அதன்பின்

திருக்குற்றாலத்தையும் கும்பிட்டு வணங்கினார்

கூற்றுவனை உதைத்தருளிய இறைவரின்

திருநெல்வேலி அடைந்தார்.

2783.

புண்ணியரான சிவபெருமானின் திருநெல்வேலி வணங்கிப் போற்றி

முறுக்கிய சடையுடைய இறைவரின்

திருப்பதிகள் ( புனிதத்தலங்கள் ) பிறவும் சென்றார்

விரும்பி அங்கங்கு நயந்து பாடினார்

நல்தொண்டர்களுடன் நாளும் துதித்துச் செல்பவரான பிள்ளையார்

தேவர்களை அழித்து மகிழ்ந்த இராவணின் இலங்கையை அழித்த

மிகப்பெரிய பாதகத்தை நீக்க வேண்டி

வலிய

அழகிய வில்லை ஏந்திய

பெரிய கையை உடைய

இராமன் நிறுவிய

திருஇராமேச்சரத்தை சென்று சேர்ந்தார்.

2784.

சிவந்த கண் உடைய

திருமால் வழிபட்ட கோவிலை அடைந்து

அதன் திரு முன்பு தாழ்ந்து

வீழ்ந்து வழிபட்டார்

பாண்டிய மன்னனோடும்

மங்கையர்க்கரசியோடும்

உண்மை ஒழுக்கத்தோடு நிற்கும் குலச்சிறையாரும்

தம்மைப் பின்பற்றித் தொடர்ந்து வர

அழகிய நீண்ட வாயிலுள்

மேலும் மேலும் எழுகின்ற

விருப்பத்தால் உள்ளே புகுந்தார்

மன்னனும் வணங்கிப் போற்றத் துதி செய்தார்

தாமரை போன்ற கைகள் குவித்து

பணிந்து நின்று பாடி அருளினார்.

2785.

சேதுவிடத்தில் ( இராமேஸ்வரத்தில் )

சிவந்த கண்களுடைய திருமால் பூசை செய்த

சிவபெருமானை வணங்கிப்பாடி

பணிந்து

விருப்பத்துடன்

காதலுடன் அந்நகரில் தங்கியிருந்தார்

நெற்றிக்கண்ணுடைய சிவனாரின் திருத்தொண்டர்களுக்கெல்லாம்

குற்றமற்ற புகழுடைய பாண்டிமாதேவியாரும்

உண்மை நெறிநிற்கும் குலச்சிறையாரும்

வேண்டுவனவெல்லாம் குறைவின்றி தந்து பாதுகாத்தனர் துதித்தனர்

குளிர்ந்த கடற்கரை நகரில்

விருப்புடன்

ஞானசம்பந்தர்

இறைவரை நாள்தோறும் வணங்கி துதித்துத் தங்கியிருந்தார்.

2786.

அந்நகரில் தங்கி இனிதாய் இருந்தார்

கடல் சூழ்ந்த பக்கமிருந்து ஒலிக்கின்ற ஈழத்தில் உள்ள

திரிகோணமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும்

சிவந்த கண் உடைய இறைவரை வணங்கிப்

பதிகம் பாடினார்

உச்சியில் பிறைச்சந்திரன் சூடும்படி

உயர்ந்த மாடங்களையுடைய மாதோட்ட நகரத்தின்

‘’திருக்கேதீச்சம்’’ என்ற கோவிலில்

வீற்றிருக்கும் இறைவரின்

செம்மையான திருவடிகளை மிகவும் நினைத்தார்

துதித்தார் பணிந்தார்

இறைவரிடம் முன்னர்

பொன்முடிப்பு பெற்ற ஞானப்பிள்ளையார்

அன்பர்களுடன் மகிழ்ந்திருந்தார்.

(ஈழம்-இலங்கை)

2787.

அந்தப் பதியை வணங்கிய பிறகு

தொழுது

வடதிக்கில் சென்று

அழகிய கையில் அனல் தரித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும்

கோவிலில் புகுந்து இறைஞ்சிய பின்

பல பதிகள் தொழுதார் போற்றினார்

கடல் எல்லைகள் புரண்டு வருகின்ற

அந்த எல்லைகள் கடந்து தாண்டி

செப்ப இயலாத புகழை உடைய

திருவாடனை எனும் பதி அடைந்து

செந்தமிழ் மாலைகள் சாத்தி

உலகம் உய்யும் பொருட்டு

சிவஞானம் உண்ட பிள்ளையார்

ஒப்பிலாத திருப்புவனவாயிலைத் தாழ்ந்து வணங்கினார்.

2788.

பலப்பல பதிகள் விளங்கும் பாண்டிய நாட்டில்

மூன்று கண்களுடைய சிவனார் மகிழும்

இடங்கள் பலவும் போற்றி வணங்கி

விதிகள் பலவும் விளங்குமாறு

உதிக்கின்ற வேதநூல்களின் நெறியினை

எங்கும் எவரும் பின்பற்றுமாறு செய்து

வெண்மையான திருநீற்றின் சார்பு பெற்றதால்

உயர்ந்த கதியை அதனிடை பெறுமாறு அருள் செய்து

சீகாழிப் பதிக்கு வந்தருளிய சம்பந்தப் பெருமான்

இறைவனின் திருத்தொண்டர்கள் பலரும் சூழ

சந்திரகுல மரபில் வந்த பாண்டியன் போற்றி உடன் வர

அமைச்சர்குலச்சிறையாரின் பதியான

திருமணமேற்குடி வந்தார்.

(குலச்சிறையாரின் ஊர் மணமேற்குடி)

2789.

அந்த மணமேற்குடியில் இனிதாய் அமர்ந்திருந்த பிறகு

பக்கத்திலுள்ள பிறபதிகளில் உள்ள

அங்கணரின் கோயில்கள் சென்று வணங்கி

பொருந்தும் திருத்தொண்டர்களுடன் மீண்டும் சேர்ந்து

பாண்டியரும் மங்கையர்க்கரசியாரும்

கொல்லன் உலையில் வடித்த கூர்வேல் உடைய குலச்சிறையாரும்

சேர்ந்து ஒலிக்கும் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைப் பணிந்து

ஏவல் செய்து போற்றுவதற்காக

சீகாழிச் செல்வரான ஞானசம்பந்தர்

தலையில் பிறை சூடிய இறைவரின்

திருவடிகளை போற்றி இனிதாக அமர்ந்திருந்த அந்நாட்களில்

2790.

பொங்குகின்ற நீர்பெருக்கையுடைய

காவிரி நாடான சோழநாட்டிற்கு

திரும்பிச் செல்ல உள்ளம் கொண்டார் சம்பந்தர்.

மங்கையர்க்கரசி அம்மையாரும்

பாண்டிய மன்னரும் அமைச்சரும் கூட

சம்பந்தப் பெருமானின் திருவடிகளை பிரியமாட்டாதவர்களாகி

உடன் வர மனம் துணிந்தனர்

அந்நிலை நோக்கி

“இங்கு நான் கூறுவதைக் கேட்டு

அதன்படி நடக்க இசைந்தீர்களாயின்

இறைவரின் சிவநெறியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பீர்களாக”

என உரைத்து-

2791.

மிகவும் அதிகமாய்த் தளர்ந்து போனவர்களைத்

தளராமல்

தக்க சொற்கள் அவர்களுக்கு அருளினார்

பின்பு

அவர்களின் மேன்மையான ஏவல் மறுக்க அஞ்சி

சோழநாட்டுக்குப் பிரிந்து செல்ல இசைந்தார்

உலகம் உய்வதன் பொருட்டு வந்து அவதரித்த அப்பிள்ளையாரை

பிரியமாட்டாத நட்புடன் தொழுது நின்றனர்

ஆலகால விஷம் உண்ட இறைவரை வணங்கித் துதித்து

அந்நாட்டை விட்டு அகன்று

மீண்டும் தம்நாடு செல்பவர் ஆனார்.

2792.

பொன்னியாறு வளம் தரும் சோழநாடு புகுந்து

மிகுந்த சிறப்புடைய தொண்டர் குழாத்துடன்

பாம்பை அணியாய்ப் பூண்ட இறைவரின் திருக்கோயில்கள் தோறும்

அந்தந்தப் பதியில் உள்ளோரும் எதிர்கொண்டு போற்றுமாறு சென்று

பகைவரால் கட்டழிக்கப்படாத மதிலில்

சிறப்புடைய “திருக்களர்” என்ற பதியைத் துதித்தார்

பின்பு

கண்டத்தில் நஞ்சுடைய இறைவரின்

“பாதாளீச்சுரம்” எனும் ஊரைப்பாடி வணங்கி

முன்பு வழிபட்ட மற்ற பதிகள் பிறவும் வணங்கித் துதித்து

முந்நூல் மார்பரான சம்பந்தர்

“முள்ளிவாய்க்கரை” எனும் பதி அடைந்தார்.

2793.

மலையிலே வளர்கின்ற சந்தனம்,அகில்,தேக்கு

முதலிய மரங்களை உந்தி அலைத்துக் கொண்டு

மலை போன்ற மலர்க்குவியல்களை

வண்டுகள் ஒலிக்கச் சுமந்து பெருகி

மிகுந்த ஆள் இயங்காதபடி

ஆறு பெருகிவிட்டது

அந்தத்துறையில் சேரும் ஓடத்தை

நீரில் நிலை கொண்டு செலுத்துகின்ற துருப்பும்

நிலைக்காமல் போய்விட்டது ஆதலால்

நீர்வாழ்மக்களான சாதியினர்

கரையில் நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டனர்

கலைகள் பயிலும் கவுணியர் தலைவரான பிள்ளையார்

அதனைக்கண்டு

அந்தக் கரையில் எழுந்தருளி நின்றபோது —

2794.

தேவர்களின் தலைவரான இறைவர் வீற்றிருக்கும்

திருக்கொள்ளப்புதூர் எனும் தலம் எதிரில் தோன்ற

அங்கு சென்று வணங்க உள்ளம் கொண்டார்

ஓடம் செலுத்துபவர்கள் அங்கே இல்லை

மிக்க வேகத்தால் சீகாழித் தலைவரான பிள்ளையாரெ

ஓடம் கட்டியிருந்த கட்டை அவிழ்த்தார்

நெற்றியில் கண் உடைய

சிவபெருமானின் தொண்டர்களை அந்த ஓடத்தில் ஏற்றி

நாவின் வல்லமையே கோலாகக் கொண்டார்

அந்த ஓடத்தின் மீது நின்று இறைவரை

“கொட்டமே” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட —

2795.

வானவர் உய்வதற்காக நஞ்சு உண்ட இறைவரின் அருளால்

அந்த ஓடம் செல்லச் செல்ல உந்தப்பட்டதால்

செம்பொன்னுக்கு நிகரான சடையுடைய இறைவரின்

திருக்கொள்ளம்புதூர் சேரும்படி அக்கரை சேர்ந்தது

பிறகு

நம்பரான இறைவரை வணங்க

ஞானப்பால் உண்ட பிள்ளையார்

நல்திருத்தொண்டர்களுடன் இறங்கிப்போய்

நல்ல மணமுடைய கொன்றைமலரை விரும்பிச் சூடிய

சிவபெருமானின் திருக்கோயில் வாயிலின் முன்

மகிழ்ச்சியோடு சேர்ந்தார்.

— இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்