பா.சத்தியமோகன்
1826.
பூத்த தாமரையின் கொட்டையின் மீது
கயல்மீன்கள் துள்ளுகின்ற வனப்பும்
முதிர்ந்த செந்நெல் பயிர்களால் ஆன
காடு சூழ்ந்த வனப்பும்
காவிரி பாயும் சோழநாட்டில் கொண்டது
சாத்தமங்கை என்றும் உலகெலாம் புகழும்
மங்கலங்கள் வாய்க்கப்பெற்ற அந்தணர்களுக்கு ஓரிடம் என்றும்
சாத்தமங்கை பெயர் பெற்றது.
(சாத்தமங்கை- உலகம் தூய்மை பெற பூப்போல சாத்திக் கொள்ளும் மங்கைபோல்
விளங்கும் ஊர்)
1827.
நலங்கள் பொருந்திய அந்தப் பதியில்
நல்ல நெற்றியையுடைய பெண்கள்
மென்மையான மலர்களுடைய பொய்கையில் குளிக்க
அவர்களுடன் முன் துறையில்
அன்னப் பறவைகளும் தோய்ந்து குளிக்கும்
வேதம் ஓதும் சிறுவர்களின் கூட்டத்துடன்
சாம வேதம் பாடும் பலபூவைகள்
அவர்கள் பிழை நீக்கிப் பயிற்றுவிக்கும்
1828.
“ஆய்ந்து தெளிந்த மெய்ப்பொருள்திருநீறே ஆகும்
என எண்ணி வளர்த்து வருகின்ற காவலுள்
இரு பிறப்புடைய அந்தணர்கள் மூன்று தீ வளர்த்து வருவர்
பிறவிக்கடல் நீந்தத் துணையாகும் அத்தீ
நல்லறங்களின் தன்மையில் வளரும் அத்தீ
பொருந்திய கற்புடன் கூட்டி நான்காம் தீயாக வளர்ப்பார்கள்.
1829.
ஒழுக்கம் தவறாத மறையோர் வாழும் அத்தலத்தில்
இவ்வுலகில் சிறந்த நான்மறைப் பொருளை
விளக்கிய நன்மையையுடையவர்
நஞ்சை வைத்த மிடறு உடையவரின்
தொண்டராகிய அன்பர்
அவர் பெயர் நீலநக்கர்
உலகம் புகழச் சிறந்து வாழ்வார்.
1830.
வேதங்களின் உள் உறைப்பொருள் என்பது
விரிந்த கங்கைப்புனல் தரித்த சடைநாதர்
சிவபெருமானையும் அவரது அடியாரையும் விரும்பி
பாத அர்ச்சனை செய்வதும் பணிவதும் ஆகும் எனத் தெளிந்து
காதலுடன் அவ்விரண்டு செயலுமே செய்யும் கருத்து கொண்டார்.
1831.
மெய்யான சிவ ஆகம விதிப்படியே
வேதத்தின் காரணரான சிவபெருமானை வணங்கி
நாள்தோறும் பூசனை புரிந்து எழுகின்ற நியமங்கள் செய்து
சிவனடியார்க்கு திரு அமுது செய்விப்பது முதலாக
எல்லாத் தன்மையிலும் கூடிய அடியவர் பணிகளையும்
தாமே ஏற்றுச் செய்வார்.
1832.
இத்தகு செயல்களில் வழுவாது செய்யும் நாளில்
ஒரு திருவாதிரை நாளில்
பொருந்திய சிவபூசையை விதிப்படி முடித்துக் கொண்டபின்
தூய தொண்டரான நீலநக்கர்
பழமையாய் நீடியுள்ள அயவந்தி எனும் கோவிலில்
விரும்பி வீற்றிருக்கும் சிவபெருமானை
அர்ச்சனை புரிந்திட நயந்தார்.
1833.
எல்லையிலாத் தவமுடைய திருநீலநக்க நாயனார்
உறையுள்ளாகிய தம் வீட்டிலிருந்து
ஒன்றுபட்ட அன்புடைய முறைமையால் வரும் பூசைக்குத் தேவையானவற்றை
குறைவில்லாமல் அமைத்துக் கொண்டார்
தம் மனைவியுடன் திருக்கோவில் வந்து சேர்ந்தார்.
1834.
கோவிலின் உள்ளே வந்து சேரும்படி எய்தியதும்
அயவந்தி என்ற அக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானின் கழல் தொழுது
பூசனை செய்யத் தொடங்கி தம்முடன் இணையாக நின்று
வேண்டுவதெல்லாம் மனைவியார் எடுத்துத்தர
உணர்வின் மிக்க அவர்
உயர்ந்த பூசனைகளை எல்லாம் செய்தார்.
1835.
நெடிய பூசனை நிரம்பி முடிந்தது
அன்போ நிரம்பி முடியாமல் இருந்தது.
இறைவர் வீற்றிருக்கும் உள் புறத்தை வலமாகச் சுற்றி வந்து
திரு முன்பு துதித்தார் வணங்கினார் வழுத்தினார்
பெரிய மறைகள் தேடுகின்ற பொருளைத் தெளியும்படி நோக்கி
நாடும் ஐந்தெழுத்து உணர்வு பொருந்த
இறைவர் திருமுன்பு நினைந்தார்.
1836.
அழியாத தவம் செய்த தொண்டரான நீலநக்கர்
வேதங்களை முதலாகக் கொண்ட
சகலகலைகளின் உண்மையாகிய
திருஐந்தெழுத்தை எண்ணும்போது
ஒரு சிலந்தி
தான் நின்ற நிலைவிட்டு வழுவிட
நீண்ட பொன்மேரு மலையை வில்லாக உடைய
இறைவரின் அருள் குறியான லிங்கத்தின் மேல் திருமேனி மேல் விழுந்தது.
1837.
அவ்விதம் சிலந்தி சிவலிங்கத்தின் மீது விழுந்த போதில்
அருகில் அங்கு நின்றிருந்த மனைவியார்
விரைவுற்று பயத்துடன்
இளங் குழந்தை மீது விழுந்த சிலந்தி ஒழியுமாறும்
அதன் நச்சுத் தன்மை நீங்குமாறும் ஊதி
முன் துமிக்கும் தாய் போன்று
பொழிந்த அன்பினால் ஊதினார் அச்சிலந்தி போவதற்காக.
(துமிதல்- வாய்க்காற்று நீருடன் செல்லுமாறு உமிழ்தல்)
1838.
மனம் பதைத்த காரணத்தால் மனைவியார் இவ்வாறு செய்தார்
பந்தம் நீக்கும் மகாதவம் செய்யும் மறையவரான
திருநீலநக்கர் அதைக் கண்டு ஆற்றமாட்டாமல்
தம் கண்களைப் பொத்திக் கொண்டு
“அறிவிலாதவளே! என்ன காரணத்தால் இப்படிச் செய்தாய் என வினவ
சுதைச் சிலம்பி இறைவரின் திருமேனி மீது விழுந்தது
அதனை நீக்கி ஊதினேன் துமிந்தேன்”
என்றார் அம்மையார்.
1839.
மனைவியார் செய்த செயலில் உள்ள
அன்பினை மனதில் கொள்ளவில்லை
பூநூல் அணிந்த மார்பினரான திருநீலநக்கர்
பூசனையில் இஃது இச்செய்கை தகாது என்று எண்ணிய நினைவால்
அம்மனைவியார் தம்மைவிட்டு நீங்குமாறு துறந்தார்.
1840.
“மின்போல ஒளி வீசுகின்ற
நெடுஞ்சடை உடைய குற்றமற்ற இறைவர் திருமேனி மீது
விழுந்த நூல் சிலந்தியை
வேறொரு வகையால் தவிர்க்காமல்
முன் வந்து வாய்நீர் படுமாறு முயன்றாய்
இங்கு உன்னை யான் இனித் துறந்துவிட்டேன்” என்று உரைத்தார்.
1841.
மற்ற வேலையில் கதிரவன் மேற்கில் மறைந்தான்
இட்ட கட்டளை வழியே
மனைவியார் ஒரு பக்கம் நீங்கினார்
பூசை முடிவுறுவதற்கு வேண்டியதை முடித்து
கற்றையாக முடித்த சடையுடைய
சிவபெருமானின் அடியாரான நீலநக்கரும் தம் இல்லம் புகுந்தார்.
1842.
திருநீலநக்கரின் மனைவியார்
அஞ்சிய உள்ளமோடு அவர் பக்கம் சேரவில்லை
நஞ்சை உண்ட பெருமானின் கோவிலில் நங்கையார் தங்கியிருந்தார்
செம்மையான சொற்களையுடைய நான்கு மறைகளில் வல்ல நீலநக்கர்
தனியே பஞ்சு இட்ட மெல்லிய அணையில் துயின்றார்.
1843.
அவர் உறங்கும் பொழுது
அயவந்தி என்ற கோவிலில் எழுந்தருளிய சிவபெருமான்
கங்கை நீர் ததும்பும் சடையுடன்
அவரது கனவில் எழுந்தருளி தன் மேனி காட்டி
மனதில் அன்பு வைத்து
“எம்மை முன்பு ஊதித் துமிந்த பக்கம் தவிர
இப்பக்கமெல்லாம் கொப்புளங்கள் காண்பாயாக”
என்று உரைத்து அருளினார்.
1844.
தாம் கண்ட அப்பெரும் கனவினை நனவு என்றே கருதி
அச்சம் அடைந்து தலை மேல் கரம் குவித்து
அஞ்சலி செய்தபடி விழித்தெழுந்து
அடியாரான நீலநக்க நாயனார் தொழுதார் ஆடினார் துதித்தார்
அண்ட நாயகர் சிவபெருமானின் கருணையைப் போற்றி நின்று அழுதார்.
1845.
இரவு காலம் நீங்கிப் புலர்ந்ததும் கோயிலுள் புகுந்து
ஆதிநாயகராய் அயவந்தியில் வீற்றிருக்கும் இறைவரின் அடிகளில்
பணிந்து வீழ்ந்து எழுந்து
திருமுன்பு துதித்தார் அம்மையாரை உடன் அழைத்துக் கொண்டு
தம் இல்லத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார்.
1846.
பிறகு முன்பு பெருகிய மகிழ்வைவிடப் பெருமகிழ்வு எய்தி
இன்பம் உடைய எண்ணிலாத பூசனைகள் இயற்றினார்
அன்பு மிக்க அடியவர்
வந்து அடைபவர்க்கெல்லாம் முன்பு போலவே
வேண்டுவனவற்றை விருப்புடன் முடிப்பாரானார்.
1847.
அவ்விதம் அவர் வாழ்ந்து ஒழுகும் அந்நாளில்
நிலைபெற்ற சீகாழிப்பகுதியில் தோன்றிய
திருஞானசம்பந்தர் பெருமைகளை பல வகையாக வையகம் போற்றக் கேட்டு
அவரது திருவடிகள் வணங்கி அவருடன் சேர மிக விருப்புடையவர் ஆனார்.
1848.
பண்பினால் மேன்மைப்பட்ட நிலையுள்ள திருநீலநக்கர்
பயின்று வரும் அப்பருவத்தில் பெருந்தவப் பயனை மண் பெறுவதற்காக
பொருந்திய நல்ல பகுதிகளில்
விண்ணில் விளங்கும் கங்கை தங்கிய சடையுடைய
சிவபெருமானைத் தொழுவதற்காக
சீகாழித் தலைவர் திருஞானசம்பந்தரும்
திருச்சாத்தமங்கை வந்தடைந்தார்.
1849.
நீடிய புகழுடைய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடன்
மலர்கள் பொருந்த இடமான கூந்தலுடைய மதங்க சூளாமணியும் உடன் வந்தார்
தொண்டர்கள் கூடும் அந்தப் பெரும் கூட்டத்துடன்
சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் வந்திருப்பதை கேட்டு
உளம் மகிழ்ந்த நீலநக்க நாயனார்-
1850.
கேள்விப்பட்ட அப்போதே பெருமகிழ்ச்சியில் கலந்து
மலர்மாலைகள் கொடிகள் தோரணங்களுடன்
நீண்ட தொலைவு வரை நடந்து
நல்ல சுற்றத்தாரின் கூட்டத்தையும் உடன் அழைத்துக் கொண்டு
தாம் முன்பு எதிர் கொள்ளும் பொருட்டு எழுந்தார்.
1851.
சென்று ஞானசம்பந்தர் எழுந்து அருளும் அக்கூட்டத்தைச் சேர்ந்து
அங்கு அவரை எதிர் கொண்டு வரவேற்று தம் மகிழ்ச்சியால்
ஒருவிதமாக அல்ல-
பலவிதமாக ஆடியும் பாடியும் தொழுது எழுந்து
பொன் விளங்கும் பெரிய தன்மனைக்கு
மனைவியை அழைத்துக் கொண்டு புகுந்தார்.
1852.
திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருக்கும் பெருமைக்கு ஏற்றபடி
வெள்ளம் போன்ற அடியவர் கூட்டம் விரும்பிவர
உள்ளத்தில் ஆதரவு ஓங்கிட தம் இல்லத்தில்
சீகாழியில் அவதாரம் செய்த வள்ளலான ஞானசம்பந்தரை
உணவு உண்ணும்படி செய்தார்.
1853.
திருஞானசம்பந்தரும் அடியார் கூட்டமும் திரு அமுது செய்தபின்
பகலவனான கதிரவன் மேற்குத் திக்கில் அணைந்தான்
ஆம்பல் மலர்களுடைய பொய்கைகளில்
குளிர்மதியின் கதிர்கள் சேரும் இரவில்
உமையம்மையின் முலைப்பால் உண்ட சம்பந்தர்
அன்றிரவு
சிறப்புடைய தமது மனையில் தங்குவதற்கு
வேண்டியவற்றை அமைத்தார்.
1854.
ஒழுக்கமுடைய மெய்த்திருத் தொண்டர்களுடன்
திரு அமுது செய்த பின்பு
உலகம் ஓங்கும் பொருட்டு
பெரிய நாயகி அம்மையாருடன்
தோணியப்பர் வெளிப்பட்டு அருளுமாறு
முன்பு அழுதவரான திருஞானசம்பந்தர் அழைக்க
திருநீலநக்கர் விரைவில் வந்து அடிவணங்கி நின்றார்.
1855.
அங்கு வந்து நின்ற அன்பரை
“நீலகண்ட யாழ்ப்பாணருக்கு இன்று
இங்கு தங்குவதற்குரிய ஓரிடம் கொடுத்தருள்வீர்’’
என திருஞானசம்பந்தர் கூறினார்
பெரிதும் இன்புற்று
நடுமனையில்
வேதிகையின் பக்கத்தில்
மறையவரான திருநீலநக்கர் இடம் அமைத்துத் தந்தார்.
( வேதிகை – வேதம்
வளர்க்குமிடம் )
1856.
அங்கு அந்த வேதிகையில்
என்றும் நீங்காமல்
வளர்க்கப்பட்ட செந்தீ
வலமாகச் சுழித்து எழுந்து ஓங்கி
முன்னைவிட
ஒருவிதமாய் அன்றிப்
பலவகையாய் விளக்கம் அடையவே
சகோட யாழ்த் தலைவரான திருநீலகண்டர்
தம் பக்கத்தில் அமரும் மதங்க சூளாமணியாருடன்
திருவருள் மயமாய் பள்ளி கொண்டார்.
1857.
கவுணியர் குலத் தலைவரான ஞானசம்பந்தர்
அன்றிரவு அங்கு பள்ளி கொண்டபின்
எழுந்து அங்கிருந்து புறப்பட்டார்
திருநீலநக்கரைச் சிறப்பித்து
அயவந்தியில் விரும்பி எழுந்தருளிய திங்கள் சூடியான இறைவரை
பொங்கும் செந்தமிழ்த் திருப்பதிகம் புனைந்து பாடினார்.
1858.
திருப்பதிகம் எனும் புதிய மலர்மாலை கொண்டு
தம் இறைவர் திருவடிகளில் பரவி
பெருநட்பினை நீலநக்கருக்குத் தந்தருளி
பழைமையுடைய மறைகளை என்றும் புதிதான செந்தமிழில்
கூறி அருளும் அந்தணரான ஞானசம்பந்தர்
மேலும் தொழச் செல்லும் பதிகள் நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
1859.
பிள்ளையாரான ஞானசம்பந்தர் புறப்பட்டதும்
அவர் பின்பு தாமும் செல்ல வேண்டுமென்ற
அன்பும் நட்பும் தவிர்க்க இயலாதவையாக இருப்பினும்
வள்ளலார் ஞானசம்பந்தரின் திரு ஆணையை மறுக்க இயலாமல்
உள்ளம் அவருடனே செல்லச் செய்து போக்கி
தாம் ஒருவகையாய் மீண்டு இருந்தார்.
1860.
அங்ஙணம் அவர் தங்கியிருந்த நாளில்
அவ்வேதியரான நீலநக்கர்
முன்பு போல்
வேதம் விரும்பிய குற்றமிலா பூசை முதலிய செய்கைகள்
மேலும் மெலும் சிறப்பாய் ஓங்க
காளை ஊர்தியில் வரும் இறைவரின் மைந்தரான
அந்தணச் சிறுவரின் அழகிய திருவடிகளைப்
பொருந்திய உணர்வோடும் வணங்கினார்.
1861.
சண்பை என்ற சீகாழியில் தோன்றிய
வன்மையுடைய பெரும் புகழ் கொண்ட ஞானசம்பந்தர்
செல்லக் கூடிய எந்தத்தலங்களுக்கும்
இடைஇடையே பல நாட்கள் கழிந்த பின்பு
அன்பு மேலீட்டால் சென்றார்
திண்மையான பெரும் தொண்டரான நீலநக்கர்.
1862.
பெருகும் காதலால்
பின் நீண்ட நாட்கள் இவ்வாறு செல்ல
பெரும் தவத்தினரான வேதியரான நீலநக்கர்
எந்நாளும் வாழ்வுடைய சீகாழிப் பதியில் அவதரித்த
ஒப்பிலாத ஞானசம்பந்தரின் திருமணச் சிறப்பில்
அவரைச் சேவித்து
சிவபெருமான் திருவடிகள் அடைந்தார்.
1863.
சிறந்த தொழிலினரான திருச்சாத்தமங்கையில் தோன்றிய
முதன்மையுடைய பெரிய நீலநக்கர் திருவடிகள் வணங்கி
இருபிறப்புடைய அந்தணராய்க் கொடி உயர்த்திய சிவபெருமானிடம்
மன ஒருமை கொண்டு உய்த்து உணர்கின்ற
நமிநந்தியார் செய்த திருத்தொண்டை உரைக்கப் புகுகின்றேன்.
(திருநீலநக்க நாயனார் புராணம் முற்றிற்று )
– இறையருளால் தொடரும்.
pa_sathiyamohan@yahoo.co.in
- நகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]
- 32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-1
- பாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு
- நான் கண்ட சீஷெல்ஸ் – 2
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX
- த.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)
- கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்
- தில்லை வாழ் அந்தணர்களுக்கு
- ‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்
- பண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்
- விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்
- சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ
- ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்
- அவன் மீண்டான்
- சிங்கிநாதம்
- புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)
- எந்தையும் தாயும்
- என் இனமே….என் சனமே….!
- இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்
- ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்
- தத்துவார்த்தப் போர்கள்
- மைனாரிட்டி !
- லிஃப்ட்
- பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்
- எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…
- ஒற்றித் தேய்ந்த விரல்
- இடம்
- ஒரு வசந்தத்தின் இறப்பு
- கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )