பெரியபுராணம் – 106 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

பா.சத்தியமோகன்


3013.

ஊழ்வினையின் நியதியால்

சிவநேசர் துணிந்து முடிவுசெய்தார்:

“பூம்பாவை தன்னை

மற்றவர் எவர்க்கும்

மணம் செய்விக்க இசையமாட்டேன்”

பூம்பாவையை

வான் அளாவ உயர்ந்த கன்னிமாடத்தில் சென்று வாழ வைத்தார்

தேன் அமரும் மாலை அணிந்த பூம்பாவையாரும்

சிவபெருமானை அடைந்தார்.

3014.

தேவர்களின் தலைவரான சிவபெருமான்

விரும்பி அமர்ந்து அருளும்

திருக்கபாலீச்சரத்தில் எழுந்தருளிய ஞானத்தலைவரான சம்பந்தர்

விரிஞ்சன் எனப்படும் நான்முகன் முதல்

எவ்வுயிர்க்கும் காவலராகிய சிவபெருமானின் பெருங்கருணை

கைகொடுத்ததைப் போற்றித் துதித்தார்

பாக்களால் ஆகிய செந்தமிழைப்பாடி

பலமுறையும் பணிந்து எழுந்தார்.

3015.

தொழுதார்

வெளியில் வந்தார்

தொண்டர் குழாம் சூழ்ந்து வர

பழுதில்லா புகழுடைய திருமயிலைப்பதியில்

அமர்ந்து அருளும் அந்நாளில்

எல்லா உலகங்களையும் காத்தருளும் இறைவரின்

முதன்மையுடைய பலபதிகள் சென்று தொழ

அழுது உலகை வாழ்வித்த ஞானசம்பந்தர் புறப்பட்டார்.

(திருமயிலை- மயிலாப்பூர்)

3016.

அங்குள்ள திருத்தொண்டர்கள் விடைபெற்றுக் கொள்ள

சிவநேசரின் வருத்தம் அகல

இனிய மொழி அருளி விடை கொடுத்தார்

நிருத்தர் உறையும் பிறபதிகள் வணங்கிச் சென்றார்

நிறைந்த காதலுடன்

திருவான்மியூருக்கு அன்புடன் சென்றார்

(நிருத்தர்- சிவபெருமான்)

3017.

திருவான்மியூரில் நிலைபெற்று வாழும் திருத்தொண்டர்கள்

சிறப்பாக வரவேற்க வந்தனர்

மங்கலம் பொருந்திய மங்கல அணிகள்

தெருவில் அலங்கரித்தனர்

எதிர் கொண்டு அருகே வந்து வணங்கித் தொழுதார்

அன்பு தருகின்ற அவர்களைத் தாமும் வணங்கினார்

முத்துப்பல்லக்கினின்று இறங்கி

திருக்கோயிலின்

அழகிய பெரிய நெடும் கோபுரம் சார்ந்தார் சேர்ந்தார்

3018.

மிக உயர்ந்த கோபுரத்தை வணங்கி

பெரிய முற்றத்துள் புகுந்து

கோயிலின் உள்பாகத்தை வலமாகச் சுற்றி வந்தார்

கொக்கின் இறகும் –

மதிக்கொழுந்தும்-

குளிர்ப்புனலும் – ஒளிர்கின்ற

அந்தி மாலையின் சிவப்புக்கு நிகரான சடையை உடைய

இறைவரின் திருவடிகளில் தாழ்ந்து வணங்கினார்

(மதிக்கொழுந்து- பிறைச்சந்திரன், குளிர் புனல்- கங்கை)

3019.

நிலத்தில் தாழ்ந்து விழுந்து பலமுறையும் பணிந்தார்

தம்பிரான் முன் நின்று வாழ்ந்தார்

களிபெற்றார்

பிறவி மருந்தான பெருந்தகைமை உள்ள இறைவரை

இசைத் திருப்பதிகமான சொல்மாலையால்

பெரும்காதலுடன்

வினாவும் உரையும் வரும் அமைப்பில்

பாடி இன்புற்றார்

(காதல்- பக்தி)

3020.

பரவி வருகின்ற

ஆனந்தம் நிறைந்த கண்ணீர்த்துளியினால் கண்கள் பனித்தன

பொருந்தும் மயிர்ப்புளகம் மேனியில் விளங்க

கோயிலின் வெளியே சேர்ந்தார்

ஒலியுடைய

நீண்ட அலைகளை அணிந்த திருவான்மியூரில்

சிலநாட்கள் இனிதாகத் தங்கியிருந்தார்

சிரபுரத்துப் புரவலனார் ஞானசம்பந்தர்.

3021.

திருவான்மியூரில் தங்கியிருப்பவரான சம்பந்தர்

உலகங்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரை

அரிய தமிழின்

பொங்குகின்ற இசையுடைய பதிகங்கள் பலவற்றால் துதித்தார்

கங்கை அணிந்த

அழகிய சடையுடைய

இறைவரின் தலங்கள் பலவும் சென்றார் கலந்தார்

சிவந்த கண் உடைய காளையினைக்

கொடியாக உடைய சிவபெருமானின்

திருவிடைச்சுரம் என்ற தலம் அடைந்தார்.

3022.

தலையில்

இளமதி அணிந்த இறைவர் வீற்றிருக்கும் திருஇடைச்சுரத்தில்

நிலைபெற்று வாழ்கின்ற தொண்டர்கூட்டம்

எதிர்கொண்டு வரவேற்க

ஞானசம்பந்தர் எழுந்தருளினார்

நன்மை தரும் நெடுங்கோபுரம் இறைஞ்சி உள்புகுந்தார்.

நலமிக்க கோவிலை வலமாகச் சுற்றிவந்தார்

இறைவர் திருமுன்பு வந்தணைந்தார்.

3023.

இறைவரைக் கண்டபோதே கலந்தார் காதலில்

பெருவிருப்பமுடன் கைகளைத் தலைமேல் குவித்து

நிலத்தில் விழுந்தார்

பொருந்திய பெருமகிழ்ச்சியுடன்

பெருகிய பேரன்புடன்

உள்ளம் உருகினார்

மயிர்புளகம் கொள்ள வணங்கி எழுந்தார்

தேவதேவர்களின் தலைவரான சிவபெருமானின்

திருமேனியின் வண்ணம் கண்டு அதிசயித்தார்.

3024.

“உலகினரின் பெரும் பேறாக அவதரித்த ஞானசம்பந்தர்

சாரல் விளங்க இருந்த

அந்த

திருவிடைச்சுரத்தில் இருக்கின்ற

இப்பெருமானின் வண்ணம்தான் என்னே!” என

அரிய தமிழால் ஆன இனிய திருப்பதிகத் தமிழ் மாலையால்

திருந்தும் மனம் கரைந்து உருகும்படி

திருக்கடைக்காப்புப் பாடி அருளினார்

ஒப்பிலாத சிவானந்தப் பெருவாழ்வு பெற்றார்.

3025.

சிவானந்தப் பெருவாழ்வில் நிறைவுற்றும்

அடங்காத வேட்கையுடன்

நீண்டநேரம் நின்று இறைஞ்சி வெளியில் வந்தார்

அத்தலத்தில்

ஞானசம்பந்தர் தங்கியிருந்து பணிந்து

உமைபாகர் அருள் பெற்று

சிறந்த திருத்தொண்டர்களுடன் எழுந்தருளி

“செந்துருத்தி” எனும் பண்பாடி

வண்டுகள் மொய்க்கின்ற சாலை உடைய

திருக்கழுக்குன்றம் அடைந்தார்.

3026.

திருக்கழுக்குன்றம் சென்று அணைந்த பொழுதில்

திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்

பொன் விளங்கும் முத்துச் சிவிகையிலிருந்து இறங்கி

அவர்களுடன் உடன் புறப்பட்டார்

மணம் விரிந்து கமழும்

நல்மலர்களுடைய சோலைகள் சூழ்ந்த

திருமலையை வலமாக வந்து

மின்போல விளங்கும் சடையுடைய இறைவரைப் பணிந்தார்.

3027.

வளரும் காதலினால்

ஒப்பில்லாத செம்பொன்குன்றம் போன்ற

வேதநாயகரான சிவபெருமானை

திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருப்பவரை வணங்கி எழுந்தார்

காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று

கருத்தும் மகுடமும் கொண்ட

திருப்பதிகம் புனைந்து அருளினார்

சிந்தை நிறைந்து மகிழ்வுற்றார்.

3028.

இன்புற்று அங்கு அத்தலத்தில் இருந்தார்

எல்லையிலாத பெரும் தொண்டர்களுடன்

மின் போன்ற சடையுடைய சிவபெருமானின் அருள் பெற்று

அங்கிருந்து விடை பெற்றார்

எலும்பு மாலைகளை அணிந்த அழகிய மார்பரான சிவபெருமான்

எல்லையிலா ஆட்சி புரிந்து அன்புற்று மகிழ்ந்திருக்கும்

அச்சிறுப்பாக்கம் அணைந்தார்.

3029.

ஆதி முதல்வரான சிவனாரை வணங்கி

“ஆட்சி கொண்டார்” எனும் குற்றமிலாத திருப்பதிகத்தை

பண் பொருந்தி விளங்கும் திருப்பாடல்களால் துதித்து

மாதவம் புரியும் முனிவர்களுடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று

தீமை அகற்றுவதே தம் செய்கையாகக் கொண்ட ஞானசம்பந்தர்

சிலநாட்கள் அங்கு தங்கியிருந்தார்.

3030.

காளை பொறிக்கப்பட்ட வெற்றிக்கொடியுடைய சிவபெருமான்

இனிதே அமர்ந்த பதிகள் பிறவும்

திருநீறணிந்த திருத்தொண்டர்கள்

எதிர்வந்து வரவேற்றனர் சென்றார்

வேறு பல தடங்கள் கடந்து

விரிசடையில் கங்கை ஆறு அணிந்த சிவபெருமான் மகிழும்

திருவரசிலி எனும் பதியினை அடைந்தார்

(பதி-இடம், தலம்)

3031.

திரு அரசிலியில் வீற்றிருக்கும்

அங்கண்ணராகிய சிவபெருமானின்அரசைப் பணிந்தார்

பணிந்து துதித்து எழுந்து

திருப்புறவார், பனங்காட்டூர் முதலான

மணம்கமழ் கொன்றை மலர் சூடிய இறைவர் எழுந்தருளும் பதிகள்

பலவும் வணங்கினார்

பிறகு

அலை செய்யும் நீண்ட கடல் உடுத்திய

திருத்தில்லை நகர் அணைந்தார்.

3032.

எல்லையிலா சிவஞானம் மிக்க தலைவர் ஞானசம்பந்தர் வந்தருள

தில்லைவாழ் அந்தணர்களும் திருத்தொண்டர்களும்

சிறப்போடு எதிர்கொண்டனர்

கூடிச்சென்று அவரைப் பணிந்து இறைஞ்சினர்

அழகிய முத்துச்சிவிகையிலிருந்து இழிந்து

பெருங்காதலுடன் அஞ்சலி செய்தவாறே

வந்தார் ஞானசம்பந்தர்.

(இழிந்து- இறங்கி)

3033.

தில்லையின் எல்லை பணிந்தார்

மேற்சென்றார்

சேய்மையில் உள்ள வானைத் தொடுமளவு விளங்குகின்ற

ஒளி பெருகுகின்ற

வடதிசை வாயிலை வணங்கினார்

உருகும் பெருங்காதலுடன் உட்புகுந்தார்

வேதங்களின் ஒலி பெருகி வளரும்

அழகிய மாடங்கள் நிறைந்த

பெரிய வீதியை அடைந்தார்.

3034.

நன்மை மலியும் திருவீதியைப் பணிந்தார்

எழுந்தார்

நல்தவத்தினர் குழு நிறைந்த திருவாயிலை

செங்கைகள்

தலை மீது குவிய

நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்

பொன் மாளிகையான அம்பலத்தின் பக்கத்தே வலமாக வந்து

உயர்ந்த ஓங்கிய

பேரம்பலத்தை வணங்கினார்.

3035.

பேரம்பலத்தை மிகவும் மனம் மகிழ்ந்து வணங்கினார்

திருமாலும் நான்முகனும் தொழுகின்ற

திருவணுக்கன் திருவாயிலைப் பணிந்தெழுந்தார்

சிவகாமி அம்மையார் தனியே கண்டருளுமாறு

அம்பலத்தில் ஆடல் செய்த குணங்களைக் கடந்த

மெய்ஞானவெளியில்

தனிக்கூத்தரின்

பெருங்கூத்தை வணங்கினார்.

3036.

தொண்டர்களின் மனதிலிருந்து அகலாத

திருக்களிற்றுப்படியைத் தொழுது இறைஞ்சினார்

செறிந்த பெருங்காதலால் நோக்கினார்

முகம் மலர்ந்து எழுந்தார்

அண்டமெலாம் நிறைந்து எழும்

சிவானந்தத்துடன் அலைந்து கண்டார் பேரின்பம் !

அணைந்தார் கரையிலா நிலையை

(திருக்களிற்றுப்படி- யானை சிற்பம் செதுக்கிய வாசல்படி)

3037.

அத்தகைய நிலைமை அடைந்தார்

திளைத்தார்

அந்நிலைமையில் தங்காத காலத்தில்

நிலைத்த திருச்சிற்றம்பலத்தை வலம் வந்தார்

வெளியே சென்று

அழகுமிக்க மாளிகையுடைய

வீதியின் பக்கம் அடைந்து

காலந்தோறும் இனிய இசை கூடிய

வண்டமிழ் பாடி கும்பிட்டார்

இனிதாய்த் தங்கியிருந்தார்.

3038.

உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப்புடைய

சிவபாத இருதயர் —

“பொருந்திய சைவத் திரு வளர்வதற்கு இடமான

புகலிவாழ் அந்தணர்களும்

பெரும் திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றுகின்ற

பெரும்பற்றப்புலியூரில்

பெரும் தமிழாகரர் வந்தார்” எனக்கேள்விப்பட்டு

அங்கு சென்றுசேர்ந்தார்

(புகலி- சீகாழி) [தமிழாகரர்- தமிழுக்கு இடமானவர்; ஆகாரம்- இடம்]

3039.

அவ்விதமாக

அங்கு வந்த சிவபாத இருதயர் மற்றும் பலரைக் கண்டார்ஞானசம்பந்தர்

பிறகு தாங்க இயலாக் காதலுடன்

அவர்களையும் அழைத்துக்கொண்டு

தமது பெருமானாகிய சிவபெருமான் கழல் வணங்குவதற்காக

ஓங்கும் திருமிக்க

தில்லைவாழ் அந்தணர்களும் உடன் வர

தேன் மணம் வீசும்

கொன்றை மலர் மாலை சூடிய சடையுடைய

இறைவரின் திருச்சிற்றம்பலம் பணிந்தார்

3040.

தென்திசையில் உள்ள புகலிவாழ் அந்தணர்களும்

தில்லைவாழ் அந்தணர்களும்

அன்பு நெறி பெருக்குவித்த இறைவரின் அடி போற்றினர்

பொன்போன்ற

புரிந்த சடையுடைய கூத்தரின் திருவருள் பெற்று

வெளியே வந்து

இன்பம் பெய்யும் திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரை

வணங்குவதற்காக செல்வதன் பொருட்டு-

3041.

நல்ல தவம் செய்யும் குழுவினரோடும் கூடி

இறைவர் திருநடனம் புரிகின்ற

அழகிய அந்தப் பதியின் திரு எல்லையை வணங்கினார்

வெளியில் வந்து

காளைக்கொடி உடைய இறைவர் அமர்ந்த

பிறபதிகளும் போய்த் தொழுதார்

கற்றவர்கள் துதிக்கின்ற சீகாழித் தலத்தைச் சென்று அடைபவராகி–

3042.

பலபதிகள் கடந்தார் ஞானசம்பந்தர்

பன்னிரண்டு பெயர்கள் கொண்ட

தொன்மையான வளம் வாய்ந்த சீகாழிப் பதியானது

தூரத்தில் தோன்றியதும்

திருந்திய முத்துச்சிவிகையிலிருந்து இறங்கி வணங்கினார்

திருஅருட்ச்செல்வம் நிறைந்த

அந்தப் பதியின் மீது

திருப்பதிகம் அருள் செய்தார்.

3043.

நிலைபெற்ற இசையுடைய

“வண்டார்குழல்” எனத் தொடங்கும் திருப்பதிகம் தொடங்கினார்

மின்னும் சுடர்கள் கொண்ட வேணுபுரம் மாளிகைகள்

விண்ணைத் தாங்குவன போல் உள்ளன எனும்

இசையுடன் கூடிய

சொல்மாலையாகிய திருப்பதிகம் எடுத்துத் துதித்தார்

புன்னை மரங்களின்

மணம் வீசுவதற்கு இடமான சீகாழியின் அருகில் வந்து சேர்ந்தார்

(வேணுபுரம்- சீகாழி)

–இறையருளால் தொடரும்.

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்