பெரியபுராணம் – 103 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

பா.சத்தியமோகன்



2920.

தாமரை போன்ற கண்களிலிருந்து

கண்ணீரானது –

அருவிபோல பாய்ந்திட

பண்பொருந்திய திருப்பதிகம் பாடி ஆடினார்

உள்ளத்துள் தங்கியிருந்த பெரும்களிப்பும் காதலும் அதிகமாயின

தமது பெருமானின் திருவடிகளை போற்றும் இயல்பு நீடித்தது

அங்கிருந்து வெளியேற மனமிலாமல் வெளியே வந்தார்

போற்றுதல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட திருக்காளத்திமலையின்

அடிவாரம் வந்தார் வணங்கினார்

பெருகிய திருத்தொண்டர்கள் திருமடம் காட்டினர்

அங்கு சென்றார் புகுந்தார் தங்கினார் புகலிவேந்தர்

2921.

எல்லோராலும் அறிவதற்கு அரிதான இறைவனை

ஏழ் உலகங்களும் உடைய இறைவனை

எண்ணிலாத தேவர்களின் தலைவனை

திருக்காலத்தி மலை மீது அருளும் சிவந்த தேனை

சோலை சூழ்ந்த சீகாழி ஆளும் வேந்தரான ஞான சம்பந்தர்

உரிய காலங்கள் தோறும் பதிகம் எனும் மலர்களால்

அர்சனை செய்து துதித்தார் பருகி அனுபவித்தார்

இனிய

அந்தத் திருப்பதியில் தங்கியிருந்த நாட்களில் —

2922.

அங்கு —

வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில்

அருமையுடைய தமிழின் வழக்கு நிகழவில்லை அதனால்

திங்கள் புனை முடியாராகிய சிவபெருமானின்

தலங்கள் தோறும் சென்று பதிக இசை பாடும் செயல்போல

உமையுடன் தேவர்களும் போற்றி இசைக்கும்படி வீற்றிருந்த

சிவபெருமானின் வடகயிலை மலையை

இங்கிருந்தே வணங்கிப்பாடினார்

செந்தாமரை மலர்கள்மலரும் நீர்நிலைகள் கொண்ட

திருக்கேதாரத்தை வணங்கினார்

இசையுடன் திருப்பதிகம் பாடினார்

2923.

கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவரின்

“கோகரணம்” எனும் தலத்தைப் பாடினார்

காளை மீது எழுந்தருளும் இறைவரின்

“இந்திர நீலப் பருபதம்” எனும் தலம் பாடினார்

மற்றும்

இறைவரின் புண்ணிய திருப்பதிகள் பலவும் பாடிய

புகலி வாழ் ஞானசம்பந்தர் மிக மகிழ்ந்து

திருநீற்றின் கோலமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர

அங்கு தங்கியிருந்தார்

2924.

தென் திசையில் உள்ள திருக்கயிலை எனப்படும்

திருகாளத்தி மலை போற்றி இனிதாகத் தங்கியிருந்தார்

அலைகள் சூழ்ந்த கடல் கரை சார்ந்த இறைவரின்

திருவொற்றியூர் வணங்க உள்ளத்தில் எண்ணினார்

இனிமையுடைய தமிழின் வல்லுநரான ஞானசம்பந்தர்

அருள் பெற்று விடைபெற்றார்

“எந்தையார் இணையடி என் மனத்துளவே” என

பொன்னும் மணியும் கொழிக்கும் பொன்முகலி ஆற்றையும்

திருப்பதிக இசையால் போற்றிச்சென்றார்

2925.

நிலைத்த புகழ் பெற்ற திருத்தொண்டர் கூட்டத்துடனும்

வேதங்கள் வாழும்படி தோன்றிய ஞானசம்பந்தர்

மலையும் காடும் சேர்ந்த இடங்கள் பலவும் கடந்து வந்தார்

முழு முதல்வராகிய இறைவரின் பதிகள் பலவும் போற்றினார்

பல மணிகள்

பொன்

அகில்

சந்தனம் உள்ளிட்ட மரங்களை மோதி அலைத்துக்கொண்டு

ஓடுகின்ற பாலி ஆற்றின் கரையில்

வடக்கு கரையில் நிலை பெற்ற

தலையில் பிறை சூடிய இறைவரின் திருவேற்காடு சென்றார்

திருஞானம் பருகிய செல்வர்

2926.

திருவேற்காட்டில் அமர்ந்த வீற்றிருக்கும்

செழும்சுடரான இறைவரின் அழகிய கோயில் சென்று

பணிந்தார் திருப்பதிகம் பாடினார்

எதிர்க்கும் மனமுடைய அவுணரின் திரிபுரங்களை எரித்த இறைவரின்

“திருவலிதாயம்’’ அடைந்து வணங்கிப் போற்றினார்

வடிவுடைய காளை மீது விரும்பி வீற்றிருக்கும்

குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை வணங்கச்சென்றபோது

மிகப்பெரும் விருப்பம் தரும் வாழ்வு பெற்ற தொண்டர்களும்

அந்த ஊரில் உள்ளவர்களும்

அவரை எதிர்கொண்டு வரவேற்க அன்புடன் வந்தனர்

2927.

மிகுந்த தொண்டர்கள் தொழுத வண்ணம் வந்து சேர

பிள்ளையார் அவர்களைத் தாமும் தொழுதார்

வணங்கியபடியே முத்துச்சிவிகை விட்டு இறங்கி

“விடையவன்” எனும் பதிகம் எடுத்துப்பாடினார்

கருமை பொருந்திய திருக்கண்டமுடைய சிவபெருமான்

மகிழ்ந்து வீற்றிருக்கும் நிலைபெற்றுள்ள

கோயிலின் கோபுரத்தில் விழுந்து வணங்கினார்

திருக்கடைக்காப்பு பாடி

இறைவரின் கோயில் வழியே உள்புகுந்து

இறைவர் திருமுன்பு துதித்தார்

நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார்

2928.

பொன்னின் திரட்சிகள் போன்ற முறுக்கிய சடையுடைய

இறைவரிடம் பொங்கி எழுந்த காதல்

மிகவும் மேலோங்கி விம்மி

திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் நிரம்பிட

சொல்லும் பொருளும் விளங்கும் திருப்பதிகம் பாடி

உலகம் உய்வதற்கென

சிவஞானமெனும் அமுது உண்ட சம்பந்தர்

திருவொற்றியூரை விரும்பி அங்குத் தங்கியிருந்தார்

2929.

இவ்விதமாக ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார்

இங்கு

புகழப்படும் திருமயிலாப்புரியில்

நிலைபெற்ற புகழுடைய பெருவணிகர் குடியில் தோன்றிய

பெருமையுடையவரின் வாழ்வில் நிகழ்ந்ததை

மொழியத்துவங்குகிறோம்

2930.

அரிய செல்வ வலிமை பெருக்க

மிகப்பெரிய மரக்கலங்களுடன்

அலைமோதும் கடல்மீது சென்று

வாணிகத்தில் ஈடுபட்டு

தனது இல்லம் நிரம்பிட பெரும் செல்வக்குவியல்கள் குவித்து

எல்லையிலாத வளங்கள் உடையவர் –

2931.

தன்னை உள்ளவாறு அறிந்து அதன் பின்

சங்கரரான சிவபெருமானிடத்தில் அடிமைகொண்டவர்

அதில் மெய்நெறி பிறழாதவர்

விருப்பத்துடன் அன்பும் கொண்டவர்

பொய்மை நீக்கி உள்ளத்தில் செம்மையை உடையவர்

சிவநேசர் என்பது அவர் பெயர்

2932.

கற்றைவார்ச்சடை முடியினரான

சிவபெருமானின் அடியார்கள் கூடிய கூட்டத்தோடுசேர்வதில்

இடைவிடாது உருகிய மனமும்

இறைவனிடத்தில் அன்பு நெறியிலாத பிற சமயங்களை

நீக்கும் சினம் மிக்க ஒழுக்கத்தையும் கொண்டு விளங்குவார் சிவநேசர்

2933.

அவ்வாறாக நாட்கள் பல சென்றபோது —

அரிய வேதியரான

கவுணியர் குலப் பெருமானாகிய ஞானசம்பந்தன்

சிவஞானம் உண்டதையும்;

உலகம் உய்யும் பொருட்டாக –

மற்றைய கொடிய சமயங்களான சமணம், பெளத்தம் ஆகியவற்றின்

இழிநிலையினை விளக்கி அதன் தலைமை ஒழித்ததும்

குற்றமிலாத அடியார்களிடம் கேட்டு மகிழ்ந்தார் சிவநேசர்

2934.

செல்வம் நிறைந்த சிரபுரமாகிய சீகாழியின் தலைவரான

ஞானசம்பந்தரின் திருவடிகளில்

எல்லை இல்லாத பெருவிருப்பம் கொண்டார்

இடைவிடாமல் அல்லும் பகலும்

அவரது அருள் தன்மையைப் பகழ்ந்தார்

பிறர் கூறக்கேட்பார்

இதுவே அவரது வாழ்க்கையின் செயல்கள் ஆனது .

2935.

அவ்வாறு வாழ்ந்துவந்த சிவநேசர்

நிதியின் தலைவனாகிய குபேரனைவிட

நீடிய செல்வத்தால் சிறந்து விளங்கினார்

பகழப்படும் மேன்மையோடு விளங்கினார்

எனினும் –

மகிழ்ந்துவாழும் மனைவாழ்க்கையில்

குழந்தைப்பேறு இல்லாமை மருண்டுபோக வைத்தது

2936.

அரிய தன்மையுடன் அருந்தவம் புரிந்து

சிவனடியார்களுக்கு உரிய அளவற்ற அர்ச்சனைகள் செய்த

அந்த நலத்தின் காரணத்தால் —

கரிய நிறமுடைய கூந்தலுடைய மனைவியாரின்

வயிறு எனும் தாமரையில்

பூமகள் போன்ற பெண்கொடி ஒருத்தி உதித்தாள்

2937.

நல்ல நாளில் பிறப்பதற்காகவும்

நல்ல ஓரையில் பிறப்பதற்காகவும்

பெரு வணிகரான சிவநேசர் தனது சுற்றத்தினருடன்

அளவற்ற செல்வத்தினை முகந்து எடுத்து

எல்லோரும் மகிழும்படியாக

செழிபுடைய கடைவீதியில் பொழிந்தார் உள்ளம் மகிழ்ந்தார்

2938.

கங்கை ஆறு சூடிய சிவபெருமானது அடியார்களிடம்

அன்பு மிகவும் கொண்டு

எல்லையிலாத பூசனைகள் யாவும் செய்தார்

ஒப்பிலாத வேதியர்களுக்கு

வேண்டிய எல்லாம் அளித்தார்

“இதுவே பெறும்பேறு” என உள்ளம் களித்தார்

2939.

சூத நல்வினை மங்கலம் எனப்படும்

குழந்தை பெற்றதும் செய்யப்படும் சடங்குகளும்

வேத நீதியின்படி

வைதீக நியமப்படி விரித்துக்கூறும் சாதகக் கணிப்புகளும்

பத்து நாட்கள் நடந்தன

மிகவும் காதலுடன் விருப்புடன் விழா நடத்தினர்

2940.

எல்லோரும் பெருமகிழ்ச்சியால் இன்பம் அடையுமாறு

பிறந்த அப்பெண்

அழகுப் பாவை போன்று பண்புகளுடன்இருந்தது

அதனால் அப்பெண்ணுக்கு “பூம்பாவை” எனும்

பொருத்தமான பெயரிட்டனர் உலகில் மேலாக விளங்க!

2941.

செல்வம் வளரும் மங்கலமான அந்தச்சடங்குகள்

மற்ற நல்வினைகளோடு பொருத்தமாகவும் அதிகமாகவும்

மாதம்தோறும் செய்யப்பட்டன

ஓராண்டு நிறைந்தது

சிற்றடிகள் பேரொளியோடு தளர்நடை பழக —

2942.

துவளும் மின்னல் முளை போலவும்

பொன்னால் ஆன கொடியில் வளரும் இளந்தளிர் போன்றும்

இரத்தின மணிகளில் கிளர்கின்ற அளவிலாத சுடர்கொழுந்து போன்றும்

இள அன்னம் போன்றும்

தோன்றுகிற பூம்பாவைக்கு இப்போது ஏழுவயது !

2943.

“அழகு” என்ற சொல்லில் கிடைக்கும் பொருளின் பதம் எனவும்

“அழகு விளக்கு” எனவும் வளர்ந்தார்

இல்லத்தில்

கழல், அம்மானை, பந்து ஆகியவற்றை

அவருடன் ஒத்த வயதுடைய சிறுமிகளுடன்

மழலை பேசும் மென்கிளிக்கூட்டமென ஆடினார்

2944.

பொன்னால் ஆன வளையல் அணிந்த

சிறு மகளிர் கூட்டத்துடன் கூடி

சிறு மணல் இல்லங்களைக் கட்டியும்

அதில்

சிறு சோறுடன் பொருந்திய உணவுகள் அமைத்தும்

உண்ணுதல் செய்தும்

ஒளியுடைய மணிகள் கட்டிய ஊஞ்சல் ஆடியும்

மற்றும்

இன்பம் பொருந்தும் ஆடல்கள் ஆடியும் வளர —

2945.

தளிர்த்த கொம்பு போன்ற அப்பெண்ணுக்குத்

தகைந்த

பொருத்தமான

எவரும் இவ்வுலகிலேயே இல்லை எனும் களிப்பு

உள்ளத்தில் தோன்றியது

மகிழ்ச்சி வந்தது சிவநேசருக்கு!

இவளை மணம்புரிபவனே –

எனது முடிவற்ற செல்வங்களுக்கெல்லாம் தகுதிகொண்டவன்

என்றும் சொன்னார்.

2946.

அத்தகைய நாள்களில் —

சமணர்கள் மிகுந்திருந்த பாண்டிய நாட்டினை

தூய ஞான அமுது உண்ட ஞானசம்பந்தர் அடைந்து

வஞ்சனையில் வல்ல சமணர்களான கீழ்மக்களை

வாதத்தில் வென்றதும்

பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்புநோயின் துன்பத்தை அழித்ததும்-

2947.

அனல் வாதத்தில் தோற்று அஞ்சிய சமணர்களை

புனல் வாதத்தால் வென்றபின்பு

கூர்மையான நீண்ட கழுமரங்களில் சமணர்களே ஏறியதும்

விருப்பத்துடன் பாடிய மன்னனுக்கு

திருநீறு அளித்து

மலையை வில்லாக உடைய சிவபெருமானின்

திருநீற்றுச் சாதனத்தை அணிவித்ததும்-

2948.

இத்தகையவற்றையெல்லாம் அறிந்தவர்கள்

அங்கு சேர்ந்து சொல்லினர்

இத்தகவல்

சொன்னவர்க்கெல்லாம் பெருநிதிகளை ஆடைகளுடன் அளித்தார்

நிலைபெற்ற சீகாழிப்பதி வள்ளலாரான ஞானசம்பந்தரை

அவர் இருந்த திசை நோக்க்¢

தலைமீது கரம் குவித்துக் கூப்பிக்கொண்டு

விழுந்தெழுந்து வணங்கினார்

நேர்சென்று –

2949.

சுற்றத்தவர் மட்டுமல்ல

உறவினர்களும் கேட்குமாறு

உரத்த குரலில்

“ கற்றவர்களாகிய மாந்தர் வாழ்கின்ற சீகாழிப்பிள்ளையாருக்கு

அடியேனாகிய நான் பெற்ற பூம்பாவையாரையும்

ஓங்கிய என் செல்வத்தையும்

முற்றும் அடிமையாக என்னையும் தந்தேன்” என்று மொழிந்தார் சிவநேசர்

2950.

எல்லையிலாத பெரும் களிப்பினால்

இவ்வாறு சிவநேசர் இயம்பினார்

“முல்லை அரும்பைப் போன்ற கூர்வெண் பல்வரிசையும்

முகிழ்க்கும் கொங்கையும் உடைய மகளுடன்

எல்லையிலாத செல்வத்தின் வளங்களையும்

வேதங்கள் வளரும் சீகாழிப்பதியில் அவதரித்த செல்வரான

ஞானசம்பந்தரே அடையவேண்டும்” என சிந்தையில் மகிழ்ந்தார்

-இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்