பெரியபுராணம்- 127 – 42. சிறுத்தொண்டர் நாயனார் புராணம்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

பா.சத்தியமோகன்


(சிவனடியார் முன்னர், தன்னை

சிறியவராகக் கருதி வாழ்ந்ததால்

“சிறுத்தொண்டர்” என அழைக்கப் பெற்றார்)

3658.

வடிவுடன் இருந்து

தன் ஆணையை

உயிர்கள் மீது செலுத்தும்

காமன் எனும் மன்மதனை

நெற்றியிலிருக்கும் செந்தீயால் ஒழித்த சிவபெருமான்

மகிழ்வுடன் வீற்றிருக்கும் தலம்

திருசெங்காட்டங்குடி.

கரிய நிறக்கண்களை உடைய கடைசியர் –

தமது களியாடல்களை நிகழ்த்துகிற

காவிரிநாடு என அழைக்கப்படும் சோழநாட்டின்

வளம் மிகுந்த பகுதிதான் “செங்காட்டங்குடி”.

(கடைசியர் – உழத்தியர்)

3659.

அப்படிப்பட்ட ஊரில்

நெடுஞ்சடை கொண்ட சிவபெருமான்மீது கொண்ட

திருநீற்றுச் சார்பால்

உலகில் தோன்றி வளரும் உயிர்களுக்கெல்லாம்

உயர்வான காவல் தொழில் புரிகின்ற

பெரும் புகழ் உடைய

“மாமந்திரர்” எனும் மருத்துவ மரபின்

குலம் விளங்கத் தோன்றினார்

பரஞ்சோதி எனும் திருப்பெயர் உடையவர்.

3660.

“ஆயுள் வேதக்கலை” எனும் மருத்துவக்கலை பயின்றார்

எல்லையிலாத வடநூல்களில் உள்ள

பலவிதமான கலைகள் பயின்றார்

தூய்மையான படைக்கலத்தின் தொழில்களும் பயின்றார்

இவை அனைத்தையும்

அதன் எல்லை வரை கற்றார்

அது மட்டுமல்ல –

பாய்ந்து மதம் பொழியும் யானைகளையும்

குதிரைகளையும்

செலுத்தும் தொழிலும் கற்று

உலகில் மேம்பட்டு விளங்கினார்.

3661.

தனது உள்ளம் நிறைவு பெறும்படி

திருப்தி கொள்ளும்படி

கலைத்துறைகளை ஓய்வில்லாமல் பயின்றார்.

அந்தக்கலைகளால்

தெளிவு பெறப்பெற

அறிந்த பொருள் யாதெனில்

“சிவனது திருவடிகளில்

அன்புடன் கூடிய ஒழுக்கமாகும்”

அந்த உணர்வினால் முழுமை அடைந்தார்

இயமனை உதைத்த திருவடி மீது கொண்ட உணர்வு

பள்ளமடையில் நீர் ஓடுவது போன்ற

தடையில்லாமல் பயின்று வருவது போன்ற

பண்பினைத் தந்தது

சிறுத்தொண்ட நாயனாருக்கு.

3662.

சிவனது அடியார்களுக்கு

எந்த நாளும் பொருத்தமான தொண்டுகளைச் செய்தார்

அதே நேரத்தில்

குற்றமற்ற மன்னவனுக்கு

அணுக்கமாக ; பக்கத்துணையாக இருந்தார்.

அம்மன்னனுக்காக

போரில் யானைப்படை செலுத்திப் போரிடுவார்

எதிர்க்கும் அரசர்களின் தேசங்களைக் கைப்பற்றுவார்

தேர்ப்படை உடைய தமது மன்னனிடம்

சிறப்புகள் பல பெற்றார்.

3663.

மன்னவனுக்காக படையெடுத்து –

வடநாட்டில் உள்ள

“வாதாவி” எனும் பழைய நகரை

யானைபடையினைக் கொண்டு

துகள் துகளாக ஆகச் செய்தார்

பலமணிகளையும்

பொருட்ச் செல்வங்களையும்

யானைக்கூட்டங்களையும்

குதிரைத் தொகுதிகளையும்

இன்னும்

எண்ணிலாத பலவும் வென்றார்

அரசன்முன்

கொண்டு வந்து சேர்த்தார்.

3664.

ஒளி பொருந்திய ஆட்சி புரியும் மன்னவன்

யானைப்படை செலுத்துகின்ற

சிறுத்தொண்ட நாயனாரின்

வல்லமையை –

ஆண்மையைப் பார்த்து அதிசயித்தான்

புகழ்ந்து பாராட்டினான்.

அதனை அறிந்த அமைச்சர்களும்

“பிறைச்சந்திரன் அணிந்த

சந்திரன் சூடிய சிவபெருமானின் திருத்தொண்டு

இவருக்கு வாய்த்திருக்கிறது

அதனால்

இவரை எதிர்த்து நிற்பவர் யாரும்

இவ்வுலகில் இல்லை” என்றனர்.

3665.

“தம்பெருமானாகிய

சிவபெருமானின் திருத்தொண்டர் இவர்”

எனக்கேட்டதுமே –

மாலை சூடிய மன்னன்

“தேவர்களின் தலைவராகிய

சிவபெருமானின் அடியார் இவரை

நான் உணராமல் கெட்டேனே ஒழிந்தேனே

மிகக் கொடிய போர்முனையில்

போர் செய்யுமாறு அல்லவா இவரை விட்டுவிட்டேன்!”

என நடுக்கமுற்றான்

“எம் பெருமானே

இப்பிழையை பொறுக்க வேண்டும்” என்று துதித்தான்.

3666.

பரஞ்சோதி எனும் பெயருடன் தோன்றிய சிறுத்தொண்டரை

அவ்விதமாக மன்னன் வணங்கியதும்

“என் உரிமையாகிய

படைத்தொழிலுக்குப் பொருத்தமான திறத்தை நான் செய்தேன்

அதனால் ஒரு தீங்கும் வராது” என்றார்

அறவழியில் ஆட்சி புரியும் செங்கோல் மன்னன்

அவருக்கு நிறைந்த செல்வக் குவியல்கள்

பலவும் அளித்தான்

3667.

“சிறுத்தொண்டரே …

உமது உண்மையான திருத்தொண்டை

யாம் அறியாதபடி இத்தனைகாலம் செய்தீர்

இனி –

எனது மனக்கருத்துக்கு இனிதாகச் சம்மதித்து

உமது மெய்த்தொண்டின் படியே

வேண்டிய விதமாகவே இனி செயல்படுவீராக”

என கூறிய மன்னன்

அவரைத்

திருத்தொண்டு செய்ய அனுமதித்து

பணியிலிருந்து விடை கொடுத்தான்.

3668.

மிகுந்த புகழ் கொண்ட

பரஞ்சோதியாகிய சிறுத்தொண்ட நாயனாரும்

மன்னனிடம் விடைபெற்றார்

தமது ஊரான செங்காட்டங்குடி வந்தார்

பனிமதி வாழும் தலையினை உடைய சிவபெருமானை

”கணபதீச்சரம்” என்ற கோயிலில் வணங்கினார்

தனது திருத்தொண்டை

முன்பு போலவே அன்புடன் செய்து வந்தார்.

( செங்காட்டங்குடியில் உள்ளது கணபதீச்சரம் கோயில்)

3669.

வேதங்களுக்கு காரணரான

சிவபெருமானின் அடியவர்களுக்கு

தேவையான மெய்ப்பணிகள் யாவும்

பரஞ்சோதியார் செய்தார்

திருவெண்காட்டு நங்கை எனும்

குற்றமற்ற குடியில் பிறந்த

காதலுடைய

இல்லக்கிழத்தியாருடன்

கருத்து ஒன்றுபட்டு வாழ்ந்தார்

அறநீதி தவறாமல் வாழ்ந்தார்.

3670.

தேன்கொண்ட

கொன்றைமலர் மாலை சூடிய

திருமுடியாராகிய சிவபெருமானின் அடியவர்களை

முறைப்படி

நாள்தோறும்

திரு அமுதாகிய

உணவு உண்ணச் செய்தார் சிறுத்தொண்டர்

அதன் பிறகே

தாம் உண்ணும் நியதி கொண்டார்

தவறாமல்

இதனைக் கடைப்பிடிக்கும் தொழிலில்

சிறந்து விளங்கினார்.

3671.

தூய அமுது

பழம்

சுவையான ஆறுவகைக் கறிகள்

உறைந்த தயிர்

பால்

இனிய பலகாரம்

அமுது போன்ற குடிநீர்

இவற்றை அடியார்களுக்கு உணவாகப் படைப்பார்

பரந்த இவ்வுலகம் போற்ற வாழ்கிற சிறுத்தொண்டரிடம்

அடியார்களும் மகிழ்ந்தனர்.

3672.

குளிர்ப்பிறைச்சந்திரனுடன்

பாம்பினையும்

சிவந்த சடையில் அணிந்த

நாதனாகிய சிவபெருமானின் அடியார்களுக்கு

விருப்புடன் வழிபாடு செய்யும் வழிபாட்டினால்

மேன்மையுடைய அந்த அடியார்கள் முன்பு

தம்மை

மிகவும் சிறியவராகக் கருதி வந்தார்

அதனால்

“சிறுத்தொண்டர்” எனும் பெயருடன்

உலகில் விளங்கினார்.

3673.

கணபதீச்சரம் எனும் ஊரில் உள்ள

நெற்றியில் கண் உடைய இறைவரின்

கருத்தில் பதிய விரும்பினார்

உள்ளே அன்பு நிறைந்தது

பணி செய்தார்

தொண்டுகள் செய்தார்

குறைவிலாத

அளவிலாத

பெருமை உடைய அடியார்கள்

இடைவிடாமல் வந்தனர்

அமுது செய்தனர்

சிறந்த மகிழ்வுடன்

வாழ்ந்திருந்த நாட்களில் —

3674.

கங்கைநீர் பொருந்திய சடைமுடியார்

சிவபெருமான் திருவருளால்

நிறைந்த தவமுடைய சிறுத்தொண்டருக்கும்;

பெருகும் இல்லறத்தின் வேராகி செயல்படும் –

திருவெண்காட்டு நங்கை எனும் துணைவிக்கும்;

“சீராளதேவர்”: எனும் திருமகன்

அவதரித்தார்.

3675.

அருமையாய்ப் பெற்றிட்ட

ஒப்பிட முடியாத

மகன் பிறந்தபோது

அலங்காரம் செய்தனர்

அப்பெருமையால் சுற்றம் மகிழ்ந்தது

பெறுவதற்கு அரிதான

மணி போன்ற மகனைப் பெற்றதால்

உண்டாகும் மகிழ்ச்சி

தந்தையாகிய

சிறுத்தொண்ட நாயனாரின் மனதில்

அடங்காத மகிழ்ச்சியாகி வளர்ந்தது.

திருச்செங்காட்டங்குடியில் உள்ள யாவரும்

சிறப்புமிகு நெய்யாடல் விழா எடுத்தனர்.

3676.

மங்கலமான

நல்ல இசைக்கருவிகளின் முழக்கம்

வேதங்களின் முழக்கம்

இரண்டும் கலந்து வானம் அளந்தது

அங்கத்தில் கண் உடைய இறைவரின்

சிறப்புமிகு அடியார்களுக்கு

அளவிலாத நிதி அளித்தனர்

தங்கள் குல மரபுக்கு

உரிமையான சடங்குகளை

பத்து நாட்களுக்கும் அதிகமாக

பொங்கும் பெருமகிழ்ச்சியுடன் செய்தனர்

காப்பு அணிந்தனர்.

3677.

சிறுத்தொண்ட நாயனார் —

சுற்றத்தவர்கள் உளம் மகிழ அளித்தார்

உலகில் பெரும் மகிழ்ச்சியுடன்

அந்தந்தப் பருவங்களுக்குரிய சடங்குகளை

குழந்தைக்குச் செய்தார்

பருவமுறையைப் பாராட்டினார்

சிறப்பாகச் செய்தார்

திருமகனாகிய சீராளத்தேவர்

மாலையாய்க் கோர்த்த கிண்கிணி சதங்கை

பாதங்களில் அசைய

தளர்நடைப் பருவம் அடைந்தார்.

3678.

குழந்தை சீராளத்தேவரின்

சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில்

மின்னியது சுட்டி;

இரு காதுகளில் –

குதம்பை ;

திருக்கழுத்தில் கண்ட சரம்;

மார்பில் ஐம்படைத்தாலி ;

கைகளில்

வைரத்தால் செய்த “சரி” எனும் அணிகலன் –

சரி சரியென ஜொலித்தது;

இடுப்பில் –

பொன்னால் செய்த அரைஞாண்;

திருவடியில் சதங்கை;

முதலிய அணிகள் அணிந்த சீராளத்தேவர்-

ஒளி விளங்க

வளரும் விளையாட்டினில் ஈடுபட்டிருந்தார்.

3679.

வளர்ந்தது மூன்றாம் ஆண்டு !

மயிர் நீக்கும் மங்கல வினை செய்தனர்

தந்தையும் தாயும்

ஒப்பில்லாத

தமது சிறிய மகனை

மனம் மலரும் சொல் தெளிவுடைய

செழுங்கலைகள் பயில்வதற்காக

பள்ளியில் சேர்த்தனர்.

3680.

அத்தகைய நாட்களில்

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் எழுந்தருளினார்

முப்புரிநூல் மார்புடைய சிறுத்தொண்டர்

அவர் முன்னாகச் சென்றார்

எதிர்கொண்டு வரவேற்றார்

அழைத்து வந்தார்

நகருள் புகுந்தார்

அவரைத்

தமது வீட்டில் இருக்கச் செய்தார் சிறுத்தொண்டர்

அவர்தம் திருவடிகளைத் துதித்தார்

நலம் பெற்றார்.

3681.

சண்பை நகரின் தலைவரான ஞானசம்பந்தப்பெருமான்

தாங்க இயலாத அளவு பக்திப் பண்புடைய சிறுத்தொண்டருடன்

இனிதே தங்கியிருந்தார்

அவரை

உலகமே போற்றும்

தமது திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்தார் சம்பந்தர்.

தம்முடன் நட்பு கொள்ளும் பெருமையும் அளித்தார்

இனிய விருப்பமுடன் தங்கியிருந்தார்.

3682.

இவ்விதமான நாட்களில்

சிறுத்தொண்டரின் தொண்டு

கயிலை மலையில் வீற்றிருக்கும் அத்தராகிய

சிவபெருமானின் திருவடியிணைகளில் சென்று சேர்ந்தது

சிறுத்தொண்டரின்

மெய்யான தன்மை கொண்ட அன்பை நுகர்ந்த இறைவர்

அருள் புரிவதற்காக

சித்தம் மகிழ்ந்தார்

பைரவக் கோலத்துடன்

திருமலையிலிருந்து புறப்பட்டு எழுந்தருள —

3683.

இதழ்கள் எனும் மடல் கொண்ட

கொன்றை மலர் சூடிய நெடுஞ்சடை முழுதும்

கடலில் சேர்ந்தது

அது –

முகந்து எழுந்த கரிய மேகத்தின்

காளமேகச் சுருள் போல இருந்தது –

தொடர்ந்து நீண்ட தலைமயிர்

அது –

சுருண்டு இருண்ட காடுபோல அடர்ந்து

அழகுடன் படர்ந்து இருந்தது.

3684.

சிவபெருமானின் சடாமுடி —

மைக்குழம்பை மூழ்கச் செய்ததுபோல

அழகு மிகுந்தது;

கரிய மயிராகிய மேகத்திடையே தோன்றும்

நட்சத்திரப் பரப்புபோல

திரட்சியாய் காணப்பட்ட

வரிசையாய் வண்டின் கூட்டங்கள்

பக்கங்களெல்லாம் சூழ்ந்துகொண்டு ஒலித்தது

தும்பை மலர்கள்

வரிசை அழகுற விளங்கியது.

3685.

திருமுடியின் ஒருபக்கத்தில் செருகிக் கொள்ளும்

மாலைநேர பிறைச்சந்திரனையே

ஒளி பெருகும் சிறிய முழுமதி என ஆக்கி

நெற்றியில் அணிந்ததுபோல

விரியும் ஒளியுடன்

அவர் திருநெற்றி மீது

ஒற்றைப்பொட்டு ஒளி வீசியது.

3686.

வெம்மையுடைய கதிரவன் மண்டலமும்

விளக்கமான சந்திரமண்டலமும்

அக்கினி மண்டலமும்

ஒன்றாகக் கூடியது போன்ற அழகுடன் –

தனது வயமாக்கும் செவியில்

அழகான சங்குக்குழையை

வளைத்து அணிந்து

அதனுள்

செவ்வரத்தம் பூவினை அணிந்த இருதோடுகள்

இரு பக்கங்களிலும் சிறந்து விளங்க

எழுந்தருளினார் சிவபெருமான்

3687.

“திருக்கழுத்தில் பெற்ற நஞ்சினை மறைக்க

பாற்கடலில் உண்டான அமுதத்தின் குமிழ்களை

திரட்சியான ஒளி வரிசையாய்

தூய வடமென அணிந்தாரோ சிவபெருமான்”

என நெஞ்சில் நினைப்பவரின்

உடலும் உயிரும் உருகும்படி

வெண்மையான பளிங்குமாலை ஆடியது.

3688.

செம்பரிதியாகிய கதிரவன்

கடலில் தருகின்ற செவ்வான ஒளியை

முதிர்ந்த அந்தியின்

இருள்பொழுது சூழ்ந்து கொள்வதுபோல

அழகிய பவளம் போன்ற சிவபிரான் மேனியை

யானைத் தோல் கொண்டு செய்த ஆடையின்

அழகு விளங்கியது.

3689.

எலும்பு மணிகளால் அமைந்த வெற்றிமாலையும்

கோவைகளும்;

கைகள் அணியும் கங்கணிகள்;

இடுப்பில் அணியும் அரைஞாண்;

திருக்கால்களில் அணியும் காலணிகள்

ஆகிய யாவும்

அடியாரிடத்தில் ஓங்கி எழும் அன்பானது –

திருமேனி மீது

வடிவம் கொண்டு வளைந்தது போல இருந்தது.

3690.

ஒப்புமை சொல்ல இயலாத அளவு

தொண்டு செய்யும் சிறுத்தொண்டருக்காக

இவ்வுலகத்தில்

இவ்விதமாக அருள் புரியும்

பெருகிய திறம் கண்டு

“இறைவரின் திருவருளையே விரும்பிப் போற்றுவீராக

வளர்கின்ற அன்பின் வழியில் வாழ்வீர்” என

பண்டைய வேதங்கள் கூறியதுபோல

இறைவனின் சிலம்புகள்

எத்திசையிலும் ஒலித்துச் சென்றது !

3691.

பிரம்மனது கபாலத்தை அணிந்து கொண்ட

இடது திருக்கையினால்

மூவிலைச் சூலம் ஏந்திய நிலையில்

அழகிய தோள்கள் விளங்குகிறது

மலர்ந்து ஒளிவீசும் மலர்க்கையால்

வலது திருக்கை ஏந்திய உடுக்கையின் தவத்தால்

பயன்பெறும் நிலமும்

அடித்தாமரை தாங்கிட —

3692.

அருள் பொழியும் சிவபெருமான் திருமுகத்தில்

நிலவு போன்று குளிர் ஒளி வீசியது;

அவரது புன்முறுவல் —

மயக்கம் தரும்

மும்மலங்களின் வலிமையைச் சிதைக்கும்;

அவரது கூர்மையான சூலம்

வெயில் போல ஒளி வீசும்;

உண்மைப் பொருள் விளக்குவதற்காக

பெருகுகின்ற பேரன்பு

மேலும் மேலும் தழைப்பதற்காக –

இந்த உலகினை ஓங்கச் செய்வதற்காக

அறிவு பொழியும் வளமையுடைய –

தமிழ்நாட்டில் உள்ள

செங்காட்டங்குடி அடைந்தார் சிவபெருமான்.

3693.

குறையாத பசி வேட்கை உடையவரைப்போல

கண்ணில் பட்டோர்களையெல்லாம்

“சிறுத்தொண்டரின் வீடு எங்குள்ளது” என வினவினார்

விரைவாக வந்தடைந்தார்

“சிவபெருமானது தொண்டர்களுக்கு

எந்நாளும் சோறு அளிக்கும்

திருத்தொண்டரான சிறுத்தொண்டர்

வண்டுகள் மொய்க்கும் மலர்மாலை அணிந்தவர்

இந்த இல்லத்தில் உள்ளரோ ? ” என்று வினவினார்

3694.

“வந்து கேட்கிறவர்

மாதவரான அடியவரே” என எண்ணி –

சந்தனத்தாதியார் என்ற

அம்மையார் முன்னால் வந்தாள்

அவரது திருவடிகளை வணங்கினாள்

“எல்லையிலாச் சிறப்புடைய

அடியவரைத் தேடுவதற்காக

அவர் வெளியில் சென்றுள்ளார்

எம்மை ஆளும் முதல்வர் வீட்டுள்

எழுந்தருள்க” என்று கூறினார் –

3695.

அந்த அம்மையாரின் முகம் நோக்கினார்

“பெண்கள் தனியே உள்ள இடத்தில்

நாம் தனியே புக மாட்டோம்” என்றார் சிவபெருமான்

அதுகேட்டு –

“அவர்

அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுவாரோ”

என அச்சம் கொண்டாள்.

மனையின் உள்ளே விரைந்து சென்றாள்

வீட்டின் கடமை

முற்றிலும் உடையவரான திருவெண்காட்டு அம்மையார்

வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்து –

3696.

அம்பலம் கொண்ட

இறைவரின் அடியவர்களை

உணவு உண்ணச் செய்யும் நியமம் உடைய அவர் –

“எம்பெருமானே

இன்று எவரையும் காணவில்லையே எனத்

தேடிச் சென்றிருக்கிறார்;

புதிதாய்

இன்று

நீங்கள் எழுந்தருளியதைக் கண்டால்

“பெரியபேறு” என அவர் மிகவும் மகிழ்வார்;

இனியும் காலம் தாழ்த்தமாட்டார்”

3697.

“இப்போதே வந்துவிடுவார்

இங்கேயே இருங்கள்” என்று சொல்லியதும் –

“ஒப்பிலாத இல்லறம் நடத்துபவரே

யாம் வடநாட்டில் உள்ளோம்

சொல்ல இயலாத அளவு

பெருமை மிக்க சிறுத்தொண்டரைக் காண

இங்கு வந்து சேர்ந்தோம்

அவர் இல்லாதபோது

எவ்வகையாலும்

இங்கு நாம் இருக்க இயலாது” என்று கூறி அருளி –

3698.

நெற்றிக்கண்ணைக் காட்டாமல்

மறைத்துக் கொண்டு வந்தார் அவர்

“கணபதீச்சரத்தில்

வண்ணமலர்களையுடைய

அழகிய

திருவாத்தி மரத்தின் கீழ்

யாம் அமர்ந்து இருப்போம்

அங்கு நாம் இருக்கும் தன்மையைக் கூறுக”

என்று அருளினார் பிறகு

திருவாத்தி மரத்தடிக்கு

இறைவர் சென்று அமர்ந்திருந்தார்.

3699.

சிறப்புடைய தவமுடைய சிறுத்தொண்டரால்

கங்கை நீர்ச்சடையானாகிய

சிவபெருமானின் அடியாரை

எங்கு தேடியும் காண இயலவில்லை

மீண்டும்

இல்லத்திற்கே வந்தார் சிறுத்தொண்டர்

அளவு கடந்த இன்ப மனைவியிடம்

அதனைக்கூறி வருந்தினார்

உடனே மனைவி –

“உலகமே அன்பு செலுத்தும் கோலமுடன்”

ஒருவர் வந்ததைக் கூறினார்

3700.

“அடியேன் பிழைத்தேன்!

அவர் எங்கு சென்றார் ? சொல்வாயாக”

என வினவினார்;

“வடித்த

கூர்மையான சூலமும் கபாலமும் ஏந்திய அவர்

யாம் வடநாட்டில் உள்ளோம்” என்றார்

வளமான உடுக்கையை

கையில் ஏந்திய வயிரவச்சங்கமர் சிவபெருமான்

“இங்கு இல்லத்தில் இருங்கள்” என்று சொல்லியும்

இங்கு தங்கி இருக்காமல்

கணபதீச்சரம் கோயிலில்

மணம் மிகுந்த திருவாத்தி மரத்தின்

நிழலில் இருக்கின்றார்” என்றார் மனைவியார்.

3701.

மனைவியார் கூறியது கேட்டதும் –

விருப்பம் எழுந்து சிறுத்தொண்டர்

விரைந்து சென்றார்

திருப்பாதம் பணிந்து நின்ற

அவரை நோக்கி –

“நீங்கள் தானா பெரிய சிறுத்தொண்டர் ! ”

என்று திருவாய் மலர்ந்து அருளினார்

உடனே சிறுத்தொண்டர்

தொழுது கூறியதாவது:-

3702.

“விபூதி அணிந்த திருத்தொண்டர்களின் முன்

துதிக்கவும் நான் தகுதியற்றவன்

எனினும் –

சிவனடியார்களின் கருணையினால்

அப்பெயர் எனக்கு உண்டானது

குற்றமிலாத சிவனடியாரை

உணவு உண்ணச் செய்வதற்காக

எமது குலம் வாழும் தலத்தில்

காதலாலே தேடி பார்த்தும்

இன்று

அடியார்கள் எவரும் காணவில்லை

முன்பு செய்த தவத்தால்

உம்மைக் கண்டேன்!”

3703.

“அடியேனது இல்லத்திற்கு

தாங்கள் எழுந்தருளி வரவேண்டும்

அமுது செய்ய வேண்டும்”

என்று கேட்டுக்கொண்டார் சிறுத்தொண்டர்

நெடிதுயர்ந்த திருமாலும் அறியஇயலாத சிவபெருமான்

தனது அடியாரிடம்

“விளங்கும் தவத்தை உடையவரே

உம்மைக்காணவே வந்தோம்;

வடநாட்டில் உள்ளோம்

எம்மை அன்புடன் உணவு உண்ணச் செய்ய

உம்மால் முடியாது; அந்தச் செய்கை சிரமமானது”

என்று பதில் மொழிந்தார்.

3704.

சிறுத்தொண்டர் உடனே –

“அடியேன் எண்ணிப்பார்க்காமல் கூறமாட்டேன்

கண் நிறைந்த அழகுடைய

நிறைந்த தவம் உள்ளவரே

தாங்கள் திருவமுது செய்யும் முறையினை

விரைவாகக் கூறி அருள்க;

நான் உடனே அவ்விதமே அமைப்பேன்

குளிர் கொன்றை மாலை சூடிய

இறைவரின் அடியார்கள் கிடைத்தால் –

தேடியும் கிடைக்காதது கூட கிடைத்துவிடும்

எனக்கு சிரமமானது இல்லை” என உரைத்தார்.

3705.

“அரியது இல்லை!

சிரமம் இல்லை” என்று சிறுத்தொண்டர் கூறியதும்

அழகு பொழிகின்ற

பெரிய

வைரவக் கோலத்துடன் வந்துள்ள சிவபெருமான்

அருளியதாவது :-

“நாம்

மூன்று இருதுக் காலம் எனப்படும்

ஆறுமாதம் கழிந்த பிறகு

ஒரு பசுவை வீழ்த்தி உண்ணுவது வழக்கம்

அப்படிப்பட்ட நாள்தான் இன்றைய நாள்;

அப்படி

உண்ணச் செய்ய உம்மால் இயலுமா?

அது உமக்கு மிகவும் சிரமமாயிற்றே ” என்றார்

( ஓர் இருது – இரண்டு மாதம்)

3706.

அதைக்கேட்ட சிறுத்தொண்டர்

“மிகவும் நல்லது

ஆடு -எருமை – பசு – என்கிற

மூன்று வகை இனங்களும் பெற்றுள்ளேன்

எனக்கு எக்குறையுமில்லை

எந்தத் தாழ்வும் இல்லை

நஞ்சு உண்ட சிவபெருமானின் அன்பருக்கு

அமுதம் ஆகின்ற

அந்தப் பசு எது எனக் கூறினால்

விரைவாக நான்போய்

உணவுக்குரிய காலம் தப்பாமல் வருவேன்” என

மொழிந்தார் கைகளால் தொழுதார்.

3707.

அடிமைப்பண்பு மிகுந்த சிறுத்தொண்டரின்

பரிவைக்கண்டார்;

பைரவராய் வந்த சிவபெருமான் –

“அடியாரிடம் மிகவும் அன்பு மிக்கவரே

நாம் உண்பதற்காகக் கொல்லப்பட வேண்டியது

மானிடப் பசுவாகும்!

ஐந்து வயதாகி இருக்க வேண்டும்

உறுப்பில் களங்கம் இல்லாமல் இருக்கவேண்டும்

அப்படி இருந்தால்

அதுவே யாம் உண்போம்

புண்ணிலே வேல் பாய்ச்சியதுபோல்

கூற வேண்டியது இன்னும் ஒன்று உள்ளது” என்றார்.

3708.

“எதுவும் இயலாதது இல்லை

தாங்கள் விரைந்து கூறி அருள்க”

என்று உரைத்த சிறுத்தொண்டரிடம்

சிவபெருமான் உரைத்தாவது:-

“ஒரு குடும்பத்துக்கு

ஒரு நல்ல சிறுவனாக

ஒரே மகனாக உள்ள அவனை

தந்தை நறுக்க வேண்டும்

தாய் அவனைப் பிடித்துக்கொள்ள வேண்டும்

இருவரும் இதனை

மனம் உவந்துசெய்ய வேண்டும்

இவ்வாறு குற்றமில்லாமல் அமைத்த

பிள்ளைக்கறியைத்தான்

யாம் உண்போம்” என உரைத்தருளினார்.

3709.

முதல்வர் சிவபெருமான்

மொழிந்ததைக்கேட்ட சிறுத்தொண்டர்

“எம் இறைவரான தாங்கள்

உண்ணும் பெருமையை மட்டும் நாங்கள் பெற்றால்

அடியேனுக்கு

இதுவும் அரிதான காரியம் அல்ல” எனக்கூறி

விரைவாக விடைபெற்றார்

மிக்க மகிழ்வோடும் காதலோடும்

அவரது தேன் பொருந்திய

மென்மையான

தாமரைமலர் போன்ற பாதங்களைப் பணிந்து

தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

3710.

அன்பு மிக்க

பெரும் கற்பு கொண்ட திருவெண்காட்டு அம்மையார்

வீட்டின் முன்பக்கம் வந்தார்

சிறுத்தொண்டர் வரவுக்காக

காத்து நோக்கியிருந்தார்

வந்ததும் –

முன்நின்று

மிக இன்பம் கொண்ட அவரது முகம் கண்டார்

அவரது திருவடிகளில் வணங்கி

பிறகு

கணவரது முகம் நோக்கி

பெருகும் தவம் கொண்ட

துறவியைப் பற்றி விசாரித்தார்.

3711.

வள்ளல் தன்மையுடைய

வள்ளலாராகிய சிறுத்தொண்டர்

மனைவியாரை நோக்கி

வந்திருந்த துறவியார் கூறியதை விவரித்தார்

“ஒரு குடும்பத்துக்கு ஒரு மகனாய்

ஐந்து வயது நிரம்பியவனாய்

உறுப்பில் குறைபாடு இல்லாதவனாய்

உள்ள பாலகனை

தாய் பிடித்துக் கொள்ள

தந்தை அரிந்து தர வேண்டும்

அதில் சமைக்கப் பெற்றால்

உணவு உண்ணச் சம்மதம்” என்று

இறைவர் தெரிவித்ததை தெரிவித்தார்.

3712.

விவரிக்கவும் இயலாத

அரிதான கற்புடைய மனைவியார்

அவரை நோக்கினார்

வணங்கி இவ்வாறு உரைத்தார்.

“பெருமையுடைய வயிரவத்தொண்டர்

அமுது உண்ண ஏற்றவிதமாக

உரிய முறைப்படி அமைத்தால்

அப்படிச் செய்தால்

ஒரு குடும்பத்துக்கு

மகனாகி வரும் சிறுவனைப் பெறுவது எப்படி?”

3713.

அதனைக் கேட்டுக்கொண்ட சிறுத்தொண்டர்

மனைவியின் முகம் நோக்கி

“இத்தகைய தன்மை கொண்ட

அவரது எண்ணம் நிறைவேற

நிதி கொடுத்து

உணவு உண்ண

சம்மதிக்கச் செய்பவர்கள் உலகில் இருக்கலாம்;

ஆனால் –

பெற்ற தனயனை

தந்தையும் தாயுமாக அறுப்பவர் இவ்வுலகில் இல்லை

எனவே இப்பிறவியில்

என்னை உய்யச் செய்வதற்கு

நீ பெற்ற மகனை

காலம் தாழ்த்தாமல் நாம் அழைப்போம்” என்றார்.

3714.

கணவர் இவ்விதம் கூறியதும்

அதற்கு உடன்பட்டார்

“எம் இறைவரின் தொண்டர்

இன்று

காலம் தாழ்த்தாமல் உணவு உண்ணவேண்டும்

மகிழ்ச்சி பொங்குகிற

அவரது திருமுகம் காண்பது நம் கடமை”

என்றார் திருவெண்காட்டு நங்கையார்;

அதனைவிரும்பவும் செய்தார்

கணவரைப் பார்த்து

“நம்மைக்காக்க வரும்

மணி போன்ற மகனை

பள்ளியில் சென்று அழைத்து வாருங்கள்” என்றார் –

செல்வம் போன்ற அந்த மங்கையார்.

3715.

காதல் மனைவியார்

கூறியதைக் கேட்ட கணவனார்

குற்றம் அகலப்பெற்று

எல்லாப் பெருமையும்

அந்த ஒரு கணத்திலேயே அடைந்தவர் போல –

இறைவனாகிய நாதனுக்கு

அமுது செய்யும் பணிபுரிவதற்கு

நல்ல

மென்மையான

மழலை மொழி பேசும் புதல்வன் பயில்கின்ற பள்ளியிலிருந்து

அழைத்து வர விரைந்து சென்றார் .

3716.

சிறுத்தொண்டர்

பள்ளியை அடைந்ததும் –

பாதத்தில் அணிந்த சதங்கை மணிகள் ஒலிக்க

ஓடி வந்தது பிள்ளை ;

தழுவிக் கொண்டார்

தோள் மீது வைத்து அணைத்துக் கொண்டு

மீண்டும் இல்லம் புகுந்தார்.

நற்குல மாதராகிய திருவெண்காட்டு நங்கையார்

வள்ளலாரான சிறுத்தொண்டர் முன்பு சென்று –

மைந்தனை வாங்கிக் கொண்டார்

3717.

பஞ்சும் அஞ்சக்கூடிய மென்மையுடைய

அந்த அம்மையார்

மெல்ல –

அந்த மைந்தனின்

தலை மயிரைத் திருத்தினாள்

முகம் துடைத்தாள்

கடுக்கனிலும் அரைஞாணிலும்

படிந்த தூசி போக்கினாள்

மகன் அணிந்திருக்கும் கலவைச் சாந்து

“அழிந்துள்ளதே” என வருந்தி

கண்ணில் அணிந்த மை

பிள்ளையின் கண்ணுள் சென்று விடாமல்

பரிவுடன் ஒதுக்கிவிட்டாள் —

அன்புடன்

திருமஞ்சனமாகிய நீராட்டு செய்து விட்டாள்

பிறகு –

குறையாத கோலமுடன்

பிள்ளையை

சிறுத்தொண்டரின் கையிலே கொடுத்தாள்.

3718.

திருத்தொண்டருக்குரிய கறி அமுது

அந்த மகன்தான் என்பதால்

புதல்வரின் உச்சி மோந்தாரே தவிர

மார்பில் அணைத்து

அந்தத்தாய் முத்தம் தரவில்லை.

குற்றமிலாத திருத்தொண்டராம் புனிதருக்கு

கறியை ஆக்குவதற்கான உள்ளமுடன்

அடுக்களை சென்று

வேறு தனியிடத்திற்கு கொண்டு சென்றார்.

3719.

ஒன்றுபட்ட மனத்தார் ஆகிய சிறுத்தொண்டரும்

அவரின் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும்

“உலகினரால்

இச்செயலின் இயல்பை அறிய இயலாது” என்று

மறைவான இடம் சென்றனர்

புகுந்தனர்

பிள்ளைதனைப் பெற்ற தாயார்

செழுமையான கொள்கலங்களை

நன்றாகக் கழுவி

எடுத்துக் கொண்டு சென்றார்

நல்ல மகனை எடுத்து

உலகியலை முற்றிலும் வென்ற தந்தையார்

பிள்ளையின் தலையைப் பிடித்துக் கொள்ள

மெய்யான தாயாகிய அந்த அம்மையார்

விரைந்து —

3720.

இனிய மழலையின்

ஒலி தருகின்ற கிண்கிணிக் கால்கள் இரண்டையும்

மடியின் இடையே இடுக்கிக் கொண்டார்

கொவ்வைக்கனி போன்ற வாய் கொண்ட

மைந்தனின் கைகள் இரண்டையும்

கையால் பிடித்துக் கொண்டார்

தம் பெற்றோர் —

“மிகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றார்கள்” என

மைந்தன் முகம் மகிழ்ந்து புன்னகைத்தது

ஒப்பிலாத பெருமையுடைய அப்பிள்ளையை

தந்தையராகிய சிறுத்தொண்டர்

வாள் கருவியால் அப்பிள்ளையின் தலையை அரியத் தொடங்கினார்.

3721.

“ஒப்பிலாத மகன்

மெய்த்தன்மையை எனக்குத் தந்தான்”

என மகிழ்ச்சி அடைந்தார் தந்தையார்

“கணவரின் அருமை உயிரை

மைந்தன் எனக்குத் தந்தான்” என்று

அகம் மலர்ந்தார் தாயார்.

இருவர் மனமும்

பெரும் உவகையில் பொருந்தியது

பெரும் மகிழ்ச்சியில் பொருந்தியது

அந்த அரிய செயலை

அவர்கள் செய்தனர்.

3722.

அறுத்தனர் மகனின் தலையை;

“தலை இறைச்சி உணவுக்கு ஆகாது” எனக் கழித்தனர்

அதை மறைத்து ஒதுக்குவதற்காக

சந்தனத் தாதியார் என்ற மங்கையின் கையிலே தந்தனர்

பிற உறுப்புகளின் இறைச்சியைக்

கொத்தி அறுத்து

எலும்பினுள்ளே உள்ள மூளைப்பகுதியைத் திறந்து

கறியாக்கத் தேவைப்படுகிற

பலவகையான காய் வகைகளைச் சேர்த்து

விரைவில் அமுது சமைத்தனர்.

3723.

மணம் கமழும் கூந்தலுடைய அம்மையார்

அதனைப் பாத்திரத்தில் இட்டார்

அடுப்பில் ஏற்றினார்

மனம் மகிழ்ந்து

சமைத்த கறியின் பக்குவம் பார்த்து

அடுப்பிலிருந்து இறக்கி

வேறோர் கலத்தில் மாற்றினார்

உரிய பண்டங்களால் தாளித்து

மேலும்

பல கறிகளும் சமைத்து

மிக விரைந்து சென்று “சமையல் முடிந்தது” என –

கணவருக்கு அறிவித்தார்

3724.

தம்மை ஆளாக உடைய நாதர்

தம்மை ஆளாக உடைய இறைவர்

திரு அமுது செய்ய

கேட்டபடியே செய்த மகிழ்ச்சி

முன்னைவிட இப்போது அதிகரித்தது

களிப்பு பெருகியது

காளை மீது வருகிற

சிவபெருமானின் தொண்டராகிய சிறுத்தொண்டர்

விரைந்து சென்று

மென்மையான பூக்களின் பக்கம்

வண்டுகள் ஒலிக்கிற

ஆத்தி மரத்தின் கீழே வீற்றிருக்கிற

தூயவரான வைரவர் முன் சென்றார்.

3725.

அண்ணலாகிய சிவபெருமான் முன்

சென்று சேர்ந்து வணங்கி

அன்பரான சிறுத்தொண்டர் மொழிந்தது இது :-

“அடியேனிடத்து எழுந்தருளி

தாங்கள்

அமுது செய்ய வேண்டுமென

அன்புடன் விரும்பினேன்

பரிவுடன் கேட்டேன்

தாங்கள் காலம் தாழ்க்க

காத்திருக்க நேர்ந்துவிட்டது என்றாலும்

தங்கள் ஆணைப்படி சமைத்தேன்

அடியவனின் எண்ணத்திற்கு வாய்ப்பு கொடுத்து

உணவு உண்ண எழுந்தருள வேண்டும்”

என எடுத்துரைத்தார்.

3726.

“சற்றும்

இனி காலம் தாழ்த்தாமல்

அமுது செய்ய வாருங்கள்”

என வணங்கியதும்

கழுத்தில் உள்ள நஞ்சினை மறைத்தபடி

நெற்றியில் உள்ள கண்ணினையும் காட்டாமல்

வந்த இறைவர் —

“நிறைகின்ற பெருமையுடைய சிறுத்தொண்டரே!

போதும் !” என அருளினார்

சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டும் பெற்றால்

எப்படி மகிழ்வு வருமோ

அப்படி மகிழ்ந்ததுபோல மகிழ்ந்தார்

உடன் அழைத்துக்கொண்டு

தம் இல்லத்துள் புகுந்தார்.

3727.

வீட்டில் நுழைந்ததும்

முன் வந்து எதிர்கொண்டு

மாதரசியார் வரவேற்றார்

முற்றிலும் அழகுபடுத்தப்பட்டிருந்தது இல்லம்

மணம் கமழ்ந்தன மலர்கள்

முத்தால் கட்டிய மாலைகள் தொங்கின

மணமுடைய மலர் மாலைகள் பரப்பியிருந்த

ஆசன இருக்கை அமைக்கப்பட்டிருந்தது

அமரும்படிச் செய்தார் மாதரசியார்

வயிரவ அடியாருக்கு

நீர் நிறைந்த கரகத்தை ஏந்தி நின்று

நீர் வார்த்தார்.

3728.

தூய நீரால்

இறைவரின் திருவடிகளை விளக்கினார்

அவ்விதம் பெற்ற புனித நீரால்

தனது தலைமீது

நிறையத் தெளித்துக் கொண்டார்

மேலும் அப்புனித நீரினை

இன்பம் மிக்க மனையின்

எல்லாப் பக்கங்களிலும் வீசி இறைத்து

மணமுடைய மென்மலர்களால் அர்ச்சித்து

சந்தனக்கலவை சாத்தி

தூப தீபங்கள் முதலான

பூசை விதிகள் யாவும் செய்து

வணங்கத் தொடங்கினார்.

3729.

குளிர்ந்த வெண்சந்திரன் சூடிய

விரித்த சடையுடன்

பூச்சூடிய தலைமுடியுடைய

வயிரவராகிய

புனிதர் சிவபெருமானை வணங்கி –

சோற்றையும்

கறிவகைகளும் பரிமாறும் விதத்தை

அழகிய மாதரசியும்

கணவரும் கேட்டுக்கொண்டனர்

“எமக்கு அருள் செய்ய வேண்டும்”

என்று வேண்டிக்கொண்டதும்

அவர் —

“இனிய அன்னமுடன் கறிவகையும்

ஒரு சேர பரிமாறுவீராக” என்று சொல்ல –

3730.

பண்பு விளங்க

உண்ணும் பாத்திரத்தை விளக்கி

அதனை

பாவாடை மேல் வைத்து

அமுது வகைகள் வெவ்வேறாக

நன்கு தெரியும்படி

நெல்லரிசியான செழும் அன்னமும்

கறி அமுதும்

வரிசையினில்

முன் வைத்துப் படைத்தார்

அந்தப் பரிகலத்தை எடுத்து

முக்காலி மேல் விரிக்கப்பட்ட

வெண் ஆடை மீது வைத்தபோது

குற்றமற்றவரான இறைவர் பார்த்தார்

அருள் செய்தார்

3731.

“யாம் சொன்ன முறையிலே

பகுத்த பசுவின்

தொடர்பான உறுப்புகள் எல்லாம் போட்டு

சுவையாக

சிறப்பாக சமைத்தீர்களா ! ” என்றார்

அன்னப்பறவை போன்ற அம்மையார் –

“தலை இறைச்சி

அமுதுக்கு ஆகாது என நினைத்து

அதனை ஒதுக்கி விட்டோம்” என்றதும்

“அதுவும் கூட நாம் உண்பதுதான்” என்றார்-

தொண்டர் வேடத்தில் வந்தருளும்

இடர் தீர்ப்பவரான சிவபெருமான்.

3732.

சிந்தை கலங்கியது சிறுத்தொண்டர் மட்டுமல்ல

மனைவியும் மனம் கலங்கினார்

அப்போது –

“அந்தத் தலையின் இறைச்சி

வரப்போகும் தொண்டர்

உணவு உண்ணும் போது

தேவையென நினைத்தால்

தேவைப்படக்கூடும் என்று எண்ணி

எச்சரிக்கையாய்

அதனை

கறி அமுது என செய்து அமைத்துள்ளேன்”

என்றாள் சந்தனத்தார் என்ற தாதியார்;

அதைகேட்டதும்

கலங்கிப்போனவர்களின்

முகம் மலர்ந்தது.

3733.

தலை இறைச்சியை வாங்கினார்

மகிழ்ந்து பரிமாறினார் சிறுத்தொண்டர்

வணங்குகிற சிறுத்தொண்டரை நோக்கி

“நாம் மட்டும்

தனியாக இங்கு உண்ண

எம்மால் இயலாது

சிவனடியார் எவரேனும் பக்கத்தில் உள்ளவரை

கொண்டு வருவீராக” எனப்பணித்தார்

சிறுத்தொண்டர் மனம் ஏங்கியது

“கெட்டேன் !

இவர் உணவு உண்ண

இடையூறு இப்படியா வரவேண்டும்” என நினைப்பாராகி –

3734.

இல்லத்தின் வெளியே சென்று

எங்கு தேடிப்பார்த்தும்

ஒரு அடியாரும் காணவில்லை

கிடைக்கவில்லை

மனம் அழிந்தார்

மீண்டும் வீட்டுக்கு வந்தார்

முகத்தில் வாட்டம் மிகுந்துகொண்டே இருந்தது

பெருகிய வாட்டத்தோடு

முதல்வராகிய சிவபெருமானிடம் சொல்லியதாவது :-

“இப்பூமியிலும் ஆகாசத்திலும் தேடி பார்த்தும்

சிவனடியார்கள் காணவில்லை

ஆனால் –

திருநீறு அணிபவர்களைக் கண்டபின்தான்

நானும் திருநீறு இட்டுக் கொள்வேன்”

என்று தாழ்ந்து வணங்கினார்.

3735.

“உம்மைப்போல

திருநீறு எவர் அணிய முடியும் !

நீங்களே என்னுடன் அமர்ந்து உண்பீராக” என்றார் வயிரவர்

உடனே

செம்மை பொருந்திய கற்பு கொண்ட

திருவெண்காட்டு அம்மையார்

உணவு உண்ணும் பாத்திரம் திருத்தி

விரும்பத்தக்க

இறைச்சியும் சோறும் ஆகிய

மற்ற பகுதியைப்

சிறுத்தொண்டருக்கு பரிமாறத்தொடங்கினார்.

இறைவரை உண்பதற்கு வேண்டிக் கொண்டு

சிறுத்தொண்டரும் உண்ணத் தொடங்கியதை

தடுத்து அருளி-

3736.

“ஆறுமாதம் கழிந்தபிறகு

யாம்

ஒருமுறை உண்ணுவது வழக்கம்

நீங்களோ ஒவ்வொரு நாளும் உண்பீர்

அப்படி இருந்தும்

நாம் உண்பதற்குமுன்

நீவீர் உண்ணத் தொடங்க என்ன காரணம்?

ஒப்பிலாத மகனை பெற்றிருந்தால்

அவனை

நம்முடன் உண்ண அழைப்பீராக” என்றார்

ஆதியும் அந்தமும் இல்லாத இறைவர்;

“அவன்

இப்போது உதவமாட்டான்” என

விடையளித்தார் சிறுத்தொண்டர்.

3737.

“அவன் இங்கு வந்தால் நாம் உண்போம்

அவன் வருகையை விரும்பி அழைப்பீராக”

என அருளினார் இறைவர்

“என்ன செய்தால்

இறைவரை அமுது உண்ணச் செய்ய முடியும்” என

ஏங்கித்துடித்த சிறுத்தொண்டர்

விரைவாய் எழுந்து

இறைவரின் ஆணை வழியில் நின்று

பூ முடித்த மென்குழலாள் ஆகிய மனைவியோடு

வீட்டின் வெளியே போய் –

“மகனே வா ! ” என அழைக்கத் தொடங்கினார்

3738.

உலகில் நிலைபெறும் புகழுடைய சிறுத்தொண்டர்

“மைந்தா வருவாய்” என அழைத்தார்

தலைவரின் ஆணைப்படி

அவர் சொல்வதை தலையால் ஏற்ற அம்மையாரும்

“சிவந்த மணியே சீராளா

நாம் உய்வதற்காக

உடனிருந்து உண்பதற்கு சிவனடியார் அழைக்கின்றார் !

வா !” என ஓலமிட்டார்.

3739.

பரமர் அருளால்

பள்ளிக்கூடத்திலிருந்து ஓடி வருபவன்போல

எதிரே ஓடி வந்த

ஒப்பிலாத அழகு கொண்ட மகனை

அம்மையார் எடுத்துத் தழுவிக்கொண்டார்

தம் கையால் முன்பு அணைத்து

கணவரின் கையில் தர

“முப்புரம் எரித்த இறைவனின் தொண்டர்

உணவு உண்ணும் பெரும் பேற்றைப் பெற்றோம்”

என்று மகிழ்ந்தார் சிறுத்தொண்டர்.

3740.

அவ்விதம் வந்த மகனை

விரைவாக அழைத்துக் கொண்டு

இறைவரை உண்ணச் செய்வதற்காக வந்தார்

அதற்கு முன்பே

வயிரவராக வந்த முதல்வர்

அங்கிருந்து மறைந்து அருளினார்

அவரைக்காணாமல் சிந்தை கலங்கினார்

திகைத்தார் விழுந்தார்

உள்ளம் அழலப் பெற்றார்

வெந்த இறைச்சிக்கறி அமுதும்

பரிகலத்தில் காணவில்லை; திடுக்கிட்டார்.

3741.

சிவந்த மேனியும்

கரிய தலைமுடியும்

செழிய போர்வையும் கொண்ட வயிரவர்

“நாம் உய்யும்படி

உணவு உண்ணாமல் எங்கே ஒளிந்தார்” என்று தேடி

மயங்கி வெளியே வந்தார்

மறைந்த வயிரவர்

மலைமகளான உமையுடன்

சரவணப்பொய்கையில் வளர்ந்த திருமகனான

முருகப்பெருமானுடன் தோன்றினார் –

3742.

சிவபூதகணங்களும்

முனிவர்களும்

தேவர்களும்

வித்தியாதரரும்

துதி செய்திட

நீண்ட வான்வெளியில் தோன்றிய சிவபெருமான்

ஒப்பிலாத காளை மீது எழுந்தருளினார்

கறி அமுது அளித்த அவர்கள் காணும்படியாக

குளிர் வெண் சந்திரன் சூடிய திருமுடி அசைய

பரந்த கருணையின் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

3743.

இறை மீது செலுத்திய அன்பின் சக்தியால்

பாச உலகை வென்ற சிறுத்தொண்டரும்

அவருக்கேற்ப அமைந்த மனைவியும்

மைந்தரும்

தம்முன்பு தோன்றுகின்ற

பெருவாழ்வான சிவபெருமானின் காட்சியைக் கண்டு

தம் வசமிழந்து பரவசமாயினர்.

எலும்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார்

எழுந்தார் துதித்தார்

பின்பு

அவர்களுக்குள்ள தகுதியால்

பரமராகிய சிவபெருமான் அருள் புரிந்தார் –

3744.

கொன்றை மலர் சூடிய

சடை உடைய சிவபெருமானும்

அவரது ஒரு பாகம் கொண்ட

குலக்கொடியான உமை அம்மையாரும்

வெற்றி பொருந்திய

நீண்ட வேல் ஏந்திய மைந்தரான முருகப்பெருமானும்

தமது

மணமுடைய தாமரைமலர் சேவடிகளின் கீழே

விழுந்து எழுந்து துதிக்கும் சிறுத்தொண்டரையும்

அவர் மனைவியாரையும்

நீண்ட புகழ் மிக்க மைந்தனையும்

சந்தனத் தாதியாரையும் கண்டு

என்றும் பிரியாமல் வணங்கியிருக்கும்படி

தம்முடன் சிவபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்

.

3745.

கங்கை ஆற்றினை

சடைமுடி மேல் அணிந்த

இறைவருக்கு அடியவர் என்று

கறி அமுதாக

களங்கமில்லாத

ஒப்பிலாத

தனது புதல்வனையே அரிந்து

அங்கு அமுது ஊட்டியவரும்

அப்பெரும் பேற்றைப் பெற்றவருமாகிய

சிறுத்தொண்ட நாயனாரின் திருவடிகளை

எம் தலை மீது வைத்துக் கொண்டு

மற்ற உயிர்கள் எல்லாம்

வேறு வேறாகப் பேசும் மொழிகளையெல்லாம்

அறியும் தன்மையால்

“கழறிற்றறிவார்” எனும் பெயர் பெற்ற பெருமையை

தொழுது விளம்ப ஆரம்பிப்போம்.

(சிறுத்தொண்ட நாயனார் புராணம் முற்றிற்று)

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்