பெண் மொழி ≠ ஆண் மொழி

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

முனைவர் மு.பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.


எழுதும் எழுத்துகளில் வேறுபாடு இல்லை. ஆனால் எழுத்துகள் கூடி உருவாகும் படைப்பில் பால்வேறுபாடு காண இயலும். ஆண்கள் எழுதும் படைப்புகளில் அவர்களின் தனித்த மேலாதிக்க நிலையையும், பெண்கள் எழுதும் படைப்புகளில் பெண்களின் சொந்த உணர்வு வெளிப்பாட்டு நிலையையும் இனம் காண முடியும். இனம் காணப்படும் பெண் எழுத்துகளுக்களின் சிறப்புக் கூறுகள் பெண் மொழியின் அடிப்படைகளாக அமைந்து அவை மேலும் வளர்த்தெடுக்கப்படும் சூழலில் தனித்த மொழியாக ஆண் உட்புகமுடியாத மொழியாக ஆண் சார்பற்ற மொழியாக பரிணமிக்க இயலும். இந்தப் பரிமாணத்தின் மூலம்¢ பன்னெடுங்காலமாக இருந்து வந்த ஒரு தலை பக்க இலக்கிய படைப்பு, திறனாய்வு முயற்சி உடையும். பெண்ணுக்கான கட்டற்ற மொழி உருவாகும்.

இவ்வகையில் உலகஅளவில் பெண் மொழி¢ இருந்ததற்கான ஒரு காட்டு இருக்கிறது. சீனா நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலப்பரப்பு ‘‘ஜியாங்காங்’’ என்பதாகும். இங்கு பெண்கள் மட்டுமே பேசும் ஒரு மொழி உண்டு. அதற்குப் பெயர் ‘‘நுஷ¨’’ ( NUSHU) என்பதாகும். பெண்மொழி அல்லது பெண்பிரதி என்பது இதன் பொருள். இது பெண்கள் தமக்குள்ளே ரகசியமாகப் பேசிக் கொள்ளும் மொழியாகும். ஆண்கள் இதனை அறிந்து கொள்ள முடியாது. படிக்க முடியாது. பயில முடியாது. சீன மொழியோடு தொடர்புடைய ஆனால் அதிலிருந்து மாறுபட்ட ஒரு மொழி இம்மொழி. இது தோன்றுவதற்கு அங்கு நிலவிய சூழல் காரணமாக இருந்தது. இம்மொழி காலம் காலமாக பெண்களிடம் ஒரு தலைமுறையினரால் மறு தலைமுறைக்குப் பரவியது. இந்த மொழி பற்றிய ஆராய்ச்சி 1982 ஆம் ஆண்டில் ‘‘கோங்ஜிமிங்’’ என்ற சீன மொழி ஆசிரியரால் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. ஆனால் இந்த காலத்திலேயே இம்மொழி அழியும் நிலையை எட்டிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் கல்விப் பரவல் இந்த ரகசிய மொழியைத் தடைசெய்து பொதுமொழிக்குப் பெண்களை அழைத்துச் சென்றுவிட்டது.
இந்த பெண்மொழிச் சோக வரலாற்றைக் கேட்கையில் தமிழ் மொழி குறித்தும் பலவகையில் எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மொழியில் உள்ள தடைப்பட்ட பெண் இலக்கிய மரபு தனக்குள் சொல்ல வேண்டிய பெண்செய்திகள் பலவற்றை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி. சங்ககாலம், அதனைத் தொடர்ந்து பக்தி காலம் அதனைத் தொடர்ந்து நவீன இலக்கிய காலம் என்று வளர்ந்த சில பெண் படைப்புக் கள மிளிரல்களில் காணலாகும் பெண்மொழிக் கூறுகள், அவை மறைவாகத் தத்தமக்குள் சொல்லிக் கொள்ளும் பொருள்கள் இவற்றை இனம் காணவேண்டிய ஆராய்ச்சி இக்காலத்தில் தேவை என்பதை மேற்காணும் பெண்மொழிச் சான்று தமிழ் பெண் மொழி ஆய்வாளர்களுக்கு உணர்த்துகிறது.

சீனா மொழியின் அடிப்படையிலேயே இருந்து கொண்டு அதிலிருந்து வேறுபட்டுச் செய்யப் பட்ட நுஷ¨ மொழி போலவே தமிழ் மொழியில் இருந்து வேறுபடும் பெண்மொழி இயல்பு அடிப்படைகளை இனம் காணும் போக்கிற்குத் தற்போதைய பெண்ணியத் திறனாய்வுகள் வளரவேண்டும். இந்த ஆய்வால் தலைமுறை தலைமுறையாக தடைபட்டாலும் அழியாமல் வளர்ந்து வந்த பெண் இலக்கிய மரபை, பெண் மொழி இயல்பை காண இயலும்.

இவ்வகையில் பெண் மொழி இயல்பைச் சற்றே உரசிப் பாரப்பதாக இக்கட்டுரை அமைகிறது. பாவைப் பாடல்கள் என்ற இலக்கிய வகைமை பெண்கள் மட்டுமே பாடிக் கொள்ளக் கூடிய இலக்கிய வகைமை ஆகும். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய ஒரு வாழ்க்கை முறையும் ஆகும். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளை முன்வைத்து எடுக்கப் பட்ட இந்நோன்பு முறை பெண்கள் தமக்குள் இணைந்து கொள்ளக் கூடிய நன்முறையை உடையது. ஆண்டாளால் படைக்கப் பெற்ற திருப்பாவை இவ்வகைமையுள் தலையாயது.

மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இவ்வகைப் பட்டது என்றாலும் பாடியவர், பாடிய பாடல்களின் எண்ணிக்கை இவற்றால் இது முற்றிலும் மாறுபட்டது. இப்பிரதியில் பெண்ணுக்குரிய வகைமையை ஓர் ஆண் தன் கையகப்படுத்திக் கொள்கிறார். திங்கள் முழுவதும் பாடப்படவேண்டிய முப்பது பாடல்களுக்குப் பதிலாக இருபதை இவர் படைத்துக் குறைத்துக் கொண்டுள்ளார். திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைத் தற்போது இந்தப் பத்து நாட்களுக்கும் பாடும் முறைமை உள்ளது.

பொதுவாக இலக்கிய வரலாறுகள் கருதும் காலமுறைப்படி ஆண்டாள் முன்னவராகவும், மாணிக்கவாசகர் பின்னவராகவும் கொள்ளப்படு¢கின்றனர். இதன்வழி ஆண்டாளை நோக்கி மாணிக்கவாசகர் பாவைப் பாடல்களைப் புனைந்திருக்கலாம். ஆண்டாளின் வாழ்¢க்கை முறை அதாவது கடவுளை அடைந்த முறை இவரைப் பெரிதும் கவர்ந்ததின் மூலம் அதே வாழ்க்கை முறையை இவரும் கைக்கொள்ளக் கருதி¢ இறைவனை நாயக நாயகி பாவத்தில் காணும் போக்¢கில் இவர் பெண்ணாய் தன்னை உருவகப் படுத்திக் கொண்டு படைப்புகளை புனைந்திருக்கவேண்டும் என்ற கருத்து மாணிக்கவாசகர் படைப்புகளைக் காணுகையில் ஏற்படும் பொதுக் கருத்தாக உள்ளது. இவ்வகையில் பெண் பாடிய திருப்பாவை, ஆண் பாடிய திருவெம்பாவை என்ற இரண்டையும் இணைத்து ஆய்வு மேற்கொண்டால் இருவர் பாடிய செய்யுள் மொழியில் வேறுபாட்டைக் காண முடியும். இந்த வேறுபாடு பால்வேறுபாடாக அமைந்து பெண்மொழிக் கூறுகளை வெளிப்படுத்தும்.

இதனடிப்படையில் இரண்டு பிரதிகளில் இருந்தும் ஒவ்வொரு பாடல் மட்டும் இக்கட்டுரையில் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
( திருப்பாவை.29)
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம்¢கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
எம்கை உனக்குஅல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப்¢ பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவை.19)

இவ்விரண்டு பாடல்களும் ஏறக்குறைய ஒரு பொருளின. பாவை நோன்பின் முடிவில் அருள் வேண்டும் திறத்தன. இவற்றை ஒப்புநோக்கிக் காணும் போது சில பால் வேறுபாட்டு எழுத்துகள் இருப்பதை உணரமுடியும்.

1. தன்னைக் காத்துக் கொள்கிற தொடர்கள், 2, அடக்கத் தொடர்கள், 3. தொடர் கேள்விகள், 4. சாய்வுக் கூற்று முறை (நேர் கூற்றாகக் கூறாமை), 5.செயற்கை பெயரடை, 6. தூய்மையான இலக்கணம் பிறழாத சொல்லாட்சி, 7. நகைப்பண்பு இல்லாமல் இயல்பாய்க் கூறும் முறை, 8. சிறப்பான தனித்த சொல்லாட்சிகள், தொடர்கள் முதலான பண்புகள் பெண்படைப்புகளுக்கு உரிய பண்புகள் என்று ஓர் ஆய்வாளர்[1]¢ காட்டுகிறார்.

சிறப்பான சொல்லாட்சிகள் என்ற பண்பு பெண்மொழிக்குரிய பண்பாகும். மற்றையவை ஆண்களில் இருந்து பெண் படைப்பை வேறுபடுத்துவன என்றாலும் அவை பெண்ணை அவளின் படைப்பை ஒரு வரையறைக்குள் அடக்கத் தக்கன. இவ்வாறு அடக்கமான மொழியைப் பெண்கள் படைப்பு மொழியாகக் கையாளுவதற்கு அவர்கள் வாழ்ந்துவரும் சூழல் மிக முக்கிய காரணமாகும்.

‘‘எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம்’’ என்ற ஆணின் உரிமைக் குரலைப் பெண் எழுத்தில் காண இயலாது. ‘‘சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் ’’ என்று அடக்கியே வாசிக்க வேண்டிய கட்டாயம் பெண் வாழ் சூழலாக இருந்ததால் அவள் உரிமையோடு கடவுளைக் கேட்க முடியவில்லை. போற்றும் காரணம், போற்றிப் பெறப்போகும் வரம் என்றெல்லாம் கேட்காமல் பொருள் எனக் கூறியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

‘‘சேரற்க, செய்யற்க, காணற்க’’ என்ற வாழ்க்கைக் கட்டளைகளை ஒரு பெண் நேரடியாக அறிவிக்க இயலாது. இங்கு மாணிக்கவாசகர் பெண் உருவில் வந்த ஆண் என்பதால் அவரால் கட்டளையிட்டுத் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடிகிறது. சூரியன் எத்திசையில் உதித்தால் என்ன இவை நல்கினால் போதும் என்ற அளவில் இயற்கையைக் கூட அவரால் எடுத்தெரிந்து பேசிவிட முடிகிறது. ‘‘எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் ’’ என்று தயவான முறையில் இறைவன் ஏற்றாலும் ஏற்கா விட்டாலும் பணி செய்வது தம் கடமை என ஆண்டாள் பாடியுள்ளார்.

பெண் படைப்பின் அடையாளமாகக் காட்டப் பெற்ற மற்ற இயல்புளும் ஆண்டாளின் பாடலில்¢ காணப்படுகின்றன. என்றாலும் பெண்பாலுக்குரிய தனித்த சொல்லாட்சிகள் தொடர்கள் சிலவும் உள்ளன. ‘‘மற்றை நம் காமங்கள்’’ என்ற தொடராட்சி அவ்வகையில் சிறந்தது. காமம் என்ற சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி தரும் பொருள்கள் பின்வருமாறு[2] அன்பு, ஆசை, புணர்¢ச்சி இன்பம், சிற்றின்ப ஆசை, விருப்பம், ஆசைப் படும் பொருள், குடி, கிராமம் போன்ற பல. இ¢வையனைத்தையும் தாங்கி நிற்கிறது இந்தச் சொல். இதில் எந்தப் பொருள் கொண்¢¢டு இங்கு ஆளப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டியுள்ளது. இதற்கு உரையாசிரியர்கள் விருப்பங்கள்¢ என்ற மேலோட்ட பொருளைச் சொல்லிவிடுவார்கள். உரையாரிசியர்கள், அகராதியாளர் சொல்லும் எல்லாப் பொருளையும் தாண்டி ஆண்டாள் கொண்ட பொருள் வேறானது.

காமம் என்பதற்காகன காமங்கள் என்ற பன்மைமுடிவு தமிழ் மரபில் புதியது. ‘‘மற்¢றை நம் காமங்கள் ’’ என்ற குறிப்பும் இங்கு எண்ணத்தக்கது. பன்மைகள் என்பது பெண் எழுத்தில் காணப்படும் பொதுப்பண்பாகும்.[3] காமம் என்ற சொல்லை ஒரு ஆண் சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் பெண் சொல்லத் தயங்¢குவாள். அப்படிப்பட்ட நிலையி¢ல் தனக்கான காமங்கள்¢ என்பதைவிட நம்எல்லார்க்குமான காமங்கள் என்ற சொல்லாட்சியை ஆண்டாள் பயன்படுத்தியிருப்பது மிகவும் வேறுபட்ட ஒன்றாகும். உனக்கு நாங்கள் ஆளாவோம். அடிமைத் தொழில் செய்வோம் என்ற தொடரின் முடிவாய் இதனோடு உன்னைக் கணவனாகப் பெற்று உன்னோடு நாங்கள் வாழும் வாழ்க்கை அனைத்தையும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையில் உரைப்பதாக இத்தொடர் உள்ளது. இத்தொடரின் இச்சிறப்பு கருதி இது பெண் மொழியின் சிறப்புக்கூறாகக் கொள்ளலாம்.

முடிவாக திருப்பாவை, திருவெம்பாவை இவையிரண்டும் பெண் மொழி ஆண்மொழி என்பதற்கான ஒப்பீட்டுக் களமாக விளங்குகிறது என்பது தௌ¤வு. மேலும் திருப்பாவை பெண்இலக்கியம் என்றநிலையிலும், வகையாலும், வடிவாலும் முழுமையும் நிறைவும் பெற்று பெண்மொழிக்கூறுகள் அடங்கியதாகவும் உள்ளது. ஆண்மொழி பெண்மொழி இவையிரண்டும் சமமானவை அல்ல. ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை.
குறிப்புகள்

——————————————————————————–

[1] The following ten features have been identified as “Women’s Language” (based on: Lakoff 1975): Hedges, polite forms, Tag questions, Speaking in italics, Empty adjectives, Hypercorrect grammar and pronunciation, Lack of a sense of humour, irect quotations, Special vocabulary, Question intonation in declarative contexts
[2] கழகத் தமிழ் அகராதி, ப.323

[3] Key, Mary. “Linguistic Behavior of Male and Female.” In Readings in Applied Linguistics , 3rd ed., ed. Harold B. Allen and Michael Linn. New York : Alfred A. Knopf, 1982. 284.Mary Key cites Roger Shuy’s finding that women are less likely to use syntactic features which are “indicators of lower status: multiple negation, pronominal apposition, plurals, non-standard third person singular verb inflections, and possessives” (“Behavior” 284).

palaniappan

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்