பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

முனைவர்அ.குணசேகரன்,

முனைவர்அ.குணசேகரன்,
தமிழ்இணைப்பேராசிரியர்,

அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும் வேறுபட்ட பொருள் நிலைகளைக் கொண்டிருந்தாலும் பெண்ணைப் பற்றியவை என்பதால் ஒன்றுக் கொன்று தொடர்புடையனவாக, பிரித்தரிய முடியாதனவாக விளங்குகின்றன.
பெண்ணடிமை என்பது சமூகத்தில் பெண்களின் இருப்பைக் குறிக்கும். பெண் விடுதலை என்பது வாழ்வின் நோக்கம். பெண் உரிமை என்பது விடுதலை அடைவதற்கான வழிமுறை. பெண் தனக்கான உரிமையை உணர்ந்து அதன்படிச் செயல்படத் தொடங்கும்போது அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் சுதந்தர வாழ்வை மேற்கொள்ள முடியும். இதனைக் கருத்தியல் பின்புலங்களோடு ஓர் இயக்கமாக, கோட்பாடாகக் கொண்டிருப்பது பெண்ணியம். இந்த இயக்கத்தின் துணையுடனோ துணையின்றியோ பெண்தன் உரிமையை நிலைநாட்ட முடிகிறது. பெண் அப்பணியை மேற்கொள்ளும் போது அவள் சார்ந்துள்ள நிறுவனங்களிலிருந்து பல்வேறு சிக்கல்களையும் இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
சுருங்கக் கூறுவதாயின், ஒரு பெண் அடிமைத் தளையில் கட்டுண்டு இருக்கும்போது எத்தகைய சிக்கல்களும் நேருவதில்லை. உரிமைக் கோருதல், அதற்கான செயல்களைத் தொடருதல் என்ற நிலையில்தான் அனைத்து வகையான விளைவுகளும் ஏற்படுகின்றன. இவற்றை அறியும் முன்பாகப் பெண்ணுரிமை என்பதற்கான விளக்கத்தினையும், அக்குரல் எழுந்த சூழல் குறித்தும் அறிவது ஈண்டு அவசியமாகின்றது.
பெண்ணுரிமை என்பது தனிமனித உரிமைக் கோரல் என்பதோடு தொடர்புடையது. பெண்ணுரிமை என்பதற்கான வரைவினை நிலவுடைமைச் சமுதாயத்தின் தோற்றத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலை வரையிலான வரலாற்றின் மூலமாகப் பெற வேண்டியுள்ளது. மனிதன் ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து நிலவுடைமைச் சமுதாயத்திற்கு மாறிய போது வாரிசுரிமையை நிலைநாட்டல் என்ற சமூகத் தேவைக்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகத்தான் குடும்ப அமைப்புப் பார்க்கப்படுகின்றது. இதன் தொடக்கக் கட்டத்தில் ஆண் பெண் இருவருக்குமான பணிப்பகிர்வு என்பது ஓரளவு சமநிலையில் விளங்கியுள்ளது. ஆண் உற்பத்தியில் ஈடுபடுவதும் பெண் உற்பத்தியானவற்றைப் பேணுவதுமாக இருந்தபொழுது குடும்ப அமைப்பின் செயற்பாடு ஒரு சீரான கட்டுக்குள்ளிருந்ததாக மானிடவியல், சமூகவியல் அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இக்காலக்கட்டத்தில் தன் உழைப்பின் முக்கியத்துவத்தைஉணர்ந்த ஆண், அதன் பாத்திரமாகத் தானே விளங்குவதால் ‘குடும்ப அதிகாரம்’ என்பதைத் தனதாக ஆக்கிக் கொண்டான். அதில் அவனுக்குக் கிடைத்த பயன் சார்ந்த அனுபவம் காரணமாகத் தொடர்ந்து அவ்வதிகாரத்தை நிலைநாட்டவும் கடைப்பிடிக்கவும் செய்தான். அதனை விதியாக்க வேண்டிய அவசியத்தையும் உணரத் தலைப்பட்டான். மதம், பண்பாடு போன்ற நிறுவனங்களின் உருவாக்கமும் அவற்றின் பங்களிப்பும் அதற்குத் துணை புரிந்தன. இங்கு, பெண் ஆணைப் பேணுபவளாகவும் அவனுடைய குழந்தைகளைப் பேணுபவளாகவும் மொத்தத்தில் குடும்பப் பணியாளாகவும் மாற்றப்பட்டாள்.
“என்றைக்குத் தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமண முறையும் ஏற்பட்டிருக்கிறது. பொருள்தேடிச் சேமித்து வைக்கும் பழக்கம் ஏற்பட்ட பிறகுதான் சேமித்து வைத்துள்ள பொருள்களைப் பாதுகாக்கவும், தனக்குச் சிரமபரிகாரம் செய்யவும் ஓர் ஆள் தேவையாயிருந்தது. அத்தேவையை நிறைவேற்றும் இடத்தில் பெண் இடம் பெற்றாள். முதலில் ஒரு பெண் ஒருவனது சொத்துக்குப் பாதுகாப்பாக அமைந்த பிறகு அவனுக்குரிய சொத்துக்களில் ஒன்றாகவும் ஆனாள். ஆண் தன் சொத்துகளுக்கு வாரிசு தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்ட காலத்தில்தான், தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் அவளைத் தன்னையன்றி வேறு ஆடவனை நாடாமல் இருக்கும்படிச் செய்யக்கூடிய கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. மனித மனநிலை இப்படித்தான் இருக்கும். தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப் போகும் வாரிசு தனக்கே பிறந்ததாக, தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையின் பாற்பட்டதேயாகும். எனவே பெண் அடிமையாக்கப்படவும், அவளது இயற்கை ஆதிக்கம் பறிமுதல் செய்யப்படவும், ஆணுக்கு மட்டுமே சொத்துரிமை கொடுக்கப்பட்டதுதான் காரணமாகும்” என்று பெண் அடிமைப்பட்ட வரலாற்றை விவரிப்பார் பெரியார்.
“சமூகத்தின் உற்பத்திசார்ந்த உழைப்பிலிருந்தும் இல்லங்களில் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான பணிகளிலிருந்தும் அவர்கள் தள்ளி வைக்கப்பட்டனர். ஆணின் நுகர்ச்சிக்கும், அவர்களுக்குரிய வாரிசுகளைப் பெற்றுத்தரவும் அவர்களுக்குத் தனிப்பட்ட சேவைகளைப் புரியவுமே பெண்கள் உரிமை கொள்ளப்பட்டனர்” என்னும் கருத்து ஈண்டுக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். காலவோட்டத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள், அறிவுத் திறனில் ஏற்பட்ட மேம்பாடுகள், கல்வி வளர்ச்சி இவற்றின் காரணமாக நிலவுடைமை அமைப்பானது சில படிநிலை வளர்சிகளையும் மாற்றங்களையும் சந்தித்தது. பண்ட மாற்று வணிகம், தரகு முதலாளித்துவம், முதலாளித்துவம் போன்றவற்றைச் சான்றாகச் சுட்டலாம்.
அறிவியல் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த சமூக அமைப்பில் உழைப்பின் பாத்திரமாகப் பெண்ணும் இருக்கின்றாள். பெண்ணை உழைப்பின் பாத்திரமாக அனுமதித்த ஆண் சக்திகள் அதிகாரத்தை மட்டும் தன் கட்டுக்குள்ளேயே இருக்குமாறு பார்த்துக்கொண்டன. இப்பணி கணவன் என்னும் ஆண் மூலம் மிக எளிதில் நிறைவேற்றப்பட்டது. “ஆண் தலையெடுத்த சமூகத்தின் பிரதிநிதியே கணவன்” என்னும் கூற்று ஈண்டு மனதில் கொள்ளத் தக்கது. தேவைக்காக அறிவியல் தொழில்நுட்பப் புதுமைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகத்தில், ஆண் தன்அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக நிலவுடைமைச் சமுதாயத்தில் நிலவிய மதக் கோட்பாடுகள், நெறிமுறைகள் ஆகியவற்றை விட்டொழிக்காமல் தொடர்ந்து பின்பற்றினான்; பின்பற்றவும் செய்கின்றான். இதுவொரு சமூக முரண்பாடாகும்.
மரபுக்கும் நவீனத்திற்கும் இடையே இத்தகைய முரண்பாடுகள் வலுப்பெறுகின்ற நிலையில்தான் பெண் இரட்டைச் சுமைக்கு ஆளாகின்றாள். உற்பத்திக்கான உழைப்பில் ஈடுபடுவதோடு குடும்பத்திற்குள்ளும் உழைக்க வேண்டியிருக்கிறது இதனால் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு இடையறாது உழைப்பவள் பாராட்டப்படுகின்றாள். இல்லையெனில் அவள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். இந்நிலைப்பாட்டைப் பின்வரும் கூற்றுக்களோடு ஒப்புநோக்கின் இதன் நுட்பத்தை அறியலாம். “குடும்பத்திற்காக இரவு பகலாக உழைப்பவளே நல்ல பெண் என்று போற்றப்படுகின்றாள். அடிமைத்தனமே சிறந்த குணாம்சமாகப் பாராட்டப்படுவதைக் குடும்பங்களில் காணலாம்” என்றும் எதிர்ப்புக் காட்டாது கிடைக்கும் கூலியைப் பெற்றுக் கொண்டு உழைக்கும் தொழிலாளியை முதலாளி நல் தொழிலாளி என்று கூறுவது போல, எதிர்ப்பின்றி அடங்கி ஒடுங்கி நாள் பூராவும் உழைக்கும் மனைவியே நல்ல மனைவி என்று பெயர் பெறுகின்றாள். நல்ல அடிமையின் மறுபெயர் நல்ல மனைவி என்றும் பெண் அடிமைப்பட்ட நுட்பத்தை விளக்குவர்.
தன்னையும் தன் உழைப்பின் மதிப்பையும் உணர்ந்த பெண் இத்தகைய பொய்மைப் பாராட்டுக்களில் உழன்றுக் கொண்டிருக்க மாட்டாள். இந்த இரட்டைச் சுமைதான் அவளுக்கான செயல் தளத்தில் புதிய சிந்தனைகளைத்தோற்றுவிக்கின்றன. தான்பெற்ற கல்வியறிவினாலும் உலகியல் உணரும் திறத்தாலும் இரட்டைச் சுமைக்கான காரணத்தை உணர்கிறாள். மேலும், தனக்கிருக்கின்ற கூடுதல் பளுவைக் குறைத்துக் கொள்ளவும் அதற்குத்தடையாயிருக்கின்ற ஆண், அவன் ¨கீயளுகின்ற நிறுவனங்கள் இவற்றினின்று மீண்டு, தன் இருப்பை நிலை நாட்டவும் விழைகின்றாள். எனவே, பெண் தன்னுடைய அறிவு, செயல்திறன் இவற்றின் இயல்புகளை உணர்ந்து இவற்றுக்குரிய மதிப்பைச் சமூகத்தில் நிலைநிறுத்தி அதனைப் பெறுவதற்கான ஒரு செயல்முறையையே பெண்ணுரிமை என்பதற்கான வரையறையாகக் கொள்ளலாம்.
இராம் அகூஜா என்னும் சமூகவியல் அறிஞர் இந்தியச் சட்டப்படி பெண்ணுக்கான உரிமைகளை மூன்று நிலைகளில் வகைப்படுத்துகின்றார். அவை சமூக உரிமை, பொருளாதார உரிமை, அரசியல் உரிமை ஆகியன. அம்மூன்றிலும் சமூக உரிமையின் கூறுகளாகக் கருதப்படும் சமத்துவம் காதல் உரிமை அல்லது வாழ்க்கைத்துணைத் தேர்வு உரிமை கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை பாலியல் உரிமை போன்றவற்றைக் குடும்பத்திற்கு உள்ளிருந்துதான் கோர வேண்டியுள்ளது. இவற்றைக் கணவனோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ மதித்துப் போற்றுவதில்லை. போற்றாத சூழலில் பெண் மீறிச் செயல்பட வேண்டிய தேவை எழுகின்றது. அவள் தன்போக்கில் செயல்படும்போது முரண்பாடுகள் வளர்கின்றன. இம்முரண்பாடுகளின் இறுதிக்கட்டம் குடும்பச் சிதைவாக அமைகின்றது. சமத்துவ உரிமை, வாழக்கைத் துணைத் தேர்வு உரிமை, பாலியல் உரிமை, கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை, இவற்றுடன் பொருளாதார உரிமைகளை ஒரு பெண்குடும்பத்திற்குள் இருந்துகொண்டு பெற முற்படும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.
சமூகத்தில் ஆணுக்கு அளிக்கப்படுகின்ற வாய்ப்புகள், சலுகைகள் பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் தவிர ஏனைய இடங்களில் பெண் ஆற்றுகின்ற பணி ஆணின் பணியைவிடக் கூடுதலாக இருப்பினும் வழங்கப்படுகின்ற ஊதியத்திலும் பிற சலுகைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை இனங்கண்டு அவற்றைக் களைந்து சமநிலையை நிலைநிறுத்தும் பணியை மகளிர் பல நிலைகளில் மேற்கொண்டுள்ளனர். பல்வேறு அமைப்புக்கள், இயக்கங்கள் இப்பணியை மேற்கொண்டுள்ளமையைத் தமிழ்ச் சூழலில் காண முடிகின்றது.
ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து, கணவன் மனைவியரிடையே சமநிலையை நிலை நிறுத்துதல் என்பது, குடும்ப உறுப்பினராக விளங்கும் ஒரு பெண்ணின் பொறுப்பாகவே அமைந்து விடுவதால் ஒரு பெண்ணால் அதை எளிதில் நிறைவேற்றிவிட முடிவதில்லை. பண்பாடு, பொருளாதாரம் முதலான சமூகக் கூறுகள் அதற்குப் பெரும் தடைகளாக விளங்குகின்றன. எனினும் விழிப்புணர்வும் கல்வியறிவும் பெற்ற பெண்கள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தன்னை முன்னிறுத்தித் தனக்குரிய உரிமையை நிலைநிறுத்தி, குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான சமநிலையை உறுதிப்படுத்தினர். அவ்வாறு ஒரு பெண் செயலாற்றும் போது பெண்ணின் உழைப்பில் பயனடைந்த ஆண் அச்செயலை அனுமதிப்பதில்லை. சமூகத்தின் மரபு நிலைப்பட்ட ஒழுகலாறுகளின் துணைகொண்டு ஒடுக்கவே செய்கின்றான். இத்தகைய சூழலில் முரண்பாடுகள் உருவாகின்றன. இம்முரண்பாட்டின் சாரத்தை, “எல்லாக் குடும்பங்களிலும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. இஃது எசமானுக்கும் அடிமைக்கும் இடையில், முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையில் ஏற்படும் முரண்பாடு போன்றதே”8 என்று குறிப்பிடுவர்.
தமிழ்ச் சமூகத்தில் வாழ்க்கைத் துணைத்தேர்வு உரிமை என்பது மிகுதியும் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகும். திருமணம், சாதிய, பொருளாதார நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஆணைப் பொறுத்தவரையில் மிகுதியும் பொருபடுத்தப்படாமலும் பெண்ணுக்கு முற்றிலும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவுமே இருக்கின்றது. ஆண், பெற்றோர் ஒப்புதலின்றியே ஒரு பெண்ணை ஏற்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பது போல் பெண் பெற்றுள்ளதாகக் கூறுவதற்கில்லை. ஒரு பெண் அவ்வாறு நடந்துகொள்ளும் போது அஃது அவளுக்குத் துன்பத்தைத் தரக்கூடியதாகவே அமைகின்றது. பல நேரங்களில் அவள் சார்ந்துள்ள குடும்பப் பெருமை, மதிப்பு இவற்றைப் பாதிப்பதாக அமைந்து விடுகின்றது. இன்றையச் சூழலில் இது போன்ற போக்குகள் பெருமளவு அருகிவிட்டன. ஆயினும் இன்றும் மரபுநிலைத் தவறாது போற்றப்படுகின்ற குடும்பங்களில் பெண், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல் என்பது இயலாத ஒன்றாகவும் சிக்கலுக்கு உரியதாகவுமே விளங்குகின்றது.
இந்தியச் சூழலில் குடும்பத்திற்குள் ஒரு பெண் பணியாளாக, வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளை இயக்குபவளாகப்பங்கெடுக்கின்ற அளவிற்கு அந்தக் குடும்பச் செயல்பாட்டுக்கான திட்டமிடல், முடிவெடுத்தல்களை மேற்கொள்ள முடிவதில்லை. கணவன்-மனைவி இருவரிடையே ஒத்திசைவும் நல்லபுரிதல்களும் உள்ள குடும்பங்களில் பெண்ணுக்கு அத்தகைய உரிமைகள் இல்லாமலில்லை. எனினும் அதன் விழுக்காடு மிகக் குறைவாகவே இருக்கின்றது. மேலே சுட்டிய முடிவெடுத்தல்கள் எவ்வாறு அமையினும் அவளுடைய உடற்கூறு தொடர்பான முடிவெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது ஒரு வகையான அந்நியமாதலாகவே விளங்குகின்றது.
பெண் கரு உயிர்த்தல், குழந்தைப் பெறுதல் என்பன ஆணின் வாரிசை உருவாக்கல், அவனுடைய ஆண்மைக்கான வெற்றியை நிலை நிறுத்தல் என்ற அளவிலே அமைகின்றன. இதைப் பெண் குறைவின்றி நிறைவேற்றினால் பாராட்டப்படுவாளே அன்றி அவளுக்கு உரிமைப் பாராட்டும் அளவில் எத்தகைய பெருமையும் விளைவதில்லை. பெண் குடும்பப் பணிகளை மட்டும் கவனித்து வந்த காலங்களில் அது பெண்ணுக்குப் பெரும் தடையாக இருந்ததில்லை. அவளோ தான் பெற்ற கல்வியறிவின் காரணமாகப் பொருளாதாரத் தேவையை ஈடு செய்வதற்காகத் தொழில்முறை சார்ந்த முழுநேரப் பணிகளை ஏற்றுக்கொள்கின்ற பொழுது அஃது அவளுக்குச் சுமையாக மட்டுமல்லாமல் உயிரோடு தொடர்புடைய ஒன்றாகவும் அமைகின்றது. குறிப்பாகப் புதிதாகப் பணிகளில் இணையும் திருமணமான பெண்களுக்குப் பெரும் போராட்டமாக அமைகின்றது. அரசு மற்றும் தொழில் துறை விதிகளின்படி பணியில் சேர்ந்த ஓராண்டிற்குள்ளோ அல்லது விதிக்கப்பட்ட தகுதிக்காண் பருவத்துக்குள்ளோ எவ்வித மருத்துவ விடுப்பும் எடுக்கவியலாத நிலை இருக்கின்றது. இதுபோன்ற நெருக்கடிச் சூழலில் பெண் கருத்தரிப்பதால் ஆற்றிவரும் பணிக்கு மட்டுமன்றி குடும்பத்திற்குள்ளும் சிக்கல்களே தோன்றுகின்றது. பெண்ணுக்குத் துன்பம் தரும் கருத்தரிப்பின் கொடுமை குறித்தும் அதன் மீது கட்டமைக்கப்பட்ட ஆதிக்க மனநிலை குறித்தும் முதல் குரலெழுப்பியவர் ஈ.வே.ரா. பெரியார் ஆவார்.
“ஆண்களால் சமூக உற்பத்தியில் மட்டுமே ஈடுபட முடிகிறது. பெண்களால் சமூக உற்பத்தியிலும் அது தொடர்ந்து இயங்குவதற்குரிய மனித இன உற்பத்தியிலும் ஈடுபட முடியும். பின்னதில் ஆணின் பங்கு மிகக் குறைவு. பெண் விரும்பின் கர்ப்பத்தைத் தடுப்பது மட்டுமல்ல கருச்சிதைவையும் செய்து விட முடியும்” என்பார் செ. கணேசலிங்கன்.
இத்தகைய வாய்ப்புப் பெண்ணுக்கு ஓர் ஆயுதம் போன்றது என்றாலும் ஆணைச் சார்ந்து வாழுகின்ற சூழலில் அதைப் பயன்படுத்துவது அவள்பால் இல்லை என்பது கவனத்திற்குரிய ஒன்றாக விளங்குகின்றது. எனவேதான் பெண்கள் இதை எதிர்கொள்வது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாக விளங்குகின்றது.
கருப்பைச் சுதந்தரம், பாலியல் சுதந்தரம் போன்ற முழுக்கங்கள் இன்று பெண்ணியவாதிகளால் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன. ஆணின் பொருளாதாரத் தேவை, சிக்கனம் கருதிக் கருப்பைச் சுதந்தரம் அனுமதிக்கப்படுகின்ற அளவுக்குப் பாலியல் உரிமை அனுமதிக்கப்படுவதில்லை. பெண்ணியவாதிகளால் இவை பற்றி முன்வைக்கப்படும் முழுக்கங்கள் எண்பதுகளில் ஒலிக்கத் தொடங்கின.
நாடு விடுதலைப் பெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் பெண்ணுக்கான பொருளாதார உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது – இருந்தும் வருகிறது. பெண், கல்வி கற்கும் உரிமையும் வாய்ப்பும் பெற்ற பிறகு பொருளாதார உரிமையையும் ஒரளவு பெற்றிருக்கின்றாள். சராசரிகுடும்பத்தில் ஆணின் மூலமாக வருகின்ற வருமானம் இன்றைய நுகர்வு மயமாக்கப்பட்ட உலகில் போதுமானதாக இல்லை. அதன் காரணமாக மனைவியும் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றாள். அதனால் குடும்பப் பொருளாதாரத் தேவை ஒரளவு நிறைவடைந்தாலும் தன்னுடைய பொருளீட்டும் திறத்தால் ஓர் உரிமைப் பெற்ற பெண்ணாகச் சமூகத்தில் இயங்குவதற்கு வாய்ப்புகள் மிகுதியாக ஏற்பட்டுள்ளன.
பெண்ணுக்கான பொருளாதார உரிமை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் சொத்துப் பகிர்வு, உரிமை போன்றவை நடைமுறை சாத்தியமற்றவையாக இருந்து வருகின்றன. தன் பெயரில் சொத்தை வைத்திருப்பது, விற்றல் வாங்கல் என்பனவெல்லாம் பெரிதும் ஆணின் ஆளுகைக்கு உட்பட்டனவாகவே உள்ளன. இவற்றின் மீது கருத்துடையவர்களாக இருந்தாலும் மிகுதியும் கையாளும் உரிமைப் படைத்தவர்களாகப் பெண்கள் இல்லை. சிற்சில விதிவிலக்கான உதாரணங்களைக் கொண்டு மொத்த பெண் சமுதாயத்தையும் பொருளதார உரிமைப் பெற்றவர்களாக மதிப்பிடுவது தவறான புரிதலையே காட்டும்.
சட்ட ரீதியாக அரசியல் உரிமை என்பது இன்றையச் சமூகச் சூழலில் வழங்கப்பட்டிருந்தாலும் அது தொடர்ந்து பின்பற்றப்படுதலில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன. ஒரு சிலரைத் தவிர அரசியலில் பெண்களின் நிலை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒன்றாகவே தொடர்கிறது. சட்ட அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுத் தேவைக்காக அரசியலில் பெண்கள் முன்னிறுத்தப்பட்டாலும் அங்கு முழுமையான உரிமைப் படைத்தவர்களாக விளங்குவதில்லை. பெரிதும் ஆணின் எண்ணங்களுக்குத் தக்கவாறு நடந்துகொள்ள வேண்டிய பாவைகளாகவே விளங்குகின்றனர். இந்தியத் தேர்தல் முறைமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றிவரும் பெண்களின் நிலைகளிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம். இந்த நிலை ஒருபுறமிருக்க பெண்களுக்குண்டான முப்பத்து மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றித் தருவதில் ஏற்படுகின்ற முரண்பாடுகளிலிருந்தும் அரசியல் துறையில் பெண்களுக்கு எத்தகைய உரிமை இருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
மேலே சுட்டிய பல்வேறு நிலைப்பட்ட பெண்ணுரிமைகளில் அரசியல் உரிமையைத் தவிர ஏனையவைக் குறித்த இலக்கியப் பதிவுகள், தமிழிலக்கியச் சூழலில் மிகுதியாக உண்டு. இவை சங்ககாலம் தொடங்கி வெளிப்பட்டாலும் இன்றைய இலக்கியப் பதிவுகளில் சிறப்பாகவே இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சமூகப் பின்புலத்தில் பெண்ணுரிமைக் குறித்து ஆராய்வோர் இன்றைய இலக்கியப் பதிவுகளைக் கவனத்தில் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாததாகும். சான்றுக்காகச் சில நாவல் இலக்கியங்களின் பெயர்கள் மட்டும் இங்குச் சுட்டப்படுகின்றன.
பெண் சமத்துவம் கோரல் குறித்து, இராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’ (1977), ‘புதிய சிறகுகள்’ (1985), ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’ (1988), ஜெயகாந்தனின் ‘சுந்தரகாண்டம்’ (1982), பிரபஞ்சனின் ‘கனவு மெய்பட வேண்டும்’ (1991) ஆகிய நாவல்களும், வாழ்க்கைத் துணைத் தேர்வுரிமைக் குறித்து ஹெப்சியா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ (1965) நாவலும் பிரபஞ்சனின் ‘மகாநதி’ (1990)யும் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றன. கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமைக் குறித்த இலக்கியச் சான்றுகளாக, இராஜம்கிருஷ்ணனின்‘ஓசைகள் அடங்கிய பிறகு’ (1989) நாவலும்,
செ. கணேசலிங்கனின் ‘ஒரு பெண்ணின் கதை’ (1992) நாவலும் விளங்குகின்றன. ஒரு பெண்ணின் பாலியல் உரிமைப் பற்றி ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ சிவசங்கரியின் ‘பாலங்கள்’ ஆகிய நாவல்களும், பொருளாதார உரிமைகள் பற்றி வாஸந்தியின் ‘யாதுமாகி’ நாவலும் பேசுவதைக் காணலாம்.

Series Navigation