பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

முனைவர் மு. பழனியப்பன்



பெண்களுக்கான இடம் எது? என்ற இந்தக் கேள்வியை அரசியல், ஆட்சியியல், சமூகவியல் இலக்கியவியல் என எல்லா மட்டங்களிலும் எழுப்பிக் கொள்ளலாம். இதற்கான விடை பெண்களுக்கான இடம் எங்கும் இல்லை என்பதுதான். அரசியலில் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காட்டிற்கே ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆட்சியியலில் பெண்களுக்குக் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டிற்கு மேல் இல்லை. அந்த ஒதுக்கீட்டிற்குள்ளும் ஆண்சார்பு இல்லாமல் இயங்க இயலாது. சமூகத்தில் பெண்களுக்கு இரண்டாம் இடம். அலுவலகம், வீடு போன்ற சமூக நிறுவனங்களில் பெண்களுக்கு ஏனோ தானோ என்ற அளவில் மட்டுமே இடம் உண்டு. அறிவில் பணித்திறனில் எள்ளளவும் குறையாத பெண்ணினத்திற்கு ஏன் இந்த இடமில்லா நிலை.

இந்தக் கேள்வியின்¢ தேவை தற்போது பெண்களுக்குள்ளேயே எழுப்பப்பட்டு வருகிறது. பெண்களுக்கான இடம், வெளி, தளம், இருப்பு எங்கும்¢ இல்லை என்பதைப் பெண்கள் உணர்ந்தும் உணர்த்தியும் வருகிறார்கள். இவர்களது பேச்சில் எழுத்தில் இந்த இடம் பற்றிய கேள்விகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தத் தொடக்கம் பெண்களுக்கான முழு சுதந்திரமான இடத்தைப் பெற்றுத்தரும் போராட்டமாக வளர்¢ந்து வேர்விடும். அந்த முழு சுதந்திரமான இடத்தைப் பெண்கள் பெற்று மேலும் செல்வார்கள் என்பதற்கான திருப்புமுனை இந்த இருபத்தோராம் நூற்றாண்டு என்பதில் ஐயமில்லை.

‘பறத்தல் அதன் சுதந்திரம் ’ என்ற தலைப்பில் (கிருஷாங்கினி (தொ. ஆ) ,காவ்யா, சென்னை, 2001) வெளிவந்துள்ள ஐம்பத்து இரண்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு இவ்வழிப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பாகும். இதில் இடம் பெற்றுள்ள பல கவிதைகளில் பெண்கள் தங்களுக்கான இடம் எங்கும் இல்லை என்பதைக் கவிதையின் பாடுபொருளாகவும், உருவகமாகவும், படிமமாகவும், கோஷமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனது டைரி எனக்கானதாய் இல்லை
எனது டைரி முகவரிகளை விழுங்கியபடி நௌ¤கிறது
எனது டைரிக்குள் உபதேசங்கள் அநேகம்
யாருக்கும் தொந்திரவற்றதாய் சின்னதாய்
ஒரு புலம்பல்
மனித துயரங்களின் தாடகத்திற்¢குள்
எனது துயரம் வந்துவிழ நான் என்ன செய்வது?
எனக்கான முகவரியை எனது டைரியில் காணோம்
(எனது டைரி, சுகந்தி சுப்பிரமணியன், ப,104)
என்ற கவிதை தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களைக் கொண்டிருக்கவேண்டிய ஒரு பெண்ணின் நாட்குறிப்பில் (டைரி) அவளின் முகவரியே இல்லாமல்போன இடமற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.

யாரவது மீட்டுத் தாருங்கள்
மீட்டுத்தாருங்கள் என் வெள்ளைத் தாட்களை
. . .
மையிருந்தால் கோலின்றி கோலிருந்தால்
வெளிச்சமின்றி
இறைத்துப் பறக்க விட்ட
என் வெள்ளைத் தாட்களை (யௌவனம், மாலதி, ப. 165)

என்ற கவிதையில் தாளின்றி, மையின்றி, கோலின்றி, வெளிச்சமின்றி ஒன்றிருந்தால் ஒன்றின்¢றித் தவிக்கும் பெண்களின் படைப்பனுபத்தை உணரமுடிகின்றது. இந்தக் கவிதையின் பின்பகுதி
மையுண்டு ஒளியுண்டு
படைத்துவிட இதயமுண்டு
எனக்கு என் தாள்கள் வேண்டும்

என்று முடிகிறது. தற்போது எல்லாம் இருந்தபோதும் எழுதுவதற்கான தாள் (இடம்) பறந்து போய்விட்டதை இந்தக் கவிதை ஏமாற்றத்துடன் தெரிவிக்கிறது.

பாலம் என்ற படிமத்தை மற்றொரு பெண்கவிஞர் கட்டுகிறார்.

என் நேற்றைய கனவில்
அந்தப் பாலம் தகர்ந்தது

வெகுநாள் வருந்தி
வியர்வை சிந்தி
கல்லுடைத்து
வெய்யிலில் வெந்து
பரிர்ந்து கொள்ள எவருமற்ற நிலையில்
தனியே ஏங்கி அழுது
சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த
அந்தப் பாலம்
. . .
மீண்டும் அதைக் கட்ட
எனக்குக் காலம் இல்லை
காலம் இல்லை என்றால் கனவேது?
கனவு இல்லை என்றால்¢ ஆக்கமேது?
(நேற்றைய கனவு, திரிசடை, ப. 124)

என்ற இந்தக் கவிதை கூறும் பாலம் எது என்று தேடினால் அது அனுபவத்திற்கும் படைப்புக்குமான பாலம் என்பது தெரியவரும். அந்தப் பாலம் நிஜத்தில்கூட இடியவில்லை. கனவில் தகர்ந்துபோனது. கனவில் அழியும் பாலம் எவ்வகையில் கட்டப்பட்டு இருக்கும் என்பதைக் கவனித்தால் கனவு நனவு எதிலும் பெண்களுக்கான இடம் இல்லை என்பது புலனாகும். கனவுப்பாலத்தைக் கட்டக்கூட காலம் கடந்து போய் விட்ட சூழலில் பெண்ணின் இடம் பறிபோய்விட்டதை இந்தக் கவிதை தௌ¤வாக உரைக்கிறது.

படைப்பு என்ற கனவில் இடம் இல்லை என்பது ஒருபுறம், வீடு என்ற சமூக இருப்பிலும்கூட பெண்களுக்கு இடமில்லை என்பது இன்னும் பெரிய வருத்தம் இதனைச் சில கவிதைகள் வருத்தத்தோடு பதிவு செய்துள்ளன.

உம் வீடுகள்தாம் இங்கே
சிறைக் கூடங்கள் அறிவீர்
உங்கள் பத்தினிகள் எல்லாம் அங்கே
சுதந்திர அடிமைகள்
(சுதந்திர அடிமைகள், வித்யா, ப. 194)
நடக்கும் திசையெலாம்
முட்ட நேர்கிற சுவர்கள்
சிலை போலென்னை
இறுக்குகிற சுவர்கள்
நானொரு சமாதியுள்
நிறுத்தி வைக்கப்பட்டு
(வீ¢டு, பிருந்தா , ப. 154)

இந்தக் கவிதைகளில் வீடு சிறைக் கூடமாகவும், சமாதியாகவும் குறிப்பிடப் பட்டுள்ளதைக் காணுகையில் பெண்கள் வீடு என்னும் சமூக அமைப்பில் பெற்றுள்ள இடம் தெரிய வருகிறது. பெண்கள் சுய உணர்வின்றி விடுதலையின்றி சவமாய்¢¢க் கிடப்பதற்கான இடம் வீடு என்பது பெண்கள் தரும் கருத்து.

இருந்தாலும் பெண்களுக்கு பழைய வீடு இனிமை தருவதாய் இருந்திருக்கின்றது. அது தாய்வீடு. அந்த வீட்டின் அழகு, விடுதலை, வாசம் என்றைக்கும் பெண்களின் நினைவில் வாழ்கிறது.

முற்றிலுமாக
தன் அடையாளமிழந்து
நொறுங்கிக் கிடக்கிறது
முன்பு நானிருந்த
என் பூர்வீக வீடு
இன்று
நானங்கு இல்லையெனினும்
அது என்னோடு தானிருந்தது
. . .
முதல் தீட்டில் பயந்திருந்த
என்னோடிருந்த சுவரும கூட
சரி¢ந்து கிடக்கிறது
ஏனைய தன் ரகசியங்களோடு
(என் பூர்வீக வீடு, சல்மா, ப. 91)

சல்மாவின் கவிதையில் பூர்வீக வீட்டில் இன்னும் ரகசியங்கள் மிச்சம் இருப்பதை உணரமுடிகிறது. அந்த வீட்டின் அழிவில் இருக்கும் இனிமை கலந்த சோகம் தற்போது வாழும் வீட்டின் இருப்பில் இல்லை என்பதும் தெரிய வரும் கூடுதல் செய்தி.

நகரத்தில் கைவிடப்பட்ட எனது வீட்டுக்குப்
பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்புகிறேன்
வழியெல்லாம் மறந்து போக
காலத்தின் நிறங்களை இழந்த
நத்தை ஓடு ஒன்று
என் நினைவின் குறுக்கே
அடைத்துக் கொண்டு கிடக்கிறது

(பச்சை நகரம், மாலதி மைத்ரி, ப.162)
என்ற இந்தக் கவிதையில் நத்தை ஓடு பெண்ணின் பழைய வீட்டின் குறியீடாக உள்ளது. நத்தையின் ஓடு நத்தைக்கான தனித்த விடுதலையான வீடு. அது குறித்து அந்தக் குறிப்பிட்ட நத்தை மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த நத்தை ஓட்டைப்போல தான் பெற்றிருந்த பழைய வீட்டின் ஞபாத்தை இந்தக் கவிஞர் இந்தக் கவிதையில் பதிய வைத்துள்ளார்.

கருவறை வாசனை என்பதாகத் தாயின் மனத்தை கனிமொழி கருணாநிதி கவிதையில் வரைகிறார்.

அவளின் கருவறை மனத்தை
அள்ளி அள்ளி என்
வீடெங்கும் தௌ¤த்து
சுருண்டு படுத்துத் தூங்கிப்போகவேண்டும்
(கருவறை வாசனை, கனிமொழி கருணாநிதி, ப. 75)

இந்தக் கவிதையில் கருவறை மனம் உள்ள வீடு பழைய வீடு, அதனைத் தௌ¤க்க வேண்டிய வீடு வேறொரு வீடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

இவ்வகையில் பழைய தாய் வீடு தனக்கான இடம் என்பதாகப் பெண்கள் உணர்ந்துள்ளார்கள். அந்த வீட்டைப் பெண்கள் இழந்து விட்டார்கள். பெண்களுக்கான இடம் அப்போதே தொலையத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாகிறது. அதை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடருகின்றன.

தமிழ்ச் சூழலில் அல்லது இந்ததியச் சூழலில் உள்ள பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற பெண்களுக்கான சமூக இரட்டை இருப்புநிலை இந்த ஏக்கத்தின் முதற்காரணம் என்பது தௌ¤வு. தாய் என்பவளை தன் இனமாக நோக்கும் மகளின் பிணைப்பு, கட்டாயமாகப் பிரிக்கப்படும்போது மகளின் மனதுள் ஏற்படும் இழப்பு பெரிய பாதிப்பை அவளின் படைப்பு மனத்தில் ஏற்படுத்துகிறது. அந்த ஏக்கம் அந்த ஏமாற்றம் பெண்களின் படைப்பு மனத்தில் கனன்று கொண்டுள்ளது என்பதற்கு மேற்சொன்ன கவிதைகள் சான்றாகின்றன. இந்த படைப்பு மன இடமின்மை அவளுக்கான இடமின்மையாக எல்லாத் துறையி¢லும் நீடிக்கிறது.
முனைவர் மு. பழனியப்பன்
தமிழ்விரிவுரையாளர், மா மன்னர் கல்லூரி (த),
புதுக்கோட்டை
muppalam2003@2yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்